Wednesday 1 August 2018

சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவருமில்லை புவனம் கடந்தன்றங்கு பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடி தாமரையானே..' சிவனுக்கு நிகர், சிவனே...! ''

போகர்: ஐயனே! ஈசனை எல்லா தினங்களிலும் முறையாக வழிபட வேண்டியது மிக மிக அவசியம்.. என்றாலும், சில குறிப்பிட்ட தினங்களில், அவனை விரதமிருந்து வணங்குவது -விசேடமான அருளைப் பெற்றுத் தருகிறது. உதாரணமாக,’ சிவராத்திரி வழிபாடு (மாத சிவராத்திரி,  நக்ஷத்திர சிவராத்திரி என்று பல உண்டு என்று அறிக.) சிறந்தது, என்றாலும் மஹா சிவராத்திரி வழிபாடு மிகச் சிறந்தது. சஷ்டி வழிபாடு சிறந்ததென்றாலும் கந்த சஷ்டி வழிபாடு மிகச் சிறந்தது. அன்னைக்கு வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி வழிபாடு சிறந்தது என்றாலும், நவராத்திரி வழிபாடு மிகச் சிறந்தது. அதே போல், ஏகாதசி வழிபாடு சிறந்தது, என்றாலும் வைகுண்ட ஏகாதசி வழிபாடு மிகச் சிறந்த வழிபாடாகிறது, .... அடியேன் அறிந்தவைகளைச் சொன்னேன்... தாங்கள்தான் எது உத்தம வழிபாடு என்று கூறுதல் வேண்டும்..

அகத்தியர்: ''செல்வமே, போகா! பல தெய்வங்களுக்கு உரித்தான வழிபாட்டு முறைகளைக் கூறினாய்.. நன்று. ஆனால் ஒன்று கூறுகிறேன்... எத்தனை, எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் சிவனருளால் வந்தவையே! அனைத்திறகும் மூல காரணம் சிவனே!” என்பது நீ அறியாததா? இதையே அறிவிற் சிறந்தோர்,

தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல்மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகினில் தலைவனுமாமே! ''

என்றார்கள் அப்படிப்பட்ட சிவனுக்கே... பலவிதப்பட்ட வழிபாடுகள் இருப்பினும், முக்கியமான, உத்தமமான வழிபாடு ஒன்று உண்டு.. எங்கே, கண்டுபிடி பார்க்கலாம்..

போகர்: ஈசனே. சோதிக்காதீர்கள்...

அகத்தியர்:

சிவனே நம்மை ஆண்டுகொண்டான்
சிவத்தை உணர்ந்து ஆட்பட்டோமே
அவனே நம்மைக் காத்திடவே
ஆதியில் ஆலாலம் உண்டானே

இப்பொழுது புரிகிறதா, போகா. ''அது என்ன வழிபாடு? என்று.

போகர்:ஈசன் ஆலாலம் உண்டானா... அது என்ன? ''

அகத்தியர்: ஆம் ஜயனே! மேலும் கூறிகிறேன், கேள்

உள்ளும் வெளியும் உறவாகி
உருவும் அருவும் தானின்று
அள்ளி அழகாய் ஆலாலம் உண்டாலும்
அழியா திருப்பவன் அரனவனே

புரிகிறதா, போகா? இன்னும் கூறுகிறேன் கேள்...

நடன ராஜா எனதப்பா
நமனின் உறவு நமக்கு ஏதப்பா
படமெடுத்தாடும் பாம்பணிந்தோனே
பதறிய தேவர்க்கு பதமளித்தோனே''

போகர்: குருநாதா... ஈசன் ஆலாலம் உண்டு, பதறிய தேவர்க்குப் பதமளித்தானா? ஆகா... என்னே அவன் கருணை! அப்படிப்பட்ட தேவர்களுக்கே ஈசன் கருணை காட்டினான்..... ஆனால் இந்த ஏழை போகன் மீதோ,  தந்தைக்கு கருணை பிறக்கவில்லையே... ஸ்வாமி,  இன்னும் அந்த வழிபாடு என்ன? என்று கூற மறுக்கிறீர்களே! இது நியாயமா?

