Sunday, 3 February 2019

வராஹி தாய்

நம் எதிரிகளை அழிப்பவள் வாராஹி. சிங்கத்தை வாகனமாய்த் தாங்கி மூவுலகங்களையும் ஆளும் லலிதையின் சேனாநாயகி இவள். பண்டாசுர வதத்தின்போது விஷுக்ரன் எனும் அரக்கனை அழித்தவள். பன்றி முகம் கொண்டு அருள் பொழியும் கண்களுடன் தோற்றமளிப்பவள். லலிதா திரிபுரசுந்தரி அருளும் ஸ்ரீநகரத்தின் 16வது பிராகாரத்தில் வசிப்பவள். கிரிசக்ர ரதம் எனும் காட்டுப்பன்றிகளால் இழுக்கப்படும் தங்கமயமான ரதத்தில் திருவுலா வருபவள். இவளே தாருகாசுர வதத்தின்போது மகாகாளிக்கும், கம்பாசுர வதத்தின் போது சண்டிகைக்கும், பண்டாசுர வதத்தின்போது லலிதைக்கும் உதவியவள்.

மகா திரிபுரசுந்தரியின் சிம்மாசனத்திற்கு ஐந்து படிகள் உள்ளன. இதற்கு பஞ்ச பஞ்சிகா பீடம் எனப் பெயர். அதில் ஒவ்வொரு படிக்கும் ஐந்து, ஐந்து தேவிகள் உண்டு. இந்த வாராஹி ஐந்தாவது படியில் அருள்கிறாள். அதாவது லலிதையின் அடுத்த இடம் இந்த தேவியுடையது. ரச்மிமாலா மந்திரம் எனும் 37 மந்திரங்கள் கொண்ட மகா மந்திரத்தில் 36வது மந்திர வடிவாகவும் இத்தாய் விளங்குகிறாள்.

வராகம் என்றால் காட்டுப்பன்றி என்று பொருள். அது சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்களையே தாக்கும் தன்மையுடையது. தனது குட்டிகளுக்கு ஒரு துன்பமும் யாராலும் வர அது அனுமதிக்காது.  பன்றி முகம் கொண்ட வாராஹிதேவியும் தன் பக்தர்களை அனைத்து வகை இன்னல்களிலிருந்தும் காப்பாற்றுபவள். இந்த தேவியின் யந்திரம் பெரிய தொழிலகங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டால் தொழில் சிறந்தோங்கும்.

வாராஹி தேவியின் நிவேதனத்தில் பூண்டு, வெங்காயம் போன்றவை கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்! சர்க்கரை அன்னம், உளுந்துவடை, மொச்சை சுண்டல் மற்றும் சுக்கு அதிகம் சேர்த்த காரமான பானகம் போன்ற நிவேதனங்கள் இவளுக்கு உகந்தவை.  ஜபங்கள் சித்தியாகவும் தீயவற்றிலிருந்து விடுதலை பெறவும் நல்ல முழு உருண்டை வடிவ தேங்காயை உடைத்து அதில் நெய் விட்டு தீபம் ஏற்றினால் காரிய வெற்றி கிட்டும். பகைவர்கள் மற்றும் கிரகங்களினால் வரும் துன்பங்களை ஒரு சேரத் தீர்ப்பவள் வாராஹிதேவியே. வெறுமே ‘வாராஹி, வாராஹி’ என ஜபம் செய்தாலே போதும், சடுதியில் அருள்வாள்.

தன்னை பக்தியுடன் தொழுபவர் இதயத்தில் அமர்ந்து பயங்களை ஒழித்து, அபயகரம் நீட்டி மங்கலங்கள் பெருக, அன்பையும், அருளையும் பொழிந்து வாழ்க்கையின் வெற்றிக்கு உதவுபவள். நவரத்னங்களால் இழைக்கப்பெற்ற அநேக ஆபரணங்களை அணிந்து பட்டாடை உடுத்தி பிரகாசிப்பவள்.

அஷ்டமி, பௌர்ணமி, கார்த்திகை, தேய்பிறை, பஞ்சமி, நள்ளிரவு காலங்கள் இவளை வழிபட உகந்த நேரங்கள். திருஷ்டி தோஷம், ஏவல் எல்லாம் இந்த தேவியை நினைத்த மாத்திரத்திலேயே பகலவனைக் கண்ட பனி போல் விலகும். இந்த தேவி உபாசனையில் ஆசாரத்தை விட ஜெப வழிபாடு தலையானது.

தன் திருக்கரத்தில் ஏந்தியுள்ள வலம்புரிச் சங்கின் ஓசையால் பக்தர்களின் அறியாமையை நீக்கும் அன்னை, அடியவர்களின் தீய குணங்களை அழிக்க சக்கரத்தைத் தாங்கியுள்ளாள். கேடயத்தால், அடியவர்களை துன்பம் தாக்காமல் தடுப்பவள்.

இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாவண்ணம் கத்தியால் தடுப்பவள். நம் கர்ம வினைகளை வேரோடு களைய கலப்பையை தரித்தவள். ஊழ்வினைகள் செழித்து வளரும் நம் உடல் எனும் நிலத்தில் ஊழ்வினை எனும் விதை முளைத்தெழா வண்ணம் உலக்கை எனும் ஆயுதத்தால் குத்தி விலக்குபவள். நம்மை அனைத்து வித பயங்களிலிருந்தும் காக்க அபயம் தரித்தவள். ‘ஐம் க்லௌம் ஐம்’ எனும் பீஜாட்சர மந்திரத்தில் உறைபவள். வஜ்ர கோஷம் எனும் சிங்கத்தை வாகனமாகக் கொண்டு உலா வருபவள்.

தன் திருக்கரங்களில் தண்டம் ஏந்தியிருப்பதால் தண்டநாதா என்றும், எதிரிகளுக்கு எதிரான தன் பக்தர்களின் வாக்கை அழகுற மிளிரச் செய்வதால் வார்த்தாளி என்றும், குதிரை மீது வரும்போது அஷ்வாரூடா வாராஹி என்றும் இத்தேவி அழைக்கப்படுகிறாள். இந்த அஷ்வாரூடா வாராஹியின் திருக்கோலம் ராஜவச்ய திருக்கோலம் என போற்றப்படுகிறது. இந்த அன்னையைக் குறித்த ஜெபங்கள் அரசியல் லாபங்களை தரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இத்தேவிக்கு அங்கதேவதை, லகுவாராஹி; உபாங்க தேவதை, ஸ்வப்ன வாராஹி; பிரத்யங்க தேவதை, திரஸ்கரணி. இத்தேவியைக் குறித்த துதிகளில் வாராஹி மாலை மிகவும் பிரசித்தி பெற்றது. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி வாராஹிதேவியின் அம்சமாக அருள்பவள் என்பது உபாசனா ரகஸ்யம். சக்தி தல பீடங்களில் இத்தலம் வாராஹி பீடம், ஞானபீடம் மற்றும் தண்டினீ பீடம் என்று அழைக்கப்படுகிறது. ராகு தசை, ராகு புக்தி நடப்பவர்கள் வாராஹியை வழிபட நலங்கள் பெருகும்.

மஹிஷத்தின் மீது வரும்போது மஹிஷாரூடா வாராஹி என்றும், சிம்மத்தின் மீது வரும் போது சிம்ஹாரூடா வாராஹி என்றும் புலியின் மீது வரும் போது வ்யாக்ராரூடா வாராஹி என்றும் இத்தேவி வணங்கப்படுகிறாள். இவளது ஒவ்வொரு திருக்கோலமும் ஒவ்வொரு பலனைத் தருவதாகும். இதை மூர்த்தி ரஹஸ்யம் என்பர். 

ஸ்வப்ன வாராஹி, கிளி ஏந்தி தன் பக்தர்களின் கனவில் வந்து நடக்கப் போகும் நன்மைகளை தெரிவிப்பவள். இத்தேவி லலிதா திரிபுரசுந்தரியின் பஞ்ச புஷ்ப பாணங்களிலிருந்து தோன்றியவள்.

வாராஹி தேவி முன் விளக்கேற்றி  பூச்சூட்டி, ‘பஞ்சமீ, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, ஸமயஸங்கேதா, போத்ரிணீ, வாராஹி, ஷிவா, வார்த்தாலி, வராஹமுகீ, மஹாசேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்னீ’ என்ற நாமாவளிகளால் அர்ச்சித்து தூப, தீப, நைவேத்யம் செய்ய வேண்டும். வாராஹிதேவி பாலவாராஹி, ஆதிவாராஹி, மஹாவாராஹி, லகு வாராஹி, ஸ்வப்னவாராஹி, அஷ்வாரூடா வாராஹி, உன்மத்த வாராஹி, சிம்ஹாரூடா வாராஹி, மஹிஷாரூடா வாராஹி என பல்வேறு வடிவங்களில் பக்தர்களால் வழிபடப்படுகிறாள்.

வாராஹியை வணங்க சிலர் பயம் கொள்கிறார்கள். இத்தேவி கருணை உள்ளம் கொண்டவள். தன்னை வணங்கும் பக்தர்களிடம் ஒரு தாயின் நேசத்தையும் பாசத்தையும் பொழிபவள். இத்தேவியை வழிபட்டு நெருங்கினால் அவள் அருள் அனவரதமும் நம்முடனே இருந்து காக்கும். நேர்மையான முறையில் இத்தேவியை வணங்க இவ்வுலகில் கிட்டாதது எதுவும் இல்லை. இறுதியில் மோட்சமும் சித்திக்கும் என்கிறது வாராஹி கல்பம்.

பஞ்சமி எனும் வாராஹியின் பெயர் விசேஷமானது.  படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்ரஹித்தல் எனும் ஐந்தொழில்களில் ஐந்தாவது தொழிலைப் புரியும் சதாசிவர் ஆத்மவித்யையை அருளும் ஆச்சார்ய வடிவம். அவரின் அனுக்ரஹ வடிவமே வாராஹி தத்துவம்.

வாராஹி  பூஜையை வில்வ மரத்தடியில் செய்வது சிறப்பு.