Tuesday, 2 January 2018

அகத்தியர் கூறும் சாட்சி நிலை

போச்சப்பா கண்டதெல்லாம் கனவாய்ப் போச்சு
பொரிந்த மனங்காணாத பொருள்தான் சத்தியம்
போச்சப்பா சத்தியமெல்லாம் மாயமாச்சுப்
பேச்சத்த இடமதுதான் நித்தியமாச்சே
ஆச்சப்பா ஆசையெல்லாம் பாசம் பாசம்
ஆசையற்ற ஆசையது அதுதான் சாக்ஷி
சாக்ஷி என்ற காக்ஷிதனை கண்ணாற்காண
கண்ணுமில்லை காதுமில்லை என்றுதானே


மூன்று விதமான காட்சிகளை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர்.  முதலாவது காட்சி உலகில் காணப்படும் பொருள்கள், நிகழ்வுகள்.  உச்ச நிலையை அடைய முயலும் யோகிக்கு இந்த காட்சிகள் அனைத்தும் கனவாய்ப் போகும்.  இவற்றை அடுத்து மனம் தோற்றுவிக்கும் காட்சிகள்.  அவையனைத்தையும் மனம் உண்மையாகக் கண்டாலும் அவை மாயைதான். ஏனெனில் அவற்றை மனம்தான் ஏற்படுத்துகிறது.  இந்த காட்சிகளுக்கு மூலம் பரா எனப்படும் பேச்சற்ற நிலை.  இந்த நிலையில் ஒருவரது ஆசைகள் எனப்படும் பாசம் எண்ணங்களை எழுப்பி அவற்றை காட்சிகளாக்குகிறது.  அவையே மனதின் தோற்றங்களாகவும் வெளியில் காணும் பொருள்களாகவும் தோன்றுகின்றன.  இந்த பாசத்தைக் கடந்த நிலை ஆசையற்ற ஆசை நிலை.  இதுவே சாட்சிநிலை என்ப்படுகிறது.  இந்த சாட்சிநிலையை ஒருவர் கருவிகள் எனப்படும் கண்கள், காதுகள் ஆகியவற்றால் பார்க்க முடியாது என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment