Tuesday, 19 February 2019

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்

பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார். பாப்பன் ஸ்வாமிகள். இதைப்பாடி பயனடைந்தவர் பலர் உள்ளனர். முருகப் பெருமானுக்கும் இந்தப் பாடல்கள் மேல் அளவு கடந்த ஆசை உண்டு. எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் அநுமன் இருப்பான் என எவ்வாறு ஸ்ரீராமர் சொன்னாரோ அப்படியே முருகனும், இந்தப் பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களில் மயங்கி, “இந்தப் பாடல்கள் எங்கெல்லாம் பாடப் படுகிறதோ அங்கெல்லாம் நான் எழுந்தருளுவேன்.” என்று கூறியதாகக் குறிப்புகள் சொல்லுகின்றன என்பர் முருகனிடம் பற்றுள்ள ஆன்றோர் பலரும். என்றாலும் இது வெளித் தெரியும்படி நடந்த ஒரு நிகழ்வும் உண்டு.

திருச்செந்தூரில் ஆலய அர்ச்சகர் அநந்த சுப்பையருக்கு இந்தப் பரிபூர்ண பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ராகமும், தாளமும் இவரை மயக்கி இருந்தது. இதைப் பாராயணம் செய்த வண்ணமே இருப்பார்.  அவருடைய நண்பரான சுப்ரமண்ய ஐயர் என்பவரும், இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அவரும் இந்தப் பாராயணத்தில் கலந்து கொண்டார்.  மண்டபம் ஒன்றில் அமர்ந்து இருவரும் விடிய விடிய இந்தப் பாடல்களை ராகத்துடன் பாடி வந்தார்கள். தினமும் இது நடந்து வந்தது. ஒருநாள் இந்த மண்டபம் வழியே சென்ற முத்தம்மை என்னும் 80 வயதான பெண்மணி பாடல்களால் கவரப்பட்டு மண்டப்த்தினுள்ளே நுழைந்து இருவரும் இசையுடனும்,ஒருமித்த சிந்தனையுடனும் பாடுவதைக் கண்டு மனம் பறி கொடுத்தார். தினமும் அவரும் வந்து பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தார்.  என்ன ஆச்சரியம்?பாடல் புனைந்தவருக்கோ, அல்லது பாடிப் பாடி உருகினவர்களுக்கோ காக்ஷி கொடுக்காமல் முத்தம்மைக்குக்காக்ஷி கொடுக்க எண்ணி இருக்கிறான் முருகன். அவன் திருவிளையாடலின் காரணமும், காரியமும் யார் அறிய முடியும்?  ஒருநால் அது 1918-ம் ஆண்டு சித்திரை மாதம் வியாழக்கிழமை இரவு எட்டு மணி. வழக்கம்போல் பாராயணம் நடக்க முத்தம்மை கேட்டுக் கொண்டிருந்தார். மண்டபத்துக்குள் தன்னைத் தவிர இன்னொரு இளைஞனும் நுழைவதை முத்தம்மை கண்டார்.  நேரில் வராமல் யாரும் அறியா வண்ணம், தூணின் மறைவில் நின்று பாடலாய் ரசித்தான். அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தார் முத்தம்மையார். யாராய் இருக்கும்? குழம்பிப் போனார். அவனை விசாரிக்கலாமா? அவனருகே சென்றால்! ஆஹா, அவனைக் காணோமே! இப்போது இங்கே இருந்தானே! எங்கே போனானோ? பாராயணம் முடிந்ததும், அவர்கள் இருவரிடமும் இது குறித்துச் சொன்னார் முத்தம்மை.


மறுநாளும் பாராயணம் தொடந்தது. விடிய விடிய நடந்த அந்தப் பாராயணத்தின் போது அதிகாலை சுமார் நாலு மணிக்கு முதல்நாள் வந்த அதே இளைஞன் மண்டபத்தினுள் வர,இப்போது இவனை விடக் கூடாது என முத்தம்மை அவனருகே சென்று, “நீ யாரப்பா?”என்று கேட்டார்.அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே, “நான் இந்த ஊர்தானம்மா. என்னைப் பின் தொடர்ந்து வந்தீரென்றால் நான் இருக்கும் இடக் காட்டுவேன்.” என்றான். முத்தம்மையும் சம்மதித்து அவன் பின்னே செல்ல, வீதியில் இறங்கி நடந்த அந்த இளைஞனோடு சற்று நேரத்தில் இளம்பெண் ஒருத்தியும் சேர்ந்து கொண்டு கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். இருவரும் நடக்க, முத்தம்மை தொடரக் கோயில் வந்தது. இளைஞன் திரும்பி முத்தம்மையைப் பார்த்து, “ அந்த அந்தணர்கள் இருவரும் இசைத்துக் கொண்டிருந்த பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் என் மனதைக் கவர்ந்தது. மகிழ்வைத் தந்தது. ஆனால், இன்னும் இசை சேர்க்கப் பாடவேண்டும் என அவர்களிடம் சொல்லு.இதை எங்கெல்லாம் இசையுடன் பாடுகின்றார்களோ, அங்கெல்லாம் நான் வருவேன். என் இருப்பிடம் இந்த திருக்கோயில்தான்,” என்று சொல்லியவண்ணம் இளைஞன் தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு கோயிலுள்ளே சென்று மறைந்தான். முத்தம்மை விதிர்விதிர்த்துப் போனார். தன்னுடன் பேசியது சாக்ஷாத் அந்த முருகப் பெருமானே அல்லவா? ஆஹா, என்ன தவம் செய்தேன்!” என்று மனம் உருகிப் போனார்.

பாகம் 1 - பால்

சுப்பிரமணிய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமை. முருகனின் போர் வெற்றி குறித்து ஜெயகோஷம். பிணிபோக்க விண்ணப்பம்.

