Thursday 12 August 2021

மஹாபாரதம் ஆதி பர்வம் .................................... விதுரர் விடுத்த எச்சரிக்கை

 12. விதுரர் விடுத்த எச்சரிக்கை

………

மஹாபாரதம்


ஆதி பர்வம்

....................................


விதுரர் விடுத்த எச்சரிக்கை

...................................................

எதிரிகளை அழிக்க வெவ்வேறு உபாயங்களைக் கையாள்வது எப்படி என்ற திருதராஷ்டிரனின்  கேள்விக்கு, விளக்க மளிக்கத் தொடங்கினார் கணிகர். ஒரு காட்டில் ஒரு புலி, ஒரு ஓநாய், ஒரு கீரி, ஒரு எலி- ஆகியவற்றோடு  ஒரு நரி நட்புறவு கொண்டாடிக் கொண்டிருந்தது. இப்படி நான்கு நண்பர்களுடன் கூடியிருந்தாலும், தன்னுடைய நலனிலேயே அந்த நரி கவனமாக இருந்தது. ஒரு நாள் காட்டில் இந்த ஐந்து மிருகங்களும் ஒரு மான் கூட்டத்தைக் கண்டன. அந்த மான் கூட்டத்தின் தலைமை மான் கொழுத்திருந்தது. அதைப் பிடித்துத் தங்களுக்கு உணவாக்கிக் கொள்ள இந்த மிருகங்கள் விரும்பினாலும், அந்த மானின் வேகத்தின் காரணமாக அது இயலாத காரியமாக இருந்தது. தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வது எப்படி என்று இந்த ஐந்து  மிருகங்களும் யோசனை செய்தன.

 அப்போது நரி ஒரு உபாயம் கூறியது. புலியாரே! நீங்கள் எவ்வளவு முயன்றாலும் இந்த மானைப் பிடிக்க உம்மால் முடியாது. நான் ஒரு வழி சொல்கிறேன். அந்த மான் தூங்கிக் கொண்டிருக்கும் போது, எலி அதை நெருங்கி, அதன் காலைக் கடித்து விட வேண்டும். புண்பட்ட காலுடன் அந்த மான் சரியாக ஓட இயலாமல் தவிக்கும். அந்த நிலையில் நீங்கள் பாய்ந்தால், அந்த மான் உம்மிடம் சிக்கி விடும். நீர் அதைக் கொன்ற பின், நண்பர்களாகிய நாம் ஐவரும் விருந்துண்ணலாம். இந்த யோசனையைப் புலியும் அங்கீகரித்தது. எலி   சென்று மானின் காலைக் கடித்தது. அதன் பிறகு புலி பாய்ந்த போது மான் வேகமாக ஓட முடியாமல் சிக்கி இறந்தது.


 இறந்து கிடந்த மானை ஐந்து மிருகங்களும் சூழ்ந்து கொண்டன. அப்போது நரி, மற்ற நான்கு மிருகங்களிடம்”நான் இங்கே காவல் இருக்கிறேன். நீங்கள் நால்வரும் சென்று ஓடையில் குளித்து வாருங்கள். அதன் பிறகு நான் சென்று குளித்து  வருகிறேன். பிறகு எல்லோருமாகச்சேர்ந்து இந்த மிருகத்தை அனுபவிப்போம்” என்று கூறியது. மற்ற நான்கு  மிருகங்களும் சென்ற பிறகு, நரி தீர்க்கமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தது.


முதலில் திரும்பி வந்தது புலி. அப்போது நரி சோகமாக அமர்ந்திருந்தது. நரியே! நீ ஏன் வருத்தப் படுகிறாய்? நாம் விருந்துண்ணப்போகும் வேளையில், நீ எதற்காக வருந்த வேண்டும்? என்று புலி கேட்டது.


 அதற்கு நரி, ” காலம் கெட்டு விட்டது. பலவானாகிய உம்மைப் பற்றி எதற்கும் உதவாத எலி  என்ன சொல்லிற்று தெரியுமா? – நான் மானைக் கடித்ததால் தானே, புலியினால் அந்த மானை அடித்து வீழ்த்த முடிந்தது. என் பலத்தினால்  புலி இன்று தன் பசியைத் தீர்த்துக் கொள்ளப்போகிறது. அதற்கு வெட்கமுமில்லை. ரோஷமுமில்லை. இப்படி எலி கூறிவிட்டது. உமக்கு நேர்ந்த இந்த அவமானத்தை நினைத்துத் தான் நான் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.


