Wednesday 1 August 2018

தத் வாலே பாபா

இமயமலை எத்தனையோ யோகிகளுடைய புகலிடமாக இருந்திருக்கிறது, இருந்து கொண்டும் இருக்கிறது. ஆன்மிக ஈர்ப்பின் காரணமாக இமயத்தில் அடைக்கலம் புகுந்தவர்கள் ஏராளம். அந்த வகையைச் சேர்ந்தவன் தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பஞ்சாபில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த கட்டுமஸ்தான ஒரு இளைஞன். பெற்றோருடன் அடிக்கடி இமயமலையில் ரிஷிகேஷில் இருக்கும் ஸ்வர்க்காஸ்ரமம் என்ற ஆசிரமத்திற்குச் சென்று கொண்டிருந்த அவனுக்கு, இமயமலையின் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருந்து கொண்டே வந்தது.

விவசாய வேலையில் பெற்றோருக்கு உதவியாக இருந்த நேரம் போக மற்ற வேளைகளில் தியானத்தில் ஆழ்ந்து விடும் பழக்கம் கிட்டத்தட்ட எட்டாவது வயதில் இருந்தே அவனுக்கு உண்டு. அந்தம் பழக்கம் இளைஞனான பிறகும் தொடர்ந்தது. அவனது உடல்வாகைப் பார்த்து நண்பர்கள் பலரும் ‘நீ ராணுவத்தில் சேர்ந்து கொள்ளலாம்’ என்று ஆலோசனை கூறினார்கள். ஆன்மிக வேட்கையும், இமயமலைக்குப் போகிற ஆசையும் அதிகமாக இருந்த போதும், ராணுவத்தையும் முயன்று பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அந்த இளைஞன் ராணுவத்தில் சேர்ந்தான். இரண்டே மாதங்களில் ராணுவ வேலை கசந்தது. தியானத்தில் காலம் கழிக்க விரும்பும் ஒருவனுக்கு ராணுவம் பிடிக்குமா?

ராணுவ வேலையை ராஜினாமா செய்து விட்டு ஒரு நல்ல குருவைத் தேடிப் போனான் அந்த இளைஞன். அயோத்தியில் ஸ்ரீ ஜகன்னாத தாஸ்ஜி என்ற குரு கிடைத்தார். ராஜயோகத்தைக் கற்றுக் கொடுத்து தீட்சையும் தந்த  குரு அந்த இளைஞனுக்கு ஸ்ரீ கேசவ்தாஸ்ஜி என்று பெயரிட்டார். ஆனால் அந்தப் பெயர் அந்த இளைஞனுக்கு நிலைக்கவில்லை. ஆனால் பிற்காலத்தில் சணலினால் ஆன ஆடையையே இடுப்பில் சுற்றிக் கொண்டிருந்த இளைஞனை ‘தத் வாலே பாபா’ என்ற பெயரில் பொதுமக்கள் அழைக்க ஆரம்பித்து அந்தப் பெயரே நிலைத்து விட்டது. ‘தத் வாலே பாபா’ என்றால் ‘சணலை உடுத்தும் சாது’ என்று பொருள்.

அயோத்தியின் ஆசிரமத்தில் சீடர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அந்த ஆசிரமத்தில் பசுக்களும் அதிகம் இருந்தன. சீடர்கள் சத்தமாகப் பேசிக் கொண்டும், ஆரவாரத்துடன் பாலைக் கறந்து கொண்டும், அங்குமிங்கும் போய் வந்து கொண்டும் இருந்தது தத் வாலே பாபாவின் தியானத்திற்கு அனுகூலமாக இருக்கவில்லை. அங்கிருந்து மூன்று மாதங்களில் கிளம்பிய தத் வாலே பாபா சிறு வயதில் இருந்தே தன்னை ஈர்த்த இமயத்திற்கே வந்தார்.

