Monday 2 November 2020

இராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 53

 இராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 53


வாழியெதிராசன் 

வாழி எம்பெருமானார் 


இராமானுஜர் சத்வகுண பாதையைத் தேர்ர்ந்தெடுத்தார் அல்லவா?


🌺🌺 பருத்திக் கொல்லையம்மாள்


கார்ப்பாசம் என்பதற்கு பொருள் பருத்தி. ஆறாமல் என்பதற்கு பொருள் கொல்லை. வரதாச்சார்யர் என்ற பெயருள்ளவர்கள் 'அம்மாள்' எனப்படுவர். இவர் பருத்திக்கொல்லை வைத்திருந்ததால், இவரை பருதிக்கொல்லையம்மாள் என்று அழைத்தனர்.


இராமானுஜர் யக்ஞான் மாளிகை பக்கம் செல்லாமல், பருத்திக்கொல்லையம்மாள் மாளிகை பக்கம் வந்து விட்டார். பருத்திக்கொல்லையம்மாளிடம் சல்லிக்காசு கூட கிடையாது. இராமானுஜர் தன் வீட்டிற்கு வருகிறார் என்பதும் அந்த அம்மாவிற்குத் தெரியாது. அந்த அம்மாவின் கணவர் வீட்டில் இல்லை. தனியே வீட்டில்  இருந்தாள். அவளுக்கு மேல் வஸ்திரம் கூட இல்லை. கீழ் வஸ்திரமோ கிழிந்த நிலையில் இருந்தது. கிழிந்த ஆடையைத் தரித்துக் கொண்டு வீட்டினுள்ளே இருந்தாள்.


இராமானுஜரோ அந்த அம்மாளின் வீட்டு வாசலுக்கு வந்தார். இராமானுஜரின் சிஷ்யர்கள், "சுவாமி தங்களின் வீட்டிற்கு வந்திருக்கிறார்" என்று சொன்னார்கள். அவளோ ரொம்ப வருத்தப்பட்டு வீட்டினுள்ளே இருந்நாள். 'ஏன் வெளியே வரவில்லை? உள்ளே என்ன நடக்கிறது?' என்பதை சுவாமி இராமானுஜர் புரிந்து கொண்டார். 


உடனே, தன் தோளின் மேலே இருந்த காஷாய மேல் வஸ்திரத்தைக் கழற்றி அதை சுருட்டி வீட்டினுள்ளே வீசி எறிந்தார். 'மகாபிரசாதம் பெற்றோம், ஆச்சாரிய அனுக்கிரகமே பெற்றோம்' என்று அந்தப் பெண் அந்த வஸ்திரத்தை எடுத்து, தன் உடலில் சுற்றிக் கொண்டாள். 


அதன் பின் சுவாமியை வரவேற்று, சந்தனம் தெளித்து, அமரச்செய்து செய்தாள். தன் வீட்டிலோ உணவு ஏதும் இல்லை. உடனே ஒவ்வொரு வீட்டிற்கும் ஓடினாள். குசேலன் இரண்டு பிடி அவலை எடுத்துச் சென்று கண்ணனைக் காணச் செல்ல எத்தனை இடத்தில் பிச்சை எடுத்தார்? அதேபோல, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவரிடத்தில் வாங்கி, வேண்டிய தளிகை பண்ணி ஆனந்தமாய் இராமானுஜருக்குப் படைத்து தானும் தண்டம் சமர்ப்பித்து நின்று, அவருக்கு வேண்டிய உபசாரங்களை எல்லாம் பண்ணிவிட்டாள்.


அப்பொழுது தான் வெளியே சென்ற பருத்திக்கொல்லையார் வீட்டிற்குள் நுழைந்தார். அவரிடம் "உமைப் போன்ற தர்ம பத்தினியை, பகவத் அனுக்கிரகத்தாலே பெற்றுள்ளீர்" என்று ஆசி வழங்கி சென்றார் இராமானுஜர். இது பருத்திக்கொல்லையம்மாளின் சரித்திரம்.


🌻🌻 யக்ஞான் வருந்துதல் 


இராமானுஜர் வருவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணியிருந்தாரல்லவா யக்ஞான்?  


அவர் இப்பொழுது இராமானுஜரைத் தேட ஆரம்பித்தார். 'நாழி ஆகிவிட்டது, அவர் இன்னும் வரவில்லையே' என்று. 'எங்கே அவர் சென்றார்? அபச்சாரப்பட்டுட்டோமோ?' என்று வருந்தினார். ஓடோடி வந்தார். சுவாமியிடம் விழுந்து தண்டம் சமர்ப்பித்தார். 'என்ன நடந்தது?' என்று பிரார்த்தித்தார். 