அகத்தியர்: ''அப்பனே போகா! ஆர்வத்தோடு கேட்பவருக்கே இவ்வழிபாட்டைப் பற்றிக் கூறலாம் என்று சட்டமிருப்பதால்தான் உன் ஆர்வத்தைத் தூண்டினேன்.... கூறுகிறேன், கேள். நீ சிவராத்திரி, ஏகாதசி போன்ற பலவித வழிபாடுகளைப் பற்றிக் கூறினாய் அல்லவா? இவ்வழிபாடுகள் யாவும் விசேஷம்தான் என்றாலும் “பிரதோஷ” வழிபாட்டிற்கு ஈடு இணையான அருளையோ, வரங்களையோ தரும் உத்தம வழிபாடு எங்கும் கிடையாது ஜயனே!

போகர்: ஜயனே! 'பிரதோஷ வழிபாடு' என்று கேட்கும்போதே இனிக்கிறதே.... அப்படியென்றால் அதன் மகிமைதான் என்ன ?

அகத்தியர்: போகனே

உத்தம நிலைகள் பிரதோஷ மகிமைகள் கேட்டிடில் செவி மணக்கும் பாரேன்
சொல்லிடில் வாய் மணக்கும் பாரேன்
நினைத்திடில் இதயம் மணக்கும் பாரேன்
எண்ணிலடங்கா புண்ணியத்தை எப்படி இயம்புவேனோ?

போகர்: ஆகா, ஆனந்தம் ..

அகத்தியர்: அது மட்டுமில்லை, ஐயனே!

சிந்தைக்கு இனியதாகி செவிக்கும் மதுவாகி
விந்தையான வாய்க்கும் இனியதாகி
எந்தை பிரானாடும் பிரதோஷ விழா
வந்த இருவினை மாற்றுமே...

போகர்: இருவினை மாற்றுமா.... ஜயனே! அப்படியென்றால் பிரதோஷ வழிபாட்டின் மகிமையை அதன் தோற்றத்திலிருந்து தாங்கள் கூறித்தான் தீரவேண்டும்

அகத்தியர்: ஒரு தென்னங்கன்றை நட்டு பிரதோஷ மகிமையைப் பற்றிப்பேச ஆரம்பித்தால், அது நீண்டு வளர்ந்து மரமாகி  இளநீர்க் காய்களை உருவாக்கி அந்த இளநீரால் ஈசனுக்கு அபிஷேகம் செய்யும்போது ஓரளவு முடிக்கலாம்...

போகர்: சிவ சிவா! சுவாமி, பூலோக ஞானிகளுக்கு அவ்வளவு பொறுமை கிடையாது. ஆகவே,  பிரதோஷ வழிபாட்டின் மகிமையை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி ரத்தினக்குவியல்களைப் பெறும் பாக்கியத்தை அருளுங்கள். குருதேவா!

அகத்தியர்: அன்புச்சீடனே, போகா! உலகில் ‘நல்லது’ என்று ஒன்று இருப்பதால்தான் 'கெட்டது' என்று ஒன்று இருப்பது நமக்கு தெரிகிறது. அதேபோல் 'பணக்காரன்’ என்று ஒருவன் இருப்பதால்தான் ‘ஏழை’ என்று ஒருவன் இருப்பது தெரிய வருகிறது. அதுபோல 'தேவர்’ என்ற கூட்டம் இருக்கும்போது 'அசுரர்’ என்ற கூட்டம் இருப்பதில் வியப்பென்ன? அப்படிப்பட்ட அந்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு ஆசை வந்துவிட்டது....

போகர்: சிவசிவ... '' 'ஆசை' கொள்வது துன்பத்தில் வைத்துவிடுமே...?

அகத்தியர்: சீடனே, போகா! முறையான 'ஆசை' கொள்வதில் தவறில்லை. ஆனால் பேராசை, துராசை, நப்பாசை கொள்வதுதான் தவறு, புரிந்ததா?!

போகர்: ''புரிந்தது ஜயனே, அப்படி தேவர்களும் அசுரர்களும் என்ன ஆசை கொண்டார்கள்?

