Monday 2 November 2020

ஸ்ரீ பாட்டி சித்தர்

 ஸ்ரீ குருப்யோ நமஹ !!!


ஸ்ரீ பாட்டி சித்தர்!!


பாரத புனித பூமியில் எண்ணற்ற சித்தர்கள், மகான்கள், யோகிகள் யோகினிகள் தோன்றி நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்,  இன்று நாம் ஸ்ரீ பாட்டி சித்தரைப் பற்றி பார்ப்போம். பல்வேறு  அன்பர்களுக்கு அவர்கள், தங்களின் இஷ்ட தெய்வமாகவும் ,  குருவாகவும்  தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.     


நாமக்கல் மோகனூர் நாவலடியான் கோயில் அருகிலும் சுண்டக்கா

செல்லியம்மன் கோயில் அருகிலும் சுமார் 27 ஆண்டுகளாக , வெயில், மழை எதைப் பற்றியும் பொருட்படுத்தாமல் இயற்கையோடு  இணைந்து  பக்தர்களுக்கு அருளாசி வழங்கி அனைவராலும் அன்புடன் "பாட்டி" என்று அழைக்கப்பட்டவர் பாட்டி சித்தர்.

பாட்டியை பலரும், ஆதரவற்ற பெண்மணி என்றே  எண்ணியிருந்தார்.


 பாட்டி சித்தர் யார் என்ற கேள்விக்கு பல விதங்களில்  பதில் அளித்துள்ளார். 

உடை சரியாக அணியாமல் சில நேரங்களில் அவதூதராக இருப்பார்.   பரப்பிரம்மத்தினை உணர்ந்தவருக்கு/ பரப்பிரம்மம்மாகவே இருந்தவருக்கு இந்த உடம்பே ஒரு சட்டை , எதற்கு மேல் சட்டை . ஞானிகளும் , சித்தர்களும்,  யோகிகளும் தங்களை  ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே தன்னை வெளிப்படுத்திக் கொள்வார்கள். அதுவரை  மற்றவர்களின் பார்வைக்கு பித்தராகவும் யாரும் எளிதில் அண்ட முடியாதவாறு இருப்பார்கள். 


  2009 இல் இருந்து கொடுமுடி டாக்டர் நடராஜன் அவர்களின் சொந்த தோப்பிற்குள் பாட்டி சித்தர் வசித்து வந்தார்கள் . எண்ணற்ற பக்தர்களுக்கு பாட்டி சித்தரால் ஏற்பட்ட அனுபவங்கள் சொல்லில் அடங்காது. பக்தர்களின் குறையை அவர்கள் கூறும் முன்னரே அறிந்து அவர்களுக்கு ஏற்ப அருள்புரியும் கொடைவள்ளல் . பல வருடங்களாக குழந்தை பேறு இல்லாத தம்பதியினருக்கு  மனைவியின் வயிறை தடவி மகப்பேறு கொடுத்த  கருணாசாகரம் . பிறப்பிலிருந்தே நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி சிறு பையனை நடக்க வைத்த தெய்வமாகவும். 


 ஒருசிலரின் அனுபவங்களை, நான் படித்தவற்றை சிலதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு வெள்ளி  கிழமை அன்று பாட்டி சித்தரை பார்க்க வந்த ஒரு பெண்ணை அவரின் திருமாங்கல்யத்தை கழட்டி தர  கேட்டுக் கொண்டிருக்கிறார் . அந்த பெண் மிகவும் தயக்கத்துடன் கழட்டி கொடுத்திருக்கிறார்கள் . அந்த பெண்ணும் வெள்ளிக்கிழமை திருமாங்கல்யம் கொடுத்துவிட்டோமே திரும்பி வாங்கிக்கொள்ள வேண்டுமென்று வெகுநேரம் அமர்ந்து இருக்கிறார் . சிறிது நேரத்தில்  அந்த பெண் வீட்டிலிருந்து ஒரு தொலைபேசித் தகவல் வந்தது ,அந்தப் பெண்மணியின் கணவர் பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக செய்தி. பெண்ணுக்கு விஷயம் புரிந்துவிட்டது. பாட்டியிடம் தன்னுடைய கணவரை காப்பாற்ற மன்றாடுகிறார். அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாத பாட்டி.  கொஞ்ச நேரம் கழித்து அவளின் திருமாங்கல்யத்தை திருப்பிக் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தார். திரும்பவும் தொலைபேசி தகவல் , அவரின் கணவர் உயிர் பிழைத்துக் கொண்டார் என்று,  எப்பேர்பட்ட ஒரு அற்புதம் .  


மற்றொரு நிகழ்வு அடிக்கடி பாட்டி சித்தரை வணங்கும் பக்தர் ஒருவர் அவரை தரிசிக்க   சென்றிருக்கும் போது, 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் குறைந்த உயரத்தில்  வெள்ளை உடை உடுத்தி , மிகவும் களையான முகத்துடன் வந்திருக்கிறார் . அந்த அன்பரை ப பார்த்து  "உனக்கு ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டது" என்று கேட்க , தான் அகத்திய முனிவரின் ஜீவநாடி உரையை படித்து  ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டதாக கூறி இருக்கிறார். பிறகு அகத்தியர் சம்பந்தப்பட்ட விஷயங்கள், பொதிகை மலையைப் பற்றிய விவரங்கள் இருவரும் உரையாடியபடி, பாட்டியிடம் ஆசி பெற்று பக்தர் புறப்பட்டு விட்டார். 