1 - 1

இலங்கு நன்கலை விரிஞ்சனோடு
அனந்தனும் சத மகன்சதா
வியன்கொள் தம்பியர்களும் பொனாடு
உறைந்த புங்கவர்களும் கெடாது

என்றும் கொன்றை அணிந்தோனார்
தந் தண் திண் திரளும் சேயாம்
என்றன் சொந்தமினும் தீதேது
என்று அங்கங்கு அணி கண்டு ஓயாது

ஏந்து வன்படைவேல் வலி சேர்ந்த திண்புயமே
ஏய்ந்த கண்டகர்கால் தொடை மூஞ்சி கந்தரமோடு

எலும்புறும் தலைகளும் துணிந்திட
அடர்ந்த சண்டைகள் தொடர்ந்துபேய்
எனும் குணுங்குகள் நிணங்கள் உண்டு அரன்
மகன் புறஞ்சயம் எனும்சொலே  . . . . . . களமிசையெழுமாறே

......... பதவுரை .........

இலங்கு நன்கலை விரிஞ்சனொடு - (அழகாக) விளங்கும் நான்மறை ஓதும் பிரம்மனும்

அனந்தனும் சதமகன் - நாராயணனும் தேவர் கோனான இந்திரனும்

சதா வியன்கொள் தம்பியரும் - நிலைபெற்ற பெருமை கொண்ட தம்பியரும்

பொனாடுறைந்த புங்கவர்களும் கெடாது - பொன்னுலகம் என்று கூறப்படும் தேவலோகத்தில் வாழும் தேவர்களும் அழியாதவாறு

என்றும் கொன்றை அணிந்தோனார் தன் - எப்பொழுதும் கொன்றை மாலை அணிந்த பரமசிவனாரது

தண் திண் திரளும் சேயாம் - திரண்ட சேனைக்கு அதிபனாம் கந்தன் (ஆகிய)

என்றன் சொந்தம் இனும் தீதேது - எனக்கு உற்றவனர் (என்ற பிறகு) இனிமேலும் தீங்கு உண்டோ

என்று அங்கு அங்கு அணிகண்டு ஓயாது - (சூரனொடு) போரிடும்படி எல்லா திக்குகளிலும் அணிவகுத்து உள்ள படைகளைப் பார்த்து நீங்காது

ஏந்து வன்படை வேல் வலி சேர்ந்த திண்புயமே - பலம் மிக்க வேலை ஏந்திய திண்மையான தோள்களில்

ஏய்ந்த கண்டகர் கால் தொடை மூஞ்சி கந்தரமோடு - அமைத்துவந்த அரக்கர்களின் கால், தொடை, முகம் மற்றும் கழுத்துடன்

எலும்புறும் தலைகளும் துணிந்திட - எலும்பாலான கபாலங்களூம் அடிபட்டுவிழ

அடர்ந்த சண்டைகள் தொடர்ந்து - மகா கோரப் போர் செய்து

பேய் எனும் குணுங்குகள் நிணங்கள் உண்டு - பேய்களும் அரக்கரின் கொழுப்பை உண்டு

அரன் மகன் புறம் செயம் எனும் சொலே - சிவமைந்தனின் பக்கமே வெற்றி என்ற சொற்கள் (கோஷங்கள்)

களமிசை எழுமாறே - போர்க்களத்தில் எழும்படி

1 - 2

துலங்குமஞ்சிறை அலங்கவே
விளங்க வந்தவொர் சிகண்டியே
துணிந்திருந்து உயர்கரங்கண் மா
வரங்கள் மிஞ்சிய விரும்புகூர்

துன்றும் தண்டமொடு அம்பு ஈர்வாள்
கொண்டு அண்டங்களில் நின்றூடே
சுண்டும் புங்கம் அழிந்து ஏலாது
அஞ்சும் பண்டசுரன் சூதே

சூழ்ந்தெழும்பொழுதே கரம் வாங்கி ஒண் திணிவேல்
தூண்டி நின்றவனே கிளையோங்க நின்றுளமா

துவந்துவம் பட வகிர்ந்து வென்று அதி
பலம்பொருந்திய நிரஞ்சனா
சுகம்கொளும் தவர் வணங்கும் இங்கிதம்
உகந்த சுந்தர அலங்க்ருதா  . . . . . . அரிபிரமருமேயோ

......... பதவுரை .........

துலங்கு மஞ்சிறை அலங்கவே - அழகான தோகை அசைய

விளங்க வந்தவொர் சிகண்டியே - ஒப்பற்ற மயில் வரவும்

துணிந்து இருந்து உயர்கரங்கண் - வீரத்துடன் அங்கேயே நின்று தூக்கிய கரங்களோடு

மாவரங்கள் மிஞ்சிய இரும்பு கூர் - அரிய வரங்களும் மிக்க கூர்மையான இரும்பாலான

துன்றும் தண்டமொடு அம்பு ஈர்வாள் - தண்டாயுதம், அம்பு ஈர்வாள் (இரம்பம்) (முதலிய ஆயுதங்கள்)

கொண்டு அண்டங்களில் நின்றூடே - இவைகளைக் கொண்டு அண்ட சராசரங்களின் நடுவே சென்று (போர் செய்து)

சுண்டும் புங்கம் அழிந்து ஏலாது - (அப்படைக்கல மெல்லாம் வேற்படையின் முன்னால்) குறைந்து அழிவது கண்டு, ஒன்றும் செய்ய இயலாது

