Wednesday, 22 October 2025

பாம்பன் ஸ்வாமிகள்

 சென்னை என்பது 16ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் கால் வைத்த இடம், ஆனால் அக்காலங்களில் அது மிகபெரிய நகரமாக உருவாகும் என யாரும் எதிர்பார்க்கவுமில்லை, இத்தனை கோடி மக்கள் அங்கு குவிவார்கள் என யாரும் கணிக்கவுமில்லை


ஆனால் இந்த நாட்டினை காக்கும் அந்த சித்தர்களும் முருகபெருமானும் இதனை அறிந்திருந்தார்கள், கோட்டை கட்டி ஆளும் ஐரோப்பியர்கள் இங்கு முழு மதமாற்றம் செய்வது சாத்தியம் என்பதை உணர்ந்திருந்தார்கள், அந்த ஆபத்தை தடுக்க அப்போதே வழி செய்தார்கள்


ஆச்சரியமாக அதற்கு பலநூறு வருடத்துக்கு முன்பே பட்டினத்தார் முதலிய ஞானியர் இதை அறிந்தே அங்கு வந்து பதிந்து கொண்டார்கள், 16ம் நூற்றாண்டில் ஒரு பக்கம் போர்ச்சுகீசியர் கடும் வேகத்தில் அப்பகுதியினை மதமாற்ற முயன்றபோதும் அவர்களை தொடர்ந்து பிரிட்டிசார் பெரிய அளவில் மதமாற்ற முயன்றபோதும் இந்த சித்தர்களும் ஞானியர்களும் தடுத்து நின்றார்கள்


தொடர்ந்து சித்தர்களும் முருகபெருமான் அடியார்களும் அங்கு வந்து அமர்ந்தார்கள், ஏகபட்டோர் அப்படி வந்தார்கள், வள்ளலார் போல் பலர் வந்தார்கள், அவர்கள் வந்திருககாவிட்டால் இவ்வளவு பெரிய அடியர் கூட்டம் அங்கு உருவாகியிராவிட்டால் சென்னை என்பது இன்று அந்நிய மதத்தின் வடிவமாக மாறியிருக்கும்


அதனை தடுக்க இந்த பிரபஞ்சத்தின் மகாசக்தி உருவாக்கி சென்னைக்கு அனுப்பியவர்களில் முக்கியமான சித்தர் பாம்பன் சுவாமிகள்


முருகபெருமான் காலம் காலமாக தமிழகத்தில் ஏதோ ஒரு உருவில் தன்னை நிறுத்தி கொண்டே இருப்பார், அகத்தியர் காலமுதல் அது உண்டு, யாராவது ஒரு அடியாரை ஆட்கொண்டு அவர்களை கொண்டு தன்னை தன் மகா சக்தியினை இந்த உலகுக்கு அவர் சொல்லி கொண்டே இருப்பார்


சூரியனின் வெளிச்சம் தாங்கி வரும் நிலவு போல அந்த அடியார்கள் இருளில் மக்களுக்கு வெளிச்சம் காட்டுவார்கள், முருகபெருமானின் ஜோதியாக எரியும் அந்த அடியார்கள் மக்களுக்கு முருகபெருமானின் அருளை மழைபோல் ஈர்த்து கொடுப்பார்கள், உரு தெரியாத உயிர்சக்தியினை பூமி உணவாக விளைவிப்பதை போல காணமுடியாத முருகபெருமானின் அருளை கண்முன் பெற்று கொடுப்பார்கள்


இப்படி முருகபெருமான் ஆட்கொண்ட அடியார்கள் நிரம்ப உண்டு, அகத்திய பெருமான் காலமுதல் கிருபானந்தவாரியார் காலம் இப்போது இருக்கும் சித்தர்கள் காலம் வரை நிரம்ப உண்டு  , அவ்வரிசையில் 18ம் நூற்றாண்டில் கண்ட மிக பெரிய அடியார் பாம்பன் சுவாமிகள்


அவரின் காலமும் அந்த காலம் கொடுத்த இன்னல்களில் இருந்து மதத்தை மீட்க அவரின் வருகையும் சிலாகிப்பானது, முருகபெருமானின் அருளில் அவராலே காரிருள் நீங்கிற்று


அக்காலம் மதமாற்ற காலம் மிக பெரிதாக அட்டகாசம் செய்த காலம் , பிரிட்டிசாரின் ஆட்சியில் தேசம் சிக்கி அங்கு இந்துமதம் கடுமையாக ஒழிக்கபட்டு திரும்பும் இடமெல்லாம் மதமாற்றம் பெரிதாக இருந்த காலம்


அப்போதுதான் அவர் அவதரித்தார், ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பன் எனும் ஊரில் சாத்தப்பன் பிள்ளைக்கும் செங்கமலம் அம்மையாருக்கும் மகனாக 1850 வாக்கில் அவதரித்தார், அவரின் பிறந்த நாள் சரியாக தெரியவில்லை பெற்றோர் அழைத்த பெயர் அப்பாவு


