Wednesday 1 August 2018

கோ + அயன் + பேடு

கோ + அயன் + பேடு

போகர்: ''உத்தமரே, குசலவர்கள், கோயம்பேடு தலத்தில் வால்மீகியுடன் தங்கியிருந்து, பிரதோஷ வழிபாடு செய்தார்களா.. ?

அகத்தியர்:  ''ஆம்; அப்பனே... அதுவும் 12 வருடங்கள் அற்புதமாகச் செய்தனர்...''

போகர்:  ''அடேயப்பா... 12 வருடங்களா...! அவர்கள் பிரதோஷ வழிபாட்டிற்கு இத்தலத்தைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் யாது, குருவே?

அகத்தியர்: ''பித்ரு சாபங்கள் தீரும் உத்தமத்தலம் இது... போகா.... மேலும் 'இங்கிருக்கும் தெய்வமோ, குழந்தை ஈசுவரன், அவன் நாமமோ குறுங்காளீச்வரன்’ என்று அறிவாய் பாரேன்.. குசலவர்கள் தங்கள் தந்தையாகிய ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியை எதிர்த்து பிராணா அவஸ்தை செய்த சாபத்தைத் தீர்த்துக் கொள்ளத்தான். இத்தலத்திற்கு வந்து தங்கியிருந்து, பிரதோஷ வழிபாட்டைச் செய்தனர்..

போகர்: ''ஜயனே, இன்னும் சற்று விளக்கமாகக் கூறினால் அடியேன் தெளிவடைவேன்...

அகத்தியர்: ''விளக்கமாகக் கூறுகிறேன், கேள்...ராமச்சந்திரமூர்த்தி, அச்வமேத யாகம் செய்யத் துணிந்து, அதற்குறித்தான அற்புதமான குதிரையை திக் விஜயத்திற்கு அனுப்புகிறான். யார் அதைத் தடுத்து நிறுத்துகிறார்களோ, அவர்கள் ராமனுடன் போரிட வேண்டும்' என்பது சட்டம்... அப்படி, அந்தக் குதிரை அற்புதமாகத் திக் விஜயம் செய்து கொண்டிருக்கிறது. அதைத்தடுத்து நிறுத்துவோர் யாருமில்லை

போகர்: ''ஸ்ரீ ராமனுடைய குதிரையாயிற்றே

அகத்தியர்: ''ம் ம் .....தொடர்ந்து கேள்....அந்தக் குதிரை, வால்மீகி முனிவர் தங்கித் தவமியற்றும் ஆசிரமம் அருகில் வருகிறது.... அச்சமயத்தில், இராமனைப் பிரிந்த அன்னை சீதையும் அங்கு தங்கித் தவமியற்றிக் கொண்டிருந்தாள்...நடக்கப் போவதை அறிந்த வால்மீகியும் குசலவர்களிடம் தங்கள் தாயை பத்திரமாகப் பார்ததுககொள்ளச் சொல்லி விட்டு, பூசை செய்ய வெளியே சென்று விடுகின்றார்..... முனிவருடைய உத்திரவை ஏற்ற பாலகர்களும் அன்னைக்கு காவலாக ஆசிரம வாயிலில் நிற்கிறார்கள். அற்புதமான குதிரையைப் பார்த்துவிட்ட லவன் குசனிடம் அதைக் காட்ட குசனும் அதைப் பிடித்துக் கட்டிப் போட்டு விடுகிறான்....

போகர்: ''என்ன இருந்தாலும், புலிக்குப் பிறந்தது பூனையாகுமா...?

அகத்தியர்: ''குதிரையைத் தொடர்ந்து படைகளுடன் வந்த சத்ருக்னன், குழந்தைகளுடன் போர் செய்யத் தயாராகிறான்.. போரில் சத்ருக்னன் தோற்றுவிடுகிறான். தொடர்ந்து பரதனும், இலக்குவனும் பெரும் படைகளுடன் வந்து குழந்தைகளுடன் அடுத்தடுத்துப் போரிட்டுத் தோற்றுவிடுகிறார்கள். கடைசியாக, ஸ்ரீராமனே நேரில் வருகிருன்... அவனும் குழந்தைகளுடன் போரிட்டுத் துன்புறுகிறான்... குழந்தைகள் போரிட்ட அற்புதத்தைத்தான், நான் உனக்கு “பூக்கள் தரும் புனிதங்கள்” (பூக்கள் தரும் புனிதங்கள் என்ற புத்தகத்தில் காண்க) பற்றி, உபதேசிக்கும்போது விரிவாகச் சொல்லியிருக்கிறேனே போகா

போகர்: ''ஆம் ஸ்வாமி, இப்போது நினைவிற்கு வருகிறது.... ஸ்ரீராமன் சாய்ந்த பின் என்னவாயிற்று?

