Thursday 28 December 2017

சொரி முத்து அய்யன்

சிங்கம்பட்டி-நெல்லை மாவட்டம்

அகத்தியர், “இங்குள்ள  தீர்த்த கட்டத்தில் யாரெல்லாம் நீராடி இங்குள்ள அய்யன் மற்றும் பிற மூர்த்திகளை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எல்லா இன்னல்களும் நெருப்பு பட்ட பஞ்சு போல் பொசுங்கி விட வேண்டும், அவர்களுக்கு புத்திர பாக்கியம் மற்றும் அனைத்து ஐஸ்வரியங்களும்  கிடைத்து நல்வாழ்வு வாழ வேண்டும்,” என்று சிவபெருமானை வணங்கி நின்றார்.

 உடனே சிவபெருமான் அவர்முன் தோன்றி அகத்தியர் கேட்ட வரங்களை அருளினார். அப்போது தேவர்கள் வானிலிருந்து மலர் மாரிப் பொழிந்தனர். அந்த பூ மழை பட்ட அய்யன் “சொரிமுத்து அய்யன்” என வழங்கப்பட்டார்.  சொரிதல் என்றால் பொழிதல் என்று பெயர். இங்குள்ள அய்யன் பேரருள் பொழிந்து வருவதாலும், விலை மதிக்க முடியாத முத்து போல் அவர் இருப்பதாலும் இவருக்கு “சொரி முத்து அய்யன்” என்று பெயர் ஏற்பட்டது.

அகத்தியர் உருவாக்கிய சொரிமுத்து அய்யன்  கோயில், நாளாவட்டத்தில் சிதைந்து காணாமல் போனது.  மக்களுக்கு கோயில் இருந்த இடம் மறந்தே போயிற்று. அது நாணயங்கள் புழக்கத்துக்கு வராத காலம். மக்கள் பண்டமாற்று முறை மூலம் வாழ்க்கை நடத்தினர். இந்தக் கோயில் வழியாகத்தான் பாண்டிய நாட்டிலிருந்து மாட்டு வண்டியில் சுமை ஏற்றி சேரநாட்டுக்குக் கொண்டு செல்வார்கள். 

அப்போது திருடர்கள் பயம் அதிகமாக இருந்தது. மாட்டு வண்டிதான் ஒரே வாகன வசதி! வழிப்பறி கொள்ளையரிடமிருந்து தப்ப அல்லது தற்காத்துக்கொள்ள வரிசையாக மக்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்வார்கள். 

அப்படி ஒரு முறை வரிசையாக வந்த வண்டிகளில் முதல் வண்டி, சொரி முத்து அய்யனார் இருப்பிடம் அருகே வந்தது. வண்டியின் சக்கரம் ஒரு கல் மீது மோத, உடனே கல்லிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.  உடனே வண்டியை ஓட்டியவர் நிறுத்தி விட்டு கூச்சலிட்டார். அனைவரும் ஓடி வந்து பார்த்து செய்வது அறியாமல் தவித்தனர். அப்போது அசரீரி  ஒலித்தது: “இந்த இடம் அகத்திய மாமுனிவர் ஞான திருஷ்டி மூலம் மகாலிங்கம் சுவாமி, சொரி முத்து அய்யனார் புடை சூழ அருள்பாலித்த இடம்.  இங்கு ஆகம விதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும். வருங்காலத்தில் இவ்விடம் மிக சிறப்பான புண்ணிய இடமாக புகழப்படும்.”

 இதை கேட்ட அனைவரும் ஆலயம் அமைக்க முயற்சிகளை மேற்கொண்டனர். திருப்பணி  துவங்கியது. குறிப்பிட்ட இடத்தில் தோண்டியபோது, அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கம் கிடைத்தது. அதனுடன் மகாலிங்கம், சங்கிலி பூதத்தார், காத்தவராயர், மேலவாசல் பூதம், மேலவாசல் வினாயகர், தட்சணாமூர்த்தி, கும்பமாமுனி, பெரியசாமி, பாதாள பூதம்,  கரடிமாடன், பிரம்ம ராட்சசி, பேச்சி, சுடலை மாடன், கருப்பன், கருப்பி, தளவாய் மாடன், தூண்டில் மாடன், மற்றும் பட்டவராயர் உள்ளிட்ட தெய்வங்களையும் அகழ்ந்தெடுத்து பிரதிஷ்டை செய்தனர்.

 சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு முன்னால் பாறையின் இடுக்கு வழியாக தாமிரபரணி ஆறு, ஓர் ஒடையாக கலகல என்ற சத்தத்துடன் ஓடுகிறது. அதில் குளித்துவிட்டு, அப்படியே ஈர உடையுடன் வந்து அய்யனையும் மற்ற தெய்வங்களையும் மக்கள் வணங்கி வருகின்றனர்.  இந்த கோயில் நிர்வாகம் ஜமீன்தார் கட்டுபாட்டுக்குள்தான் உள்ளது. கோயிலையும் அங்கு வரும் பக்தர்களையும் ஜமீன்தார்கள் தங்கள் ஊழியர்கள் மூலம் நன்கு கவனித்துகொள்கிறார்கள். 

 பக்தர்களின் வசதிக்காக காலை முதல் மாலை வரை இரண்டு பூசாரிகள் கோயிலிலேயே தங்கியிருக்கிறார்கள். தினமும் மூன்று வேளை பூஜை நடத்தப்படுகிறது. காது குத்துதல், முடி எடுக்கும் நேர்ச்சைகளை பக்தர்கள் மேற்கொள்கிறார்கள். வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு இங்கு தங்கும் விடுதி உள்ளது; சமையல் பாத்திரங்களும் அளிக்கப்படுகின்றன. 

   கோயிலில் மகாலிங்கம், சொரிமுத்து அய்யனார், பூதத்தார், பிரம்ம ராட்சசி, தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர் ஆகிய ஏழு சந்நதிகள் உள்ளன. சிவன், சக்தி, நாக கன்னி, கிருஷ்ணர் ஆகியோர் கூட்டுறவு சாஸ்தா என்ற பெயரில் தரிசனம் அருள்கின்றனர். பேச்சியம்மன் துஷ்ட அவதானி கோலத்தில் காட்சி தருகிறார்.  குழந்தை வரம் தருகிறார். பிரம்ம ராட்சசி, மகிஷாசுர மர்த்தினியின் அவதாரம். இவரின் அடிமையாக இருப்பவர்கள்  வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்களுக்கு அருள் வாக்கு கூறுகின்றனர். இங்கிருந்து பிடி மண் எடுத்து பல ஊர்களில் நிலையம் போட்டும் பிரம்ம ராட்சசியை வணங்கி வருகிறார்கள்.

  இங்கு முத்து பட்டனை பக்தர்கள் பட்டவராயர் என அழைத்து வழிபடுகின்றனர். இவருக்கு காலணிகளை காணிக்கையாக அளிக்கின்றனர். அவை கோயில் சுவரில் தொங்கவிடப்பட்டுள்ளன. அதை யாரும் தொடுவதும் இல்லை.  ஆனால் சிறிது நாள் கழித்து பார்த்தால், இந்த செருப்புகள் தேய்ந்தும், சகதி, மணல், புல், சில பிராணிகளின் எச்சம் ஆகியவை ஒட்டிக்கொண்டிருப்பதும் ஆச்சரியமான விஷயம். பட்டவாராயர் பக்தர்கள் காணிக்கையாக அளித்த செருப்புகளை அணிந்து கொண்டு காட்டுக்குள் வேட்டைக்கு சென்று வருவதாக  பக்தர்கள் நம்புகிறார்கள். பட்டவராயர் சந்நதியில் பொம்மக்கா, திம்மக்கா உள்ளனர்.