இந்த அப்பாவுக்கு மிக சிறுவயதிலே முருகபெருமான் மேல் பெரும் பக்தி வந்தது, பெற்றோருக்கு அடுத்து அவர் அறிந்தது முருகபெருமான் எனுமளவு 6 வயதிலே முருகபெருமானை இறுக பற்றினார், அப்போதே பாலதேவராயரின் கந்த சஷ்டி கவசம் அவரை முழுக்க ஈர்த்திருந்தது


அவர் வளர வளர முருகபெருமான் மேலான பக்தியும் வளர்ந்தது ஒரு நாளைக்கு 36 முறை சஷ்டி கவசத்தை சொல்லும் அளவு அவருக்கு அந்த முருகபெருமான் அடியாராக மாறிபோனார்


பாலதேவராயரை போல தானும் உருக்கமான அழியாபாடல்களை பாடவேண்டும் என உறுதி கொண்டவர் அப்போதே அதை முடிவு செய்து தினமும் ஒரு பாடலை எழுதினார் பாடல் எழுதபட்டபின்பே உணவு உண்பதை வழமையாக்கினார்


இப்படி 100 பாடல்களை அன்றே எழுதினார், "“கங்கையை சடையிற் பரித்து” என தொடங்கிய அப்பாடல்கள் ஒவ்வொரு  பாடலின் முடிவிலும் அருணகிரிநாதரின் பெயரை  தாங்கி நின்றது


இதனை எழுதும்போது அவருக்கு வயது 13, இந்த பாடல்கள்தான் பின்னாளில் அவர் "ஷன்முக கவசம்" எழுத முழு பயிற்சியும் காரணமுமாயிற்று


இவரின் இந்த உருக்கமான பக்தியினை இளம் வயதிலே வந்த பக்தியினை கண்டு இவர் சாதாரணமல்ல என்பதை உணர்ந்த சேது மாதவன் அவருக்கு  விஜயதசமி அன்று ராமேஸ்வரம் கடலில் மூழ்கி குளிக்க வைத்து பின் முருகபெருமான் சடாஷரமந்திரத்தை சொல்லி கொடுக்க அதுவே அவரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொடுத்தது


அப்போது இன்னும் பிரகாசிக்க தொடங்கினார் சுவாமிகள்


அக்கால வாழ்வியல்படி பலவிதமான கலைகள், குதிரையேற்றம், போர்க்கலைகள் இன்னும் கணக்கு வழக்கு என பலவற்றை அவர் படித்தாலும் மனதில் முருகபெருமானின் பக்தியே பிரதானமாக வளர்ந்து நிலைத்து கொண்டிருந்தது


மனமெல்லாம் முருகன் சிந்தையெல்லாம் முருகன் என்றிருந்த அப்பாவுக்கு திருமணம் செய்வதில் நாட்டமில்லை ஆனால் பெற்றோரும் உறவுகளும் வற்புறுத்த வேறுவழியின்றி காளிமுத்தம்மாள் என்பவரை 1872ம் ஆண்டு மணந்து கொண்டார் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்


குடும்பம் அமைந்தாலும் அவர் மனதில் முருகனும் துறவறமுமே பெரிதாக இருந்தன ஆனால் பிள்ளைகளை வளர்ப்பதும் குடும்ப பொறுப்பை சுமப்பதும் தன்  தர்மம் என்பதால் அவற்றையும் சுமந்தார்


பிள்ளைகளுக்கு ஏதும் நோய் என்றால் முருகபெருமானே அடியார் வேடத்தில் வந்து குழந்தைக்கு விபூதி கொடுத்து குணபடுத்திய காட்சியெல்லாம் நடந்தது


அந்நேரம் அவருக்கு பழனிக்கு செல்லும் ஆசை வந்தது, எப்படியாவது சென்றுவிடலாம் என நினைத்தவர் தனக்கு நெருக்கமானவரும் நண்பருமான அங்கமுத்து பிள்ளை என்பவரிடம் முருகபெருமான் தனக்கு பழனிக்கு வர உத்தரவிட்டதாக கூறினார் அவரும் உற்சாகமாக பழனி செல்ல இவருடன் தயாரானார்


ஆனால் அன்று மாலையே அந்த அதிசயம் நிகழ்ந்தது, நிழல் வடிவில் மயில்மேல் அமர்ந்த உருவம் பேசிற்று ,முருகபெருமான் தன்னிடம் நேரடியாக பேசியதில் மனம்கசிந்து நின்றார் அப்பாவு, அவரிடம் குரல் மட்டும் சொன்னது


"பழனிக்கு யாம் அழைத்தோம் என பொய் பகன்றீரோ? இனி யாம் அழைக்கும் வரை நீர் அங்கு வரவேண்டாம்" சொல்லிவிட்டு அக்குரல் மறைந்தது, அத்தோடு பழனி செல்லும் திட்டத்தை கைவிட்டார் அப்பாவு


இது நடந்து சில காலங்களில் அவர் தந்தையார் காலமானார் அப்போதுதான் முருகபெருமன் தன்னை ஏன் பழனிக்கு வரவிடாமல் தடுத்தார் என்பது அவருக்கு புரிந்தது


தந்தையாருக்கு பின் குடும்பத்தின்  தோப்பு , நெல் வியாபாரம், இன்னும் குத்தகை தொழில் உள்பட எல்லாமும் அவர் தலையில் விழுந்தது, அவற்றை பொறுப்புடன் ஏற்று நடத்தி குடும்பத்தை காத்து வந்தார் அப்பாவு


