Monday 26 February 2018

சங்கு ஸ்வாமிகள் ஜீவசமாதி

சங்கு ஸ்வாமிகள் ஜீவசமாதி


மகான்களது அவதார காலங்கள் மாறுபட்டிருந்தாலும் அவர்களது நோக்கம் ஒன்றுதான். அதாவது பக்தியை இயன்றுவரை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது. வறுமை, நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு உதவுவது. இவையே அவர்களின் நோக்கங்கள். பக்தர்களது எளிய வாழ்வுக்கு என்னென்ன தேவையோ, அவற்றை என்றென்றும் கிடைக்கும்படி அருள்புரிந்தனர். வைத்தியர்களால் கூடத் தீர்க்க முடியாத விதிப் பயனால் விளைந்த நோய்களை தங்களது அருளாசியினால் பறந்தோட வைத்தார்கள்.

தென் தமிழகத்தில் கோவில்பட்டியில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் பசுவந்தனை எனும் கிராமம் உண்டு. இங்கே விவசாயக் குடும்பத்தில் அவதரித்த சங்கு ஸ்வாமிகள் என்பவர் மிகச்சிறந்த சித்த புருஷர். இவர் பிறந்தது. சமாதி ஆனது முதலான விவரங்கள் பல காலமாக அறியப்படாமலே இருந்தது. என்றாலும் ஸ்வாமிகளுடன் இருந்து சீடர்களது காலத்தைக் கொண்டு ஓரளவு ஊகித்து அறிந்துள்ளனர். அதாவது, சங்கு ஸ்வாமிகள் பிறந்தது 1785 என்றும், ஜீவசமாதியானது 1870 என்றும் அனுமானிக்கப்படுகிறது.

சங்கு ஸ்வாமிகளின் தந்தையார் பெயர் சிவஞான தேசிகர். இவருக்கு இரு மகன்கள். மூத்தவர் தங்கப்பிள்ளை. இளையவர் சங்கு ஸ்வாமிகள் (தங்கப் பிள்ளையின் வாரிசான ஏழாவது தலைமுறையினர் பசுவந்தனையில் இன்றும் உள்ளனர் இவர்களில் மூத்தவரான பிரம்மநாயகம், சங்கு ஸ்வாமிகளின் சமாதி வழிபாடுகளை கவனித்து வருகிறார். அடுத்தவரான ஐ. மாடசாமி பிள்ளை பசுவந்தனை அருள்மிகு கயிலாயநாதர் ஆலயத்தில் கணக்கராகப் பணிபுரிகிறார்) சங்கு ஸ்வாமிகளுக்குத் திருமணம் ஆகவில்லை. சங்கு ஸ்வாமிகள் எப்படி இருப்பார் என்பதற்கான தகுந்த புகைப்பட ஆதாரங்கள் இன்றுவரை கிடைக்கவில்லை. எனினும் இளம் வயதில் ஸ்வாமிகள் இப்படிதான் இருந்திருப்பார் என்ற யூகத்தின்பேரில் அவருடைய அன்பர்கள் படம் ஒன்றை வரைந்து உருவாக்கியுள்ளனர். அதில் கட்டுமஸ்தான தேகம், சாந்தமும், தெய்வீகமும் தவழும் திருமுகம். கம்பீரமான மீசை. திருநீறும் ருத்திராட்சமும் துலங்கும் திருமேனி என அருள் ததும்பும் வடிவமாகத் திகழ்கிறார் ஸ்வாமிகள்.

சங்கு ஸ்வாமிகள் அவதரித்த பசுவந்தனையிலேயே இவரது ஜீவசமாதி இருக்கிறது. சமாதியின் மேல் லிங்கப் பிரதிஷ்டை முன்னே நந்திதேவர். தவிர, இங்கு விநாயகரும் தரிசனம் தருகிறார். ஜீவசமாதி, கதைச் சிற்பங்கள் நிறைந்த விமானத்துடன் திகழ்கிறது. பிராகாரத்தில் சங்கு ஸ்வாமிகளின் சிஷ்யரான நத்தக்காடு சங்கு ஸ்வாமிகள் சமாதி இருக்கிறது. மேலும் கோவிந்தபுரம், சங்கு ஸ்வாமிகள். சிங்கிலிப்பட்டி சங்கு ஸ்வாமிகள். மாவிலிப்பட்டி சங்கு ஸ்வாமிகள் முதலான சிஷ்யர்களும் சங்கு ஸ்வாமிகளுக்கு உண்டு. இவர்களது சமாதிகள் வேவ்வேறு இடங்களில் உள்ளன்.