அஞ்சும் பண்டசுரன் சூதே - நடுங்கிப் போய் சூரனானவன் சூழ்ச்சி செய்ய

சூழ்ந்து எழும்போதே - முயற்சிக்கும்போதே

கரம் வாங்கி ஒண் திணி வேல் - நன்மையும் திண்மையும் உடைய வேலைக் கையில் கொண்டு

தூண்டி நின்றவனே - ஏவிய குமாரனே

கிளை ஓங்க நின்றுள மா - உயர்ந்த கிளைகளைக் கொண்ட மாமரமானதை

துவந்துவம் பட வகிர்ந்து வென்று - இருகூறாகப் பிளந்து, (சூரனை) வெற்றி கொண்டு

அதிபலம் பொருந்திய நிரஞ்சனா - பராக்ரமம் கொண்ட களங்கம் இல்லாதவனே

சுகம் கொளும் தவர் வணங்கும் - ஆனந்தத்தை அடைய விரும்பும் முனிவர் வணங்கும்

இங்கிதம் உகந்த சுந்தர அலங்க்ருதா - இனிமை பொருந்திய அழகிய அலங்காரம் செய்து கொண்டுள்ள கந்தனே

அரிபிரமருமேயோ - ஹரியும் அரனும்

1 - 3

அலைந்து சந்த்தம் அறிந்திடாது
எழுந்த செந்தழல் உடம்பினார்
அடங்கி அங்கமும் இறைஞ்சியே
புகழ்ந்து அன்றுமெய் மொழிந்தவா

அங்கிங் கென்பது அறுந்தேவா
எங்கும் துன்றி நிறைந்தோனே
அண்டும் தொண்டர் வருந்தாமே
இன்பம் தந்தருளும் தாளா

ஆம்பி தந்திடுமா மணி பூண்ட அந்தளையா
ஆண்டவன் குமரா எனை ஆண்ட செஞ்சரணா

அலர்ந்த இந்துள அலங்கலும் கடி
செறிந்த சந்தன சுகந்தமே
அணிந்து குன்றவர் நலம் பொருந்திட
வளர்ந்த பந்தனண எனும் பெணாள்  . . . . . . தனை அணை மணவாளா

......... பதவுரை .........

அலைந்து சந்ததம் அறிந்திடாது - (பன்றியாகவும் அன்னமாகவும்) பல காலம் திரிந்து தேடிய பின்பும் (அடி முடி) காணக் கிடைக்காது

எழுந்த செந்தழல் உடம்பினார் - (அவ்வாறு) நெருப்பாக வடிவு கொண்ட பரம சிவனார்

அடங்கி அங்கமும் இறைஞ்சியே - (ஏதும் அறியாதவர் போல்) கைகட்டி பணிவுடன் கேட்டுக் கொண்டு

புகழ்ந்த அன்று மெய் மொழிந்தவா - உன்னைப் போற்றிய பொழுது மெய்ப் பொருளை அவருக்கு உபதேசித்தவனே

அங்கு இங்கு என்பது அறும் தேவா - அதோ அங்குதான், இதோ இங்கு தான் உள்ளான் என்று அறுதியிட்டுக் கூற முடியாதவனே

எங்கும் துன்றி நிறைந்தோனே - எங்கெங்கும் பொருந்தி எப்பொருளிலும் நீக்கமற நிறைந்தோனே

அண்டும் தொண்டர் வருந்தாமே - உன்னை நாடி வந்த பக்தர் துன்பம் கொள்ளாதவாறு

இன்பம் தந்தருளும் தாளா - ஆனந்தம் தரும் திரு வடிகளை உடையவனே

ஆம்பி தந்திடும் மாமணி பூண்ட அந்தளையா - ஒலி செய்திடும் முத்துப் பரல்களை உடைய காற்சிலம்பை அணிந்தவனே

ஆண்டவன் குமரா எனை ஆண்ட செஞ்சரணா - (எல்லொரையும் ஆளும்) ஈசனின் மைந்தனே, என்னை ஆட் கொள்ளும் செம்மையான பாதங்களை உடையவனே

அலர்ந்த இந்துள அலங்கலும் - மலர்ந்த கடப்ப மாலையும்

கடி செறிந்த சந்தன சுகந்தமே - மணம் மிகுந்த சந்தனத்தின் வாசமும்

அணிந்து குன்றவர் நலம் பொருந்திட - (இவை) அணிந்து வேடுவர் குலம் நன்மை அடைவதற்காக

வளர்ந்த பந்தணை எனும் பெணாள்தனை - அவர்களால் (மகள் என்ற உறவு என்று சொல்லிக் கொண்டு) வளர்க்கப் பட்ட குறப்பெண்ணை

அணை மணவாளா - ஆட்கொண்டு மணந்த மணவாளனே

1 - 4

குலுங்கிரண்டு முகையும்களார்
இருண்ட கொந்தள ஒழுங்கும்வேல்
குரங்கும் அம்பகம் அதும் செவாய்
அதும் சமைந்துள மடந்தைமார்

கொஞ்சும் புன்தொழிலும் கால் ஓரும்
சண்டன் செயலும் சூடே
கொண்டு அங்கம் படரும் சீழ்நோய்
அண்டம் தந்தம் விழும்பாழ் நோய்

கூன்செயும் பிணிகால் கரம் வீங்கழுங்கலும் வாய்
கூம்பணங்கு கணோய் துயர் சார்ந்த புன்கணுமே

குயின்கொளும் கடல் வளைந்த இங்கெனை
அடைந்திடும்படி இனும்செயேல்
குவிந்து நெஞ்சமுளணைந்து நின்பதம்
நினைந்து உய்யும்படி மனம்செயே  . . . . . . திருவருள் முருகோனே

......... பதவுரை .........

குலுங்கி இரண்டு முகையுங்களார் - அழகிய இரண்டு கொங்கைகளும்

இருண்ட கொந்தளம் ஒழுங்கும் - (மலரணிந்ததால்) வண்டு மொய்க்கின்ற கருங்கூந்தலும்

வேல் குரங்கும் அம்பகம் அதும் - வேலைக் காட்டிலும் கூரிய விழிகளும்

செவாயதும் சமைந்துள மடந்தைமார் - சிவந்த அதரங்களை உடைய வஞ்சியர்

கொஞ்சும் புன்தொழிலும் - (பெண்களைப்) புகழ்வதையே தொழிலாகக் கொண்டு (அதன் விளைவால்)

கால் ஓரும் சண்டன் செயலும் - இறுதி காலத்தை தெரிந்து கொண்டு வரும் இயமனின் வருகையும்

சூடே கொண்டு அங்கம் படரும் சீழ் நோய் - வெப்பத்தினால் உடலில் வரும் நோய்கள்

அண்டம், தந்தம் விழும் பாழ் நோய் - அண்டவாதம் மற்றும் பல் விழு நோய்

கூன் செய்யும் பிணி கால்கரம் வீங்கழுங்கலும் - உடலைக் கூனச்செய்யும் நோயும், கால் கை வீக்கமும்

வாய் கூம்பணங்கு கணோய் - வாய் கூம்புதலும் கண் நோய்களும்

துயர் சார்ந்த புன்கணுமே - வருத்தம் தரும் மற்ற நோய்களும்

குயின் கொளும் கடல் வளைந்த இங்கெனை - மேகங்களால் உண்ணப் படும் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் என்னை

அடைந்திடும்படி இனும் செயேல் - பிறக்கும்படி செய்யாதே

குவிந்து நெஞ்சமுள் அணைந்து - என் உள்ளத்தை உன்னை நோக்கி ஒருமுகப் படுத்தி உன்னைச் சரணடைந்து

நின் பதம் நினைந்து உயும்படி மனம் செயே - உன் திருவடிகளை நினைந்து நான் உய்யும்படி திரு உள்ளம் செய்வாயே

திருவருண்முருகோனே - நலம்செய் முருகனே

பாகம் 2 - தயிர்       (பட்டியலுக்கு)

முப்பெரும் தேவிகளான மலைமகள், அலைமகள், கலைமகள், மற்றும் தெய்வயானையின் சிறப்பியல்புகள்.

மேலும் வள்ளியை நாடிச் சென்று அவளுக்குத் தன்னைத் தந்து கடிமணம் புரிந்து கொண்டது.

2 - 1

கடித்துணர் ஒன்றிய முகிற்குழலும் குளிர்
கலைப்பிறை என்றிடு நுதல் திலகம் திகழ்
காசு உமையாள் இளம் மாமகனே

களங்க இந்துவை முனிந்து நன்கு அது
கடந்து விஞ்சிய முகம் சிறந்தொளி
கால் அயிலார் விழிமா மருகா  . . . . . . விரைசெறிஅணிமார்பா

......... பதவுரை .........

கடித்துணர் ஒன்றிய முகிற்குழலும் - மணமுள்ள கொத்துமலர் அணிந்த மேகம் போன்ற கூந்தலையும்

குளிர்கலைப்பிறை என்றிடு நுதல் - குளிர்ச்சியான ஒளியை வழங்கும் பிறைச் சந்திரனை ஒத்த நெற்றியும்

திலகம் திகழ் காசு - அதில் திலகமும், பேரொளி வீசும்

உமையாள் மா மகனே - பார்வதியின் பெருமை மிகுந்த மகனே

களங்க இந்துவை முனிந்து - மாசு படிந்த சந்திரனைக் கடிந்து

நன்கு அது கடந்து விஞ்சிய முகம் - அதனை மிஞ்சும்படியான அழகிய முகமும்

சிறந்த ஒளி கால் அயிலார் விழி மா மருகா - ஒளி வீசும் வேல் போன்ற கூர்மையான கண்களை உடைய திருமகளின் மருகனே

விரை செறி அணி மார்பா - அழகிய மணம் மிகுந்த மாலைகளை அணிந்த மார்பு உடையவனே

2 - 2

கனத்துயர் குன்றையும் இணைத்துள கும்ப
கலசத்தையும் விஞ்சிய தனத்திசை மங்கைகொள்
காதலன் நான்முக னாடமுதே

கமழ்ந்த குங்கும நரந்தமும் திமிர்
கரும்பெனும் சொலை இயம்பு குஞ்சரி
காவலனே குகனே பரனே  . . . . . . அமரர்கள் தொழுபாதா

......... பதவுரை .........

கனத்து உயர் குன்றையும் இணைத்துகத்துள - பெருத்து ஓங்கிய மலைகளுக்கும், இரண்டாக உள்ள

கும்பகலசத்தையும் விஞ்சிய - கும்பகலசங்களையும் மிஞ்சிய

தனத்து இசைமங்கை கொள் - தனங்களை உடைய இசையில் வல்லவளான கலைமகளின்

காதலன் நான்முகன் நாடமுதே - நாயகனாம் பிரமன் தேடும் அமுதம் போன்றவனே

கமழ்ந்த குங்கும நரந்தமும் திமிர் - மணம் பரப்பும் குங்குமமும் கஸ்தூரியும் பூசி கரும்பு எனும் சொலை இயம்பு ௭ கரும்பின் சுவை போன்ற இனிய வாத்தைகளைக் கூறும்

குஞ்சரி காவலனே குகனே பரனே - தேவயானையின் கணவனே, குகனே கடவுளே

அமரர்கள் தொழு பாதா - தேவர்கள் பணியும் திருவடிகளை உடையவனே

2 - 3

உடுக்கிடையின் பணி அடுக்குடையுங்கன
உரைப்பு உயர் மஞ்சுறு பதக்கமொடு அம்பத
ஓவிய நூபுர மோதிரமே

உயர்ந்த தண்தொடைகளும் கரங்களில்
உறும் பசுந்தொடிகளும் குயங்களில்
ஊர் எழில்வாரொடு நாசியிலே  . . . . . . மினும்அணி நகையோடே

......... பதவுரை .........

உடுக்கு இடையின் பணி அடுக்கு உடை - உடுக்கை போன்ற இடையில் ஒட்டியாணம், மடிப்பு உடைய ஆடையும்

கன உரைப்பு உயர்மஞ்சு உறு பதக்கமொடு - மாற்று குறையாத பொன்னிலான அழகிய பதக்கமும்

அம்பத ஓவிய நூபுர மோதிரமே - திருவடிகளில் சித்திர வேலைப்பாடுடைய சிலம்பும் மற்றும் விரலில் மோதிரமும்

உயர்ந்த தண்தொடைகளும் - அடர்த்தியாக தொடுக்கப்பட்ட குளிர்ச்சி நிறைந்த மாலைகளும்

கரங்களில் உறு பசுந்தொடிகளும் - கரங்களில் பசுமையான வளையல்களும்

குயங்களில்ஊர் எழில் வார் - குசங்களில் அழகிய கச்சையும்

நாசியிலே மினுமணி நகையோடே - மூக்கில் மினுக்கும் புல்லாக்கும்

2 - 4

உலப்பறு இலம்பகமினுக்கிய செந்திரு
உருப்பணி யும்பல தரித்து அடர் பைந்தினை
ஓவலிலா அரணே செயுமாறு

ஒழுங்குறும் புனமிருந்து மஞ்சுலம்
உறைந்த கிஞ்சுக நறும் சொல் என்றிட
ஓலமதே இடுகானவர் மா  . . . . . . மகளெனும் ஒருமானாம்

......... பதவுரை .........

உலப்பறு இலம்பகம் - குறையில்லாத நெற்றிச்சுட்டி (இலம்பகம்)

மினுக்கிய செந்திரு உரு - ஒளிவீசும் ஸ்ரீதேவி எனும் தலைக்கோலம்

பணியும் பல தரித்து - (முதலிய) பல ஆபரணங்களை தரித்து

அடர் பைந்தினை - அடர்ந்த தினை விளையும் புனத்தை இடைவிடாது காவல் செய்யுமாறு

ஓவலிலா அரணே செயுமாறு - இடைவிடாது காவல் புரியுமாறு

ஒழுங்குறும் புனமிருந்து - சீராக வளர்ந்த பைம் புனத்தில் தங்கி

மஞ்சுலம் உறைந்த கிஞ்சுக நறும்சொல் என்றிட - அழகிய கிளியின் இனிமையான குரலில்

ஓலமதேயிடு கானவர் - ஆலோலம் என்று கூவும் வேடவர்

மா மகள் எனும் - பெருமை மிகுந்த மகள் என்னும்

ஒரு மானாம் - தோன்றிய ஒரு மானாகிய

2 - 5

மடக்கொடிமுன் தலை விருப்புடன் வந்து அதி
வனத்துறை குன்றவர் உறுப்பொடு நின்றள
மானினியே கனியே இனிநீ

வருந்தும் என்றனை அணைந்து சந்ததம்
மனம் குளிர்ந்திட இணங்கி வந்தருளாய்
மயிலே குயிலே எழிலே  . . . . . . மட வனநினதேர் ஆர்

......... பதவுரை .........

மடக்கொடி முன் தலை - கொடி போன்ற வள்ளியின் முன் முதன்மைவாய்ந்த

விருப்புடன் வந்து - ஆசையுடன் வந்து

அதிவனத்துறை குன்றவர் உருப்பொடு நின்று - இந்த காட்டினில் வேட ரூபத்தோடு நின்று

இள மான் இனியே - அழகிய மான் போன்றவளே

கனியே இனி நீ - கனிரசம் போல இனிப்பவளே இனிமேல் நீ

வருந்தும் என்றனை அணைந்து - உன்னை அடைவதற்காக ஏங்கியிருக்கும் என்னை அணைத்து

சந்ததம் மனம் குளிர்ந்திட - எப்பொழுதும் என் மனம் குளிர்ந்திடும்படி

இணங்கி வந்தருளாய் - இசைந்து வருவாயாக

மயிலே, குயிலே, எழிலே - மயிலே, குயிலே அழகே

மடவன நினது ஏரார் - இளைய அன்னம் போன்றவளே உனதுஎழுச்சி மிகுந்ததும் அழகியதுமான
(ஏர் - எழுச்சி, நிறைவு: ஆர் - அழகு)

2 - 6

மடிக்கொரு வந்தனம் அடிக்கொரு வந்தனம்
வளைக்கொரு வந்தனம் விழிக்கொரு வந்தனம்
வாஎனும் ஓர் மொழியே சொலுநீ

மணங்கிளர்ந்தநல் உடம்பு இலங்கிடு
மதங்கி யின்றுளம் மகிழ்ந் திடும்படி
மான்மகளே எனைஆள் நிதியே  . . . . . . எனும் மொழி பலநூறே

......... பதவுரை .........

மடிக்கொரு வந்தனம் - உனது மடிக்கு ஒரு வணக்கம்

அடிக்கொரு வந்தனம் - பாதத்திற்கு ஒரு வணக்கம்

வளைக்கொரு வந்தனம் - கரத்திற்கு ஒரு வணக்கம்

விழிக்கொரு வந்தனம் - பார்வைக்கு ஒரு வணக்கம்

வா எனும் ஓர் மொழியே சொலு நீ - என்னை வா என்று ஒரு சொல் பகர்வாய்.