ஆனால் பேருந்தில் ஏற மனம் வரவில்லை, எதையோ பாட்டியிடம் விட்டுவிட்ட வந்த மனநிலை. எனவே மீண்டும் பாட்டி சித்தரை  தரிசிக்க   அவர்  இருக்கும் தோப்பிற்குள் செல்கிறார். அங்கே சற்று முன் தான் கண்ட உயரம் குறைந்த தேஜஸுடன் விளங்கிய  மனிதரை காணவில்லை . அருகில் இருப்பவரிடம் கேட்டதற்கு இத்தனை நேரம் இங்கு தான் இருந்தார்கள் . இப்போ எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை என்கின்றனர். இதை கவனித்த பாட்டி "அவனை ஏன்டா தேடற !அவனை பத்தி நீ அவன்கிட்டயே பேசுவியா" என்று கேட்கிறார்கள் . அப்பொழுது தான் அந்த பக்தருக்கு தான் அகத்திய முனிவரிடம் பேசிக்கொண்டு இருந்தது புரிந்தது.  எப்பேர்ப்பட்ட பாக்கியம் இது . சில சமயங்களில் சுகப்பிரம்ம ரிஷி கிளி உருவம் கொண்டு பாட்டியிடம் வந்து அமர்ந்து விட்டு செல்வார். பல சித்தர்களும் , ஞானிகளும் பாட்டி சித்தரை வேறு உருவில் வந்து கண்டு   சென்றிருப்பதை பல அன்பர்கள் கண்கூடாக கண்டு இருக்கிறார்கள். 


 கணக்கன்பட்டி ஸ்ரீ மூட்டை சாமிகள் பக்தர்களுக்கு அவராகவே காட்சி கொடுத்திருக்கிறார். அதேபோல் வேதாத்திரி மகரிஷியின் பக்தர்களுக்கு அவராகவே காட்சி கொடுத்திருக்கிறார். தானும் அவர்களும் வேறல்ல என்று நிரூபித்திருக்கிறார்.  சிலசமயங்களில் பக்தர்கள் தன் மனதில் விடையுடன்  அமர்ந்திருக்கும் பொழுது அவர்களுக்கு விடையாக பாட்டி சித்தர் நடந்துகொள்வார்.  பாட்டி ஒவ்வொரு முறை ஒவ்வொருத்தரும் பாட்டி நீங்கள் யார் ? என்று கேட்பதற்கு ஒரு முறை சிவன் என்றும்  காளியாகவும் , ஒரு சிலருக்கு தான் ராஜராஜேஸ்வரி என்று கூறியிருக்கிறார் . ஒரு சிலருக்கு பாலாம்பிகையாக அவர்கள் வீட்டிற்கு வந்து உணவு கேட்டிருக்கிறார் . 2015ம் ஆண்டு புரட்டாசி மாதம் , திருவாதிரை நட்சத்திரமும்,  பவுர்ணமியன்று பாட்டி சித்தர் சித்தி அடைந்தார். ஆனால் இன்றும் சூட்சுமமாக பலருக்கும் அன்பர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்.


பாட்டி என்ன நட்சத்திரம் என்று மனதில் நினைவோடு அன்பர் உட்கார்ந்து இருக்கும்பொழுது அவருக்கு பதிலாக  "என்னோட நட்சத்திரம் பரணி  "என்று பாட்டி சித்தர் கூறியிருக்கிறார் . 


  பரணி ,பூரம் ,பூராடம் நட்சத்திர அன்பர்கள் பாட்டி சித்தரை வணங்கினால்.  மனோபலமும்  அதிகரித்து எதிரிகளிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளலாம். 


கிருத்திகை ,உத்தரம், உத்திராடம் நட்சத்திர அன்பர்கள் பாட்டி சித்தரை வணங்கி வந்தால்,  அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக பாட்டி சித்தர் இருப்பார். வாழ்வில் நலம் பெறலாம் .


அசுவதி , மகம்,  மூலம் நட்சத்திரங்களில்  பிறந்தவர்கள் பாட்டி சித்திரை வணங்குவதால் அவர்களுக்கு சர்வ சம்பத்தும் வாழ்வில் கிடைக்கும்.  


பூசம், அனுஷம் ,உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாட்டி சித்திரை வணங்குவதால் அவர்களுக்கு சகல காரியங்களும் சித்தியாகும்.


 சுவாதி ,திருவாதிரை, சதயம் நட்சத்திர அன்பர்கள் பாட்டி சித்திரை வணங்குவதால் அவர்களுக்கு சகல தோஷமும் நிவர்த்தியாகும். சாதகமான சூழ்நிலை உருவாகும்.


பொதுவாக அனைவருமே சித்தர்களை வணங்குவது சிறப்பு. ஜாதகத்தில் குரு/ சனிக்கு 1,2,5,9 இல் கேது இருந்தால் அவர்களுக்கு சித்தர் வழிபாடு தரிசனமும் எளிதில் கிடைக்கப் பெறும்.


குறிப்பு: 

பாட்டி சித்தர் ஜீவசமாதி இருப்பிடம்::


கரூர் பேருந்து நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் தான்தோன்றிமலை பேருந்து நிறுத்தம் உள்ளது.அதன் அருகிலேயே அரசு மயானம் உள்ளது.மயானத்தில் பாட்டி சித்தர் ஜீவசமாதி உள்ளது.


நன்றி

சாத்வி வித்யாம்பா (பத்மபிரியா பிரசாத்)

No comments:

Post a Comment