Monday 2 November 2020

இராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 52

 இராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 52


வாழியெதிராசன் 

வாழி எம்பெருமானார் 


யமுனாச்சாரியான ஆளவந்தார் தன் இளவரசனான இராஜாவிற்கு காலட்சேபம் பண்ண ஐந்து ஆச்சாரியார்களை நியமித்தார்.


1. பெரிய நம்பிகளிடம் - திருமந்திரம், த்வயம் மந்திரம்

2. திருக்கோட்டியூர் நம்பிகளிடம் - சரம ஸ்லோகம்

3. திருமாவலையாண்டானிடம் - திருவாய்மொழி அர்த்தம்

4. திருவரங்கத்து அரையனாரிடம் - மற்ற மூவாயிரம் பாசுரங்களின் அர்த்தம், இயல், இசை, நாடகத்துடன் கூடிய நாலாயிரத் திவ்விய பிரபந்தம்.


இவை அனைத்தையும் இராமானுஜர் கற்றுக் கொண்டார் அல்லவா? இறுதி ஆச்சாரியார் வேறு யாரும் இல்லை. தன் தாய்மாமன்தான். தன் தாய்மாமனான "பெரியதிருமலை நம்பிகளிடம்" இராமாயண அர்த்தத்தை பெற்றுக் கொள்ளும் நிகழ்வினை இனி அறியலாம். 


🌺🌺 திருமலை பயணம்


ஸ்ரீரங்கத்தில் இராமானுஜர் காலட்சேபம் பண்ணிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு திருவேங்கடமுடையானைத் தரிசிக்கும் ஆவல் உண்டானது. தன் உறவினனான கோவிந்தனும் திருமலையில் கைங்கரியத்தில் ஈடுபட்டதை அறிந்து,  'அவரையும் சந்திக்க வேண்டும். திருமலையில் புஷ்பக் கைங்கரியம் திருவேங்கடையானுக்கு சிறப்புடன் நடக்கிறதா? நந்தவனம் அமைத்தார்களா?' எல்லாவற்றையும் பார்க்கும் ஆவல் இராமானுஜருக்கு உண்டானது.


தன் தாய்மாமனான பெரிய திருமலைநம்பிகளிடம் இராமாயணம் என்னும் காவியத்தையும் கற்க வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு உண்டானது. உடனே, கிளம்பிவிட்டார் தன் சிஷ்யர்களுடன் திருமலைக்கு.


ஸ்ரீரங்கத்திலிருந்து வடக்கு நோக்கி எழுந்தருளினார். திருக்கோவிலூர் சென்று திரிவிக்ரமப் பெருமாளைத் தரிசித்தார். அதற்கு அருகில் ஒரு கிராமம்.  திருக்கோவிலூருக்கும் செஞ்சிக்கும் நடுவில் இருக்கும் கிராமம் தான் 'எண்ணாயிரம்'. அங்கு எண்ணாயிரத்து யக்ஞான் என்று இராமானுஜருடைய சிஷ்யன் ஒருவர் இருந்தார்.


அந்த எண்ணாயிரம் ஊர் வழியாக இப்பொழுது இராமானுஜர் செல்கிறார். யக்ஞான் இராமானுஜர் வருகிறார் என்பதற்காக எல்லா ஏற்பாடுகளையும் பண்ணியிருந்தார். எப்படி ஏற்பாடு நடக்கிறது என்று அறிந்து வாருங்கள் என்று இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை மும்பாக அனுப்பி வைத்தார் இராமானுஜர். 


அவர்கள் யக்ஞானுடைய திருமாளிகைக்குப் போனார்கள். ஒரே கோலாகலம். நல்லா சீரும் சிறப்புமாய், செலவழித்து வைத்திருந்தார். ஆனால், அவர்களை கண்டுக்கொள்ளவில்லை.


நேரே இராமானுஜரிடம் வந்தார்கள். "யக்ஞானுடைய திருமாளிகை சீரும், சிறப்புமாய் இருக்கிறது. ஆனால்..."  என்று அமைதியாக இருந்தார்கள். "என்ன ஆனால்?"  என்ற இராமானுஜர், அவர்களின் முகத்தைப் பார்த்து அறிந்து கொண்டார். நேரே ஊருக்குள் சென்றார் இராமானுஜர். அங்கு இரண்டு வழிகள் இருந்தது. "அது என்ன வழி? இது என்ன வழி?" என்றார் இராமானுஜர்.


"ரஜோ குணம், தமோ குணம் நிறைந்து எச்சான் இடத்திற்குச் செல்லும் வழி இந்த வழி. சத்வ குணமே நிறைந்திருக்கிற பருத்திக் கொள்ளையம்மாள் இடத்திற்குச் செல்லும் வழி இந்த வழி" என்றனர் சிஷ்யர்கள்.