மணம் கிளர்ந்த நல் உடம்பு - நறுமணம் வீசிடும் மேனி பிரகாசிக்கும்

இலங்கிடு மதங்கி - ஆடல் பாடலில் வல்லவளே

இன்றுளம் மகிழ்ந்திடும்படி - என்னுடைய உள்ளம் இன்று இன்புறும்படி

மான்மகளே - மான்மகளே

எனை ஆள் நிதியே - என்னை ஆட்கொள்ளும் பொக்கிஷமே

எனும் மொழி பலநூறே - என்று பலவாறாகப் பேசியும்

2 - 7

படித்தவள் தன்கைகள் பிடித்துமுனம் சொன
படிக்கு மணந்துஅருள் அளித்த அனந்த
கிருபா கரனே வரனே அரனே

படர்ந்த செந்தமிழ் தினம் சொல் இன்பொடு
பதம் குரங்குநர் உளம் தெளிந்து அருள்
பாவகியே சிகியூர் இறையே  . . . . . . திருமலிசமர் ஊரா

......... பதவுரை .........

படித்தவள் தன் கைகள் பிடித்து - (என்றெல்லாம்) சொல்லி அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு

முனம் சொனபடிக்கு மணந்து - முற் பிறவியில் வாக்கு கொடுத்தவாறு மணந்து

அருள் அளித்த - அருளியவனே

அனந்த கிர்பாகரனே - எல்லையற்ற கருணை உள்ளவனே

வரனே அரனே - வரம் அருள்பவனே, சிவனே

படர்ந்த செந்தமிழ் தினம் சொல் - இனிய தமிழ்ப் பாடல்களை தொடர்ந்து கூறி

இன்புடன் பதம் - அன்புடன் உன் திருவடியை

குரங்குநர் உளம் - வணங்குவார் நெஞ்சம்

தெளிந்தருள் - தெரிந்து அருள்பவனே

பாவகியே - அக்னியில் தோன்றிய முருகனே

சிகிஊர் இறையே - மயிலேறும் பெருமானே

திருமலி சமரூரா - செல்வம் மிக்க திருப்போரூர் பெருமாளே

2 - 8

பவக்கடல் என்பது கடக்கவுநின் துணை
பலித்திடவும் பிழை செறுத்திடவும் கவி
பாடவும்நீ நடமாடவுமே

படர்ந்து தண்டயை நிதம் செயும்படி
பணிந்த என்றனை நினைந்து வந்தருள்
பாலனனே எனையாள் சிவனே  . . . . . . வளர் அயில் முருகோனே.

......... பதவுரை .........

பவக்கடல் என்பது கடக்கவும் நின் துணை - பிறவிக்கடலைக் கடப்பதற்கும் உன் உதவி

பலித்திடவும், பிழை செறுத்திடவும் - கிடைக்கவும், என் குறைகளைப் பொறுத்திடவும்

கவிபாடவும் நீ நடமாடவுமே - நான் செந்தமிழ்ப் பாடல் பாடவும் நீ நடனமாடவும்

படர்ந்து தண் தயை நிதம் செயும்படி - என்னிடம் எப்பொழுதும் தங்கி குளிர்ந்த அருள் செய்ய வேண்டி உன்னை

பணிந்த என்றனை நினைந்து வந்தருள் - வணங்கும் என்னை நினைந்து என்னிடம் வந்து அருள் செய்

பாலனனே எனை ஆள் சிவனே - காக்கின்ற கடவுளே, எனை ஆளும் ஆறுமுகச் சிவனே.

வளர் அயில் முருகோனே - நீண்ட வேலாயுத்தை உடையவனே.

பாகம் 3 - நெய்       (பட்டியலுக்கு)

வஞ்சகரின் கூட்டு இல்லாமலும், தொண்டர்களின் அணிமையும், சிவ - சக்தியரின் தாண்டவக் கோலமும், கந்தபிரானின் காட்சிக்காக ஏங்கும் தன்மையும் காண்மின்.

3 - 1

வஞ்சம் சூதொன்றும்பேர் துன்பம் சங்கடம் மண்டும் பேர்
மங்கும்பேய் நம்பும்பேர் துஞ்சும் புன்சொல் வழங்கும் பேர்
மான் கணார் பெணார் தமாலினான்

மதியதுகெட்டுத் திரிபவர்தித்திப்பு
என மது துய்த்துச் சுழல்பவர் இச்சித்தே

மனமுயிர் உட்கச் சிதைத்துமே
நுகர்த்தின துக்கக் குணத்தினோர்
வசையுறு துட்டச் சினத்தினோர்
மடிசொல மெத்தச் சுறுக்குளோர்

வலிஏறிய கூரமுளோர் உதவார்
நடு ஏதுமிலார் இழிவார் களவோர்

மணமலர் அடியிணை விடுபவர் தமையினும்
நணுகிட எனைவிடுவது சரி இலையே  . . . . . . தொண்டர்கள் பதிசேராய்

......... பதவுரை .........

வஞ்சம் சூது ஒன்றும் பேர் - சூதும் வஞ்சனையும் மிக்கவரும்,

துன்பம் சங்கடம் மண்டும் பேர் - துன்பத்திலும் வருத்தத்திலும் உழல்பவர்களும்,

மங்கும் பேய் நம்பும் பேர் - அழியும் பேய்களை நம்புபவர்களும்

துஞ்சும் புன்சொல் வழங்கும் பேர் - கடுமையாகப் பேசுபவர்களும்

மான் கணார் பெணார் தம் மாலினால் - மான்விழியுடைய வஞ்சியர்களிடம் கொண்ட மயக்கத்தால்

மதியது கெட்டுத் திரிபவர் - அறிவு கெட்டு அலைபவர்

தித்திப்பு என - இனிமை என நினைத்து

மது துய்த்துச் சுழல்பவர் இச்சித்தே - மது அருந்திச் சுழன்று ஆடுபவர்கள் விருப்பமொடு

மனம் உயிர் உட்கச் சிதைத்துமே - (கொல்லப் படும் பிராணிகள்) உயிரும் உள்ளமும் நடுங்கும்படியாக உயிர்களைக் கொன்று

