Saturday 21 November 2020

குரு ராகவேந்திரர் அனுக்கிரஹம்


இரவு மணி ஒன்பது. டி.வியில் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தேன் ரிமோட்டின் உதவியால் . அப்பொழுதுதான், என் நண்பன் ராஜகோபால் என் செல்போனில் அழைந்தார்.

"நரசிம்மா, நாளக்கி காலைல ஆறு மணிக்கு கத்திப்பாரா ஜங்ஸன் 

ல இருக்கிற பெட்ரோல் பங்க்கிட்ட வந்திரு. இரண்டு நாளுக்கு வேண்டிய டிரஸ் எடுத்துக்க. வெளியூர் போறோம்."

 "எங்க போறோம்?"  " காலைல சொல்றேன்". போனை வைத்துவிட்டார்.

மறுநாள் காலை ஆறு மணிக்கு அவர் சொன்ன இடத்தில் போய் நின்றேன். அடுத்த நிமிடம் , அவருடைய  கார் என் அருகில் வந்து நின்றது.  அவர் இறங்கும் போதே, மற்றொரு நபரும் இறங்கினார்.

"இவரைத் தெரிகிறதா?" என்று ராஜகோபால் கேட்டார்.

புட்டப்பர்தி சாயி பாபா போல், முடியுடன் உள்ள அவரைப் பார்த்தவுடன், "அட, நம் சண்முகம். இவரைத் தெரியாதா, என்ன?" என்றேன். 

"ஹலோ, நரசிம்மன், பார்த்து பல வருஷம் ஆயிருக்கும்னு நினைக்கிறேன். ஒரு பத்து, பன்னிரெண்டு?" என்று வினவினார்.

"ஆமாம், "ஏழிரண்டு ஆண்டில் வாவென்று இயம்பினன் அரசன், " என்ற கம்பர் வாக்கு படி, பதிநான்கு ஆண்டுகள் கழித்துப் பார்க்கிறோம், " என்றேன். "அப்ப எப்படி பேசுவீங்களோ, அப்படியே இருக்கீங்க " என்றார்.

சாயிபாபா தலைமுடி சண்முகம், அந்தக் காலத்தில் ஒரு சிறு தொழிற்சாலை வைத்து நடத்திக் கொண்டிருந்தார்.  எங்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். செக் பாஸ் செய்வதற்கு, கணக்கில் பணம் தேவைப்படும் பொழுது, (அதாவது ஒரு ஐநூறு, ஆயிரம்), நான் TOD என்று நாங்கள் செல்லமாக அழைக்கின்ற temporary overdraft அவ்வப்பொழுது கொடுப்பதுண்டு. இரண்டு, மூன்று நாளில், பணத்தை சொன்ன நேரத்தில் கட்டி விடுவார். நான் சென்னையிலிருந்து, மாற்றலாகி பல ஊர்களில் வேலை செய்து , சமீபத்தில் மீண்டும் சென்னைக்கு வந்த சில நாட்களில் இந்த சந்திப்பு.

ராஜகோபால் சொன்னார், " இப்ப, இவரு நம்ம பேங்கல, ஒரு VIP கஸ்டமர் . பல கோடிக்கு turn over பன்றார், பெரிய ஆள ஆயிட்டார் " .

மிக்க மகிழ்ச்சி, என்று சொல்லி, காரில் ஏறினேன். "அது, சரி, நாம எங்க போறோம்? என்ற என் கேள்விக்கு, "மந்த்ராலயம் " என்று பதில் வந்தது. நான், பலமுறை சென்று, தர்சனம் செய்த   மந்த்ராலயம், ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்திற்கா? இங்கேந்து 650 கி.மீ தூரத்தில இருக்கற மந்த்ராலயத்துக்க? எப்ப போய் சேருவோம்? எப்படி? என்று கேள்விக் கணைகளால், அவர்களைத் தாக்கினேன்.

"பேசாம வா, எப்படி கூட்டிக்கிட்டு பேறேன்னு மட்டும் பாரு" என்றார் ராஜகோபால்.  இவர் காரை, மினிமம் 100 kms வேகத்தில் தான் விரட்டுவார், என்ற என் அனுபவம் உணர்த்தியது.

பூந்தமல்லி, ஹைவே ரெஸ்டாரண்டில், டிபன், ரேணிகுண்டாவைத் தாண்டி, ஆந்திர அரசு புன்னமி போஜன சாலாவில் ஒரு காஃபி . சரியாக இரண்டு மணிக்கு கர்னூல் . மதிய உணவு முடித்துக் கொண்டு, நூறு கி.மீ தூரத்தில் உள்ள மந்த்ராலயத்தை அடையும் போது, மணி நாலரை .

ரூம் எடுத்து, ஒரு மணி நேரம் தூக்கம், ரெஸ்ட். துங்கபத்ரா நதியில் அலுப்பு தீர ஆனந்தக் குளியல். 6  மணிக்கு கோயிலில் நுழைந்தோம்.