அகத்தியர்: அன்பனே,

எண்ணியது முடிதல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேணாடும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
ஈசா, ஏதெனக்கு நன்மையோ அதை நீ செய்தல் வேண்டும்
என்று அவர்கள் எண்ணாமல்,

“நரை, திரை, மூப்பு நீக்கும்
மருந்து ஒன்று பெற்றால் என்றும்
விருந்துண்ணலாம்...”

என்றெண்ணி, என்றும் இளமையுடன் இருக்க ஆசைப்பட்டு “சாவா மூவா மருந்தைப்” பெற விரும்பினர். தேவர்கள அனைவரும் ஒன்று கூடி தங்கள் தலைவனாகிய இந்திரனிடம் வந்து நரை,  திரை, மூபபு நீங்க வழி கேட்க, இந்திரனோ, ‘நம் குருவைக் கேட்போம், என்று சொல்ல, அனைவரும் குருவாகிய பிருகஸ்பதியிடம் வந்தனர். பிருகஸ்பதியும் 'நரை திரை மூப்பு’ ரகஸியம் அறிந்தவர் அகத்தியர் ஒருவரே!  அன்னவரை அணுகிடில் அனைத்தும் தெரியும்’ என்று கூறி என்னிடம் அவர்களை அனுப்பி வைத்தார்

போகர்: தாங்களும், 'நீங்கள் எம் சிவனிடம் செல்லுங்கள், அவனை வேண்டுங்கள். அவனுடைய திருப்பார்வை பட்டால் போதும், நரை, திரை, மூப்பு, மரணம் எதுவும் அணுகாது’ என்றீர்கள். அப்படித்தானே?

அகத்திர்: ''அட..... இனம் இனத்தோடு சேர்ந்து விட்டதே! நீ சொன்னதையேதான் நானும் அவர்களிடம் சொன்னேன் .. ஆனால், தேவர்களோ, 'இது பொதுவாக எவருமே சொல்வதுதான்' என்று எண்ணிப் பிரமனிடம் சென்றார்கள்.

பிரம்மாவிற்கே ஆணவமா ?
போகர்: விதியைத் தவிர வேறு எதை நொந்து கொள்வது?
அகத்தியர்: பிரமனோ ‘நாமே படைக்கிறோம்' என்ற ஆணவம் கொண்டு நிற்கிறான்..'''

போகர்: பொதுவாக எதிலிருந்து ஆணவம் பிறக்கிறது குருதேவா?

அகத்தியர்: நன்றாகக் கேட்டாய், கூறுகிறேன் கேள். அவரவர் திறமைகள் வெளிப்படும்போது, அதிவிருந்து பிறக்கும் திருப்தியிலிருந்துதான் ஆணவம் பிறக்கிறது

போகர்: அப்படியென்றால் பிரமனுக்கு ஆணவம் எப்படி வந்தது, குருவே?

அகத்தியர்: ஈசனுடைய அருளாணையின்படி படைப்புத் தொழிலை அற்புதமாகச் செய்பவன் பிரமன். அவன் 'வட்டுவக்கிளி' என்ற ஆயுதம் கொண்டு ஒரறிவு கொண்ட உயிர்களைப் படைக்கிறான். 'துருவக்கிளி’ என்ற ஆயுதம் கொண்டு ஈரறிவு படைத்த உயிர்களைப் படைக்கிறான். 'பருவக்கோடு' என்ற ஆயுதம் கொண்டு மூன்றறிவு படைத்த உயிர்களைப் படைக்கிறான். 'பாசக்கோடு’ என்ற ஆயுதம் கொண்டு நாலறிவு படைத்த உயிர்களைப் படைக்கிருன். 'வலக்கட்டு’ என்ற ஆயுதம் கொண்டு ஜந்தறிவு படைத்த உயிர்களைப் படைக்கிறான். 'அசு அங்குச வித்தா’ என்னும் ஆயுதம் கொண்டு ஆறறிவு படைத்த மனிதனை உருவாக்குகிறான்... இது மட்டுமா.. 'வேலவடக்கிளை’ என்னும் ஆயுதம் கொண்டு கந்தர்வர்களைப் படைக்கிறான். 'வாலை கூட்டு வித்தை’ என்பதைக் கொண்டு கான கந்தர்வர்களைப் படைக்கிறான். 'சிலக்காகித சுட்டுக்காணி' என்பதைக் கொண்டு சப்தஸ்வர கந்தர்வர்களைப் படைக்கிறான். ‘பாலக்கினி’ என்பதைக் கொண்டு சோதி சொருப கந்தர்வர்களைப் படைக்கிறான். பிரமன் இவைகளைச் செய்தாலும், பெண்களைப் படைக்கும்போது மட்டும் மிக ஜாக்கிரதையாக இருக்கிறான் போகா! ''
போகர்: ஏன் குருவே?

