Thursday 28 December 2017

தாமதித்த மங்கள நாணும் சடுதியில் கூடும் மெய்யே

தாமதித்த மங்கள நாணும் சடுதியில் கூடும் மெய்யே


‘‘நான்முகன் இந்திரன் மாலோடு
சித்தருந் தேவருந் தொழவே மத்தர்
தாம் அறியார் மணஞ்சேரி வாழ்
அத்தனை அடைந்தார் அல்லல் கருகுமே!’’

-என்கிறார் அகத்தியர். திருமணத் தடை என்றால் ‘திருமணஞ்சேரி’ செல் என்பது மட்டுமே உண்மை அல்ல. பற்பல நற்கருமங்களும் திருமணஞ்சேரி உறையும் அத்தனாம் அச்சிவனை தொழுபவருக்கு கிடைக்கும். எப்படிப்பட்ட துன்பங்களாயினும் அவை கரும வினையினால் வந்ததாயினும் அல்லது முன்னோர்கள் தம்மால் பட்ட தோஷங்களினால் உண்டானவையானாலும் அல்லது குலதேவ சாபங்கள் நமது வாரிசுகளின் பிரச்னைகளால் உருவான அல்லல்கள் ஆனாலும்... எவ்வகையின ஆனாலும்... அவை போக்கும் ஈசன், இத்திருமணஞ்சேரி நாதனாம், உத்வாக நாதனாம், பக்தவத்சல வள்ளல் பெருமான். அன்னைக்கு கோகிலாம்பாள் என்று திருநாமம். கண்டராதித்ய சோழ சக்ரவர்த்தியின் பட்ட மகிஷி செம்பியன் மகாதேவிக்கு அன்னை கோகிலநாயகி தனது திருமணக் கோலக் காட்சியை அருளினார்.

பார்வதி தேவிக்கு ஒரு ஆசை. பூலோகத்தில் பக்தர்கள் செய்யும் வைதீக முறைப்படி நடக்கும் திருமணச் சடங்கைப் போல, தானும் சிவபெருமானை மணம்புரிய ஆவல் கொண்டார். இதனை கருணை உள்ளம் மிக கொண்ட சிவனிடம் வேண்ட, இல்லை என சொல்லத் தெரியாத சிவனும் அருள்பாலித்தார். உடனே அன்னை ஒரு பசு உருகொண்டு பூலோகத்தில் உலாவர, மகாவிஷ்ணுவும் பசுக்களை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு பசு உருகொண்டிருந்த பார்வதி பிராட்டியாரை பராமரித்தார். பரதமுனிவரின் ஆசிரமம் ஒன்று திருவாடுதுறை அருகில் உள்ள திருவேள்விக்குடியில் இருந்தது. தக்க காலம் வந்ததும் பசு உரு மாறி பெண் உருக் கொண்டார் அம்பிகை. பரத முனிவர் ஒரு வேள்வியை செய்ய, அவ்வேள்வி அக்னியில் சிவபெருமான் தோன்றி அன்னை பார்வதியை, கோகிலவாணியை மணந்தார். இன்றும் அம்பிகை மணப்பெண் கோலத்தில் கோகிலாம்பாள் என்ற நாமத்துடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்திக்கு கல்யாண சுந்தரமூர்த்தி என்றே பெயர். இவருடைய திருவடியை மணமகளுக்கே உரிய நாணத்துடன் அன்னை கோகிலாம்பாள் நோக்கியபடி மணக்கோலத்தில் தத்ரூபமாக காட்சி தருகின்றார்.

‘‘தடைபட்ட தம்பதியர் தம்
வாழ்வு வோங்கிடும் மெய்யே
தாமதித்த மங்கள நாணும்
சடுதியில் கூடும் மெய்யே,
கோகில நாயகிக்கார மணிவித்து
காத்து நிற்க ஊறேது மணந்தனக்கு’’
- என்றார் அகத்தியர்.

இத்திருமணத்திற்கு ராகு பகவான் எழுந்தருளி தன் தோஷம் களையப் பெற்றான். அதனால் இங்குள்ள ராகு பகவானை ‘மங்கள ராகு’ என பரத்வாஜ மகரிஷி போற்றுகின்றார். இந்த ராகு பகவான், தனது உடல் முழுக்க பக்தி பரவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால், இவருக்கு பால் அபிஷேகம் செய்து, பாலில் செய்த பாயசத்தை நிவேதனம் செய்து அருந்தினால், மலட்டுத்தன்மை உடைய மங்கைக்கும் சத் சந்தானம் கிட்டும். இது சத்யம் என்கிறது நாடி.