நுகர் தின துக்கக் குணத்தினோர் - தினந்தோறும் உணவாகக் கொள்ளும் கொடும் குணத்தினர்

வசையுறு துட்டச் சினத்தினோர் - பழிக்கும்படியான கோபத்தைக் கொண்டவர்களும்

மடி சொல மெத்தச் சுறுக்குளோர் - கோள் சொல்லுவதில் அவசரப் படுவோர்

வலியேறிய கூரமுளோர் உதவார் - வன்மை கொண்ட பொறாமை குணத்தவர், யாருக்கும் எதுவும் கொடுக்காதவர்

நடு ஏதுமிலார் இழிவார் களவோர் - நீதியில்லாதவர், கீழோர், திருடர்கள்

மணமலரடி இணை விடுபவர் - உன் இரு பாத கமலங்களைச் சேராதவர்

தமையினும் நணுகிட எனை விடுவது சரியிலையே - இவர்களிடையே இன்னும் எனை சேர்ப்பது சரியில்லை (தயாவான் ஆன உனக்குப் பொருந்தாதது)

தொண்டர்கள் பதி சேராய் - உன் அடியாரிடம் எனைச் சேர்ப்பாயாக.

3 - 2

விஞ்சும்கார் நஞ்சம் தான் உண்டுந் திங்கள் அணிந்தும்கால்
வெம்பும்போதொண்செந்தாள் கொண்டஞ்சு அஞ்சஉதைந்தும்
பூமீன் பதா கையோன் மெய்வீயு மா

விழியை விழித்துக் கடுக எரித்துக்
கரியை உரித்துத் தனுமிசை சுற்றிக்கோள்

விழைவறு சுத்தச் சிறப்பினார்
பிணைமழு சத்திக் கரத்தினார்
விஜய உடுக்கைப் பிடித்துளார்
புரமது எரிக்கச் சிரித்துளார்

விதி மாதவனார் அறியா வடிவோர்
ஒருபாதி பெணாய் ஒளிர்வோர் சுசிநீள்

விடைதனில் இவர்பவர் பணபணம் அணிபவர்
கனைகழல் ஒலிதர நடமிடுபவர்சேய்  . . . . . . என்றுள குருநாதா

......... பதவுரை .........

விஞ்சும் கார் நஞ்சந்தான் உண்டும் - கடுமையான கரிய விஷத்தைத் தானே உண்டும்

திங்கள் அணிந்தும் - சந்திரனை தரித்துக் கொண்டும்

கால் வெம்பும்போது - (மார்க்கண்டேயனை நோக்கி ) இயமன் கோபித்து வரும்போது

ஒண் செந்தாள் கொண்டு - ஒளிமிகு செம்மையான கால்களினால்

அஞ்சு அஞ்சவும் உதைந்தும் - (காலனின்) ஐம் பொறிகளும் கலங்குமாறு உதைத்தும்

பூ மீன் பதாகையோன் - அழகிய மீன் கொடியோனாகிய மன்மதனுடைய

மா மெய் வீயு - அழகிய உடல் அழியுமாறு (வீ - அழிவு)

விழியை விழித்துக் கடுக எரித்து - நெற்றிக் கண்ணைத் திறந்து விரைவில் அவனை எரித்து

கரியை உரித்துத் - கஜமுகாசுரனான யானையைக் கிழித்து

தனுமிசைச் சுற்றிக்கோள் - அவன் தோலைத் தன் உடம்பில் போர்த்திக் கொண்ட

விழைவு அறு சுத்தச் சிறப்பினார் - விருப்பு வெறுப்பு அற்ற தூய்மையானவரும்

பிணை மழு சத்திக் கரத்தினார் - மான் மழு சூலம் ஏந்தியவரும்

விஜய உடுக்கைப் பிடித்துளார் - வெற்றியைத் தரும் உடுக்கையை கையில் ஏந்தியவரும்

புரமது எரிக்கச் சிரித்துளார் - புன்முறுவல் பூத்து திரிபுரத்தை எரித்தவரும்

விதிமாதவனார் அறியா வடிவோர் - பிரமனும் திருமாலும் அறியாத ஒரு வடிவமெடுத்தவரும்

ஒருபாதி பெணாய் ஒளிர்வோர் - மாதுக்குத் (பார்வதிக்கு) தன் உடம்பில் ஒரு பாதியைத் தந்து விளங்குபவரும்

சுசி நீள்விடைதனில் இவர்பவர் - தூயதான வெள்ளை ரிஷபத்தின் மேல் விளங்குபவரும்

பணபணமணிபவர் - படமெடுத்தாடும் பாம்பை தரித்தவரும்

கனைகழல் ஒலிதர நடமிடுபவர் சேய் என்றுள குருநாதா - கால்களில் அணிந்த கழல்கள் ஒலி தருமாறு நடமாடும் சிவபெருமானின் குமரன் என்று விளங்கும் குருநாதனே.

3 - 3

தஞ்சம் சேர் சொந்தம் சாலம்செம்பங்கய மஞ்சுங்கால்
தந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா
தாம் ததீ ததீ ததீ ததீ

ததிமிதி தத்தித் தரிகிட தத்தத்
திரிகிட தத்தத் தெயென நடிக்கச்சூழ்

தனி நடனக்ருத்தியத்தினாள்
மகிடனை வெட்டிச் சிதைத்துளாள்
தடமிகு முக்கட் கயத்தினாள்
சுரதன் உவக்கப் பகுத்துளாள்

சமிகூ விளமோடு அறுகார் அணிவாள்
ஒருகோ டுடையோன் அனையாய் வருவாள்

சதுமறை களும்வழி படவளர் பவண்மலை
மகளென வொருபெயருடையவள் சுதனே  . . . . . . அண்டர்கள் தொழுதேவா

......... பதவுரை .........

