Tuesday 13 September 2022

கீவளூர்

 கீவளூர்


தேவர்களும், அசுரர்களும் மேருமலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை நாணாக்கி சுழற்றிக் கடைந்தபோது அமுதம் நுரைத்துத் தளும்பி மேலெழுந்தது. அப்போது கலயத்தை மீறிய துளியொன்று எட்டித் தெறித்து பாரதத்தின் மீது தவழ்ந்திறங்கியது. துளி இரண்டாக பிரிந்தது. ஒன்று பாரதத்தின் வடபாகத்திலும், இன்னொன்று தென் பாகத்திலுமாக விழுந்து ஆழ்ந்து நிலைபெற்றது. அமுதம் பரவிய தலத்தில் சுயம்புச் சிவமாக பொங்கினார், ஆதிசிவம். அங்கே இலந்தை மரம் ஒன்று துளிர்த்து வனமாகப் பெருகியது. இந்த வடபாகம் வடபதரிகாஸ்ரமம் என்று அழைக்கப்பட்டது.


‘பதரி’ என்றால் ‘இலந்தை’. அதுபோலவே கீழ்வேளூர் எனும் இத்தலத்திலும் இலந்தை மரங்கள் அடர்ந்து வளர்ந்தன. மகரிஷிகளும், முனிவர்களும் இப்பகுதியை தென்பதரிகாஸ்ரமம் என்றனர். சிவத்தின் ஞானாக்னியில் உதித்த கந்தப் பெருமானை இலந்தைவன ஈசன் அழைக்கும் காலமும் நெருங்கி வந்தது. ஆற்றுப்படையாக பெருகி ஓடியவனையே ஆற்றுப்படுத்த ஆவல் கொண்டது.


சூரபத்மன் அநியாயமாக தேவர்களையும், தேவேந்திரனையும், பூவுலகு உயிர்களையும் கொடுமைப்படுத்தி கொடூரம் செய்தான். பாதிக்கப் பட்டவர்களெல்லாம் மாறிமாறி கந்தவேலனின் பாதம் பிடித்தழுதனர். அக்னி குமாரன் தணலாக எழுந்தான். சூரபத்மன் முன் பற்றியெறியும் கானகம் போல கோபம் பெருக் கினான். போர் வளர்ந்தது. வதத்தில் முடிந்தது. எங்கு காணினும் ரத்தம்.


கந்தனின் அகமும், புறமும் உலைக் களமாக கொதித்துக் கொண்டிருந்தன. அசுர வதம்தான் என்றாலும் அவனை வீரஹத்தி தோஷம் சூழ்ந்தது. சூரபத்மன் அடாத செயல்களை செய்தவனாயினும் அவனும் ஒரு உயிரே. அதனால் அவனை வதைத்த பாவம் மெல்லியதாக கந்தனுக்குள் பரவியது. சித்தத்தில் நிறைந்த பேரமைதியை மெல்லிய அலையாக இது கலைத்தது.


சிவம் தன் குமாரனை நோக்கினார். அவன் அகம் களையிழந்து கிடப்பதைப் பார்த்தார். திருச்செந்தூரில் செம்மையாக தன் தந்தையை பூஜித்துக் கொண்டிருந்த மகனை தென் இலந்தை வனம் எனும் இத்தலத்தில் அமர்ந்து தவமியற்றச் சொன்னார். ஐந்து லிங்க அமைப்பையும், நவலிங்க பூஜையையும் அத்தலத்தில் செய்யுமாறு பணித்தார். வெற்றித் திருமகன் தம் பெரும் சேனையோடும், நவவீரர்கள் உள்ளிட்டோரோடும் இத்தலத்தில் தம் திருவடியை பதித்தார். இலந்தை இலைத் துளிர்கள் மழையாக அந்தப் பாலகனின் மீது சிலுசிலுவென கொட்டின.


