Tuesday 12 December 2017

முருகனும் சிவனும் ஒன்றே! மு

ALL FOLLOWERS OF SHIVA AND MURUGA - PLEASE READ AND UNDERSTAND THIS.

முருகனும் சிவனும் ஒன்றே! மு









ருகன் சிவப்பரம்பொருளின் அறிவு வடிவம்.!!

முருகனை விநாயகரின் தம்பி என்றும் சிவனின் மகன் என்றும் சிலர் கூறுவர். உண்மை அதுவல்ல என்பதே சைவத்தின் கொள்கை. உண்மை, அறிவு, இன்பமாய் விளங்கும் சிவத்தின் இன்னொரு அருள் வடிவமே தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகன். எல்லாவற்றையும் கடந்தும் உள்ளும் இருக்கின்ற சிவம் என்கின்ற பரம்பொருள் தனது சிறப்பு நிலையிலிருந்து பொதுநிலைக்கு உயிர்களுக்கு அருள் புரிவதற்கு எடுத்து வந்த இன்னொரு வடிவமே முருகனின் வடிவம். அச்சிவம் ஓசை வடிவமாக, பிரணவ வடிவமாக, ‘ஓம்’ வடிவமாக வந்தபோது விநாயகர் என்று கூறப்படுகிறது. அதேபோன்று, அச்சிவம் அறிவு வடிவாக, ஒளி வடிவாக வருகின்றபோது அதை முருகன் அல்லது ஞானபண்டிதன் என்கிறோம். எனவேதான் முருகனுக்கு அருவுருவமாக ஆழ்ந்து அகன்று நுண்ணியதாக இருக்கின்ற வேலைச் சமமாகச் சொல்கின்றோம்.

உலகைத் தோற்றுவித்து உயிர்களுக்கு அருள்புரிய இறைவன் முதலில் ஓசையாகவும் பின்பு ஒளியாகவும் தன் திருவருளை வெளிப்படுத்தியதாகச் சைவம் குறிப்பிடும். எனவேதான் ஓசையாக இருக்கின்ற விநாயகர் வடிவத்தை அண்ணன் என்றும் அடுத்து வந்த ஒளிவடிவத்தை முருகனாகக் கூறி தம்பி என்றும் அழைக்கும் வழக்கு வந்தது. முருகனும் சிவமும் வேறு அல்ல என்று பாமர மக்களுக்குப் புராணம் மூலம் கூற வந்ததே கச்சியப்ப முனிவரின் கந்த புராணம். முருகனும் சிவமும் வேறு அல்ல என்பதை, இப்படிக் கூறுவர்.

‘அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பது ஓர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய ‘
- கந்தபுராணம்

முருகன் சிவத்தின் அறிவு வடிவம் என்பதனை விளக்கக் கந்தபுராணத்தில் முருகன் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து கிளம்பிய தீப்பொறிகளாகக் குறிக்கப்படுவார். சிவனுக்குள்ள ஈசானம். தட்புருடம், வாமம், அகோரம், சத்யோசாதம், அதோ முகம் என்ற ஆறு முகங்களே முருகனாக , ஆறு குழந்தைகளாகத் தோன்றி ஆறு முகத்துடன் பின்பு ஒன்றாய் ஆனதைக் கந்தபுராணம் குறிப்பிடும். சைவக் கடவுளர்களாகச் சொல்லப்படும் ஒரு தனிப் பரம் பொருளின் அருள் வடிவங்கள் தாயின் வயிற்றில் கருவாகித் தங்கிப் பிறப்பதில்லை. அவை பல்வேறு அருள் வடிவங்கள் தாங்கி வந்து செல்லும். அவ்வகையில் முருகன் அம்பாளின் மகன் அல்ல என்பதையும் அம்பாள் முருகனின் தாயல்ல என்பதையும் உண்மைச் சைவர் அறிவர்.

இதனால் முருகனுக்கு இரண்டு மனைவியர் என்று சொல்வதும் அறியாமைதான் என்பது நன்கு புலப்படும். முருகனின் வடிவம் அறிவு அல்லது ஞானத்தின் வடிவம் என்றிருப்பது போல வள்ளி, தெய்வானை என்கின்ற இரண்டு மனைவியர், ஞானமாய் வருகின்ற அச்சிவப் பரம்பொருளின் இரண்டு வகையான சக்திகள் அல்லது ஆற்றல்கள் எனலாம். அவை இச்சா சக்தியும் கிரியா சக்தியும் என்பனவாம். இச்சை என்பது ஆசை, கிரியை என்பது செயல். எனவே ஞானமாக வருகின்ற இறைவன் நம் ஆசையையும் செயலையும் கெடுக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கின்றான் என்பதே இதன் உட்பொருள்.