‘‘பரவசமான பாம்பும் உருக்காட்டி நிற்க, உவந்த ஆ அமுது கொண்டபிசேகித்து அமுதும் அஃதாலாற்றி உண்ட தம்பதியர் தமக்கு வம்ச விருத்தியுண்டு சத்யஞ் சொன்னோம்’’
குயிலின் மென் மொழியாளாம் கோகிலாம்பிகையை தொழும் முன், இங்கு உறை சப்த சாகர தீர்த்தத்தில் நீராடுதல் அவசியம், ஏழு கடல்களில் நீராடினால் என்ன புண்ணியமோ அந்த புண்ணியம் இந்த புஷ்கரணியில் நீராடினால் கிட்டும். அது மட்டுமல்ல, ஏழுவிதமான சாபங்களும் நீங்கப் பெறுமாம். பட்சி சாபம், மாதா சாபம், பிதா சாபம், மூதாதையர் இட்ட சாபம், குல சாபம், உற்றவுறவினர் சாபம், தேவர்கள் சாபம் போன்றனவற்றிலிருந்தும் விடுபட ஏதுவாகும்.

‘‘பிறவி அறுபடும் - நின்ற சப்த
சாபமும் கருகும். கடல் ஏழு
மூழ்கிய புண்ணியங் கூடும். வினை
அகல சப்த சாகர தீர்த்தமாடுவீர்
மதிமறையத் தானே’’

மதிமறைய என்றால் அமாவாசை என்று பொருள். அதாவது அமாவாசை அன்று இவ்வாறு தீர்த்தமாடுவது பெரும் புண்ணியம் என்கிறார், அகத்தியர் மலர் மாலையை கல்யாண சுந்தரேசுவரருக்கும் கோகிலாம்பாளுக்கும் சாத்துவது வழக்கம். ஆனால் அது ஆத்தி மாலை, கொன்றை மாலை, வில்வ மாலை, மல்லிகை மாலை என அணிவிக்கையில் பலன்கள் மாறுபட்டு திருமண வாழ்வு சிறப்பு பெறுகின்றது என்கிறது அகஸ்தியர் நாடி. அம்மாலையை பாதுகாத்து வைக்கையில் தீட்டுப்படாது காப்பதும் சைவ உணவுகளையே உட்கொள்வதும் அவசியம் என்கிறார் தமது நூலில் அகத்தியர்.
‘‘தேவரிட்ட நாமமிது மணஞ்சேரி

மணமது கூடவே மல்லிகை
மாலை தொடுத்து வள்ளலுக்குச் சூட்டு
வார் வாட்டம் விரைந்தோடும்
வளமான ரதமொரு மச்சுமனை
கட்டி வாட்டமின்றி வாழ்வர் வுண்மையிது.
ஆத்திமாலை கட்டி ஆராதிப்போருக்கு
அண்டாதொரு பீடை தானே-
கடனுபாதை கருகிப் போம்
காசினியில் கண்டார் தொழ வாழ்வு சேரும்.
கொன்றை மாலை கொண்டார்
பின்னை பிறவியிலும் மணந்து
வாழ்வர் மெய்யே
வில்வத்தால் மாலைகட்டி கோகிலநாயகி
தன்னை தொழுவார் எதிலுஞ்செயம்
பெறுவர் திண்ணமே. நீடு நல்லற
வில்லறம் நடத்தி இறையடி அண்டுவர்
திண்ணமே.’’

எனவே அவரவர் விருப்பப்படி மாலை அணிவித்து ஆராதித்து, பின் அம்மாலையை வாங்கிச் சென்று தீட்டுப்படாத தனி இடத்தில் வைத்து பூஜித்து வந்தால், திருமணம் நடப்பதும் திண்ணம், சிறப்பான செழிப்பான வாழ்வும் சேரும் என்பதும் திண்ணம்.

திருமணஞ்சேரி என்பது மனிதர் சூட்டிய பெயர் அல்ல, தேவர்கள், அன்னை பராசக்திக்கும் முக்கண்ணனாராம் சிவபெருமானுக்கும் திருமண வைதீக முறைப்படி பூலோகத்தில் நடைபெற்ற இடம் இது என்பதால் ‘திருமணஞ்சேரி’ என்று சூட்டினர்.

இன்றும் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்றோர் அனுதினமும் உஷா காலத்தில் இந்த கல்யாண கோல தம்பதி தெய்வங்களை தொழுது இளமை நிலைக்கவும், கலைகள் விருத்தியாகவும் வேண்டிச் செல்கின்றனர். நாமும் நமது அழகு இளமை இனிதே நிலைக்கவும், நாட்டியம், இசை, நடிப்பு போன்ற கலைகள் விருத்தி ஆகவும் கல்வி தழைக்கவும் நல்ல வாழ்க்கைத் துணை அமையவும் திருமணஞ்சேரி இறையை தொழுவோம்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகாவில், குத்தாலத்துக்கு அருகில் உள்ளது திருமணஞ்சேரி. குத்தாலம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பக்கம். கும்பகோணத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் வெகு அருகாமையில் உள்ளது

No comments:

Post a Comment