கந்தர்  குதூகலமடைந்தார். அமுதத்தின் வாசம் இடைவிடாது அவரைத் துளைத்துக் கொண்டிருந்தது. சம்பிரதாயம் விடாமல், தன் அண்ணன் விநாயகனை மஞ்சளால் செய்வித்து தவத்தைத் தொடங்க, விக்னேஸ்வரன் விக்னங்கள் போக்கினான். எவ்வித கேடும் வராமலிருக்க கேடிலியப்பராக கிளர்ந்திருந்த தந்தையின் பாதம் பணிந்தான் முருகன். அருகேயே பாதாள கங்கை எனும் பொய்கையை பொங்கச் செய்தான். கயிலை நாதனையும், சௌந்தர நாயகியையும் கோயில் கொள்ளச் செய்தான். அதுவே கடம்பனூர் கோயிலாயிற்று.


அதற்கு அருகேயே சதுர்வேத மூர்த்தியாக லிங்கம் அமைத்து வழிபட்டான். அது ஆழியூராக அழியாப் புகழ் பெற்றது. வேறொரு திக்கில் சுந்தரேஸ்வரராக தந்தையை பாவித்து கோயில் அமைத்தான்.


அது இளம் கடம்பனூர் என்று இனிமையாக அழைக்கப்பட்டது. வடகிழக்கே சுந்தரகேசி   சோமநாதரை அர்ச்சித்ததால் பெருங்கடம் பனூர் என்று பெயர் பெற்றது. வடகிழக்கில் கடம்பர வாழ்க்கையில் லோகாம் பாளையும், சகள நாத ரையும் வழிபட்டு பஞ்சலிங்க பூஜையை பூர்த்தி செய்தான்.


அதுபோலவே ஒவ்வோரு தலத்திலும் தங்கி, சிவலிங்கம் நிறுவி, நவலிங்க பூஜையை நடத்தி ஈசனின் சாந்நித்திய சாரலில் நனைந்தான். மீண்டும் ஆதி இலந்தை வனநாதரிடம் ஓடோடி வந்தான். வீராதி வீரர்களை கொண்டும், தேவதச்சனை ஆலோசித்தும் பெருங்கோயில் எடுப்பித்தான். புஷ்கலம் எனும் பெயருடைய நூதன விமானம் செதுக்கினான். வேலாயுதத்தால் கோபுரத்தின் அக்னி மூலையில் கீறி திருக்குளம் உருவாக்கினான். சகல வீரர்களையும் மூழ்கியெழச் செய்தான். அது சரவண தீர்த்தம் என்று சீர் பெற்றது.


புறத்தில் வேள்வி புரிந்தவன் அகத்திலே மூண்ட பாவத்தீயை அணைக்க ஐந்து புலன் களையும் மெல்ல சுருக்கி தியானத்தில் அமர்ந்தான். புலன் குதிரைகள் அடங்க மறுத்தன. வெறி கொண்டு பிடரி சிலிர்க்க ஓட முனைந்தன அப்பனுக்கு செய்யும் ஆராதனையில் இத்தனை இடர்களா என்று அம்மையை வேண்டினார் ஆறுமுகப் பெருமான்.


பேராற்றல் பெற்றிருப்பினும் தாய்க்கு குழந்தையல்லவா குமரப்பெருமான்!  தாங்காத தவிப்போடு வந்தாள், அங்கு வீற்றிருந்த வனமுலைநாயகி. ‘தன் குழந்தையை எந்தத் தீயவையும் நெருங்க விடமாட்டேன்’ என எழுந்தாள். ஆகாயத்தில் வளர்ந்தாள். காளியாக சிவந்தாள். அஞ்சேல் எனக் கரம் காட்டினாள். அஞ்சேல் என்றவள் அஞ்சுவட்டத்தம்மனாக திருநாமங் கொண்டாள்.