 இப்படி நரி கூறியவுடன் புலி, இது எனக்கு மிகப் பெரிய அவமானம். இந்த மானை நான் புசிக்கப் போவதில்லை. இனி நானே முழுவதும் என் முயற்சியால் வீழ்த்தும் மிருகங்களைத் தான் நான் புசிப்பேன். எலி போன்ற கேலவமானஜந்துவிடம் அவச்சொல் வாங்கியாவது, பசியாற வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்று கூறிக்கோபமாகச் சென்று விட்டது.


 இதற்கு அடுத்து எலி அங்கே வந்தது. அதனிடம் நரி, இந்த மானை நான் புசிக்கப்போவதில்லை. புலியின்  நகங்கள் பட்டதால் இதில் விஷம் ஏறி இருக்கிறது என்று கூறி, அதனால் இதைப் புசிக்க மறுத்து சென்று விட்டது கீரி. கீரியின் வார்த்தையைக்கேட்ட பிறகு, எனக்கு அதைப் புசிக்க மனமில்லை. நீயும் ஜாக்கிரதையாக இரு. ஏனென்றால், இந்த மானைப் புசிக்க  மனமில்லாத கீரி, தன் பசியைத் தீர்த்துக் கொள்ள உன்னைத் தான் குறி வைத்திருக்கிறது. இதை நான்  உன்னிடம், சொல்லி  விட்டது கீரிக்குத் தெரிய வேண்டாம். இப்படி நரி கூறியவுடன், தன்னைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று எலி ஓடி விட்டது.

 அடுத்து ஓநாய் வந்தது. நரி அதனிடம், ஓநாயே! ஒரு ரகசியம் சொல்கிறேன். புலி  உன் மீது மிகவும் கோபமாக இருக்கிறது. தன் மனைவியை அழைத்து வர புலி போயிருக்கிறது. இன்று உன் கதையை முடிக்கப் போகிறதாம் அது. அதனால்  நீ விரைவாக இந்த மானைப் புசித்து விட்டு ஓடி விடு” என்று கூறியது. மானைப்  புசித்துக் கொண்டிருந்தால் நேரமும் வீணாகும். புரியின் கோபமும் அதிகரிக்கும்  என்று எண்ணிப் பயந்த ஓநாய், பிழைத்தால் போதும் என்று அங்கிருந்து  விரைந்து சென்று விட்டது.


 இறுதியாகக் கீரி வந்தது . அதனிடம் நரி , வா! உனக்காகத் தான் காத்திருக்கிறேன். நான்  பாய்ந்து குதறியதைத் தாங்க முடியாமல், ஓநாயும், புலியும், எலியும் ஓடி விட்டன. நீ ஒருவன் தான் மீதமிருக்கிறாய். உன்னால் முடியுமென்றால் என்னுடன்  சண்டையிட்டு ஜெயித்து இந்த மானைப் புசித்துக் கொள்! என்று சவால் விட்டது . கீரி, பலமுள்ள புலி, கோபமுள்ள ஓநாய், புத்தியுள்ள   எலி, எல்லோருமே உன் தந்திரமான தாக்குதலில் காயம் பட்டு ஓடியிருக்கும் போது, எனக்கு மட்டும் ஏன் தொந்தரவு? நீயே இந்த மானைப் புசித்துக் கொள்” என்று கூறிச் சென்று விட்டது.


 அதன் பிறகு தன்னுடைய தந்திரம் பலித்ததை எண்ணி மகிழ்ந்து கொண்டு தனியாகவே அந்த மானைப் புசித்தது நரி. அரசர்களும் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு  எதிரியை வீழ்த்த  ஒவ்வொரு வழி முறை தேவைப் படும். கோழைகளை பயத்தினாலும், தைரியசாலிகளைத் தந்திரத்தினாலும், வெல்ல வேண்டும். பேராசைக் காரர்களைப் பொருளினால் வெல்ல வேண்டும். தனக்குக்கீழானவர்களைப் பலத்தைக் காட்டியே ஒடுக்க வேண்டும்.