 எல்லா அமாவாசை நாட்களிலும், பாண தீர்த்த அருவியில் பக்தர்கள் புனித நீராடி தங்களது மூதாதையரை நினைத்து நீத்தார் கடனை நிறைவேற்றுகிறார்கள்.
தீர்த்தத்தில் நீராடிய பக்தர்கள் பிறகு  சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு நடந்து  வருகிறார்கள். தோளிலும் இடுப்பிலும் சிறு குழுந்தைகளை தூக்கிக்கொண்டு பக்தர்கள் வருவது அவர்களுடைய பக்தி மேன்மையை விளக்குகிறது. முதியவர்கள், தள்ளாத வயதிலும் அய்யனை தேடி வருவது நெகிழ வைக்கிறது.  குறிப்பாக ஆடி அமாவாசை அன்று பொழியும் மழையில் நனைந்தபடி ஐயனை வணங்கி அருள் பெற, லட்சக் கணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள். 

பாண தீர்த்ததிற்கும் சொரிமுத்து அய்யனார் கோயில் வரையும் முற்காலத்தில் சாலை வசதி இருந்தது. தர்ப்பணம் செய்பவர்களின் வசதிக்காக பாணதீர்த்தம் அருகே மண்டபம் இருந்தது, அங்கு அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. 1992ல் ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் இந்தப் பாதைகள் தூர்ந்து போய்விட்டன. அதன் பிறகு இந்த இடத்துக்கு மேலணை வழியாக படகில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.   வனத்துறை கட்டுபாடு காரணமாக தற்போது படகு போக்குவரத்து நிறுத்தப்பட, பாண தீர்த்தத்துக்கு பக்தர்கள் செல்வதும் நின்றுவிட்டது. அதோடு பக்தர்கள் வசதிக்காக ஜமீன்தார்களால் கட்டப்பட்ட மண்டபமும் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது.

இன்றும்கூட ஆடி அமாவாசை அன்று பாபநாசத்தில் இருந்து பொதிகை மலையை பார்த்தால் வாகனங்கள் வரிசையில் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும். ஆடி அமாவாசையில்  சாமியாடிகள் பூக்குழி இறங்குவர். பூதத்தார், தளவாய் மாடசாமி, பட்டவராயன் ஆகிய சந்நதிகள் முன்பு மூன்று கட்டமாக இந்தப் பூக்குழி திருவிழா நடக்கும்.   பூகுழி இறங்குபவர் தவிர, சிலர் சைவப்படையல் இட்டு பிரம்மராட்சசி அம்னை வணங்கி குழந்தைவரம் கேட்பார்கள். வேறுசிலர் பட்டவராயன் கோயிலில் செருப்பை காணிக்கையாகச் செலுத்தி  கிடா வெட்டி படையல் இடுவர். 

சங்கிலி பூதத்தாரை வணங்கும் பக்தர்கள் தங்களை மறந்த நிலையில் சங்கிலியை எடுத்து மார்பிலும், முதுகிலும் ஓங்கி அடித்துத் தங்களது பக்தியை வெளிபடுத்துவார்கள். ராஜ உடையில் ஜமீன்தார் தர்பாரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். 

 இந்த நிகழ்ச்சியின்போது, பல பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக மேடைமீது சிறப்பிக்கப்படுவார்கள். மேடையில் பிரதானமாக, சிம்மாசனத்தில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா அமர்ந்திருப்பார். சாமியாடிகள் அவர் முன்பு அமர்ந்திருப்பார்கள். ராஜாவிடம் உத்தரவு வாங்கியே மற்ற காரியங்களை கவனிப்பார்கள்.  
 பங்குனி உத்திரமும் இங்கு விசேஷமானது.  அப்போதும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். 

அய்யப்பனின் முதல் நிலையாக சொரிமுத்து அய்யனார் விளங்குவதால் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் இங்கு வந்து மாலை அணிந்து  சபரிமலை சென்று வருகின்றனர். மாலை அணியாதவர்களும் சபரிமலை செல்லும் வழியில் இங்கு வந்து சொரிமுத்து அய்யனாரை வணங்கி செல்கின்றனர். மழை முறையாக பெய்யவில்லை என்றால் இந்த சொரிமுத்து அய்யனாருக்கு சிறப்பு யாகம் செய்து பின் தாமிரபரணி தாயை வணங்குகிறார்கள். விவசாயிகளோடு பலதரப்பட்ட பிரமுகர்களும் பூஜை செய்வார்கள். பூஜை முடிந்த உடனேயே மழை பொழிவது தற்போதும் நிகழ்கிறது!