தினமும் காலை ஒன்பது மணிக்கு சங்கு ஸ்வாமிகளின் ஜீவசமாதிக்கு வழிபாடு நடைபெறுகிறது. இங்கு வைக்கப்படும் பிரார்த்தனை குறைவின்றி நிறைவேறுவதாகச் சொல்கிறார். இங்கு பூஜைகள் செய்துவரும் பிரம்மநாயகம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் அசுவினி நட்சத்திர தினத்தன்று சங்கு ஸ்வாமிகளின் குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது.

ஒருமுறை சிங்கம்பட்டி ஜமீன்தாரான நல்லக்குத்தி பெரியசாமித் தேவர் ராஜா, பூர்வ ஜன்ம வினைப்பயனால் மகோதரம் என்னும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயால் பெரிதும் அவதிப்பட்டார் (சங்கு ஸ்வாமிகள் காலத்தில் ஜமீனை ஆண்டு வந்தவர் இவர்) பசுவந்தனையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் இருக்கிறது சிங்கம்பட்டி பசி எடுக்கும், சாப்பிட முடியாது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. வாந்தி, குமட்டல் என்று நரக வேதனையை அனுபவித்து வந்தார் ஜமீன்தார் இதைக் கண்ட அவருடைய குடும்பமே சோகத்தில் தவித்தது. அரண்மனை வைத்தியர்கள், வெளியூர் வைத்தியர்கள் என்று பலர் முயன்றும் ஜாமீன்தாரின் நோயை குணப்படுத்தவே முடியவில்லை. தெய்வ பக்தியில் சிறந்தவரான ஜமீன்தார்.

அவர் கனவில் தோன்றிய நடராஜ பெருமான். அன்பனே வருந்தாதே உனக்கு ஏற்பட்ட நோயைத் திர்க்கவல்ல சங்கு ஸ்வாமிகள் பாண்டிய தேசத்திலே பசுவந்தனை எனும் தலத்தில் உள்ளான். எனக்கு மிகவும் வேண்டிய அடியவன். பரமஞானி, விடிந்ததும் அவனைத் தேடிப் புறப்படு. நலம் பெறுவாய் என்று அருளினார். இறைவன் அருளியதில் குளிர்ந்துபோன ஜமீன்தார்.

விடிந்ததும் சிவனாரை வணங்கிவிட்டு பசுவந்தனை நோக்கிப் புறப்பட்டார். பல நாட்கள் பயணித்து பசுவந்தனை திருத்தலத்தை அடைந்தார். பல்லக்கில் ஜமீன்தார் வருவதைக் கண்டு ஆச்சரியத்துடன் பார்த்த ஊர்மக்கள் பல்லக்கைத் தொடர்ந்தனர். அவர்களிடம் இந்த ஊரில் சங்கு ஸ்வாமிகள் என்பவர் எங்கே வசித்து வருகிறார்? என்று பவ்யமாகக் கேட்டார். சங்கு ஸ்வாமிகளா? அப்படி ஒரு ஆசாமி இந்த ஊரிலேயே இல்லை என்றனர் மக்கள். இந்த ஊரில்தான் இருக்கிறார் ஒருவேளை. அந்தத் தவசீலரைப் நீங்கள் தரிசித்தது இல்லையோ? அப்போது கும்பலில் இருந்த ஒருவன். மகாராஜா. இந்த ஊரில் சங்கு ஸ்வாமிகள் என்று எவரும் இல்லை. ஆனால் சங்கு என்று ஒரு சோம்பேறி இருக்கிறான். ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற பாழடைந்த மண்டபத்தில் அந்தச் சோம்பேறி படுத்துகிடைப்பான் என்றான். ஜமீன்தாரின் முகம் பிரகாசம் ஆனது. ஆமாம். அவர்தான். நான் அவரைத்தான் தரிசிக்க வேண்டும். எனக்கு வழி காட்டுங்களேன் என்றார் கெஞ்சலாக, ஊர்ஜனங்கள் முன்னே நடக்க பாழடைந்த மண்டபம் நோக்கிப் பல்லக்கு புறப்பட்டது. அங்கே மண்டபத்தின் சிதிலமடைந்த திண்ணையில் கால் மேல் கால் போட்டு ஏதோ சிந்தித்த பாவனையில் இருந்தார் சங்கு ஸ்வாமிகள். பல்லக்கில் இருந்து இறங்கிய ஜமீன்தார் ஸ்வாமிகளை நோக்கி மெள்ள நடந்தார்.

