Tuesday 6 February 2018

உலவாக் கோட்டை

*திருவிளையாடல் புராணம்*... 🕉🙏 (38 / 64)

*உலவாக் கோட்டை அருளிய படலம்*
.
🌺மதுரையில் அடியார்க்கு நல்லான் என்பவர் தன் மனைவி தர்மசீலையுடன் வசித்து வந்தார். அவர்கள் பெரும் செல்வந்தர்கள், தங்கள் வருமானத்தில் ஆறில் ஒரு பாகத்தை அரசுக்கு வரி செலுத்தி விட்டு, மீதியை சிவனடியார்களுக்கு அன்னமிடும் பணிக்காக வைத்துக் கொண்டனர். தர்மத்தின் திருவுருவான நல்லானுக்கு செல்வ வளம் வற்றாமல் இருந்தது. இவர்களது வீட்டுக்கு எப்போது போனாலும் அன்னம் கிடைக்கும். இந்த நல்லவர்களைச் சோதிப்பதன் மூலம் அவர்களின் பெருமையை உலகறியச் செய்ய நினைத்தார் சோமசுந்தரர்.

🌺அந்த குடும்பத்தில் வறுமையை உண்டாக்கினார். அடியார்க்கு நல்லானின் வயல்கள், தோட்டங்கள் காய்ந்து போயின. இருப்பு தானியங்கள் குறைந்து விட்டது. நல்லான் கடன் வாங்கி தானம் செய்தார். ஒரு கட்டத்தில் யாரும் கடன் கொடுக்கவும் மறுத்து விட்டனர். தங்கள் சாப்பாட்டுக்கே வழியின்றி தம்பதியர் பட்டினி கிடந்தனர். தங்கள் பட்டினியை விட, அடியவர்களுக்கு தொண்டு செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் அவர்களை வாட்டியது. வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என எண்ணி, சுந்தரேசர் கோயிலுக்குச் சென்றனர். தங்கள் நிலையைச் சொல்லி கண்ணீர் வடித்து, உனது அடியவர்களுக்கு சேவை செய்ய இயலாத எங்கள் உயிரை எடுத்துக் கொள், எனக் கதறினர். அவர்களின் தரும நெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாகத் தோன்றினார்.

🌺குழந்தைகளே! வீட்டுக்குச் செல்லுங்கள், அங்கே அள்ள அள்ளக் குறையாத நெல்மணிகளைக் கொண்ட உலவாக் கோட்டை ஒன்று இருக்கும் அதைக் கொண்டு, எனது அடியவர்களுக்கு திருத்தொண்டு செய்யுங்கள், என்று கூறினார். பின்னர் இருவரும் வீட்டிற்கு சென்றனர். இறைவன் சொன்னதைப் போலவே அங்கு உலவாக் கோட்டை இருந்தது. உலவாக்கோட்டை என்றால், 24 மரக்கால் கொண்ட ஒரு அளவை. அந்த அளவைக்கு பூஜை செய்து, மீண்டும் அன்னதானப் பணியைத் துவங்கினர். காலம் முழுவதும் அந்தத் திருப்பணியைச் செய்து பரமனின் திருவடி எய்தினர்.🙏 (...தொடரும்)

🕉மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ஐந்தாம் நாள் *உலவாக் கோட்டை அருளும்* அலங்காரமும் சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.🙏

No comments:

Post a Comment