சட்டென்று முடிவெடுத்தார் சுவாமி இராமானுஜர். உலகத்தாருக்கு நல்ல விசயத்தை இப்பொழுது எடுத்துக்கூற போகிறோம் என்று சத்வ குணமே நிறைந்திருக்கும் பருத்திக்கொள்ளையம்மாள் வீட்டிற்குச் செல்லும் வழியைத் தேர்ந்தெடுத்தார் இராமானுஜர்.


அப்படி என்ன நிகழ்வு நடந்திருக்கும் என்பதை தெரிந்துகொள்ள நாளைய பதிவிற்கு காத்திருங்கள்.



""இராமானுஜர்""


ஞான வழியில் செல்வதைக் காட்டிலும்

பக்தி வழியில் சென்றால் இறைவனை

அடைய முடியும் என்று புதிய

வழியைக் காட்டிய மகான் ஸ்ரீ

இராமானுஜர். 


விசிஷ்டாத்துவைதம்

எனும் கொள்கையை நாடு முழுவதும்

வலியுறுத்தி சாதாரண மக்களிடமும்

கொண்டு சென்ற மகான் ஸ்ரீ

இராமானுஜர். தான் நரகத்திற்குச்

சென்றாலும் பரவாயில்லை, இந்தக்

கலியுகத்தில் பிறந்த பலரும்

மோட்சமடைய வேண்டும் என்கிற

எண்ணத்தில் குருவின் கட்டளையை மீறிஎல்லா வளங்களையும் அளிக்க வல்லமந்திரத்தை எல்லோருக்கும் உபதேசித்த

வரும் இந்த இராமானுஜர்தான்.


இராமானுஜர் 1017 ஆம் ஆண்டு

சித்திரை மாதம் வளர்பிறையில் பஞ்சமி

வியாழக்கிழமை திருவாதிரை நாளில்

(04-04-1017) தமிழ்நாட்டில் சென்னைக்கு

அருகிலுள்ள ஸ்ரீ பெரும்புதூர் எனும்

ஊரில் அசூரி கேசவ தீட்சிதர் –

காந்திமதி தம்பதியருக்கு மகனாகப்

பிறந்தார். இராமானுஜர் குழந்தைப்

பருவத்திலேயே மிகவும் கூர்மையான

அறிவுத் திறனுடன் இருந்தார்.

அவருக்கு எட்டு வயதான போது

அவருக்கு உபநயனம் செய்து

வைக்கப்பட்டது. இராமானுஜருக்கு அவர்தந்தையாரே முதலில் கல்வி அளித்தார்.


அவர் எதையும் ஒரு முறை படித்ததுமே புரிந்து கொள்ளும் ஆற்றலுடையவராக இருந்தார்.

அவருடைய தந்தையார் அவருக்கு

பதினாறாம் வயதில் ரக்சாம்பாள் எனும்

பெண்ணைத் திருமணம் செய்து

வைத்தார். அவருக்குத் திருமணம் நடந்த சில காலத்திற்குள்ளாகவே அவரின்  தந்தை மரணமடைந்தார்.


 தந்தையின்

மரணத்திற்குப் பிறகு குடும்பத்துடன்

காஞ்சிபுரத்துக்குச் சென்றார்.

அப்போது வடநாட்டில் காசி எப்படி

கல்விக்குப் பெயர் பெற்றிருந்ததோ

அதுபோல் தென்னாட்டில் காஞ்சிபுரம்

கல்விக்குப் பெயர் பெற்ற நகரமாகத்

திகழ்ந்தது. இந்த நகரின் அருகிலுள்ள

திருப்புட்குழியில் யாதவப்பிரகாசர்

என்கிற அத்வைத பண்டிதரிடம் வேதம்

கற்றுக் கொள்வதற்காகச் சென்றார்.


யாதவப் பிரகாசரிடம் வேதம், உபநிடதம்

போன்றவைகளைக் கற்றுக்

கொண்டிருந்த இராமானுஜருக்கு

அவரிடம் பலமுறை கருத்து வேறுபாடு

ஏற்பட்டது. குருவின் விளக்கத்தை

எதிர்த்து பலமுறை கருத்து சொல்லத்

தொடங்கினார்.


ஒரு நாள் இராமானுஜர் தன் குருவின்

பணிவிடையில் இருக்கும் போது

இன்னொரு சீடன் அங்கு வந்து, யாதவப் பிரகாசரிடம், சாந்தோக்கிய

உபநிஷத்தில் உள்ள “கப்யாஸம் புண்டரீகம்”

என்னும் சொற்றொடருக்குப் பொருள்

கேட்டான்.