அவருக்கு சொந்தமாக இரண்டு பெரிய தோப்புகள் இருந்தன, நிறைய வயல்கள இருந்தன, கடைகளும் வியாபாரமும் நிறைய இருந்தன அவற்றையெல்லாம் அவரே பராம்ரித்தார் ஆனால் அதில் ஒட்டவில்லை அவர் மனமெல்லாம் முருகபெருமானே நிறைந்திருந்தார்


இக்காலகட்டத்தில்தான் அவர் ஒரு பக்கம் இல்லறம் என்றாலும் இன்னொரு பக்கம் மிக மிக உருக்கமான முருக பக்தியில் பிரசித்தியான "ஷன்முக கவசம்" எனும் அந்த மிக சிறந்த பாடலை எழுதினார்


அக்காலகட்டம் அவருக்கு போராட்டமனது, உடல் ரீதியாக மனரீதியாக தொழில் ரீதியாக பெரும் போராட்டம் இருந்தது. வழக்குகளும் இன்னும் பல குழப்பங்களும் இருந்தன‌


அவற்றில் இருந்து தன்னை காக்கும்படிதான் அவர் ஷன்முக கவசத்தை எழுதினார், அது 1891ம் ஆண்டாக இருந்தது, 30 பாடல்களை கொண்ட ஷன்முக கவசம் எக்காலமும் சக்தி. வாய்ந்தது, பால தேவராயரின் சஷ்டி கவசம் போல மகா சக்தியும் பிரசித்தியுமானது


பின் முருகபெருமானுக்கு சாற்றும் பால், தயிர், நெய், தேன், சர்க்கரை என ஐந்து பொருட்களை குறிக்கும் வண்ணம் ஒரு பாடலை "பரி பூஜன பஞ்சாமிர்த வண்ணம்" என எழுதினார். அற்புதமான சக்திவாய்ந்த பாடல் அது


இவைகளை எழுதி முடித்தபோது அவரின் எல்லா சிக்கல்களும் தீர்ந்திருந்தன குழந்தைகளும் வளர்ந்திருந்தார்கள், அவர்களுக்கு செய்யவேண்டிய எல்லாமும் செய்தார், திருமணமும் நடத்திவைத்து தொழிலையும் நல்லபடியாக ஒப்படைத்தவர் தன் மகா பெரிய கனவான துற்வறம் நோக்கி நடந்தார்


அதுவரை அவரை கட்டியிருந்த இல்லற கடமைகள் எனும் சங்கிலியில் இருந்து தன்னை விடுவித்தவர், நீண்ட நாள் ஏக்கத்தின்படி ஆலய தரிசனம் செய்து ஒவ்வொரு இடமாக செல்ல தொடங்கினார்


அந்த காலகட்டத்தில்தான் பாம்பனில் இருந்து வந்ததால் பாம்பன் சுவாமிகள் என்றே அறியபட்டார்


மதுரை, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி எனும் திருத்தலங்களை தரிசித்து விட்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். காஞ்சிபுரத்தில் இருக்கும்  தலங்களை தரித்துவிட்டு ஊர் திரும்புவதே அவர் திட்டமாக இருந்தந்து, அப்படி காஞ்சியில் இருந்து அவர் கிளம்பும்போது ஒரு இளைஞன் எதிர்பட்டார்


அவர் கேட்டார் "அய்யா என்ன காரணமாக காஞ்சிக்கு வந்தீர்? என்றான், அவரோ "ஆலயம் பல தரிசித்து முருகபெருமானை தேடி வந்தோம்" என்றார்


"அப்படியானால் குமரகோட்டம் செல்லாமல் திரும்புவது ஏன்?" என்றார் இளைஞர், காஞ்சியில் அப்படி ஒரு கோவில் இருப்பது அதுவரை சுவாமிகளுக்கு தெரியாது


அந்த இளைஞன் குமாரகோட்டம் கோவிலை காட்டிவிட்டு மறைந்தே போனான், அதுதான் கச்சியப்பர் கந்தபுராணத்தை அரங்கேற்றிய ஆலயம் என்பதும் முருகபெருமானே அவனுக்காக வாதாடினார் என்பதையும் அறிந்த சுவாமிகள் அங்கே தவம் செய்தார்


குமாரகோட்டம் கோவில்தான் அவருக்குள் பல மாற்றங்களை கொடுத்தது, அந்த ஆலயத்தில் தவமிருந்தபோதுதான் பல உள்முக மாற்றம் வந்தது, கண்ணீருடன் அம்முருகனை வணங்கியவர் பின் இனி முழுக்க துறவறம் என முடிவு செய்தார்


துறவறம் என்பதை அடைந்து ஞானம் பெறுவதை விட ஞானம்பெற்றுவிட்டு துறவறம் புகுதலே சரி, முருகனே தனக்கான உத்தரவை தரட்டும் என அவருக்குள் ஒரு குரல் ஒலித்தது


காரணம் முன்பு தன் விருப்பபடி பழனிக்கு செல்ல கிளம்பி முருகன் உத்தரவில்லாமல் சிக்கியதை போல முருகபெருமான் உத்தரவில்லாமல் துறவறம் புகுவது சரியல்ல என உணர்ந்தவர் அதற்கான உத்தரவை பெற கடுமையாக தவமியற்றினார்


