Tuesday 24 August 2021

புஜங்க லலித மூர்த்தி

 ☸️  *கணக்கற்ற சிவ வடிவங்கள்* . *புஜங்க லலித மூர்த்தி*.   *புயங்கப் பெருமான்.* நடராஜரின் *ஆயிரம் தோள் ஆயிரம் திருவடி நடனம்*. 

        புஜங்கம் – தோள். இது தமிழில் புயங்கம் எனப்படும்.  லலித மூர்த்தி  – அழகிய மூர்த்தி    

            ஆயிரம் முகம், ஆயிரம் தோள், ஆயிரம் திருவடி உடைய *ஆயிர நாதரை* 

         🌷 ஆயிரம் தாமரை போலும் *ஆயிரம் சேவடியானும்* 

          ஆயிரம் பொன் வரை போலும் *ஆயிரம் தோள் உடையானும்* 

          ஆயிரம் ஞாயிறு போலும் *ஆயிரம் நீள் முடியானும்*  

         ஆயிரம் பேர் உகந்தானும் *ஆரூர் அமர்ந்த அம்மானே*      

     என்று திருநாவுக்கரசர் துதிக்கிறார்.   திருவாரூர் தியாக ராஜர் கோயிலில் அக் கோயில் கட்டிய *முசுகுந்தச் சோழச் சக்கரவர்த்திக்காக ஆயிரம் தோள்களும் ஆயிரம்  திருவடிகளும் கொண்டு நாட்டியம் ஆடிக்  காட்சி அருளிய அழகர்*  புஜங்க லலித மூர்த்தி. இரண்டு திருவடியையே காண முடியாமல் பிரம்மனும் விஷ்ணுவும் வருந்தி நின்ற போது *ஆயிரம் திருவடிகள் நடனம் ஆடும் அற்புதக் காட்சி முசுகுந்தருக்கு* அருளியவர் புஜங்க லலித மூர்த்தி.  *ஆயிரம் திருவடிகளும் எடுத்து ஆடிய*  மிக அரிய அதி அற்புதமான *ஆயிர ஆடலை முடித்து ஆயிரம் திருவடிகளையும் வைத்தருளிய*  கருணையை 

       🔯   *ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய*    அசைவு தீர  *ஆயிரம் அடியும் வைத்த*  அடிகள் *அரூரனாரே*  (அசைவு தீர --– ஆடலை முடிக்க )   

என்று  திருநாவுக்கரசர் போற்றுகிறார். *சிவ லோகம் சேர்க்கும்* திருவாசகத்தின் *யாத்திரைப் பதிகம் புயங்க மூர்த்தியைப்* போற்றுகிறது . *ஆயிர லிங்கப் பரம்பொருள்*  பல திருக் கோயில்களில் தனிச் சந்நிதியில் சிறப்புறுகிறது.  அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. அனைத்து உலகங்களையும் படைத்து இயக்கும் ஊழி முதல்வன் ஓசை யொலிப் பெருமான் ஆடல் அழகன்  அன்பர்களுக்காக ஆடும் நடனம் பல வகைப்பட்டது.  *மதுரை சுயம்பு லிங்கச் சொக்க நாதர் கோயிலில்* *வைத்த திருவடியை எடுத்தும் எடுத்த திருவடியை வைத்தும்* பாண்டியனுக்காகத் *திருவடி மாறி ஆடியவர்* வெள்ளியம்பலச் சொக்கத் தாண்டவர். *திரு இடைச்சுரத்தில் பரசு ராமருக்காக மழு ஏந்தி ஆடியவர்* இடைச்சுர நாதர்.   இவ்வாறு இன்னும் பல அடியார்கள் பல தலங்கள்.  சிவப்பிரியா

No comments:

Post a Comment