கண்ணில் நீர் மல்க அவரை வணங்கினார். தட்டுகளில் பழங்களும் பலகாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஜமீன் தாரை ஏறெடுத்துப் பார்த்த சங்கு ஸ்வாமிகள், என்ன அப்பனே, அந்த நடராஜ் பெருமான் உன் நோயைத் தீர்க்க முடியவில்லை என்று என்னிடம் அனுப்பி இருக்கிறாரோ? எல்லாமே ஒரு நாடகம்தான். இந்தா இந்தப் பழத்தைச் சாப்பிடு என்று தட்டில் இருந்த பழம் ஒன்றை எடுத்து அவருக்குக் கொடுத்தார். இறை அருளால் கிடைத்த தெய்வப் பிரசாதம் எனக்கருதி அதை உண்டார் ஜமீன்தார் என்னே ஆச்சிரியம். அந்தப் பழத்துண்டுகள் வயிற்றுக்குள் சென்றதும் ஒரவித புத்துணர்வு ஜமீன்தாரை ஆட் கொண்டது. அமிர்தத்தை உண்டவர் போல் மகிழ்ந்தார். ஆடினார் பாடினார். சங்கு ஸ்வாமிகளுக்கு நன்றி தெரிவித்து விழுந்து வணங்கினார். அவரது மகிமையை ஊர் மக்களுக்கும் புரிய வைத்தார். சங்கு ஸ்வாமிகள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வைபவத்துக்கும் சிங்கம்பட்டி ஜமீனில் இருந்து உரிய மரியாதை இப்போதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பசுவந்தனை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பாசனம் மற்றும் குடி நீருக்கு எப்போதுமே தட்டுப்பாடு உண்டு. காரணம், இங்கு ஆறு குளங்கள் எதுவும் கிடையாது. எனவே மழை நீரை சேகரித்து வைத்து, அதைத் தட்டுப்பாடான காலங்களில் பயன்படுத்துவது வழக்கம். ஒரு வருடம் மழை பொய்த்துப் போனாலும் அதோகதிதான். இதுபோன்ற தருணத்தில் சங்கு ஸ்வாமிகளே பல ஊருணிகளை (குளம்) ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது அவர் எங்காவது பயணிக்கும்போது எதிர்ப்படும் எவராவது சாமி ரொம்ப தாகமாக இருக்கு. தண்ணி வேணும் என்று கேட்டுவிட்டால் போதும். ஓரிடத்தில் உட்கார்ந்து கைகளால் மணலைத் தோண்டுவார். உடனே அவர்களும் சேர்ந்து தோண்டுவார்கள். சிறிது ஆழ்த்திலேயே தண்ணீர் ஊற்றுபோல பிய்ச்சிக்கொண்டு வரும். ஸ்வாமிகளின் அருள் திறத்தால் உண்டான பல ஊருணிகள் இன்றும் பசுவந்தனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ளன. இவை சங்கு ஸ்வாமிகள் ஊருணி என்றே அழைக்கப்படுகின்றன.

எல்லா மகான்களையும் போலவே, தான் சமாதி ஆகப்போகும் காலம் இதுதான் என்று துல்லியமாகத் தன் சீடர்களிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார் சங்கு ஸ்வாமிகள். அந்த நாளும் வந்தது. அன்று பசுவந்தனை கயிலாயநாதர் ஆலயம் சென்று இறைவனைத் தொழுதார். பிறகு அவர் சொன்ன அதே நேரத்தில் ஜப மாலையுடனும் சீன முத்திரையுடனும் சமாதி ஆனார். ஸ்வாமிகள். அவர் கூறியிருந்தபடி சமாதி அமைத்து. அவரது பூத உடலை நல்லடக்கம் செய்தனர் சீடர்கள். இன்றும் தன் சமாதி கோயிலை நாடி வரும் பக்தர்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி நல்லருள் புரிந்து வருகிறார் சங்கு ஸ்வாமிகள். நாமும் அவரின் திருவடி பணிவோம். திருவருள் பெறுவோம்.

தலம் பசுவந்தனை சிறப்பு சங்கு சுவாமிகள் சமாதி கோயில். எங்கே இருக்கிறது? கோவில்பட்டியில் இருந்து தெற்கே சுமார் 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது பசுவந்தனை. மதுரை- நெல்லை ரயில் மார்க்கத்தில், கடம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் கிழக்கே சுமார் 10 கி.மீ. தொலைவு. மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறில் இருந்து கிழக்கே சுமார் 21 கி.மீ. தொலைவு. தூத்துக்குடி- மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும்வென்றானில் இருந்து மேற்கே சுமார் 11 கி.மீ. தொலைவில் இருக்கறது
=============================
முடிசார்ந்தமன்னரும்முடிவில்
பிடிசாம்பல்என்பதைமறவாதிருமனமே
இனிய வணக்கம் .

No comments:

Post a Comment