பிருந்தாவனத்தில், அங்கு ஊழியம் செய்பவர்களில் பலரும், (main priest உட்பட) சண்முகத்தைப் பரபரப்புடன் வரவேற்றதைக் கண்டு, ஆச்சர்யம் அடைந்தேன். அவருடைய புண்ணியத்தில், மிக அருகாமை தர்சனம். இரவு 7 மணிக்கு, ரதோஸ்வம் என்கிற,  யானை, மரத் தேர், வெள்ளி ரதம், தங்க ரதம் இவைகளில் மூல ராமர் ஊர்வலம். அனைத்திலும், இந்த சண்முகத்திற்கு முதலிடம் . மறு நாள் காலை துங்கபத்ரா ஸ்நானத்துடன்,அபிஷேகத்தை அருகிலிருந்து காணும் பாக்கியம். பஞ்சாமிரதம், சந்தனம், "ம்ருத்திகா" என்கிற பிருந்தாவனத்தின் புனித மண் (இப்பொழுது கொடுப்பதில்லை) சகிதம் எங்களுக்கு உபசரிப்பு . எல்லாம், சண்முக உபயம். ஒன்பது மணிக்கு , மகிழ்ச்சியுடன், நெகிழ்சியுடன் புறப்பட்டு விட்டோம் மந்த்ராலயத்தை விட்டு . 

கார் பயணத்தில் சண்முகத்திடம் நான் கேட்டேன்" எங்களுயை குருக்களில் ஒருவர் ஸ்ரீ ராகவேந்திரர். ஆகவே, பல முறை இங்கு வந்திருக்கிறேன்.  நீங்கள் எப்படி?   ரஜினிகாந்த் ரசிகரா?"

"அப்படி அல்ல. என் கதை தனிக் கதை" என்று ஆரம்பித்தார்.

"நீங்கள் எனக்கு உதவிய காலத்தில், ஒரு சிறு தொழிற்சாலை வைத்து நடத்திக் கொண்டிருந்தேன். நீங்கள் மாற்றலாகி போன பொழுது, ஒரு பெரிய ஆர்டர் கிடைத்தது. அதற்கு பைனாஸ் தேவைப்பட்டதால், பேங்க் குடுக்க மறுத்ததால், அதிக வட்டிக்கு பணம் வாங்கி, உற்பத்தி செய்தேன். கடைசி நிமிடத்தில், ஆர்டர் கொடுத்த கம்பெனி என் காலை வாரிவிட்டது. உற்பத்தி செய்த பொருட்கள் தேங்கி விட்டது. வேறு யாருக்கும் விற்க முடியாமல், கிட்டத்தட்ட போண்டி, ஆகி பெரும் கடனாளி ஆகி தொழிற்சாலையை மூடும் நிலமைக்கு வந்து விட்டேன்." என்று பெருமூச்சு விட்டார்.

"அடப்பாவமே.  எப்படி மீண்டு வந்தீர்கள்?" என்று கேட்டேன்.

"அப்பொழுதுதான், என் நண்பர் ஒருவர் "மந்த்ராலயம் போ, மூன்று இரவு அங்கயே தங்கு. கோயிலுக்குப் போ. மூன்று இரவுகளில், ஒரு இரவு ராகவேந்திரர் எதோ ஒரு ரூபத்தில், உன் கனவில் வந்து பேசுவார். நம்பிக்கை மிக முக்கியம். போய் வா , எல்லாம் சரியாகிவிடும்" என்றார்.

நான் தான், எத்தை தின்னா, பித்தம் தெளியும்ர, நிலமையில இருந்தேனா, உடனே, காலையில டிரைவரை வரச் சொல்லி, கிளம்பிட்டேன் மந்த்ராலயத்துக்கு . ரூட்டே தெரியாது. அங்கங்க, வழி கேட்டுக்கிட்டு, ஒரு வழியா ராத்திரி 11 மணிக்குப் போய் சேர்ந்தேன்.

மறுநாள், காலைல, துங்கபத்ரா ஆத்துல குளிச்சிட்டு, எல்லோரும் ஈரத் துணியோடு போறதைப் பார்த்தேன். நானும், ஈர வேஷ்டியோடு, கோயிலுக்குப் போய், மத்தவங்களைப் போல, சுத்தி, சுத்தி பிரதட்சணம் பன்ன ஆரம்பிச்சேன். காலை பதினொறு மணி வரை பிரதட்சணம். எவ்வளவுன்னு எண்ணல. சாயங்காலம், மறுபடியும் குளியல். பிரதட்சணம் ராத்திரி கோயில் மூடற வரைக்கும். இப்படி மூணு நாள் செஞ்சிகிட்டே  இருந்தேன். ராத்திரி படுத்தா, நிம்மதியான தூக்கம்.