அகத்தியர்: அறிவிற் சிறந்தோர் பெண்ணினத்தோர் ஆணிலும் பன்மடங்கு உயர்ந்தோரே..’ ஆகவே பெண்களைப் படைப்பதற்கு முன்னால் 'காலைக்குருணிவாணி’ என்னும் தேவதையை வணங்கி ஆசிபெற்றுப்பின் தன் கோலால் அவர்களைப் படைக்கிறான் பிரமன். இப்படி அவன் விதவிதமாய் படைப்பதைப் பார்தோரெல்லாம் 'அற்புதம் அற்புதம்’ என்று சொல்ல, பிரமனும், ‘என்னுடைய ஆற்றலல்லவோ இதற்குக் காரணம்'  என்று நினைக்க, அங்கு பிறந்தது, பிரமனுடைய ஆணவம். இந்த நிலையில், தேவர்கள் பிரமனிடம் வந்து, மாறா இளமைக்கு வழி கேட்க, பிரமனும், 'எம் தந்தை உள்ளான். அவனைக் கேட்போம், வாருங்கள்’ என்று கூறி, அவர்களைப் பெருமாளிடம் அழைத்து வருகிறான். ஆனால் பெருமாளோ, பிரமனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு 'அற்புதப் படைப்பு தன் திறமையே’ என நினைத்து ஆணவம் கொண்டு விட்டான்.... ‘இவன் படைத்ததை ‘நான்' அல்லவோ காக்கின்றேன். ஆகவே நானே பெரியவன்’., என ஆணவம் கொண்டு விடுகிறான்... தேவர்களும் தங்களுடைய ஆசையைச் சொல்ல, பெருமாளும், 'திருப்பாற்கடலைக் கடையுங்கள். அமிர்தம் வரும். அது உங்களை இறவாமல் காத்து இளமையுடன் இருக்கச் செய்யும்’, என்று வழிகாட்ட.... தேவர்களும் விளைவுகளை அறியாது அசுரர்களுடன் சேர்நது கொண்டு திருப்பாற்கடலை நோக்கி ஒடிவருகின்றனர்..... ''
போகர்:  ''உத்தமரே, மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டியது அவசியமா?

அகத்தியர்: மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது, மகனே.... ஏன் தெரியுமா? ''

“செத்துப் பார்த்தால் சிவனை அறிவாய்
ஒத்துப் பார்த்தால் ஈசன் ஆசானை அறிவாய்
செத்துப் பார்த்தான் ரமணன், பின்
சித்தாதி சித்தர் வணங்க அண்ணாமலையில் நின்றானே” ஆகவே இறப்பைப் பற்றி அஞ்சவே வேணடாம். நாம் பால பருவம் அடையும்போது 'குழந்தைப்பருவம்’ இறந்துவிடுகிறது. 'வாலிபப்பருவம்' வரும்போது 'பாலபருவம்’ இறந்துவிடுகிறது. முடிவில் நாமே இறக்கும்போது ஆன்மா வீடுதலை பெறுகிறது. மீண்டும் கதைக்கு வருகிறேன்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைய விரைந்தனர். கடைவதற்கு உபகரணங்கள் வேண்டாமா? கொண்ட மந்திரகிரியை மத்தாக வைத்தார்கள். சந்திரனைத் தறியாக வைத்தார்கள். வாசுகி என்ற கொடிய விஷமுள்ள நாகத்தைக் கயிறாக வைத்தார்கள்! இப்போது தேவர்களும், அசுரர்களும் கடைய முற்படுகிறார்கள்.