ஆழ்ந்த அகன்ற நுண்ணறிவினை உயிர்களுக்கு இறைவன் தரக்கூடியவன் என்பதனாலேயே முருகனின் திருக்கையில் வேலினை நம் முன்னோர்கள் அமைத்து வைத்தனர். நம் நாவில் நாவன்மை அறிவு விளங்க வேண்டும் என்று இறைவனை, முருகனை, சிவப்பரம் பொருளை உள்ளமுருகி வழிப்பட்டாலே போதுமானது. வேலினை நாவில் குத்தி நம்மைத் துன்புறுத்திக் கொள்வது சைவத்திற்குப் பொருந்தாதது என்று சைவச் சான்றோர் கூறுவர்.

குழந்தைகள் இன்று அறிவார்த்தமான பல கேள்விகளைத் தங்கள் பெற்றோரிடம் கேட்கின்றனர். அதாவது, ‘வள்ளித் தெய்வானையும் முருகனும் மயிலின் மீது அமர்வது எவ்வாறு முடியும்?’ என்பதுதான். நாம் உடனே ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி அவர்களின் வாயை அடைத்து விடுகிறோம். அவர்கள் கேட்பதில் உண்மை இருக்கின்றது. எனவே பெற்றோர்கள் அவர்களுக்கு உண்மையை விளக்க வேண்டும்.

முருகன் அமர்ந்திருக்கின்ற மயிலானது நாம் சாதாரணமாகக் காணக் கூடிய மயிலல்ல! அது உருவகமாக அமைந்துள்ள மயில். கந்தபுராணத்தின்படி அறியாமையின் வடிவமான சூரபதுமன் என்கின்ற அசுரன் இறுதியில் ஞானத்தின் வடிவமான முருகனுடன் போர் புரிய வருகின்றான். போரில் அவன் மாமரமாய் நின்று போர் புரிய, முருகன் என்கின்ற சிவப்பரம் பொருள் அவனுக்கு ஞானம் புகட்ட ஞானம் என்கின்ற வேலினை விடுகிறார். ஞானவேல் அறியாமை என்கின்ற மாமர சூரபதுமனைப் பிளக்க, ஞானம் பெற்ற சேவலாகவும் மயிலாகவும் மாற்றம் அடைகிறான்.

ஞானவடிவமான முருகன் சேவலைத் தன் வெற்றிக் கொடியிலும் மயிலைத் தன் திருவடியில் வாகனமாகவும் கொள்கிறார். எனவே முருகன் என்கின்ற சிவத்தின் திருவடியில் இருக்கின்ற மயில் திருந்திய உயிரின் உருவகம். அது சாதாரண மயில் அல்ல. இதனை அடிப்படையாகக் கொண்டு சைவர்கள் மயிலினைப் பார்க்கின்றபோது உயிர் அறியாமை நீங்கி ஞானம்பெற வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்கள். கோயில்களில் மயில்களை வளர்த்தவர்கள் வீட்டில் பூசைஅறைகளில் மயிலிறகினை வைத்தார்கள். ஆனால் இன்று பலரும் மயிலினையே முருகனாக எண்ணி வழிபட ஆரம்பித்துவிட்டனர்.