1894ம் ஆண்டு அந்த கடுந்தவம் தொடங்கிற்று


பாம்பன் அருகே உள்ள பிரப்பன்வலசையின் மயானத்தில் ஒரு கொட்டகை அமைத்து அதனுள் ஒரு முள்வேலி அமைத்து நடுவில் குழிவெட்டி அமர்ந்து கொண்டார், குழியினை சுற்றி தடுப்பும் வைத்து அங்கே  ஒரு கை செல்லும்படி பாதை வைத்த அவர் அனுதினமும் உப்பில்லா சோறு இரு பிடி மட்டும்  வைக்க சொன்னார்


அப்படியே இன்னும் சொன்னார், ஒருவேளை அந்த அன்னம் உண்ணபடாமல் இருந்தால் தான் இனி இல்லை என கருதி அடுத்து வைக்க வேண்டாம் என அவர் சொன்னபோது சீடர்களுக்கு கண்கள் கலங்கின, அவரோ முருகபெருமான் தன்னை கைவிடமாட்டான் என ஆறுதல் சொல்லி  "பரமேஸ்வரன் திருகுமாரா" என அழைத்து  தவத்தில் அமர்ந்தார்


தவமென்றால் அது கடுமையான தவமாக இருந்தது, அப்போது பலவித போராட்டங்கள் அவரை சூழ்ந்தன , துஷ்ட சக்திகள் அவர் தவத்தை கலைக்க முயன்றன இன்னும் பல சோதனைகள் எல்லாம் கண்டார்


பேய்கள் தொந்தரவு செய்தன இன்னும் பல மாயைகள் அவர் தவத்தை கலைக்க முயன்றன, ஏழு நாட்கள் கடும் பிரயர்தனம் செய்து அவர் தவத்தை தொடர்ந்தார்


ஏழாம் நாள் முடிவில் அகத்திய முனி மற்றும் அருணகிரியாருடன்  முருகபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார் , 


அவர் காதில் ஒரு ரகசிய வார்த்தையினை சொல்லிவிட்டு மூவரும் மேற்கு திசை நோக்கி நகர்ந்தார்கள், சுவாமி தன் தவத்தைதொடர்ந்தார்


சரியாக 35ம் நாள் "எழுக" என ஒரு குரல் கேட்டது , "எம்பெருமான் முருகன் சொன்னால்தான் எழுவேன்" என்றார் முனிவர். "சொல்வது முருகனே" என குரல் சத்தமாக ஒலிக்க "எம்பெருமான் விருப்பம்" என சொல்லி எழுந்தார்


அது சித்திரை பவுர்ணமி நாளாக இருந்தது, சித்தர்களுக்கு உரிய மகா முக்கிய பவுர்ணமியாக இருந்தது. அப்பாவுவாக இருந்து பாம்பன் சுவாமிகளான அவர் இப்போது முழு சித்த நிலை எட்டியிருந்தார்


அதே 1895ம் ஆண்டு கார்த்திகை மாதம் அவர் துறவு பூண்டார், இம்முறை முழுக்க துறவியாகும் முடிவினை அறிவித்து வீட்டை விட்டு குடும்பத்தை விட்டு விடைபெற்றார்


குடும்பத்தாரும் நிறைவுடன் அவருக்கு விடை கொடுத்தனர், கூட்டை விட்டு அந்த ஞானபறவை பறந்தது


முதலில் அவர் கன்னியாகுமரியினை அடைந்தார், எல்லா ஞானியரும் முழுன்ஞானம் அடையும் அந்த குமரி முனையில் அவரும் அமர்ந்து தவம் செய்தார், குமரி கடலுக்கு அன்மையான சிறிய குன்றில் இருக்கும் குமாரகோவில் முருகபெருமான் ஆலயத்தில் வழிபட்டார், அங்கிருந்து சில பாடல்களை எழுதினார்


பின் வடக்கு நோக்கி நகர்ந்தார் வழியிலிருக்கும் பல ஆலயங்களை வழிபட்டவர் சென்னையினை அடைந்தார்


அங்கு வைத்தியநாத முதலி தெருவில் அவரை அறிந்தவர்கள் அவரை வரவேற்றனர், ஒரு அம்மையார் கனவில் முருகபெருமான் இவருக்கு அன்னம்படைக்க உத்தரவிட்டதை சொல்லி அவரை உபசரித்தார், அவருக்கு பங்காரு என பெயர், அந்த அம்மையாரை குமாரம்மாள் என பெயர் கொடுத்து ஆசீர்வதித்தார் சுவாமிகள்


இப்படி எங்கு சென்றாலும் முருகபெருமானின் அருள் அவரோடு இருந்தது


அவரின் வாழ்வில் அதிசயங்கள் வழமையாக தொடங்கின, முருகபெருமான் பரிபூரண அருளில் அவரை நடத்தினார், பல இடங்களில் மயிலாக குழந்தையாக அவருடன் விளையாடவும் செய்தார்


