Friday, 28 February 2020

அகத்தியர் பாடல் - மாதங்களில் அவர் மார்கழி

மாதங்களில் அவர் மார்கழி
வேதங்களில் அவர் உட்பொருள்
உருவங்களில் அவர் உன் உருவம்
அருவங்களில் அவர் பேருருவம்
பருவங்களில் அவர் வாலிபம்
புருவங்களில் அவர் உரையுமிடம்
துருவங்களில் அவர் பனித்துருவம்
காலங்களில் அவர் வசந்த காலம்
ஆயுதங்களில் அவர் வேலாயுதம்
அசுரவதத்தில் அவர் சக்ராயுதம்
யோகங்களில் அவர் ராஜ யோகம்
சித்தத்தில் அவர் வாசி யோகம்
கர்மத்தில் அவர் கர்ம யோகம்
பாடல்களில் அவர் பாமாலை
வ்ருக்ஷங்களில் அவர் கற்பகம்
மருத்துவத்தில் அவர் ஆயுர்வேதம்
நோய் தீர்ப்பதில் அவர் சித்தவேதம்
பக்ஷிகளில் அவர் கருடதேவன்
உணர்வுகளில் அவர் பூரிப்பு
உறவுகளில் அவரே அம்மையப்பர்
குருக்களில் அவரே சற்குரு
சங்கங்களில் அவர் சத் சங்கம்
நதிகளிலே அவர் தாமிரபரணி
பதிகளிலே அவர் உமாபதி
திதிகளில் அவர் முழுமதி
தூதிகளிலே அவர் சிவதுதி
விதிகளிலே அவர் வேதநாயகன்
கதிகளிலே அவர் நற்கதி
மலைகளிலே அவர் தென்கைலாயம்
அலைகளில் அவர் பேரலை
சிலைகளிலே அவர் மரகதம்
கலைகளிலே அவர் கலைவாணி
இசையினிலே அவர் நாதவீணை
திசையினிலே அவர் கிழக்கு
உயரத்தில் அவர் பொதிகைமலை
சிகரங்களில் அவர் கயிலாயம்
மலர்களிலே அவர் தாமரை
நிறங்களிலே அவர் வெண்மை
தலங்களில் அவர் காசி
யாகங்களில் அவரே பூரணாகுதி
ஊரினிலே அவர் உச்சி பிள்ளையார்
பேறினிலே அவர் முக்திப்பேறு
தேரினிலே அவர் திரு ஆரூர்
பாரினிலே அவர் பரந்தாமன்
லோகங்களில் அவர் சத்ய லோகம்
புராணத்தில் அவர் சிவபுராணம்
புகழிலே அவர் திருப்புகழ்
இதழிலே அவர் புன்சிரிப்பு
கண்களிலே அவர் ஒளிவெள்ளம்
செவியிலே அவர் கட்செவி
உணர்வுகளிலோ அவர் மென்மை
அறங்களில் அவரே வாய்மை
தரங்களிலே அவர் தருமம்
சக்கரங்களில் அவர் கால சக்கரம்
ஆற்றில் இறங்கும்போது அழகர்
சூரனை வதைத்தபோது முருகன்
திரிபுரம் எரித்த போது ஈசன்
வினைகள் தீர்க்கும் விநாயகன்
செல்வங்களில் அவர் குபேரன்
சம்பத்துகளில் அவர் சகலசம்பத்து
காரியங்களில் அவர் வெற்றி
வெற்றிடத்தில் அவரே சக்தி
சக்தியில் அவரே சிவம்
சிவத்தில் உள்ளே பரம்
பரத்தின் உள்ளே வெளி
வெளியில் எல்லாமும்.
ஆரம்பம் இல்லாத முடிவுமில்லாத அளப்பற்கரிய நெடியவேந்தன் அண்ணாமலையான் மகேசுவரன், எம் அகத்தீசன் திருவடி பணிந்து போற்றி தொழுது தொண்டாற்றி மகிழ்வோம். வாழ்வாங்கு வாழ்வோம் சிரஞ்சீவியாய் பெரும் ஜீவியாய் சஞ்சீவியாய் சகல ஜீவியாய் அறிவு ஜீவியாய் பெரும் ஜோதியாய் உட் கலப்போம்.
ஓம் மகத்தான அகத்தீசா உம் திருவடியே கதி !!!!!!!!!
TRS 29.02.2020