Thursday, 27 September 2018

ஸ்ரீ வைத்தியநாதர் பதிகம்

ஸ்ரீ வைத்தியநாதர் பதிகம் பாடுவோம் !வாழ்விலேமுன் னேற்றுவைத்ய நாதனே!சிவாயநம திருச்சிற்றம்பலம்

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

உன்னையன்றி வேறுதெய்வம் உள்ளம் எண்ண வில்லையே
ஓசைகொண்ட தமிழினாலே பாடுவேன் உன் பிள்ளையே
அன்னை, பிள்ளை மழலையிலே அகம் குழைதல் போலவே
அணிய வேண்டும் எனது சொல்லும் ஆதி வைத்தியநாதனே. 1

தேசமெங்கும் கோயில்கள் திறந்து வைத்த வாயில்கள்
தேடும் அன்பர் யார்க்கும் இன்பம் கோடிநல்கும் மூர்த்திகள்
பூசைகொள்ளும் தேவர்கள் யாவையும் நின் கோலமே
போற்றும் என்னை வாழ்விலேமுன் னேற்றுவைத்ய நாதனே 2

ஓதும் நாலு வேதமும் உலாவு திங்கள், ஞாயிறும்,
உகந்த கந்தவேள், சடாயு உண்மை அன்பின் ராமனும்
பாதபூசை செய்யவே பலன் கொடுத்த ஈசனே
பாதிகொண்ட தையலோடு வாழி வைத்ய நாதனே 3

ஆலகால நஞ்சை நீ அமிர்தமாய் அருந்தினாய்
அடித்துவைத்த பன்றியின் இறைச்சியும் விரும்பினாய்
பாலன் நஞ்சு தேடவோ? பன்றிவேட்டை ஆடவோ?
படைத்தபா சுவைத்தருள் பராவும் வைத்ய நாதனே. 4

வாத, பித்த, சிலேட்டுமம் வகைக்கு நூறு நோய்க்குலம்
மனிதராசி அறிகிலாத புதிய நோய் தினம், தினம்
வேதனை வளர்ந்ததன்றி வென்றதோ மருத்துவம்?
மேலும் என்ன கூறுவேன்? கண் பாரும், வைத்ய நாதனே 5

ஆயுர்வேதம் ஆங்கிலம் அமைந்த சித்தவைத்தியம்
ஆனவேறு வகையிலும் அனேகமான பத்தியம்!
பாயும் நோயும் போனதே? பலித்து நன்மை ஆனதோ?
பாவியேன் என் கூட்டத்தோடுன் பாரும் வைத்ய நாதனே. 6

அங்குமிங்கும் ஓடிஎன்ன? அகலவில்லை நோய்களே
ஆடி என்ன? பாடி என்ன? விலகவில்லை பேய்களே
மங்கைபாகன் நீயிருக்க எங்கு செல்வோம் சேய்களே?
மனமிரங்கி அருள்வழங்கு வாழி வைத்யநாதனே. 7

கண்ணில்லாத குருடருக்கும் கண்கொடுக்கும் ஈசனே
கால் இலாத முடவருக்குக் கால் கொடுக்கும் போஜனே
எண்ணிலாத நோயின் கூட்டம் இடமிலாமல் ஓடவே,
என்னுளே எழுந்தருள்வாய் அண்ணல் வைத்ய நாதனே. 8

சிந்தையில் இருந்த நோய் செயல்களால் விளைந்த நோய்
திசுக்குள், தோல், நரம்(பு), எலும்பு, குருதியில் செறிந்த நோய்
எந்த நோயும் போக்குவாய் எதிர்வராமல் ஆக்குவாய்
இசைந்தகந் புரியிலே அமர்ந்த வைத்யநாதனே. 9

நாம, ரூப பேதமற்ற ஞான ஜோதி மூர்த்தியே
நாளும் உன்னை அன்புசெய்து பாடுகின்றேன் வாழ்த்தியே
சாமவேத கீதனே சடாயு போற்றும் பாதனே
தஞ்சம், தஞ்சம், தஞ்சம் என்னைத் தாங்கு வைத்ய நாதனே. 10
சிவாயநம திருச்சிற்றம்பலம்