கந்தகோட்டம் உள்ளிட்ட பல தலங்களை சென்னையில் தரிசித்த சுவாமிகள், அங்கும் பல பாடல்களை பாடினார், அப்போதுதான் அவருக்கு காசி செல்லும் பெரும் விருப்பம் உண்டாயிற்று


அப்படியே 1896ம் ஆண்டு காசிக்கு கிளம்பினார் சுவாமிகள், தன் சீடர்களுடன் அந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டார், அவரை முருகபெருமானின் அருள் ஒன்றே நடத்தியது


பெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கல்கத்தா, கயா முதலிய இடங்களுக்கு சென்றவர் எல்லா ஆலய முர்த்திகளையும் முருகபெருமானாகவே வழிபட்டு மகிழ்ந்து காசியினை அடைந்தார்


காசியில் அவர் கங்கையில் நீராடி தவமிருந்தார், அங்கேதான்  அவர் தாமிரபரணி நதிக்கரை ஞானியும் திருசெந்தூர் முருகபெருமானால் ஆட்கொள்ளபட்டருமான குமரகுருபரர், மொகலாய சுல்தானிடம் சகலாவல்லி மாலை பாடி அன்னையின் அருளால் அந்த குமரகுருபரர் அமைத்த மடத்தில் தங்கினார், அப்போதுதான் ஒரு தரிசனம் கண்டார்


அந்த தரிசனத்தில் வயது முதிர்ந்த அடியார் ஒருவர் இவருக்கு காவி உடை ஒன்றை கொடுத்து அணிய சொன்னார் , இது குமரகுருபரர் கட்டளை என உணர்ந்து அன்றுமுதல் காவி உடை மட்டும் அணிந்தார், வெள்ளை வேட்டியும் மேல் ஒரு வெள்ளை துணியும் அதுவரை அணிந்தவர் குமரகுருபர் மடத்தில் கண்ட தரிசனத்திற்கு பின் காவிக்கு மாறினார்


 அவருக்கு காசியில் முழுக்க கரைந்துவிடும் எண்ணமே மேலோங்கிற்று ஆனால் முருகபெருமான் உத்தரவால் மீண்டும் தமிழகம் திரும்பினர்


சென்னையினை அன்மித்த திருவொற்றியூர், பழவேற்காடு, ஆண்டார்குப்பம் போன்ற திருத்தலங்களை தரிசித்து விட்டு சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் என்ற ஊரை அடைந்தார்.


அங்கு சிலர் அவர்மேல் வன்மம் கொண்டனர், காலம் காலமாக இருக்கும் தங்கள் அதிகாரம் மேல் இவர் கை வைத்ததாக எண்ணி பொருமியவர்கள் அவர்மேல் வழக்கு தொடுத்தார்கள் அதில் சுவாமிகளே வென்றார்கள்


அப்பக்கம் இருந்த பல மந்திரவாதிகள் துர்சக்தி மூலம் அவரை கொல்லமுயன்றார்கள் ஆனால் அவர்கள்தான் இறந்தார்களே தவிர சுவாமிகளுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை


முருகபெருமான் அருளால் துஷ்ட மந்திரவாதிகளை ஒழித்த சுவாமிகள் அங்கு முருகன் வழிபாட்டை ஏற்படுத்தி கொடுத்தார், அப்படியே மதமாற்ற சக்திகள் பல அவரிடம் தோற்று ஓடின அங்கும் முருகபெருமானின் கொடியினை ஏற்றிவைத்தார்


வழக்கில் தோற்ற சிலர், ஒரு மந்திரவாதியின் மூலம் சுவாமிகளை கொல்லும் பொருட்டு ஒரு துர்த்தேவதையை ஏவினர்.


இப்படி பல இடங்களில் சுற்றியவர் 1914ம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி வழமை போல் தவமும் பாடல் இயற்றுவதுமாக முருகனில் கலந்திருந்தார், அவரை சுற்றி எப்போதும் கூட்டம் இருந்தது


அவர் விபூதி பூசிவிட்டால் நோய்கள் தீர்ந்தன, அவர் பார்வை பட்டாலே நலமெல்லாம் கூடின, அவரை சுற்றி தேனீக்களாய் மக்கள் கூடினார்கள்


அவருக்கு 1918ம் ஆண்டு வெப்பு நோய் வந்தது, அது தன் கர்மவினை என உணர்ந்தவர் "குமாரஸ்தவம்" எனும் பாடலை பாடி வணங்க அவருக்கு பரிபூரண சுகம் கிடைத்தது, இன்றளவும் எல்லா நோயில் இருந்தும் விடுவிக்கும் பாடல் அதுதான்


சுவாமிகளின் மிக பெரிய முயற்சி அருணகிரிநாதரின் குருபூஜை நாளை கண்டறிந்து அதனை கொண்டாடவைத்தது அதுவரை அருணகிரி நாதருக்கு குருபூஜை கொண்டாட்டம் என எதுவுமில்லை யாருக்கும் அந்த நாள் எது என்றே தெரியாது


சுவாமிகள்தான் மிகுந்த சிரத்தையோடு அவரின் குருபூஜை நாளை தேடி அது உத்தாரண்ய காலத்தில் இருந்து ஆறாம் மாத பவுர்ண்மி என கணக்கிட்டு ஆனி மூலம் என அதனை அறிந்து மக்களுக்கு சொல்லி கொண்டாட்டத்தை தொடங்கினார்