" கனவுல, சாமியார் யாராவது வந்தாரா?" என்று ஆவலுடன் கேட்டேன்.

இல்லையே என்று ஏமாற்றத்துடன் சொன்னார். "அப்புறம் " என்றேன்.

"அப்புறம் என்ன, நான்காம் நாள் காலையில் தரிசனம் பன்னிட்டுப் புறப்பட்டேன், சென்னைக்கு.  நந்தியால்ல  சாப்பிட்டு புறப்பட்டோம், நானும், டிரைவரும். அசதியா இருந்ததால், பின் ஸீட்டில் போய் படுத்தேன். கொஞ்ச நேரத்தில் தூங்கிட்டேன். 

டிரைவர்,திடீருன்னு, வண்டியை பிரேக் போட்டு, நிறுத்தினான். ஏண்பா, நிறுத்திட்டேன்னு கேட்டா, ஸார், ஒரு கிழவன் குறுக்க வந்துட்டான்னு சொன்னான். வெளியில பார்த்தேன். வெள்ளை வேட்டி, வெள்ளை தாடியோட ஒரு வயதானவர், கையில் ஒரு குச்சியை ஊனின்டு, கார் பக்கத்தில வந்தார். "போ, போ, எல்லாம் நல்லா நடக்கும், போ, என்று சொல்லி விட்டு, நகர்ந்தார். இந்த சுத்த ஆந்திரா ஏரியாவில, அதுவும், ஆளே இல்லா, மலைப்பிரதேசத்தில, தமிழ்ல பேசற வயசான ஆள் எங்கேயிருந்து வந்தார்னு யோசிக்க ஆரம்பிக்கும்போது, 

முழிச்சிகிட்டேன். பார்த்தால், வண்டி, சீராக ஓடிக் கொண்டிருந்தது.

"அட, கனவு" என்று புரிவதற்கு ஒரு நிமிஷம் ஆயிற்று. அதுவும் பகல் கனவு.

சென்னைக்கு போனவுடன், என் டேபிள் மேலே, ஒரு டெல்க்ஸ் மெசேஞ் ரெடியா இருந்தது. படிச்சா, பெல்ஜியத்திலேந்து, ஒரு பெரிய எக்போர்ட் ஆர்டர், முன்னாடி எனக்கு குடுக்க முடியாதுன்னு சொன்ன ஆர்டர், இப்ப, எனக்கே குடுப்பதாய் ஒத்துக் கொண்டு, 10% அட்வான்ஸையும் அனுப்பியிருப்பதாய், தகவல் சொல்லியது. 

அப்பன்னா, "அந்த , வெள்ளை தாடி, வெள்ளை வேட்டி  பெரியவர்? 

அவர் தானா, இவர்? இவர்தானா, அவர்?" யோசிக்க ஆரம்பித்தேன்.

அப்புறம் என்ன, ஆர்டரை எடுத்துகிட்டு, நம்ம பேங்க்குக்கு போனேன். ஒரு பைசா கூட குடுக்க முடியாதுன்னு மொரண்டு பிடிச்சுக்கிட்டு இருந்த நம்ம மேனேஜரு, இந்த ஆர்டரைப் பார்த்த போது, ஒன்னும் பேசாமல், லோன் கொடுக்க ஒத்துகிட்டார்.

 உடனே, கிளம்பினேன் மந்த்ராலயத்துக்கு . பிருந்தாவனத்தில, ஆர்டரை வைச்சு கும்பிட்டேன். மேல, மேல, ஆர்டர் பல நாட்டிலேந்து வர ஆரம்பிச்சது. ஒவ்வொறு ஆர்டர் வரும் போது, மந்த்ராலயம் வந்துட்டுத்தான், எக்ஸிகூசனை ஆரம்பிப்பேன்". பல தடவை வந்ததாலே, அதுவும் என் பாபா தலை முடியால , மந்த்ராலயத்தில கோயில இருக்கரவங்க, ரொம்ப பழகிட்டாங்க. அவங்க கேட்ற உதவிகளையும் செஞ்சு கொடுப்பேன். எல்லார்டையும் என் போன் நம்பரை குடுத்து வைச்சிருக்கேன். எது வேணாலும் கேளுங்கன்னு சொல்லி வைச்சிருக்கேன்.

என்று தன் கதையை கூறி முடித்தார்.

அவர் சொல்லி முடித்தவுடன், அப்பண்ணாச்சாரியார் எழுதிய    ஸ்ரீராகவேந்திர ஸ்தோத்திரத்தில் வரும் ஸ்லோகம் தான் எனக்கு, உடனே ஞாபகம் வந்தது.

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நம:  இத்யஷ்டர்க்ஷர மந்த்ரத :

ஜபிதாத் பாவிதாந்நித்யம் இஷ்டார்த்தாஸ்யு : ந ஸம்யை : II

N.Vijayanarasimhan

No comments:

Post a Comment