இப்படித்தான் முருகன் மயில் மீது அமர்கின்ற உண்மையை நம் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். மயில் ஒரு போதும் கடவுள் அல்ல. அது ஒரு சாதாரணப் பறவை என்பதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படித்தான் முருகனின் திருவடியில் கிடக்கின்ற பாம்பினைப் பார்த்து சிலர் தவறாகப் புரிந்துக் கொள்கின்றனர். சிவப்பரம் பொருளான முருகனின் திருவடிகளில் கிடக்கின்ற பாம்பு நாம் புற்றுகளிலும் காடுகளிலும் காண்கின்ற சாதாரணப் பாம்பு அல்ல! அது இறைவனை அறிகின்ற அறிவு அல்லது குண்டலினி என்பதின் உருவகம். அதாவது இறைவனை அறிகின்ற அறிவு அவன் திருவருளாலே பெறக் கூடியது என்பதனை அவன் திருவடியில் நம் முன்னோர்கள் வைத்துக் காட்டினார்கள். அறிவே இறைவனுக்கு ஒருவகையில் திருமேனியாய் அமைவதனால் அப்பாம்பினை இறைவனின் திருமேனியில் கச்சையாகவும் அணிகலனாகவும் அமைத்துக் காட்டினார்கள். எனவே பாம்பினை இறைவன் திருமேனியிலோ அல்லது திருவடியிலோ காணுகின்றபோது உயிர்கள் அறிவுபெற வேண்டும் என்கின்ற சிந்தனையே மேலோங்க வேண்டும் என்பது உண்மைச் சைவச் சான்றோரின் முடிவு.

இதனை அறியாது நம்மில் பலர் செத்துப் பிறக்கும் பாம்பினைக் கடவுளாகக் கொள்வது சைவக் கொள்கைக்கு முரணானதாகும். ஐந்தலை நாகம் கூட இறைவனுக்குப் பணியாற்றும் உயிர்வகையாகவே நம் சைவநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்மில் பலர் இறைவனை வழிபடாது இதுபோன்ற உயிர்வகைகளை இறைவனாக எண்ணி வழிபடுவதும் அவ்வைகயான வழிபாட்டிற்குத் துணைபோவதும் சிவநிந்தனையாகும். கரு, முட்டை, விதை போன்றவற்றிலிருந்து தோன்றும் எவ்வகையான உயிரினமும் கடவுள் ஆக முடியாது என்று சைவம் கூறுகின்றது. எனவே நம் குழந்தைகளுக்கு அறிவார்ந்த, உணமைச் சமயத்தைச் சொல்ல வேண்டியது நம் கடமையாகிறது.

இதுவே நம் சமயத்தின் உண்மையையும் சரியான நெறியையும் நிலைநிறுத்தக் கூடியது. நாமே நம் சமயத்தினைக் கேலிக் கூத்தாக்கி மற்றவர் நம் சமயத்தை எள்ளி நகையாடா வண்ணம் காப்பது நம் கடமை. உண்மைச் சமயத்தை அறிந்து வாழ்வது உண்மைச் சைவர்களின் தலையாய கடமை.
முருகன் ஆண்டியாய் நிற்கின்ற கோலம் உயிர்கள் தவம் இயற்றிப் பற்றுக்களை விட்டு ஞானமாய்த் திகழ வேண்டும் என்பதாகும். அதே போன்று வள்ளித் தெய்வானையோடு இல்லற கோலத்தில் இருப்பது உயிர்கள் போகங்களை அனுபவித்து ஞானம் பெற வேண்டும் என்பதாம்.

எனவே சைவத்தைப்பொறுத்த மட்டில் இல்லறத்தில் இருந்து நல்லறம் இயற்றியும் ஞானம் பெறலாம். அல்லது துறவறத்தில் இருந்து தவம் இயற்றியும் ஞானம் பெறலாம் என்பதாம். அறிவு என்பது என்றும் இளமையாகவும் அழகானதாகவும் இருப்பதனால் சிவப்பரம் பொருளான முருகனை இளமையாகவும் நம் முன்னோர் உருவகப்படுத்தினர். தமிழ் என்றும் இளமையாகவும் அழகாகவும் இருப்பதனால் தமிழையும் முருகனையும் ஒன்று என்றனர். ஔவையின் தமிழ்ப் புலமையை உலகினுக்குக் காட்டவே முருகன் ஔவைப் பிராட்டியுடன் திருவிளையாடல்கள் புரிந்தார். சிவப்பரம்பொருளான முருகனும் தமிழும் வேறல்ல என்று காட்டவே தனது நூல்களுக்கு ஔவைபிராட்டி சிவப்பரம் பொருளின் பெயர்களான கொன்றைவேந்தன், ஆத்திச்சூடி என்ற பெயர்களைச் சூட்டினார். எனவே முருகன் சிவத்தின் மகன் அல்ல! முருகன் சிவத்தின் வேறு அல்ல. முருகனும் சிவனும் ஒன்றே! முருகன் சிவப்பரம்பொருளின் அறிவு வடிவம்.!!

சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி.!!

No comments:

Post a Comment