“திருமாலின் சிவந்த கண்கள் குரங்கின்

குதம் போல் இருந்தன” என்று அதற்கு

விளக்கம் சொன்னார் யாதவப் பிரகாசர்.


அதாவது, கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று பிரித்து, திருமாலின் சிவந்த கண்கள் “குரங்கின் ஆசனவாய்” போல்

இருந்தன என்பதாகச் சொன்னார்.


திருமாலின் அழகிய கண்களை

குரங்கின் புட்டத்தோடு ஒப்பிட்டுக்

கூறிய குருவின் விளக்கத்தைக் கேட்ட

இராமானுஜர், “மிகவும் அபத்தமான

விளக்கம்” என்று குருவிடம் மறுத்துக்

கூறினார்.


பின்னர், கப்யாஸம் என்பதை கம் + பீபதி + ஆஸம் என்று பிரிக்க வேண்டும்.

அப்போது கபி என்பது குளிர்ந்த நீரைப் பருகும் சூரியன் என்றும், ஆஸம் என்பது

தாமரை என்றும் பொருள் தரும் என்று

கூறினார். மேலும், “கதிரவனால்

புன்னகைக்கும் கவின் மிகுந்த

செங்கமலம் போன்றது கரிய மால் விழி

அழகு” என்ற சரியானப் பொருளைக்

கூறியதால் குருவின் கோபத்திற்கு

ஆளானார்.


இராமானுஜர் மீது கோபம் கொண்ட

யாதவப் பிரகாசர் அவரை

கல்வியிலிருந்து நீக்கினார். அதன்

பிறகு இராமானுஜர் வீட்டிலிருந்தபடி

தாமாகவே வேதபாடங்களைக் கற்றுக்

கொள்ளத் தொடங்கினார்.


 இராமானுஜர்

தாமாகப் பயின்றாலும் வேதபாடங்களில்

மிகபெரும் புலமையுடன்

விளங்கினார்.

இராமானுஜர் வைணவ

வழிமுறைகளின் மிகப்பெரும்

குருவாக விளங்கிய ஸ்ரீரங்கம்

ஆளவந்தார் (யமுனாச்சாரியார்)

என்பவரின் முக்கியச் சீடர்களான ஐந்து சீடர்களில் ஒருவரான காஞ்சிபூர்ணர்

(திருக்கச்சி நம்பி) என்ற துறவியை ஒரு

முறை சந்தித்தார். இவர் தந்தை

நான்காம் வருணத்தைச் சேர்ந்தவர்.


 தாய் வேடுவர் குலத்தைச் சார்ந்தவர்.

இருப்பினும் இவரை மிகுந்த

மதிப்புடன் வீட்டிற்கு அழைத்துச்

சென்றார்.

இரவில் உணவு உண்ட பிறகு

காஞ்சிபூர்ணர் இராமானுஜர் வீட்டின்

இடை கழியில் படுத்துக் கொண்டார்.

இராமானுஜர் அவருடைய களைப்பு

நீங்க அவரது கால்களைப் பிடித்து விட

விரும்பினார். மேலும் அவருடைய

சீடராக ஏற்றுக் கொள்ளும்படியும்

வேண்டினார். ஆனால் அதற்கு

காஞ்சிபூர்ணர் ஒத்துக்

கொள்ளவில்லை. “நான்காம்

வருணத்தைச் சேர்ந்த தம் கால்களை,

அந்தணர் குலத்தைச் சேர்ந்த

இராமானுஜர் பிடித்து விடுவது

முறையல்ல. மேலும் ஒரு அந்தணருக்கு

குருவாகத் தான் இருப்பதும் சரியல்ல ”

என்று அவர் மறுத்ததால் இராமானுஜர்

வருத்தமடைந்தார்.


“நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி,

அதனால்தான் உங்களைப் போன்ற

பெரியவர்களுக்குச் சேவை செய்யும்

உரிமை எனக்குக் கிடைக்கவில்லை.

பூணூல் அணிந்ததால் மட்டும் ஒருவன்

பிராமணனாகி விடுவானா?

திருமாலின் பக்தர்கள் அனைவரும்

உண்மையான அந்தணர்கள்தான்” என்று இராமானுஜர் கூறினார். இதைக் கேட்டகாஞ்சிபூர்ணர் இராமானுஜர் மீது

அன்பும், மதிப்பும் கொண்டார்.