அன்று தசமி திதி. முதலில் திருமால். கயிறாகி நிற்கும் வாசுகியின் தலைப் பக்கம் பிடிக்கச் சென்றார். அதைக் கண்ட அசுரர்களோ 'நாங்கள்தான் தலைப்பக்கம் நிற்போம்’ என்று கூறி சுறுசுறுப்புடன் இயங்கித் தலையைப் பிடித்துக் கொண்டனர்.... போகா. பொதுவாகவே தலைப்பக்கம் பிடிப்பது என்பது சாத்திரப்படி தவறு... அதனால்தான் எல்லோருமே 'காலைப்பிடி, காலைப்பிடி' என்கிறார்கள்....காலைப் பிடிப்பது பணிவைக் காட்டுகிறது. அதனால்தான் பணிவென்பதை உணர்ந்தறியாத அசுரரை வால் பக்கம் முதலில் அனுப்பினர். ஆனால் அசுரர்களோ... 'தலைப் பக்கம்தான் நிற்போம்’ என்று கூற... இருவரும் பாற்கடலைக்கடைய ஆரம்பித்தனர்.

போகர்: ஆகா... அமிர்தம் வந்ததா, ஐயனே?

அகத்தியர்: பொறுமையுடன் கேளடா, மகனே.....அற்புதமாகப் பாற்கடலைக் கடைந்தாலும், சரியான அடித்தளம் (Foundation) இல்லாத காரணத்தால் மந்திரகிரி இங்குமங்கு மாக அல்லாட... அனைவரும் திகைத்து நிற்க... திருமால் கூர்மமாக (ஆமை) மாறி மலையைத்தாங்க.... மறுபடியும் நிம்மதியுடன் வேகமாகக் கடைகிறார்கள்.. வலி பொறுக்க இயலாத நிலையில் வாசுகி விஷத்தைக் கக்க ஆரம்பிககிறது... குபுகுபுவென விஷம் பல்கிப் பெருகுகிறது..

போகர்: அப்படியாவது அவர்கள் அமிர்தம் உண்டு வாழத்தான் வேண்டுமா.. குருவே?

அகத்தியர்: போகா! பலர் சந்தோஷப்பட வேண்டுமென்றால் ஒரு சிலர் தியாகம் செய்துதான் தீரவேண்டும்....புரிகிறதா? இவர்கள் இப்படியும் அப்படியுமாகக் கடையும்போது ஆழ்கடலில் இருக்கும் கொடிய விடங்கள் வெளிக் கிளம்புகின்றன. மேலிருந்து வாசுகி கக்கிய கொடிய நஞ்சு கீழிருந்து கிளம்பி வந்த கொடிய ஆழ்கடல் நஞ்சுடன் ஒன்று சேர்ந்து ஆலால விடமாய் மாறி, இதைச் சற்றும் எதிர்பார்ககாத தேவர்களையும், அசுரர்களையும் தாக்க முற்பட்டு பயங்கரமாகத் துரத்துகிறது..... அனைத்து தேவர்களும், அசுரர்களும் அனைத்தையும் துறந்த நிலையில் அற்புதமாக ஓடியபடி, அனைத்துயிர்களுக்கும் அடைக்கலம் அளிக்கக்கூடிய ஒரே இடமாகிய கயிலாயம் நோக்கி விரைகிறார்கள்... இந்திரன் தடுக்கி விழுந்தெழுந்தோட பிரம்மன் தொடர..... வெண்ணிற மேனியன் தன் நிறம் மாறித் தானாய் ஓடலுற்றான்.....பார்த்தாயா, போகா ..ஆசையின் கூத்தை? அனைவரும் கயிலாயம் வந்தடைந்து வாயிலில் நடுநடுங்கி நிற்க.... கயிலாயத்தில் சிறு சலசலப்பு! அவ்வளவே! நந்தியெம்பெருமான் நின்று சற்றுத் திரும்பிப் பார்க்கிறார்.. அந்தப் பார்வையே அவர்களுடைய சஞ்சலத்தை அடக்கி, பயத்தைப் போக்கி, அவர்களை நிம்மதிப் பெருமூச்சுவிடச் செய்து விடுகிறது..