 கோயில் வளாகத்தில் ஒரு மரத்தில் மணிகளை பிரார்த்தனையாக பக்தர்கள் கட்டி வைக்கிறார்கள். ஆனால் மறு வருடம் வந்து பார்த்தால் அந்த மணி காணப்படுவதில்லை! தேடிப் பார்த்தும் கிடைப்பதில்லை. எங்கே போயிற்று? அந்த மணியை மரமே விழுங்கி விடுகிறது என்கிறார்கள்! இந்த மரத்தை “மணி விழுங்கி மரம்” என்று போற்றுகிறார்கள்.

 ஜமீன்தார் வாரிசுகள் இந்தக் கோயிலை தற்போதும்  நல்ல முறையில் பேணி பாதுகாத்து வருகின்றனர். பாலங்கள் மற்றும் தங்கும் விடுதிகளை சீரமைத்தல், ஆற்றை பக்தர்கள் பதுகாப்பாகக் கடக்க சங்கிலி அமைத்தல் போன்ற பல பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். 

 பரம்பரை பரம்பரையாக சிங்கம் பட்டி ஜமீன்தார் வாரிசுகள் தாங்கள் வணங்கும் தெய்வங்களை தங்களது தோளில் சுமந்து செல்வர். பக்திக் கண்ணீர் வடித்தும், இன்னிசை பாடியும் ஆன்மிகம் பரப்பி வருகின்றனர். அவர்களது வழியில் தற்போது ஆன்மிக பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார் முருகதாஸ் தீர்த்தபதி. 80 வயதைக் கடந்தும் கம்பீர தோற்றத்துடன், தொய்வின்றி இவர் ஆற்றி வரும் பணியைப் பாராட்டி  பல பட்டங்களும், விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.   இவர் தற்போதும் தனது அரண்மனையை மிகச் சிறப்பாக, கலைநயத்துடன் பராமரித்து வருகிறார்.   தங்கள் அரண்மனையில் தர்பார் மண்டபம், லட்சுமி விலாஸ், அந்தப்புறம், விருந்தினர் மாளிகை என பழமையின் பெருமை மாறாமல் காத்து வருகிறார். விருந்தினர்கள் அரண்மனைக்கு வந்தால் போதும், உபசரிப்பு மிக பிரமாதமாக இருக்கும்!

 சிங்கம்பட்டியில் உள்ள அரண்மனை விருந்தினர் மாளிகை பட்டு மெத்தை விரித்து. பார்ப்போரை கவரும் வண்ணம் பிரமாண்டமாய் உள்ளது. ஆங்கிலேயர்கள் தங்கள் தொப்பிகளை மாட்டி வைத்திருந்த தொப்பி ஸ்டான்ட் உள்பட பல  நினைவுப் புகைப்படங்களும் அந்த மாளிகையை  அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

தங்கள் மூதாதையர்கள் பயன்படுத்திய பொருட்களையெல்லாம் அருங்காட்சியகம் அமைத்து அதில் பேணிக் காத்து வருகிறார், ஜமீன்தார் விவேகானந்தர் சேதுபதிராஜாவுக்கு கொடுத்த பனைமரத்தால் ஆன யானை, குதிரைக் குளம்பில் தாயாரிக்கப்பட்ட ஆஷ் டிரே, முன்னோர்கள் பயன்படுத்திய வாள், ஈட்டி போன்றவை தொன்மையைப் பறைசாற்றுகின்றன.

 சொரிமுத்து அய்யனாரை தவிர சிங்கம்பட்டி ஜமீன்தார்கள் வணங்கும் தெய்வங்கள் வேறு உள்ளனஅவை, சிங்கம்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், விநாயகர் கோயில், முத்தாரம்மன் கோயில், அயன்சிங்கம்பட்டியில் உள்ள  மகாதேவர் ஆலயம், வெயிலுகந்தம்மன் கோயில், ஏர்ரம்மாள்புரம் முப்பிடாதி அம்மன் கோயில் ஆகும்.

No comments:

Post a Comment