குமரப்பிள்ளை குளிர்ந்தான். தனக்காக தாய் எண்திக்கிலும் பரவி காவல் காத்து நிற்கும் பேரன்பு கண்டு நெகிழ்ந்தான். தந்தையை உள்ளம் குளிரக் குளிர பூஜித்தான். சிவம் கந்தனுக்குள் தெள்ளோடையாகப் பாய்ந்தது. ஆறுமுகத்தின் மனம் ஒருமுகமாகி ஆதிசக்தியோடு ஆழமாகப் பிணைந்து கிடந்தது. தணலாகிக்கிடந்த கந்தன் தணிந்தான். அருள் பரப்பி தெள்ளமுதம் பொங்கும் தலத்தில் மீண்டும் அழகனானான்.


 தாய் மகிழ்ந்தாள். தந்தை சிவம் கேடுகளை அகற்றி தூய்மையாக்கி உச்சி முகர்ந்தார். பாலமுருகன் வீரக் கொலைப்பாவம் நீங்கும் பொருட்டு இத்தலத்தில் தந்தை ஈசனை பூஜித்ததால் இத்தலத்தை ‘பூசரண்யபுரம்’ என போற்றினர். கந்தப்பெருமான் விண்ணுலகில் உறையும் தலத்தை மேல்வேளூர் என்று அழைத்ததுபோல, பூவுலகில் நிரந்தரமாக தங்கித் தவமிருப்பதாலேயே கீழ்வேளூர் என்று பெருமையும் ஏற்பட்டது.


ஞான முனியான குறுமுனி அகத்தியர், கேடிலியப்பரை தரிசித்து ஆனந்தமானார். அகங்குழைந்து ஈசனின் முன்பு கண்ணீர் சொரிந்து நின்றார். மனமிரங்கி ‘என்ன வேண்டும் கேளுங்கள்’ என்று ஈசன் கேட்க, ‘தங்களின் திருத்தாண்டவத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க வேண்டும்’ என்று விண்ணப்பம் செய்தார். ஆடலரசர் இடக்கால் ஊன்றி வலக்கால் தூக்கி மாற்றி ஆடினார். அந்த பேரன்பு பொங்கி எழும் ஆனந்த தாண்டவத்தை கண்ட அகத்தியர் உள்ளம் குழைந்தார்.


இந்த தலத்தின் பிரதானச் சிறப்பு பெறும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.சந்திரகுப்தன் எனும் வைசியன் தன்னிடமிருந்த சகல செல்வத்தையும் இழந்தான். மனம் நொந்து திசை தேசம் தெரியாது ஈசனருளால் இத்தலத்தை அடைந்தான். திருக்கோயிலுக்குள் புகுந்து நந்தியம் பெருமானின் காலடியில் வீழ்ந்தான். கோயிலை மும்முறை வலம் வந்தான். ஈசன் அவனை கருணைக் கண்களால் கண்டார்.


இத்தலத்திலேயே நித்திய வாசம் புரியும் குபேரனுக்கு அவனை அடையாளம் காட்டினார். குபேரன் அவனுக்கு பக்தியும், புத்தியும், பொருளும் அளித்து ஆலயப்பணி செய்வித்தான். இன்றும் இத்தலத்தில் குபேரனுக்கு தனிச் சந்நதி உண்டு. குபேரனை வழிபடுபவர்கள் பெருஞ்செல்வம் பெற்று நீடூழி வாழ்வர்.


ஈசனின் சந்நதியில் பூஜித்து வந்த ஆதிசைவரின் மனைவி கருவுற்றிருந்தாள். சந்தோஷ செய்தி ஊர் பரவும் முன்னர் கணவன் இறந்தான். அவள் தன் தாய் வீடு சென்றாள். நிராதரவாக இருந்தவளுக்கு கேடிலியப்பனின் திருநாமம் ஒன்றே ஒரே ஆதாரமாக இருந்தது. நல்லதொரு நாளில் ஆண் மகவை பெற்றெடுத்தாள். தக்க பருவம் வந்தவுடன் கேடிலியப்பனுக்கு தொண்டு செய்யும் பணியை தன் மகனுக்கு அளிக்க வேண்டுமென்று கேட்டாள். உறவினர்கள் அது உன் பிள்ளையா என்று கேலி பேசினார்கள்.