போகர்: சுவாமி....... நந்தியினுடைய பார்வைக்கு அவ்வளவு சக்தியா...?

அகத்தியர்: நந்தீசனுடைய பார்வை மகிமையைப் பின்னால் விவரிக்கிறேன்.... மறக்காமல் கேள்... திரும்பிப் பார்த்த நந்தீசர் 'யாது பிரம்மா’ மாலுடன் வந்தாய்...? என்று கேட்க.. பிரமனும் ‘ஈசனைக் காண' என்று சொல்ல... நந்தியும் வெறும் கையுடனா வந்தீர்கள்?’ என்று கேட்க.... பிரமனும் ‘இல்லை, இல்லை. நாங்கள் செய்த மாபெரும் யாகத்தில் முதலில் வெளிவந்த வஸ்துவைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்று சொல்கிறான்...

போகர்: அப்படியானால் நந்தீசர் ‘ஏன் வெறுங்கையுடன் வந்தீர்கள்’ என்று கேட்டார், குருவே....?

அகத்தியர்: அன்பனே....இறைவனைப் பார்க்கச் செல்லும்போது 'ஹரஹர மகாதேவா! 'என்று கூவியபடி தலை மேல் கை கூப்பிச் செல்ல வேண்டும். கை கூப்பிச் செல்லாமல் கை வீசிச் சென்றால்,அதுதான் 'வெறும் கை' புரிந்ததா?

போகர்: ''ஆகா... அற்புதம்....பிரம்மாதி தேவர்கள் ஈசனைச் சந்தித்தார்களா, குருவே?

உண்ணவா ? உமிழவா ?
அகத்தியர்: ''நந்தியினுடைய பார்வை பட்ட நிலையில் அவர்கள் இறைவனை தரிசிக்கும் நிலைக்கு உயர்ந்து.... உட்சென்று ஈசனைத் தரிசிக்க.... தரிசித்த நிலையிலேயே திருமாலுடைய நிறம் சுயநிலைக்கு மாற... ஈசன் புன்முறுவல் பூக்கிறான்....தேவர்களும் ‘ஈசா! எதிலிருந்து எது வந்தாலும் முதலில் அது உன்னையே சாருமல்லவா... ஆகவே நாங்கள் செய்த மாபெரும் யாகத்தில் முதலில் வெளிவந்த வஸ்துவை நீ ஏற்று, எங்களுக்கு அருள் பாலிக்க வேண்டும்’ என்று கூற... அனைத்தையும் அறிந்த ஈசனும், புன்முருவலித்தபடியே, ‘உண்ணவா, உமிழவா?” என்று கேட்க...

போகர்: ஆகா.... என்னே.... ஈசன் கருணை!

சொல்லில் அடங்கா சுடர் உருவே
சொல்லில் அடங்குமோ நின் கருணை
சொல்லப் புகுந்தால் ச சொல்லெல்லாம் ஆகி சொல்லும் சொல்லுற்றதே நின் ஆடல்தானே!

அகத்தியர்: ''உண்ணவா, உமிழவா” என்ற அண்ணல் தன்னையும் மறந்த நிலையில் போன்னம்பலத்தன் ‘என்னே’ என்று கேட்டனன். அன்னவன் சொல்லழகே அழகு'

போகர்: ''ஐயனே... ஈசன் விடத்தை உண்டானா...அல்லது உமிழ்ந்தானா.... என்னே வேதனை...?

அகத்தியர்: அறிஞனே போகா... விடத்தை நந்தியும் சுந்தரரும் எடுத்தவர... ஈசனும் அதைபெற்று விருப்பத்துடன் உட்கொள்ள எத்தனிக்க... அன்னை பராசக்தி சிறிதும் தாமதியாமல் ஈசன் கண்டத்தைப் பற்றி விடத்தை அங்கே தங்கச் செய்கிறாள்... ஏன் தெரியுமா? ஈசன் விடத்தை உட்கொண்டால் உள்ளே இருக்கும் பல கோடி அண்டங்கள் அழிந்துவிடும். வெளியில் உமிழ்ந்தாலும் பல கோடி அண்டங்கள் அழிந்துவிடும் ஆகவேதான் அன்னை, ஈசனை நீலகண்டனாக்கி விடுகிறாள்''

போகர்: திருமால் முதற்கொண்டு பிரம்மாதி தேவர்களையே காப்பாற்றியவன் ஈசன் என்றால், 'ஈசனே தெய்வம்' என்று ஆகிவிடுகிறதல்லவா?  அன்று மட்டும் ஈசன் விட முண்ணவில்லையென்றால்...?