தனக்கு குருவாக்க விரும்பிய

காஞ்சிபூர்ணரை மீண்டும் ஒருமுறை

சந்தித்த இராமானுஜர், அவரை

தன்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு

அழைத்தார். அதற்கு சம்மதித்த அவர்

தனது வேறொரு பணியை முடித்து

வருவதாகத் தெரிவித்துச் சென்றார்.

பின் அவரது பணியை முடித்துக்

கொண்டு அவசரமாக இராமானுஜர்

இல்லம் சென்று, தனக்கு பேரருளாளன்

திருவாலவட்டப்பணிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் எனவே உடனடியாக

உணவளிக்க வேண்டினார். அச்சமயம்

இராமானுஜர் வீட்டில் இல்லை.

இராமானுஜர் மனைவியும் அவருக்கு

உணவு அளித்தார். அவரும்

இராமானுஜர் வருவதற்குள் உணவை

முடித்துச் சென்றார்.


இராமானுஜர் வீடு திரும்புகையில்,

அவர் மனைவி காஞ்சிப்பூர்ணர் உண்டதளிகையை கம்பால் தள்ளி,

உணவருந்திய இடத்தை பசுஞ்சாணம்

கொண்டு தூய்மையாக்கி நீராடி

நிற்பதைக் கண்டு வருந்தினார்.

மனைவியின் இதுபோன்ற

செயல்பாடுகள் அவருக்குப்

பிடிக்கவில்லை .  


ஸ்ரீரங்கம் திரும்பிய காஞ்சிபூர்ணர்

இராமானுஜரின் விருந்தோம்பல், அன்பு ஆகியவற்றுடன் அவரது

புலமையையும் அவருடைய குருவான

ஆளவந்தாரிடம் எடுத்துக் கூறினார்.

ஏற்கனவே இராமானுஜரின் புலமை

குறித்து அறிந்திருந்த ஆளவந்தார் தன்

சீடர் காஞ்சிபூர்ணர் சொன்ன தகவலைக்

கேட்டதும் வைணவ வழிமுறைக்குத்

தனக்குப் பிறகு இராமானுஜரே

தலைமைப் பொறுப்பேற்க

வேண்டுமென்று விரும்பினார்.


இதற்காக இராமானுஜரை

காஞ்சிபுரத்திலிருந்து

ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வர

அவருடைய மற்றொரு சீடரான

மஹாபூர்ணர் (பெரிய நம்பி) என்பவரை

அனுப்பி வைத்தார்.


மஹாபூர்ணரும் காஞ்சிபுரம் சென்று

இராமானுஜருக்கு வைணவ வழக்கப்படி

தீட்சை அளித்து ஸ்ரீரங்கம் வந்து

ஆளவந்தாரைச் சந்தித்துச் செல்லும்படி

வேண்டினார். சில நாட்களுக்குப் பிறகு

இராமானுஜரும் ஆளவந்தாரைத்

தரிசிப்பதற்காக ஸ்ரீரங்கம் புறப்பட்டார்.


ஆனால் அவர் ஸ்ரீரங்கம் போய்ச் சேரும்

முன்பே ஆளவந்தார் இறைவனடி

சேர்ந்திருந்தார். ஆளவந்தாரின் வலது

கரத்தில் மூன்று விரல்கள் மட்டும் மடங்கி இருந்தன.

அதைக்கண்ட இராமானுஜர்,

திருவரங்கத்துப் பெரியோர்களிடம்

“ஆளவந்தாரின் வலது கரத்தில் மூன்று

விரல்கள் மட்டும் மடங்கியிருக்க என்ன காரணம்?” என்று கேட்டார்.


 அவர்கள்

ஆளவந்தாரின் வியாஸ, பராசர

முனிவர்களிடம் கொண்ட நன்றியறிவும்,

நம்மாழ்வரிடம் பற்றும், பிரம்ம

சூத்திரமென்ற நூலுக்கு

விசிஷ்டாத்துவைததிற்கிணங்க

பாஷ்யம் எழுத வேண்டும் என்ற மூன்று மனக்குறையுமே அவரிடம் இருந்தன.


தாங்கள் வந்த பிறகு இம்மூன்றையும்

தாங்கள் செய்வதுடன், இந்த வைணவ

வழிமுறைக்குத் தலைமைப்

பொறுப்பையும் தாங்கள் ஏற்க

வேண்டும் என்பதும்தான் அவருடைய

கடைசிக்கால எண்ணமாக இருந்தது”

என்றனர்.




இன்னும் அனுபவிப்போம்...


உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

2 comments:

  1. வணக்கம் உங்களை தொடர்பு கொள்ள நினைக்கிறேன் 0716565027

    ReplyDelete
    Replies
    1. அய்யா, வணக்கம், என் பெயர் சந்தானம், கோவை, 9176012104

      Delete