இராமானுஜரோ, "நீர் பாகவத அபச்சாரம் செய்துவிட்டீர். இப்படி செய்திருப்பது கூடாது. நம் ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுப்பி வைத்தோம். நீர் அவர்களை பார்க்காமல் பணம் செலவழித்து ஏற்பாடு பண்ணுவது முக்கியமா? ஆனால், இந்தப் பெண்பிள்ளை எவ்வளவு ஆரதித்தார் என்று பாரும். சத்வகுணம் முக்கியம். ரஜோ குணம், தமோ குணம் கூடாது. கைங்கரியத்தை உள்ளன்போடு செய்ய வேண்டுமே தவிர, ஆரவாரகச் செய்யக் கூடாது. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று சொல்ல, "அடியேன் அபச்சாரப்பட்டுவிட்டேன். என்னை மன்னித்து அருளுங்கள்" என்றார் யக்ஞான்.


"இதற்கு என்ன பிராயச்சித்தம்?" என்று கேட்க, "நீர் இந்த ஊரிலே எழுந்தருளி எல்லா பக்தர்களுக்கும் அவர்களது வஸ்திரங்களைத் துவைத்துக் கொடுத்து, அந்தக் கைங்கரியத்திலே ஈடுபட்டுக் கொண்டு வாரும்" என்று சுவாமி இராமானுஜர் அருளிவிட்டுப் புறப்பட்டார். நேரே, திருமலை ஆஸ்தானத்திற்கு வந்து சேந்தார். அதன் பின் என்ன நடந்திருக்கும்? 


அடுத்த பதிவில் அறியலாம்.



உபதேச இரத்தின மாலை: 50

~

நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை

என்பர்* அவரவர் தம் ஏற்றத்தால்* – அன்புடையோர்

சாற்று திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே*

ஏத்ததனைச் சொல்லு நீ இன்று. 

~

நெஞ்சே! 

நம்-பெருமாள்

நம்-ஆழ்வார் 

நம்-ஜீயர் 

நம்-பிள்ளை 

என்று சிலர் விசேஷமான அபிமானத்துடன் அழைக்கப்பட்டார்கள். இதற்குக் காரணம் இவர்களுக்கு இருந்த பெருமையாலே சிலர் இவர்களை இவ்வாறு ஆதரத்துடன் அழைத்ததே. இத்திருநாமங்களைச் சொல்லி நீயும் இவர்களை இன்றே கொண்டாடு.

~

அழகிய மணவாளன் (ஸ்ரீரங்கநாதன்) பல காலம் திருவரங்கத்தில் இருந்து வெளியே எழுந்தருளியிருந்து பின்பு திருவரங்கம் திரும்பியவுடன் இத்திருமேனிக்குத் திருமஞ்சனம் செய்து ஒரு வயோதிகனான ஸ்ரீவைஷ்ணவ வண்ணானுக்குப் பெருமாளுடைய ஈரவாடைத் தீர்த்தத்தைக் கொடுக்க அவர் அதைப் பருகி “இவர் நம்பெருமாளே” என்று அன்புடன் சொன்னதால், அப்பெயரே ஸ்ரீரங்கநாதனுக்கு நிலைத்தது. 

~

நம்பெருமாளே ஆழ்வாரை “நம் ஆழ்வார்”, “நம் சடகோபன்” என்று அழைத்ததால் ஆழ்வாருக்கு நம்மாழ்வார் என்ற பெயர் நிலைத்தது. 

~

திருநாராயணபுரத்தில் ஸந்யாஸ ஆச்ரமம் ஸ்வீகரித்து, ஸ்ரீரங்கத்தை வந்தடைந்த வேதாந்தியை, பராசர பட்டர் “வாரீர் நம் சீயரே” என்று அன்புடன் அழைத்ததால், இவர் நஞ்சீயர் என்றே அழைக்கப்பட்டார். 

~

நஞ்சீயர் அருளிய ஒன்பதினாயிரப்படியை மிக அழகாக ஏடு படுத்திக் கொடுத்த நம்பூர் வரதரை “நம் பிள்ளை” என்று நஞ்சீயர் அன்புடன் அழைத்ததால், இவருக்கு நம்பிள்ளை என்ற திருநாமமே நிலைத்தது.

~

மாமுனிகள் திருவடிகளே சரணம்!

 


இன்னும் அனுபவிப்போம்...


உய்ய ஒரே வழி! உடையவர் திருவடி!!

No comments:

Post a Comment