அகத்தியர்: ''உண்ணவில்லையென்றால்... ‘மால் எங்கே வேந்தனுயர் வாழ்வெங்கே, இந்திரன் செங்கோல் எங்கே வானோர் குடியெங்கே, கோலம்! செய் அண்டங்கள் எங்கே எந்தைபிரான் கண்டம் அங்கே நீலமுறாக்கால் !

உத்தமனே, போகா! நன்கு அறிந்துகொள். சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவருமில்லை புவனம் கடந்தன்றங்கு பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடி தாமரையானே..'
சிவனுக்கு நிகர், சிவனே...! ''

போகர்: ஐயனே, ஈசன் விடமுண்டபின் என்னாயிற்று?

அகத்தியர்: ''விடம் உண்ட ஈசன், தேவர்களைப் பார்த்து, 'மறுபடியும் சென்று கடைவீர்! வருவதைப் பெற்றுக் கொள்வீர்! எனக் கூற பிரம்மாதி தேவர்களும் மகிழ்வுடன் திரும்பிச் சென்று பாற்கடலைக்கடைகிறார்கள்.. அன்று ஏகாதசி திதி கடையும்போது, ஐராவதம், வச்சிரசிரஸ், கௌஸ்துபமணி, இலக்குமி போன்ற அற்புதமான இரகசியங்கள் வெளிவர... அவற்றைத் தேவர்கள் அரவணைத்து ஆனந்திக்க... மறுநாள் காலை, அதாவது துவாதசி திதியில் அதி அற்புதமாக அமிர்தம் வந்துவிடுகிறது ..... அள்ளிப் பருகினர், தேவரும், அசுரரும்... ஈசனை மறந்து ஆடிப்பாடிக் களிக்கின்றனர்.

போகர்: ''துன்பம் நேரும்போது ஈசனைத் தஞ்சம் புகுவதும், துன்பம் நீங்கி இன்புறும்போது அவனை அடியோடு மறப்பதும் உலகியல்புதானே, குருவே... அதற்கு தேவர்கள் மட்டும் விதிவிலக்கா... என்ன?

அகத்தியர்: ''இல்லை... மறுநாள் திரயோதசி திதி. அன்று ஈசனை மறந்தது நந்தீசர் அருளால் நினைவுக்கு வர தங்கள் தவற்றை எண்ணி ஈசனிடம் ஓடிவருகின்றனர். ஈசனும், உயர்ந்த, தன் தனிப்பெரும் கருணையினால் அவர்களை மன்னித்து நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நின்று நர்த்தனம் புரிந்தனன் .. திரயோதசி திதியில் ஈசன் நர்த்தனம் புரிந்த அந்த புண்ணிய நேரமே, பிரதோஷ நேரமாகும். இதையே மக்கள், புவியில், பிரதோஷ விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆகவே, போகா, 'பிரதோஷம்' என்றால் பாவங்களை நீக்கும் நேரம் என்று பொருள் கொள்வாயாக...! அதுமட்டுமல்ல..பிரதோஷ விழாவின் நோக்கம், ‘அகந்தையை அழிப்பதே’ என்றும் கொள்வாயாக...

போகர்: ''ஆம், ஜயனே... பிரம்மாதி தேவர்களுடைய அகந்தை ஈசனருளால் அழிந்ததில் வியப்பென்ன?

அகத்தியர்: ''மகனே... பிரதோஷ லிழாவில் பிரம்மாதி தேவர்களுடைய அகந்தை மட்டுமா அழிந்தது...? எம்பெருமானாகிய நந்தீசருடைய அகந்தையுமல்லவா அழிக்கப்பட்டது!