கணிகர் மேலும் தொடர்ந்தார். யாரிடமும் முழு நம்பிக்கை வைத்து விடக் கூடாது. முழுமையாக உன்னால் நம்பப் படுகிறவன், எதிரியாக மாறினால், அதனால் உனக்கு அழிவு ஏற்படும் . ஆகையால் தான் எவர் மீதுமே முழு நம்பிக்கை வைத்து விடக் கூடாது.


 நற்குணம், பொருள் சேர்ப்பது, இன்பம் தேடுவது எல்லாவற்றிலுமே நன்மையும் உண்டு. தீமையும் உண்டு.  ஒவ்வொன்றினால் கிட்டும் நன்மையை மட்டும்எடுத்துக்  கொள்ள வேண்டும். அதனால் வரக் கூடிய தீமையைத் தவிர்க்க வேண்டும். நற்குணத்தை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தால் பொருளின்மையினால் துன்பம் ஏற்படும். பொருள்  சேர்ப்பதை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தால், நற்பெயர்  கிட்டாது. இன்பமும் வராது. இன்பம் அனுபவிப்பதில் மட்டுமே குறியாக இருந்தால் பெயர் கெடும். செல்வம் பாழாகும். ஆகையால் மூன்றிலுமே சேர்ந்து அக்கறை செலுத்த வேண்டும்” எதிலும் அளவுக்கு மீறக் கூடாது.


தோல்வியுற்று வீழ்ந்து விட்ட நிலை உனக்கு தோன்றுமானால், அப்போது எந்த வழியிலாவது உன்னை நிமிர்த்துக் கொள்ள வேண்டும். அது சமாதான வழியோ வன்முறை சார்ந்த வழியோ அது பற்றிக் கவலையில்லை. அந்த நிலையில் எந்த வழியாயினும் அது சரியே. ஆனால் அப்படி நிமிர்ந்த பிறகு, நற்குணத்தை நாட வேண்டும். ஆரதவு பெருக அது தான் வழி.


 எதிரிகளை நாசம் செய்யாமலும்,  வன் முறையைக் கடை பிடிக்காமலும் ஒரு அரசன் வளர்ந்து விட முடியாது. மீன்களைப் பிடிக்காமலும் அவற்றைக் கொல்லாமலும் மீனவர்கள்  ஜீவிக்க முடியுமா? அது போல் தான் இதுவும். எதிரியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு விட்டோம் என்று நினைத்து அரசன் அந்த எதிரி விஷயத்தில் நிம்மதி  அடைந்து விடக் கூடாது. விழிப்புடனே இருக்க வேண்டும். ஒரு மரத்தில் உச்சியை அடைந்தவன், இனி ஏறுவதற்கு என்ன இருக்கிறது என்று நினைத்து அங்கேயே உறங்கி விட்டால், கீழே விழுந்து விடுவான். அவனுக்கு எப்படி விழிப்புணர்வு தேவையோ, அதே போல் தான் ஒரு அரசனுக்கும் தேவை.


 இல்லாதவர்கள், இருப்பவர்களை நாடி வருவது இயற்கை . அவர்கள் அப்படி நாடி வருவது தேவையின் காரணமாகத்தானே தவிர, அன்பினால் அல்ல. அந்தத்தேவை நீங்கி விட்டால் , இல்லாதவன் இருப்பவனை நாடி வர மாட்டான்.

ஆகையால் ஒருவன் மூலமாக அரசனுக்குக் காரியங்கள் ஆக வேண்டி இருந்தால், அந்த ஒருவனின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து விடக் கூடாது. தேவை பூர்த்தியானால் அரசனின்  காரியத்திற்கு அந்த ஒருவன் பயன்பட மாட்டான். அந்த ஒருவனுக்குத் திருப்தி ஏற்பட வேண்டும். அப்பொழுது தான் காரியம் நடக்கும். ஆனால், முழு திருப்தி ஏற்பட்டு விடக்  கூடாது.  ஏற்பட்டால்  அந்த ஒருவன் அலட்சியமாகி விடுவான்.