ஒப்பற்ற முருகபக்தனான அருணகிரியாரின் குருபூஜை விழாவினை தொடங்கி வைத்தவர் அவரே


பாம்பன் சுவாமிகளின் வாழ்வு ஒவ்வொரு நொடியும் முருகபெருமானால் வழிநடத்தபட்டது பெரும் ஆச்சரியமும் அற்புதங்களும் கலந்தது, அவை எல்லாமும் எழுத ஏடு தாங்காது என்றாலும் மிக முக்கிய சம்பவம் 1923ல் நடந்த அவரின் கால்முறிவும் அதிலிருந்து அவர் குணம்பெற்ற அற்புதமும், ஐரோப்பிய மருத்துவர்களே வாய்விட்டு அலறிய அந்த சம்பவமுமானது


சுவாமிக்கு அப்போது 72 வயதானது, சென்னை தம்பு செட்டி தெருவில் அவர் நடந்துவந்தபோது ஒரு குதிரை வண்டியால் நிலை தடுமாறி அவர் சரியா அவரின் கால் ஒன்றின் மேல் சக்கரம் ஏறிற்று, எடை அதிகமான அந்த வண்டி ஏறியதில் கால் மணிக்கட்டுக்கு மேல் சிதைந்தே போனது, ரத்தம் ஆறாக ஓட அவரை மருத்துவமனைக்கு அள்ளி சென்றார்கள்


அரச மருத்துமனையில் ஒரு ஆங்கிலேய பெண்மணி மருத்துவராக இருந்தார், அவர் கால் முறிந்த அளவை பார்த்துவிட்டு சொன்னார், "இந்த காலை இனி ஒட்டவைக்க முடியாது , பெரிதாக நொறுங்கிவிட்டது அதைவிட முக்கியமானது ஆங்கில மருந்து உப்பு, புளி, காரம் எல்லாம் உண்ணும் உணவுக்கே பலன் கொடுக்கும்,, இவரோ இந்துக்ளின் சன்னியாசி சாப்பாடு மட்டும் உண்பவர், அதனால் பெரிய பலன் இராது


இவருக்கு எங்களால் கொடுக்க கூடிய அதிகபட்ச சிகிச்சை காலை வெட்டி எடுப்பதுதான் மேற்கொண்டு காயத்தை குணபடுத்துவதும் இந்த மருந்தால் உறுதியில்லை அதனால் விவகாரம் சிக்கல், நாங்கள் முடிந்ததை செய்கின்றோம் பின் உங்கள் வழியில் கவனித்து கொள்ளுங்கள்" என நம்பிக்கையில்லாமல் பேசினார்


எனினும் பல சூழல்களால் கால் எடுக்கும் விஷயம் தள்ளிபோனது, மருத்துவர் ஆலோசனை இன்னும் சில காரணங்களால் கட்டுபோட்டு நாள் நீடிக்கபட்டது


சுவாமிகளின் சீடர்கள் உடைந்துபோனார்கள் ஆனால் ஒரு விஷயத்தில் அசந்தே போனார்கள், கால் ஒடிந்தபோது அவ்வளவு ரத்தம் வெளியேறியும் சுவாமியின் உடலில் ஒரு தளர்ச்சியுமில்லை அதனால் முருகன் அவரை காப்பான் என அவருக்காய் ஷன்முக கவசம் பாடிவழிபட்டார்கள்


அப்படியே முருகபெருமானிடம் சுவாமிகளும் ஷன்முக கவசம் பாடி வழிபட்டார்


1923 டிசம்பர் 27ல் அவர் அந்த விபத்தில் சிக்கினார், மருத்துவரின் இழுபறியில் நாட்கள் நகர்ந்தன, அந்நேரம்  1924, ஜனவரி 6-ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் தோன்றிய சண்முகக் கடவுள் ‘"யாமிருக்க பயமேன் , இன்னும் 5 நாளில் குணப்படுத்துவேன்’ என்று வாய் மலர்ந்தார். 


அந்நேரம் அவரின் சீடர்களுக்கும் ஒரு காட்சி வந்தது அதன்படி சுவாமியின் காலை ஒரு வேல் தாங்கிற்று, அவரின் உடைந்த காலை இரு வேல்கள் மேலும் கீழுமாக தைத்து நின்றன‌


அதனை அடியார்கள் ஓடி சென்று சுவாமிகளிடம் சொல்ல சுவாமியும் தனக்கு வந்த காட்சியினை சொன்னார், அடுத்த ஐந்தாம் நாள் அந்த அற்புதம் நிகழ்ந்தது


மருத்துவமனையில் அவர் இருந்த அறைக்கு வந்த மருத்துவர் அவரை காணாமல் தேடினார், அப்போது "என்னைத்தானே தேடுகின்றீர்கள்?" என நடந்து வந்தார் சுவாமிகள்


அவர் காலில் கட்டுமில்லை, காயமுமில்லை , அலறினார் அந்த பெண் மருத்துவர், "இது அதிசயங்களின் பூமி, இந்தியாவில் அதிசயங்கள் சாதாரணம்" என திரும்ப திரும்ப சொன்னார், பின் மருத்துவமனை விதிப்படி எக்ஸ்ரே எடுக்கபட்டது அங்கே கால்கள் இயல்பாய் இருந்தது அறியபட்டது


