Tuesday, 4 September 2018

அகத்தியர் அவதரித்த கலசா கலசேஸ்வரர் ஆலயம்!

அகத்தியர் அவதரித்த கலசா கலசேஸ்வரர் ஆலயம்!







   
கலசா கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் புனிதத் தலம். இந்தத் தலத்தைச் சுற்றி வளைத்து பத்ரா நதி செல்கிறது. கலசா என்றால் கும்பம் என்று பொருள். கலசத்தில் அதாவது கும்பத்தில் இருந்து தோன்றிய அகத்தியரின் ஜன்மஸ்தானம் இந்த கலசா திருத்தலம்.

கோயிலில் மூல லிங்கம் முகக் கவசம் அணிந்த கோலத்தில் காட்சி தருகிறார். பகல் 11 மணி முதல் 12 மணி வரை, மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை உள்ள காலத்தில் மட்டுமே கவசம் இல்லாமல் அகத்தியருக்கு தரிசனம் தந்த கலசேஸ்வரரை தரிசிக்க முடியும். குறிப்பிட்ட விசேஷ நாள்களில் இந்த நேரம் மாறும்.

இந்தக் கோயில் சற்று உயரத்தில் அமைந்திருக்கிறது. ஏறிச் செல்ல படிகள் உள்ளன. படிகளின் முடிவில் வலப் புறம் திரும்பினால் கோயிலை அடையலாம்.

இந்தத் தலத்தில் அகத்தியர் சிவபெருமானை ஒரு கலசத்தில் ஆவாஹணம் செய்து வழிபட்டதாக வும், அதன் பயனாக கலசத்தில் இருந்து சிவபெருமான் காட்சி அளித்ததாகவும் தல வரலாறு.

ஆதியில் இந்தக் கோயிலை அகத்தியரின் பத்தினி லோபாமுத்திரையின் வளர்ப்புத் தந்தையான விதர்ப்ப தேசத்து மன்னர் ச்ருதபிந்து கட்டியதாகவும், பிற்காலத்தில் கர்கல அரச வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களும் திருப்பணிகள் செய்திருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிவ - பார்வதி திருக்கல்யாண வைபவத்தின்போது பூமி வடக்கில் தாழ்ந்தும் தெற்கில் உயர்ந்தும் சமநிலை தவறியது. சிவபெருமானின் உத்தரவின்படி தென் திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியர் இந்தத் தலத்தில்தான் சிவபெருமானின் திருக்கல்யாண வைபவத்தை முதன்முதலில் தரிசித்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்தத் தலத்தில் சுவாமி கலசேஸ்வரர் என்றும் அம்பாள் சர்வாங்க சுந்தரி என்றும் திருப்பெயர் கொண்டு காட்சி தருகின்றனர்.

விளக்குத் தூணின் அடிப் பகுதியில் ஒருவர் கரம் கூப்பி வழிபடுவது போன்ற ஒரு சிற்பம் காணப்படுகிறது. கோயிலுக்குத் திருப்பணிகள் செய்த மன்னரின் உருவமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நமக்கு வலப் புறத்தில் கோயில் கோயில் அமைந்திருக்கிறது. கோயிலுக்கு முன்பாக கொடி மரமும், விளக்குத் தூணும் உள்ளன. தூணின் உச்சியில் இருக்கும் விளக்கை ஏற்ற வசதியாக ஒரு ஏணியும் பொருத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். அம்பிகைக்கும் சுவாமிக்கும் தனித் தனி விழாக்களும் நடைபெறுகின்றன.

ஆவணியில் சத ருத்ராபிஷேகம், கார்த்திகை மாதம் லட்ச தீபம், நவராத்திரியில் தேவி சப்தசதி பாராயணம், மார்கழி ஆருத்ரா நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா ஆகிய விழாக்கள் குறிப்பிடத் தக்க விழாக்கள் ஆகும்.