 ஒரு காரியத்தை அரசன் செய்ய நினைக்கிறான் என்பது யாருக்கும் தெரியக் கூடாது. நிபுணர்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும். ஆனால் அந்த ஆலோசனையின் முடிவில் அரசன் என்ன நினைக்கிறான் என்பது, அந்த நிபுணர்களுக்கே  கூடத் தெரியக் கூடாது. தன் முடிவை அரசன் செயலாற்றும்  போது தான், மற்றவர்கள் அதை அறிய வேண்டும் . நெருக்கடி  வரும் வரை அரசன் பயந்தவன் போல் இருக்க வேண்டும். நெருக்கடி வந்து விட்டால், பயமற்றவனாகக் காட்சி அளிக்க வேண்டும்.


  எதிர் காலத்தில் ஒரு குறிப்பிட்ட ஆபத்து நேரிட்டாலும் நேரிடலாம் என்ற நிலைமை இருந்தால், அந்த ஆபத்து வரும் போது சமாளிக்கலாம் என்று கவலையற்று இருந்து விடக் கூடாது. எதிர் காலத்தில் வரலாம் என்பது, இப்போதே வந்து விட்டது போல் நினைத்து, அதை எதிர் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காலம், நேரம் அறிந்து செயல்பட வேண்டும். எதிரிக்குச் சலுகை காட்டும்போது, அதை உடனடியாகச் செய்து விடக் கூடாது. அவனை அதற்காகக் காக்க வைத்து, பிறகு சிறிது சிறிதாகச் செய்ய வேண்டும். சலுகைகளைத் தள்ளிப்போடுவதற்குச் சரியான காரணங்களைக் கண்டுபிடித்துக் கூறி, காலம் தாழ்த்த வேண்டும். நன்மை கிட்டினாலும் போதும்- என்ற நிலைக்கு அவனைக் கொண்டு வரவேண்டும்.


 அரசன் கத்தி போன்றவனாக இருக்க வேண்டும். கத்தி உறையில் இருக்கும் வரை, அதனுடைய கூர்மை யாருக்கும் தெரிவதில்லை. வெளியே  வந்தவுடன், அதனுடைய கூர்மை  கொல்லத் தகுந்ததாக இருக்கிறது. தருணம் வாய்க்கும் வரை உறையில் இருக்கும் கத்தி போல் , தன்னுடைய கூர்மையை மறைக்கும் அரசன், தருணம் வாய்த்த போது  உறையை விட்டு வெளியே வந்த கத்தி போல் ”பளீர்” எனச்  செயல்பட வேண்டும்.


 திருதராஷ்டிர மன்னனே! பாண்டவர்கள் உன் புத்திரர்களை விட பலம் வாய்ந்தவர்கள். அவர்களிடமிருந்து உம்மையும், உம் புத்திரர்களையும் காத்துக் கொள்ளுங்கள். வருங்காலத்தில்  அவர்களால் உங்களுக்கு வருத்தம் உண்டாகாமல் இருக்க வேண்டும். எதிர் காலத்தில் அவர்களிடமிருந்து  உங்களுக்கெல்லாம் அச்சம் தோன்றாமல் இருக்க,  தக்க  நடவடிக்கையை  இன்றே எடுத்து விடுங்கள். அதே சமயத்தில் , நியாயப் படியும் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறி விடை பெற்றார் கணிகர்.



கணிகர் கூறியதையெல்லாம் திருதராஷ்டிரன்  யோசித்துக் கொண்டிருந்த போது, துரியோதனன், கர்ணன், சகுனி, துச்சாதனன்- ஆகிய நால்வரும் ஒரு ஆலோசனை நடத்தினார்கள்.வாரணாவத நகரத்திற்குப் பாண்டவர்களை அனுப்பி விட்டு, அங்கேயே அவர்களைத் தீர்த்துக் கட்டி விட வேண்டும்  என்ற முடிவை இவர்கள் செய்தார்கள். பிறகு திருதராஷ்டிரனிடம் சென்று  துரியோதனன், தந்தையே! பாண்டவர்களை எப்படியாவது வாரணாவதம் அனுப்புங்கள். அங்கே  சிறிது காலம் அவர்கள் இருக்கட்டும். இங்கே நான் என்னுடைய அதிகாரத்தின் கீழ் எல்லாவற்றையும் கொண்டு வந்த பிறகு அவர்கள் திரும்பி வரட்டும்.  அப்போது அவர்களால் நமக்கு அச்சம் ஏற்படாது” என்று கூறினான்.