இமயமலையிலும் சிறு வயதில் அடிக்கடி சென்றிருந்த ஸ்வர்க்காஸ்ரமம் உட்பட பல இடங்களில் சுற்றினாலும், அவருக்குத் தியானத்தில் மனம் லயிக்க உகந்த சூழ்நிலைகளில் அந்த இடங்கள் இருக்கவில்லை. தியானத்தில் மனம் லயிக்க ஒருவர் பழகி விட்டால் அதில் அவர் நல்ல முன்னேற்றமும் அடைந்து விட்டால் பின் எங்கே சென்றாலும் அவரால் தியானம் செய்ய முடியும். சந்தையிலும், ஜன சந்தடியிலும் கூட தியானம் அப்படிப்பட்டவருக் குக் கைகூடும். ஆனால் அந்த நிலை ஆரம்பத்திலேயே ஒருவருக்கு வந்து விடுவதில்லை. அதனால் அயோத்தியிலிருந்து இமயம் வரை பல இடங்களுக்குச் சென்றும் தங்குமிடத்தில் அவர் திருப்தி அடையவில்லை.

ஒரு நாள் கங்கைக் கரையில் அமர்ந்து அவர் தனக்குச் சரியான தங்குமிடம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த போது திடீர் என்று உள்ளுணர்வு அவரை அருகில் இருந்த மணிகுட் மலைக்குச் செல்லுமாறு உந்தியது. மணிகுட் மலை, இமய           மலைச்சாரலின் ஒரு பகுதியே.

தத் வாலே பாபா உள்ளுணர்வின் உந்துதல்படியே மணிகுட் மலையில் நடந்தார். அங்கு ஒரு பழமையான குகையில் நீண்ட தலைமுடியும் தாடியும் வைத்துக்கொண்டிருந்த மிக வயதான யோகி ஒருவர் தியானத்தில் இருக்கக் கண்டார். அத்தனை முதிய வயதில் மிக பலவீனமான உடல் இருந்த போதும் மிக அமைதியாக தியானம் செய்ய முடிந்த அந்த மனிதரைப் பேராச்சரியத்துடன் தத் வாலே பாபா பார்த்தார்.

மிக திடகாத்திரமாகவும், இளமையாகவும் இருக்கும் தனக்கு முடியாத அந்த ஆழமான தியானநிலை இவருக்குக் கிடைக்கிறதே என்ற பெருவியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த முதிய யோகி கண்விழித்தார். தத் வாலே பாபாவைப் பார்த்து தன் குகைக்குள் வருமாறு கூறினார். இமயமலையில் தியானத்தில் லயித்திருக்கும் யோகிகளை, விவரமறிந்தவர்கள் தொந்தரவு செய்வதில்லை. அப்படி தியானத்தைக் கலைக்கும் மனிதர்கள் யோகியின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி விடும் அபாயம் இருப்பதால் அவர்கள் முடிந்த அளவு விலகியே இருக்கிறார்கள், அல்லது தியானம கலையும் வரை காத்திருக்கிறார்கள்.

அந்த யோகியாகவே கண் விழித்துத் தன்னை உள்ளே அழைத்தவுடன் பயபக்தியுடன் உள்ளே போனார். இருவரும் சிறிது நேரம் ஆன்மிக விஷயங்களையும், தியானம் சம்பந்தமான விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சின் முடிவில் தத் வாலே பாபா ‘தனக்கு தியானம் செய்ய இப்படி ஒரு இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும்’ என்று சொல்ல அந்த முதிய யோகி உடனே எழுந்தார். ‘இந்த குகையிலேயே தங்கிக் கொள். எனக்கு இந்த உடலை விட்டுப் பிரியும் காலம் வந்து விட்டது. இந்த இமயத்தில் தகுந்த இடத்தில் நான் மகாசமாதி அடைந்து கொள்கிறேன்’. அந்த முதிய யோகி அப்படிச் சொன்னது மட்டுமல்லாமல் அங்கிருந்து கிளம்பியும் சென்று விட்டார்.

தத் வாலே பாபாவுக்காகவே அவர் காத்திருந்தது போல இருந்தது, அவர் சொல்லும் செயலும். தத் வாலே பாபாவுக்கு தியானத்திற்கு உகந்த இடம் அளித்ததுடன் இந்த பூமியில் தனக்கிருந்த அனைத்துக் கடமைகளும் முடிந்து விட்டது போல அந்த முதிய யோகி போய் விட்டார். அதன் பிறகு அந்த முதிய யோகியை தத் வாலே பாபா பார்க்கவில்லை. மற்றவர்கள் பார்த்ததாக அவருக்குத் தகவலும் இல்லை.