அவள் கற்பை கேள்விக்குறியாக் கினார்கள். நிலைகுலைந்தவள் கேடிலியப்பரின் சந்நதி முன்பு மைந்தனின் கை பற்றி சத்தியம் செய்தாள். நம்ப மறுத்தார்கள். நகையாடினார்கள். அவளும் பற்றி எரியும் தீயில் பாய்ந்து செல்ல போகும் முன் எங்கிருந்தோ ஓர் ஹூங்காரத்துடன், மழு ஆயுதம் சுழன்று வந்தது. சட்டென்று நேராக இருந்த நந்தி நகர, கேலி பேசியோரின் சிரங்களை சரசரவென கொய்தது. பெண்ணின் கற்பினை உலகறிய உணர்த்தியது. அதனாலேயே இத் தலத்தில் இன்றும் நந்தி சற்று விலகியே இருக்கும்.


ஒன்றா... பலநூறா என்று கணக்கில்லாமல் இத்தலம் பற்றிய புராணக் கதைகள் நீண்டு கொண்டே போகின்றன. இத்தல பெருமானின் விளையாடல்களாக ஆயிரமாயிரம் நிகழ்வுகள். அஞ்சுவட்டத்து அம்மன் அருள் நிழலில் நிகழ்ந்தவை என்று பட்டியலாக நீளும் நிகழ்ச்சிகள். முருகப்பெருமானின் அற்பு தங்கள் என்று அள்ள அள்ளக் குறையாத விஷயங்கள். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய அற்புதத் தலம்தான் கீழ்வேளூர். தற்போது வழக்கு மொழியில் ‘கீவளூர்’ என்கிறார்கள்.


‘முருகு’ என்ற பொருளுக்கு ‘அழகு’ என்பதுபோல இந்தக் கோயிலுக்குள் அத்தனை பேரழகும் கொட்டிக் கிடக்கின்றன. முழுக்கோயிலையுமே கற்றளியாக செய்திருக்கிறார்கள். கற்களை வைத்து வித்தை காட்டியிருக்கிறார்கள். இதற்குமேல் சிற்பங்கள் ஏதேனும் செய்ய முடியுமா என்று விரலுயர்த்தி சவால் விட்டிருக்கிறார்கள். ‘‘எண்டோளீசற்கு எழில் மாடம் எழுபது செய்து உல காண்ட’’ கோச் செங்கெட் சோழன் தான் இக்கோயிலையும் எடுப்பித்திருக்கிறான்.


பெரிய ராஜகோபுரம் நடுநாயகமாக கம்பீரமாக நிமிர்ந்திருக்கிறது. கோயிலுக்குள் நுழையும்போதே கற்கோயிலின் பிரமாண்டத்தை உணர்த்தும் வகையில் இடப்பக்கம் முழுதும் கல்லால் ஆன சிறு கோபுர அமைப்பை தரையிலிருந்து எழுப்பியிருக்கிறார்கள். இத்தலத்தில் வடக்கு பார்த்த கணபதியும், வடமேற்கில் சித்திர சிற்பம் கொண்ட ஆறுமுக மயில் வாகனனும் அழகுற உள்ளனர். கோயில் கட்டுமலை அமைப்பை உடையது.


அதற்குமுன்பு நந்தியின் சந்நதி சற்று நகர்ந்துள்ளதைக் காண்கிறோம். நந்திக்கு அருகேயே இத்தல நாயகர் முருகப்பெருமானின் சந்நதி உள்ளது. தந்தையின் சந்நதிக்கு செங்குத்தான படிகளில் ஏறிச் செல்கிறோம்.


