Wednesday 1 August 2018

அரியும் சிவனும் ஒன்றே

போகர்: ''ஜயனே! பாவம் வந்து சேர்கின்ற வழியைக் காட்டினீர்கள்... பாவங்கள் தீரவும் சிறப்பானதொரு வழிபாட்டைத் தந்தீர்கள்..ஆனால் பாவங்கள் செய்யாதிருப்பதற்கு மட்டும் ஒரு வழியும் கூறவில்லையே...?

அகத்தியர்: ''ஜயனே! உன்னுடைய கேள்விக்கு கீதாச்சாரியனே பதிலளிக்கிறான்...... தருமத்தை ஆசைப்பட்டுச் செய்யக்கூடாது... தருமத்தின் பலனையும் ஈசனுக்கே அர்ப்பணம் செய்தல் வெண்டும்... கருமமும் அவ்வாறேதான், இதுதான் பாவங்கள் செய்யாதிருப்பதற்கு வழி....

போகர்: ''ஜயனே, கண்ணனே ஈசனுக்கு அர்ப்பணம் செய் என்று சொல்வதால் 'அரியும் சிவனும் ஒன்று' என்றாகி விடுகிறதல்லவா?

அகத்தியர்: ''அதிலென்ன உனக்கு சந்தேகம்....?

'வித்தையை வித்தையால் காட்டி
வித்தையை ஒத்தையாய் ஆக்கி,
ஒத்தையை இரட்டையாய் ஆக்கி,
இரட்டையை தொப்பையாய் ஆக்கி,
தொப்பையை மொப்பையாய் ஆக்கி,
மொப்பையில் குடுகுடுப்பை வைத்து,
குடுகுடுப்பையில் அடுகுடுப்பை வைத்து,
அடுகுடுப்பை அடுப்பில் வைத்து மூட்டி
அவ்வடுப்பை ஊதிப் பாரேன்,
தாரை, தம்பட்டை வரும் பாரேன்,
தாரை நீ கொட்டிப் பார்ததிடில்
பம்பையும், பரங்கியும் நிற்கும் பாரேன்,
நாரது நீ எடுத்திடில் உடுக்கைக்கு இரண்டு போக,
ஒன்று அரி, இரண்டு சிவன்....

ஆகவே அரியும் சிவன், இரண்டும் ஒன்றென அறிவாய்...அறிந்திடா மானிடன் அடிமண்டு பாரேன்

போகர்: ''சற்குருநாதா! தாங்கள் இப்படிப் பரிபாஷையில்பேச ஆரம்பித்துவிட்டால் யாருக்கு என்ன புரியும் ஐயனே

அகத்தியர்: ''உனக்காக ஆயிரம் வரிப்பாடலை பத்து வரியாகச் சுருக்கிச் சொன்னால், புரியவில்லை என்கிறாயே....! சரி மக்களுக்காக இப்பாட்டின் சாரத்தை மட்டும் ஒரு சம்பவத்தின் மூலம் விளக்குகிறேன்... கலியில் 'ஞானானந்தகிரி’ என்று பெயர் கொண்ட உத்தமர் ஒருவர் இருந்தார். அவருக்கு உத்தம சீடர் ஒருவர் இருந்தார்... அந்தச் சீடர், ஹரி நாமத்தைப்பரப்ப, பாரதத்திலுள்ள குஜராத் மாநிலத்திற்குச் சென்றிருந்தார்.. அங்கு ஓரிடத்தில் ஹரிநாம மகிமையைப் பற்றி இறுதியில் சொற்பொழிவாற்றியபின், கிளம்ப முற்பட்டுக் கொண்டிருந்தபோது, சொற்பொழிவை முழுவதுமாகக் கேட்ட ஒரு அடியார் அவரிடம் ஒடிவந்து நிற்கிறார். அந்த அடியாருக்கோ, தாய்மொழியாகிய குஜராத்தி மட்டுமே தெரியும். வந்து நின்றவர், அவரைப் பார்த்து ‘சுவாமி’ நீங்கள் குஜராத்தியில் செய்த 'ஹரிநாம மகிமை' சொற்பொழிவு மிக அற்புதமாக இருந்தது... உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்' என்று சொல்ல.. உத்தம ஞானானந்த கிரியினுடைய சீடர் திகைத்து போய், 'பெரியவரே' அடியேனுக்கு குஜராத்தி மொழி தெரியாது ஹிந்தியில்தான் அடியேன் உரையாற்றினேன்...” என்று சொல்ல வந்தவரோ ''இல்லை... என் காதில் விழுந்ததெல்லாம் குஜராத்தி மொழிச் சொற்களே’ என்று உறுதியாகச் சொல்ல... சீடரும் சொல்வதறியாமல் திகைத்து நின்றுவிட்டார்

போகர்: ''ஜயனே! இந்த மொழிபெயர்ப்பைச் செய்தவர் யார்?

அகத்தியர்: ''வேறு யாராக இருக்க முடியும்? அவருடைய குருநாதர், ஞானானந்தகிரிதான்... ஆகவே, உன் மனம் ஒரு பொருளிலேயே ஈடுபட்டிருக்கும் போது, உன் காதில் விழுகின்ற ஒலிகளெல்லாம், உன் மனதிற்கு ஏற்றபடி உருமாறி ஒலிக்கின்றன... அதுபோல, நீ விஷ்ணு பக்தியில் பூரணமாய் நிலைத்திருக்கும் பொழுது, சிவனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தால் கூட, உன் காதில் விஷ்ணுவைப் பற்றிப் பேசுவதாகவே விழும். ஆகவே உத்தம சத்சங்கத் தொடர்பை முறையோக பூண்டு, தத்துவத்தை நீ ஆய்ந்திருந்தால் அனைத்தும் ஒன்றே. அது தான் பிரம்மம்! என்று நீ அறியலாம்''