Monday, 24 February 2020

அன்னை பாடல்

அன்னையே ஆதி சக்தியே
முன்னையே மூல சக்தியே
என்னையே ஏக சக்தியே
வின்னையே வீர சக்தியே
மண்ணையே மாய சக்தியே
ஏகாம்பரியே ஜகன்மோகினியே
மார்த்தாண்ட பயிரவியே
மூல நாயகியே மண்டல சக்தியே
திரிபுராந்தக காளியே
திரிசக்தியே, திகம்பரியே
என்னுள் வாழும் ஈஸ்வரியே
எமை ஆளும் பரமேசுவரியே
ஏக நாயகியே என்னுள் இருப்பவளே
வா வா என்னுள் இறங்கு
உள்ளிருந்து பொங்கு
வ்யாபி இங்கு
பாரெங்கும் பரவு


இயக்கத்தின் மூலமே
இச்சா சக்தியே
இணையில்லா தாயே
கடவூர் வாழும் தேவியே
கருமாரியே கருவாய் இருப்பவளே
கற்பூர ஜோதியே
கண்ணகியே கமலவள்ளியே
காமேஸ்வரியே, காமாட்சியே
கருவூர் அரசியே
கற்பகாம்பிகையே
கண்ணாயிரம் உடையாளே
கோதையே லட்சுமி தேவியே
வீணா தேவியே வாழும் தெய்வமே


உனை நினைப்போர் நிம்மதி அடைவர்
துதிப்போர் துயர் நீங்குவர்
யோசிப்போர் யோகம் பெறுவர்
பாடுவோர் பாக்கியமெலாம் பெறுவார்
வணங்குவோர் வல்லமை பெறுவர்
நோக்குவோர் நோய் நீங்க பெறுவர்
தூக்குவோர் தூய்மை அடைவர்
ஏற்றுவோர் ஏற்றம் பெற்று உயர்வர்
சிந்திப்போர் சிந்தை தெளிவர்
பேசுவோர் பெரும் பேறு பெருவர்
கொள்வோர் கோள்களை ஜெயிப்பர்

நீ இருக்கும் இடமெல்லாம் நீங்கா செல்வம் என்றென்றும் நிறைந்து இருக்கும்.
சிவகாமேஸ்வரியை துதிப்போர் ஜெகமாள்வர்
சிவசக்தி ஐக்கிய சொரூபிணியை தொழுவோர் சிரஞ்சீவித்துவம் பெறுவர்
பிரம்மத்தின் பொருளே பிரம்ம நாயகியே
உங்கள் திருவடியை பணிந்து நிற்போம்

அருளை யாசிப்போம்
சத்தியத்தை யோசிப்போம்
உன்னையே நேசிப்போம்
அன்னையே சுவாசிப்போம்
எம்மையே தந்திடுவோம்
உம்மையே இயம்பிடுவோம்
ஊன் உறக்கத்தில் அன்னையே
உணர்விலும் அன்னையே

செயலில் செகதாம்பிகை
நாவில் சரஸ்வதி
கைகளில் காத்யாயினி
கால்களில் கௌமாரி
நெற்றியில் விசாலாட்சி
புருவத்தில் புவனேசுவரி
நாசியில் நவசக்தி
வாசியில் வாலை ஈஸ்வரி
பேச்சில் பெரியநாயகி
மூச்சில் மூகாம்பிகை
சிரத்தில் லலிதாம்பிகை
மார்பில் லட்சுமி தேவி
வலக்கையில் வாராகி
இடக்கையில் துர்கா பரமேசுவரி
வயிற்றில் வண்டார்குழலி
சொப்பனத்தில் சொர்ணாம்பிகை
வாகனத்தில் திருசூலி வராகி பஞ்சமி
பார்வையில் நேத்ரபூஷனி
உச்சந்தலையில் உமாதேவி

தெற்கே அகத்தியர்
வடக்கே புலத்தியர்
மேற்கே கோரக்கர்
கிழக்கே போகர்
மத்தியிலே சுப்பிரமணியர்

அவர்களின் சுற்றமுடன்
உமையோருப்பாகராகிய சர்வேசுவரர்
சதாசிவர் திரிபுரம் எரித்தவர்
தாள் வணங்கி
வாழ்வாங்கு வாழ்வோம் இப்புவியெங்கும் நிறைந்து
அருள் உள் பரவ அச்சம் விலக
அமைதி பொலிய
ஆற்றல் மிக
அறிவு உயர
பெண்மை பெருமை கொள்ள
ஆண்மையே அரணாக கொண்டு
அருந்தவம் ஆற்றி
அருள் நிலை எய்துவோம்
சிறப்புடன் வாழ்வோம்
பல்லாண்டு பல்லாண்டு
பல கோடி நூறாண்டு


உண்டு உண்டு
அன்னை உண்டு
அருள் கண்டு
உய்து உய்வித்து
செய்து செய்வித்து
அறிந்து அறிவித்து
புரிந்து புரிவித்து
தெரிந்து தெரிவித்து
பரந்து பரப்பித்து
உணர்ந்து உணர்வித்து
கொணர்ந்து கொள்வித்து
இயைந்து இயைவித்து
கிடைத்து கிடைப்பித்து
கடைந்து கலை உருவாகி
நினைந்து உருகி தொழுவோருக்கு
அன்னை அருள் பரிபூரணம்.

ஆக்கம்
தி. இரா. சந்தானம்
23.02.2020