Sunday 20 May 2018

என்றைக்கு இறக்கிறோமோ அன்றைக்கு துயிலெழத் தெரியும்

என்றைக்கு இறக்கிறோமோ அன்றைக்கு துயிலெழத் தெரியும் ....என்னவோ முடிந்ததென்று
சட்டென்று பயம் போலொன்று மறந்திட முயற்சி செய்யும். ஆயினும் கலவரம் தூக்கி
ஒன்றிரண்டு உளறல்  நடக்கும்.
அமர்ந்திட நடக்கத் தோன்றும் நடந்திட
அமரத் தோன்றும்
படுத்திட முடியாதோர் பயம் உள்ளே புரண்டிருக்கும் விலுக்கென எழுந்த பின்னர் விட்டத்தை வெறித்து நோக்கும்.
சிந்திக்க ஏதுமின்றி உள் மனம் கலைந்திருக்கும்

நோயென்றால் கண்கள் சொருகும் தேகத்தின் காயமென்றல் கடும் வலி
கண்டிருக்கும்.
சடக்கென்று மரணம் வந்தால் இவையத்தனையும் சில நொடிப் பொழுதில்
நீண்டதும் சுருக்கமுமாக சுருங்கியது நீளமாக காலத்தின் தன்மை மாறும்
பகல் இரவு காலம் அழிந்து கடிகாரக் காலம் கலைந்து வேறொரு காலம் தோன்றும் விளக்கிட முடியாதய்யா

முதலிலே கால்கள் துவளும் மூலாதாரம் நகர்ந்து போக பிறகு வரும் சுவீதிஷ்டானம்
குறி மலக் குடல் நிலை போக இதன் பின்னே சீரண  சக்தி சீறுநீரக வலுவு குறையும் மணிபூரகம எனவே சொல்வார்
நெஞ்சிலே பாறை வைத்த திணறல்
தோன்றுமாயின் முடிந்தது மீட்சியரிது அனாதகம் அமைதியாச்சு
தொண்டையிற் கரகர சப்தம் விசுக்தியின் வேலை முடிந்தது. உன்னுயிரை உடம்பினோடு பிணைத்தது குண்டலினி முடிச்சு
இனி மீதம் ஆஞ்ஞை தானே பிரஞ்ஞையும் நகரும்தானே

இந்நேரம் வேறொரு உலகம் முன்னிருந்தோர் கடவுள் தூதர்
காட்சியாய் தெரியும் திகைப்பீர்
தெரு சப்தம் உறவினர் அழுகை
தாதியின் அதட்டல் பேச்சு காற்றழுத்த
சப்தம் சூடு கைகால் நரம்பிழுப்பு
நெற்றிக்குள்  நெருப்பு கோளம் போகாதே போகாதே உடம்பதன் அலறல் சபதம் மனம்
குழப்பத்தின் உச்சகட்டம.

அந்நேரம் தெளிவு வரணும் கதை முடிஞ்சு போச்சு என்று உடன் துணிந்தேற்றுக் கொள்வீர் மிரளவே உள்ளே அலறும்
அலறவே அடுத்த வாழ்கை குறையாகத் துவங்கும்தானே
அங்கு போய் குடியேறாது இங்கு வாழ் இடமில்லாது முன் பின்னாய்  சீவன் அலையும்
ஆற்றிலே ஒரு கால் ஆழச் சேற்றிலே
ஒரு கால் என்ற சூத்திரம் இதுவே கண்டீர்
உ லகவாழ்வென்பது  ஆறு அதுவோ புதைகுழி சேறு அசையாத தபசு அங்கே ஆட்டமான  ஆட்டம் இங்கே
உச்சியை சகஸ்ரத்தை உடல் நழுவ
விட்டபோது உனக்கினி பெயரேயில்லை
உடம்பது அழியத் துவங்கும்.

இது வரை நடந்ததென்ன இனி நடக்கப் போவதென்ன என்பதை அறிய முயன்றால்
அழகான தெளிவு கிடைக்கும் எந்த அர்த்தமும் இல்லையென்று.
மரணத்தை ஜீரணித்தால் வாழும் வாழ்வு எளிது எளிது.  இக்கவிதை மறக்க முயன்றால் மறந்தோர்க்கு மீட்சியில்லை.

- எழுத்துச்சித்தர் பாலகுமாரன்