உண்மையான ஆன்மிகத் தேடலுடன் இமயத்திற்குச் செல்பவர் கள் அங்கிருக்கும் ஆன்மிக அலைகளால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி நல்ல உதாரணம். அந்த குகையின் அருகிலேயே ஒரு நீரூற்று இருந்தது. அந்தக் குகையின் வாயிலை ஒரு கல்லால் உள்ளே இருந்து மூடிக் கொண்டால் அந்தப் பகுதியில் நடப்பவர்கள் அப்படி ஒரு குகை அங்கிருக்கிறது என்று சிறிதும் கண்டுபிடிக்க முடியாத வசதியும் இருந்தது. இது தியானத்தில் நீண்ட நேரம் கழிக்க விரும்பிய தத் வாலே பாபாவின் தேடலுக்கு மிக வசதியாக இருந்தது. தன் விருப்பப்படியே மிக ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார். ஆழ்நிலை தியானம் அவருக்குக் கைகூட ஆரம்பித்தது.

காலம் செல்லச் செல்ல அவர் தினசரி வாழ்க்கை ஒரு அட்டவணைப்படி நடக்க ஆரம்பித்தது. நள்ளிரவு 2 மணி முதல் காலை பத்து மணி வரை தியானம், பின் உணவு உண்டு சிறிது ஓய்வு, மதியம் முதல் 4 மணி வரை மறுபடி தியானம். மாலை 4 மணி முதல் 6 மணி முதல் யோகாசனங்கள், உடற்பயிற்சி, நடைபயிற்சி, இருட்ட ஆரம்பித்தவுடன் குகைக்குத் திரும்பி ஓய்வு, உறக்கம். மாலை உடற்பயிற்சி நேரத்தில் குகையை விரிவுபடுத்தும் வேலையிலும் ஈடுபட்டார். நீண்ட நடைபயிற்சியின் போது விறகு பொறுக்கிக் கொண்டு வருவதும் செய்வார்.

மாலை நேரங்களில் அப்படி அவர் வெளியே செல்கையில் அவரிடம் இருந்து வெளிப்பட்ட ஆன்மிக அலைகள், அங்கேயும் பல ஆன்மிக அன்பர்களை ஈர்த்தது. ஆனால் ஆன்மிகத்    திலும், தியானத்திலும் நிறைய முன்னேறி இருந்த அவருக்கு, இப்போது ஆன்மிக வேட்கையுடன் வரும் அன்பர்கள் இடைஞ்சலாகத் தோன்றவில்லை. தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை உணர்ந்த அவர், காலை மணி 10 முதல் மதியம் வரையும், மாலை 4 முதல் 6 மணி வரை ஆன்மிக அன்பர்களுக்கு ஒதுக்க ஆரம்பித்தார். உடற்பயிற்சிக்கு மற்ற நேரங்களில் ஒரு பகுதியைப் பயன்படுத்திக் கொண்டார்.

அந்தக் குகையில் அவர் மட்டுமல்லாமல் ஒரு ராட்சத நாகமும் வர ஆரம்பித்தது தான் ஆச்சரியம். சுமார் 12 அடி நீளமும், அரையடி அகலமும் கொண்ட அந்த ராட்சத நாகம், அவர் தரும் பாலைப் பருகி விட்டுச் செல்லும். சில சமயங்களில் அவர் தியானம் செய்யும் நேரங்களில் உடன் இருக்கும். சில சமயங்களில் அவர் போன பின்னும் வந்து அந்த தியான அலைகளில் தானும் இருந்து விட்டுப் போகும். தத் வாலே பாபா போன்ற யோகிக்கு நாகத்திடம் எந்தப் பயமும் இல்லாமல் இருந்தது ஆச்சரியம் இல்லை. ஆனால் அங்கு வரும் ஆன்மிக அன்பர்கள் அந்த ராட்சத நாகத்தைப் பார்த்து நடுநடுங்கிப் போனார்கள். அதனால் அந்த அன்பர்கள் வரும் போது அந்த நாகம் வரும் ஓட்டையை அடைத்து விடுவார் தத் வாலே பாபா.

அந்த ராட்சத  நாகம் அந்த அன்பர்களையும் அந்தப் பகுதி ஆட்களையும் துன்பறுத்தியதே இல்லை என்பது தான் ஆச்சரியம். அவர் அந்த நாகத்திடம் அந்தப் பகுதியில் யாரையும் துன்புறுத்தக்கூடாது என்று சத்தியம் வாங்கி இருந்தார் என்று கூறுகிறார்கள் அவருடைய பக்தர்கள்.