இந்த அதிசயத்தை அபப்டியே ஆவணமாக பதிவு செய்தார் மருத்துவர் "நம்பமுடியா அதிசயபடி இம்மனிதர் குணமடைந்தார்" என அவரது அறிக்கை கொடுக்கபட்டு சுவாமிகள் வெளிவந்தார் இன்றும் அந்த அறிக்கை மருத்துவமனையில் உண்டு


இன்று ராஜிவ்காந்தி பொதுமருத்துவமனை என பெயர் மாற்றபட்டாலும் அந்த மருத்துவனையின் மன்றோர் வார்டில் 11ம் எண் அறை சுவாமிக்கானது இப்போதும் சுவாமியின் படம் அங்கே உண்டு


சுவாமிகள் இப்படி சுகம் பெற்ற நிகழ்வு அற்புதமான நிகழ்வு அவரின் பக்தர்களால் "மயூர சேவன விழா " என கொண்டாடாப்டுகின்றது


அடுத்த ஆறு ஆண்டுகளில் பலவகையான திட்டங்களை தன் பக்தர்களுக்கான எதிர்கால திட்டமெல்லாம் வகுத்து கொடுத்து, சூரிய சந்திரர் உள்ளளவும் "மயூர சேன விழா" நடத்தவும் தனக்கு பின் தன் பக்தர்கள் எப்படி வழிநடக்க வேண்டும் என்பதையும் எழுதி வைத்தார் அது இன்றும் உயிலாக உண்டு


1929ம் ஆண்டு பிப்ரவரி மாதமே சென்னை திருவான்மியூர் கடற்கரையில் நிலம் பார்க்க சொன்னார், இவரின் சீடர்கள் தேடியபோது 3.5 ஏக்கர் நிலம் ஒன்று கிடைத்தது அது சாமிக்கு என்றவுடன் அவன் உடனே கொடுத்துவிட்டான்


அதே ஆண்டில் மே 29ம் தேதி,  தேய்பிறை பஞ்சமி அன்று மாலை தன் சீடர்களிடம் நாளை காலை தனக்கு நெருக்கமான எல்லோரையும் வரசொன்னார், மறுநாள் காலை மே30ம் தேதி தேய்பிறை சஷ்டி அன்று சில வார்த்தைகளை பேசிவிட்டு, 500 ஆண்டுகாலம் தான் இங்கே வசிப்பேன் என சொல்லிவிட்டு சில பாடல்களை பாட சொன்னவர் அபடியே முருக பெருமானை துதித்தபடி முக்தி அடைந்தார்


அவரின் ஜீவ சமாதி திருவான்மியூர் கடற்கரையில் அமைக்கபட்டு இன்று பல்லாயிரம் மக்களால் வழிபடபடுகின்றது, சுவாமி சொன்னபடி ஐநூறு வருடங்கள் அவர் அங்கிருந்து அருள்பாலிப்பார்


பாம்பன் சுவாமிகள் இப்போதும்  ஜீவனுடன் அவர் சமாதியில் உண்டு, அவர் அங்கிருந்து தன்னை நாடிவரும் எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்கின்றார், நம்பிக்கையுடன் அவரை அங்கு சென்று தொழுதால் நிச்சயம் முருகபெருமானோடு உங்களுக்கு அருள்பாலிக்க வருவார்


எங்கிருந்து அவரை முருகபெருமான் பெயரால் தேடினாலும் ஏதோ. ஒரு உருவில் வருவார், உரியநேரம் அவர் தன் வாழும் சமாதிக்கும் உங்களை அழைத்து கொள்வார்


சுவாமி பாடிய பாடல்களின் மொதத எணிக்கை 66666, ஆறுமுக பெருமானை அவர் இப்படி ஆறு இலக்க எண்ணில் பாடிவைத்ததெல்லாம் மெய்சிலிர்க்கும் ஆச்சரியம்


அவை ஆறு பகுதிகளாக உண்டு,   முதல் மண்டலம் என்பது குமரகுருதாச சுவாமிகள் பாடல், இரண்டாம் மண்டலம் என்பது திருவலங்கற்றிரட்டு , மூன்றாம் மண்டலம்  என்பது காசி யாத்திரையில் பாடபட்ட காசியாத்திரை, பரிபூரணானந்தபோதம், தகராலய ரகசியம் என்பது


 நான்காம் மண்டலம்  என்பது சிறுநூற்றிரட்டு, திருத்தலத்தரிசனத்தின் போது பாடிய கட்டளை கலித்துறை, சேந்தன்செந்தமிழ், பத்துப் பிரபந்தம், குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி, குமாரஸ்தவம், செக்கர் வேள் செம்மாப்பு, செக்கர் வேளிறுமாப்பு, சீவயாதனா வியாசம்.