 கணிகர் கூறியதையும் நினைத்து, துரியோதனன் கேட்பதையும் ஆலோசித்து, திருதராஷ்டிரன் இதற்கு இசைந்தான்.


 திருதராஷ்டிரனின் யோசைனையின் பேரில், பாண்டவர்கள் வாரணாவதம் செல்லச் சம்மதித்தார்கள். தர்ம புத்திரருக்கு, திருதராஷ்டிரனின் உள்நோக்கம்  புரிந்தே இருந்தது. இருந்தாலும் இச்சமயத்தில் இதை ஏற்பது தான் சரியான வழி என்று நினைத்து அவர் தன் சகோதரர்களுடன் வாரணாவதம் செல்லச் சம்மதித்தார்.

 துரியோதனன் வாரணாவதத்தில் பாண்டவர்கள் தங்குவதற்கு அரக்கு மாளிகை எழுப்ப ஏற்பாடு செய்தான். அரக்கு, சணல், மெழுகு, எளிதில் தீப்பற்றக் கூடிய ஒரு வகை மரம். பஞ்சு போன்ற பொருட்களைக் கலந்து, அந்த மாளிகையை  புரோசனன் என்பவன் எழுப்பினான். சரியான தருணம் வாய்க்கும் போது, அந்த மாளிகையைத் தீக்கிரையாக்கி, புரோசனன் பாண்டவர்களைக் கொன்று விட வேண்டும் என்பது துரியோதனனின் உத்திரவு.


 இதை அறியாத பாண்டவர்கள் வாரணாவதத்திற்குப் புறப்படும்  நேரம் வந்தது. அவர்கள் எல்லோரிடமும் விடை பெற்றார்கள். அப்போது விதுரர், தர்ம புத்திரரிடம், தேகத்தை அழிப்பது உலோகத்தினால்  செய்யப் பட்ட ஆயுதம் மட்டுமல்ல. இதை அறிந்தவனை,  அவனது பகைவர்களால் கொல்ல முடியாது. மரங்களை அழிப்பதும், குளிரை நீக்குவதுமான நெருப்பு, பூமிக்கடியில் வளைக்குள்ளே  வசிக்கும் எலியை நெருங்காது. உலோகத்தினால் செய்யப் படாத  ஆயுதம்  தன் மீது பிரயோகிப்பவன், தாக்கும் தந்திரம் அறிந்தவன். காட்டுத் தீயிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முள்ளம் பன்றி தரையிலே குகை தோண்டி அதனுள்ளே புகுந்து விடும். நடுநிசியில் நடப்பவன் கூட,  நட்சத்திரங்களைக் கொண்டு, தான் செல்லும்  திசையை அறிந்து கொள்ளலாம். இவையெல்லாம் சாதாரண ராஜநீதி சூத்திரங்கள்-  என்று கூறினார்.



இதைக்கேட்டுக் கொண்ட தர்ம புத்திரர், புரிந்து கொண்டேன்” என்றார்.

 பாண்டவர்கள் புறப்பட்டனர். குந்தி தர்ம புத்திரரிடம், விதுரர் ஏதேதோ சொன்னார் . நீயும் புரிந்து கொண்டதாகப் பதிலளித்தாய். அது என்ன விவரம்? என்று கேட்டாள்.

 நமக்குத் தீயினால் ஆபத்து நேரிடப் போகிறது என்றும், அதிலிருந்து  தப்பித்துக் கொள்ள,பூமிக்கடியில் சுரங்கப் பாதையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், நட்சத்திரங்களை பார்த்து திசையை அறிந்து பயணம் செய்து தப்பித்து  கொள்ள வேண்டும் என்றும் விதுரர் எனக்கு மறைமுகமாக சொன்னார்- என்று விளக்கினார் தர்ம புத்திரர். பாண்டவர்கள் வாரணாவதம் போய்ச் சேர்ந்தனர்.

No comments:

Post a Comment