தஞ்சம் சேர்சொந்தம் சால் அம் - சரணடைவதற்கு உரிமை மிகுந்த அழகிய

செம்பங்கயம் அஞ்சும் கால் - தாமரைமலர்களும் நாணும்படி உடைய அழகிய திருவடிகள்

தந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா தாந்ததீ ததீ ததீ ததீ ததிமிதி தத்தித் தரிகிட தத்தத் திரிகிட தத்தத் தெயெனநடிக்குச் சூழ் - தந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா தாந்ததீ ததீ ததீ ததீ ததிமிதி தத்தித் தரிகிட தத்தத் திரிகிட தத்தத்தெயென சுழன்று நடனமாடும்

தனி நடனக்ருத்யத்தினாள் - நடனத்தைத் தொழிலாய் உடையவள்

மகிடனை வெட்டிச் சிதைத்துளாள் - மஹிஷாசுரனைக் கொன்றவள்

தடமிகு முக்கட் கயத்தினாள் - விசாலமான முக்கண்கள் உடைய மேன்மை தங்கியவள்

சுரதன் உவக்கப் பகுத்துளாள் - சிவன் மகிழும்படியாக அவன் உடலில் பாதியானவள்

சமி கூவிளமோடு அறுகு ஆர் அணிவாள் - வன்னி, வில்வம் அறுகு மற்றும் ஆத்தி (முதலிய மாலைகளை) அணிந்துள்ளவள்

ஒரு கோடுடையோன் அனையாய் வருவாள் - ஒற்றைத் தந்தமுடைய கணபதியின் தாயாய் வருபவள்

சதுமறைகளும் வழிபட வளர்பவள் - நான்கு மறைகளும் துதி செய்ய, அவைகளை எல்லாம் விட உயர்ந்து இருப்பவள்

மலைமகள் என ஒரு பெயர் உடையவள் சுதனே - பார்வதி எனும் சிறந்த நாமம் தாங்கி இருப்பவளின் மகனே

அண்டர்கள் தொழு தேவா - தேவர்கள் வணங்கும் தலைவனே

3 - 4

பிஞ்சம்சூழ் மஞ்சொண் சேயும்சந்தங்கொள் பதங்கங்கூர்
பிம்பம்போல் அங்கம் சாருங்கண் கண்கள்இலங்கும் சீர்
ஓங்கவே உலாவு கால் விணோர்

பிரமனொடு எட்டுக் குலகிரி திக்குக்
கரியொடு துத்திப் படவர உட்கப்பார்

பிளிற நடத்திக் களித்தவா
கிரிகெட எக்கித் துளைத்தவா
பிரியக மெத்தத் தரித்தவா
தமியனை நச்சிச் சுளித்தவா

பிணமா முனமே அருள்வாய் அருள்வாய்
துனியாவையு நீ கடியாய் கடியாய்

பிசியொடு பலபிழை பொறுபொறு பொறுபொறு
சததமு மறைவறு திருவடி தரவா  . . . . . . என்களி முருகோனே.

......... பதவுரை .........

பிஞ்சஞ்சூழ் மஞ்சு ஒண்சேயும் - தன்னுடைய பின்புறத்தில் உள்ள ஒளி வீசுகின்ற (தோகையில்)

சம் ஒள்பதங்கங்கூர் - விசிறி போன்று நீண்டு மெலிந்துள்ள இறக்கைகளில் ஆங்காங்கே சிறப்பான

பிம்பம் போல் அங்கம் சாருங்கண் கண்களில் இலங்கும் - கண்ணாடி போன்று ஒளி வீசும் கண்களை உடைய (தோகையை) உடலில் கொண்ட மயிலானது

சீர் ஓங்கவே உலாவு கால் விணோர் - மிக அழகாக உலவி வரும் போது, தேவர்களும்

பிரமனொடு எட்டுக் குலகிரி திக்குக்கரியொடு - அயனுடன் எட்டுத் திக்கு மலைகளும், (அஷ்ட திக்) கஜங்களும்

துத்திப் பட அரவு உட்க - (உடலில்) புள்ளிகள் நிறைந்த ஆதிசேஷனும் அஞ்ச

பார் பிளிற நடத்திக் களித்தவா - நிலமும் அதிரவே (மயிலினை) நடத்தி மகிழ்ந்தவனே

கிரிகெட எக்கித் துளைத்தவா - க்ரௌஞ்ச மலையை துளைத்தவனே

பிரியகம் மெத்தத் தரித்தவா - கடப்பமாலையை விருப்பமுடன் அணிந்தவனே

தமியனை நச்சிச் சுளித்தவா - அடியேனை விரும்பி வந்து கோபித்து ஆட்கொண்டவனே

பிணமா முனமே அருள்வாய் அருள்வாய் - நான் இறக்கும் முன் அருள்வாய் அருள்வாய்

துனியாவையுமே கடியாய் கடியாய் - துன்பத்தை யெல்லாம் துடைப்பாய்

பிசியொடு பல பிழை பொறு பொறு பொறு பொறு - பொய்யோடு பல குற்றங்களைப் பொறுத் தருள்வாய்

சததமு மறைவு அறு திருவடி தரவா - எப்பொழுதும் வஞ்சனையற்ற நின் பதங்களைத் தர வா

என் களி முருகோனே - எனக்கு இன்பப் பொருளான முருகனே.

பாகம் 4 - சர்க்கரை       (பட்டியலுக்கு)

நாளும் கோளும் நன்மக்களுக்கு நன்மையே செய்யுமாம்.
அவன் குடியிருக்கும் அறுபடைவீடு அவன் திருவடியின் தியானச் சிறப்புகூறக் கேண்மின்.

4 - 1

மாதமும் தின வாரமும் திதி
யோகமும் பல நாள்களும் படர்
மாதிரம் திரி கோள்களும் கழல்
பேணும் அன்பர்கள் பால் நலம் தர

வற்சலம் அதுசெயும் அருட்குணா
சிறந்த விற்பனர் அகக்கணா
மற்புய அசுரரை ஒழித்?