 ஐந்தாம் மண்டலம்  என்பது திருப்பா, ஆறாம் மண்டலம்  என்பது ஸ்ரீமத் குமார சுவாமியம் என வகுக்கபட்டுள்ளது


சுவாமி அவர் வாழ்ந்த காலத்தில் எப்படி மதிக்கபட்டார் என்றால் அன்றைய பெரிய படிப்பு படித்த தமிழ் மேதைகளான திருவிக மற்றும் மறைமலை அடிகளார் போன்றவர்கள் தமிழில் சந்தேகம் வந்தால் சுவாமி முன்னால் கைகட்டி வாய்பொத்தி நின்று தமிழ்சந்தேகத்தை தீர்க்கும் அளவு தெய்வகோலத்தில் இருந்தது


ஆம், சுவாமிகளே தமிழுக்கு முழு இலக்கணமாக விளங்கினார்


அவர் பாடிய பாடல்களெல்லாம் மாபெரும் பலன் அளிப்பவை, குமாரஸ்தவம் என்பது எல்லா நோயில் இருந்தும் விடுதலை கொடுக்கும்


அவரின் பகைகடிதல் பாடல் எல்லா பகையினையும் ஒழிக்கும், அவரின் சன்முக கவசம் எல்லா ஆபத்திலிருந்தும் காக்கும்


அவரின் "வேற்குழலி வேட்கை" பாடல் மகப்பேற்றை பெற்று தரும், அவரின் "அஷ்டக விகரக லலீலை" கர்மவினையினையினை தீர்த்து எதிரிகளை ஒடுக்கி பெரும் வாழ்வு தரும்


அவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் முறையாக படித்தால் பெரிய பலன் தருபவை, தேவாரம் திருவாசகம் போல் மிக பெரிய பலனை கொடுக்க கூடியவை


அங்கே தேவாரம்போல் இனிமை உண்டு, திருவாசகம் போல் உருக்கம் உண்டு, மாபெரும் பலன் நிச்சயம் உண்டு


காளிதாசனின் குமார சம்பவம் போல சாம வேதத்தின் பல பகுதிகளை வடமொழியில் இருந்து திரட்டி முருகபெருமானின் சிறப்புக்களை சொல்லி குகபரத்துவ கொள்கையினை நிறுவியவர் அவர்தான்


வேதம் சொன்ன முருகனை புராணங்கள் சொன்ன முருகனை வடமொழியின் வரிகளில் இருந்தே நமக்கு காட்டி தந்தவரும் அவர்தான்


பாம்பன் சுவாமிகளுக்கு முருகபெருமான் கொடுத்த வரம் என்னவென்றால் அவர் பாடிய பாடலை யாரெல்லாம் பாடி முருகபெருமானை வணங்குவார்களோ அவர்கள் நிச்சயம் அந்த பலனை பெறுவார்கள் என்பது, அதனை பாடி வைத்தார் சுவாமிகள்


“நான் பாடு பாட்டை நவில்பவர்க்கு நலம் நல்காய்

கான்பாடு வண்டறையும் கழுகுமலை முருகா”


எனைத் தள்ளினாலு மெனை நம்பினவர்த் தள்ளேல்

கனைத் தண்டை சிலம்ப வரும் கழுகுமலை முருகா”


என்பது அவர் பாடி வைத்த வரி


பாம்பன் சுவாமிகள் அருணகிரியாரை குருவாக கொண்டு அவர் சாயலில் வந்து பாடி முருகனை அடைந்தவர் என்றாலும் அவர் அருணகிரிநாதரின் இன்னொரு பிறப்பாகவே கருதபடுகின்றார்


நிச்சயம் அவர் முருகபெருமானின் பெரும் அருளால் தமிழகத்துக்கும் தமிழுக்கும் கிடைத்த பெரும் வரம் , தன் அடியாரான அவரால் முருகபெருமான் தமிழில் பெரும் பெரும் பாடல்களை சக்திமிக்க பாடல்களை தந்து தன் அருள் பெற வழி செய்த ஒப்பற்ற வரம்


ஏதோ மிகபெரிய ரிஷியின் அம்சமாக நம்மிடம் வந்து நம்க்கு பல அற்புதங்களை தந்த ஞானவரம், பெரும் பராக்கிரம வரம், சனாதனத்தின் தனி சக்திமிக்க வரம், அவரை நினைத்தாலே எல்லாம் நலமாகும்


வாழும் காலம் வரை எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டியவர் இன்றும் அரூபியாய் நின்று எல்லோரையும் காத்து கொண்டிருக்கின்றார், அவரை அண்டியோர்க்கு நிச்சயம் பலன் உண்டு, முருகபெருமானின் அருளும் உண்டு


சஷ்டி விரத காலத்தில் அந்த பாம்பன் சுவாமிகளை மனதார நினைந்து முருகனை பணிந்து அவரின் பாடல்களை பாடுவோர்க்கு எல்லா நலமும், எல்லா வளமும் வரும், அவர்களின் எல்லா கர்மவினையும் தீர்ந்து எல்லா பிணியும் கவலையும் தீர்ந்து அவர்கள் பெருவாழ்வு வாழ்வார்கள், அற்புதமும் அதிசயங்களும் அவர்களுக்கு வாடிக்கையாகும் முருகபெருமானின் பெரும் அருளில் அவர்கள் எண்ணியதெல்லாம் ஈடேறி நீண்ட பெரும் ஆயுளும் கிடைக்கும் இது சத்தியம்.

பிரம்ம ரிஷியார்

No comments:

Post a Comment