அகத்தியர்: ''...வெளியே சென்றிருந்த வால்மீகி உள்ளே நுழைகிறார்... சப்தத்தைக் கேட்டுவிட்டு சீதையும் வெளியே வருகிறாள்.... ஸ்ரீராமன் சாய்ந்து கிடப்பதைப் பார்த்துவிட்டு அலறுகிறாள் ..... வால்மீகியும், மிருத்யுஞ்ஜய மந்திரத்தைச் சொல்லி இராமன் மேல் நீர் தெளிக்க இராமனும் எழுகிறான் ..... தான் இறந்ததற்கான காரணத்தை, இராமன் வால்மீகியிடம் கேட்க, முனிவரும், 'ராமா! நீ மஹா உத்தமன்தான்... ஆனாலும் உன் மக்களால் நீ சாவை சந்திப்பாய் என்பது விதி, அந்த விதி பிரம்ம சாபத்தினால் வந்தது... திரேதாயுக தருமப்படி பெண்களைக் கொல்லக் கூடாது... ஆனால் நீ தாடகையைக் கொன்றாய் .. அந்த யுக தருமப்படி குரங்குகளைக் கொல்லக்கூடாது... ஆனால் நீ வாலியைக் கொன்றாய்... பிரம்ம குலத்தைச் சார்ந்தவன் இராவணன். அவனையும் நீ கொன்றாய், இவை அனைத்தும் சேர்ந்து பிரம்ம சாபமாக மாறியது.. நீயும் சாவைச் சந்தித்தாய்... ஆனால், எவன் நீ பிறக்கும் முன்னமே உன் கதையை வரைந்தானோ அவனால் நீ உயிர்ப்பிக்கப்படுவாய், என்று விதியிருந்ததால், அடியேனால் நீ உயிர்ப்பிக்கப்பட்டாய்' என்று கூற... ஸ்ரீராமனும் குதிரையை அழைத்துக்கொண்டு செல்கிறான்.. நடந்தவை அனைத்தையும் கண்டு வாயடைத்துப் போயிருந்த குசலவர்கள், தங்கள் குருவாகிய வால்மீகியைப் பார்த்து, 'குருவே' தந்தை பெற்ற சாபத்திற்கு எங்களைக் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டீர்கள்... ஆனால், நாங்கள் எங்கள் தந்தையைக் கொன்ற பாவத்திலிருந்து எப்படித் தப்புவது,. என்று கேட்க, வாலமீகியும் 'நீங்கள சிவத்தொண்டை விடா முயற்சியுடன் செய்து வந்தால் வழி பிறக்கும்’ எனக்கூறி அவர்களை ஒவ்வொரு தலமாக அழைத்து வந்து, முடிவில் கோயம்பேடு தலத்திற்கு வருகிறார்...அங்கு வந்தவுடன் குழந்தைகளைப் பார்த்து, ''குழந்தைகளே  இந்த இடம் போல பூலோகத்தில் ஓர் சிறந்த இடம் காண்பது மிகவும் அரிது. இங்கு நீங்கள் முறையாகப் பிரதோஷ விழாவைக் கொண்டாடி வழிபட்டால் உங்களுடைய சாபம் நீங்குவதோடு மட்டுமல்லாமல் சிவலோக கத்திலேயே தங்கி வாழும் ஆசியையும் பெறுவீர்கள். இது உறுதி என்று கூற…குசலவர்களும் சுமார் 12 வருடகாலம் இத்தலத்தில் தங்கியிருந்து அற்புதமாகப் பிரதோஷ வழிபாட்டை சோமசூக்த பிரதக்ஷிணத்துடன் செய்து, சிவலோகத்தில் அழியா இடம் பெற்றனர்...

போகர்: ''சுவாமி, எந்த இராமாயணத்தில் இந்த நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுள்ளது என்று கூறுவீர்களா?

அகத்தியர்: ''ஐயனே, இருடிகள் கூறும் இராமாயணத்தில்தான் இதைக் காணமுடியும்... இந்த இராமாயணம் சித்தர்களுக்கே உரித்தானது... ஆகவே சித்தனை நாடு...அத்தனையும் பெற்று அமோகமாக வாழலாம்...