அழகான தூண்கள். சிறு மண்டபம் போல காட்சியளிக்கிறது. பார்வதி திருமணத்தை விளக்கும் அற்புதமான சிற்பம் ஒன்று காணப்படுகிறது. அதையும் தரிசித்து சற்று உள்ளே நகர்கையில் கேடுகளை அழித்து அற்புத வாழ்வு தரும் கேடிலியப்பர் வீற்றிருக்கிறார்.


பார்த்தவுடனேயே மயிர்க்கூச்செரியும் சந்நதி. சுயம்புவாக உதித்தவன் இங்கே செல்வக் குமரனின் பாவம் தீர்த்தான். சந்நதிக்குள் அமுதத்தின் சாரல் வீசுவதால் நமக்குள்ளும் குளுமை பரவுகிறது. எத்தனை முறை தரிசித்தாலும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஓர் அழகு மூர்த்தமாக கேடிலியப்பர் விளங்குகிறார். அப்பரடிகள் ‘‘கீழ்வேளூர் ஆளுங்கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே’’ என்று ஓரடியில் அழுத்தமாக தெரிவிக்கிறார். வெள்ளிக் கவசம் சாத்தி இன்னும் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்கள்.


 குகைக்குள் குடிகொண்டிருக்கும் தனிச் சிங்கத்தை சந்திப்பது போல மெல்லியதாக நடுக்கமும், பிரமிப்பும் அவ்விடத்தில் நமக்கு ஏற்படுகிறது. மாபெரும் சக்திக்கு முன்னர் மெல்லிய தூசாக மனம் சிறுத்துவிடும் மாயத்தை அச்சந்நதி செய்கிறது. மனம் பஞ்சுபோல் மாற கட்டு மலையிலிருந்து கீழிறங்கி பிராகாரத்தை சுற்ற வருகிறோம்.


அந்த கட்டுமலை முழுவதையும் கற்களாலேயே அமைந்திருப்பதைப் பார்த்து மூச்சே நின்று விடும் போலிருக்கிறது. என்ன பேரற்புதமான பணி. ஈசனை எவ்வளவு அற்புதமான கல் மாளிகைக்குள் அமர்த்தியிருக்கின்றனர். வார்த்தை களால் வடித்தெடுக்க முடியாத வனப்புடைய சிற்பச் செல்வங்கள் நிறைந்த பிராகாரம்.


காணக்காண கண்களில் நீர் பெருகுகிறது. அந்த பிட்சாடன மூர்த்தியின் சிலை எத்தனை நுணுக்கம். வீணாதர தட்சிணாமூர்த்தி நாத பிரம்மத்தில் தோய்ந்திருப்பதை எத்தனை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார்கள். பசுபதியும், பார்வதியையும் எத்தனை அற்புதமாக புடைப்புச் சிற்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.


கட்டுமலை மேலே சிறு பிராகாரம் அமைத்திருக்கிறார்கள். சிங்க உருவங்களும், யாளிகளின் வரிசைகளும் அணிவகுப்பாக அமைந்திருக்கின்றன. வாழைப்பூ தொங்கல்களும், அதை மூக்கால் கொத்தும் கிளிகளையும் தோரணமாக்கியிருக்கிறார்கள். இந்த பூவுலகையே மறக்கடித்து தேவலோகத்தில் இறங்கிவிட்டோமா என்ற அளவுக்கு தெய்வச் சிலாமூர்த்திகளை அநாயாசமாகச் செதுக்கியிருக்கிறார்கள்.


பிராகாரத்தில் அகத்தியர், விஸ்வநாதர், மகாலட்சுமி, கைலாசநாதர், அண்ணாமலைநாதர், ஜம்புகேஸ்வரர், குபேரன், தேவேந்திரன் போன்றோருக்கு சிறு சிறு சந்நதியோடு தனிக்கோயில் கட்டியிருக்கின்றனர். அம்பிகை வனமுலை நாயகியைக் காண, வற்றாத வளங்கள் தானாய் பெருகும். இந்நாயகி வடகிழக்கில் பத்ரகாளி உருவத்தோடு அஞ்சுவட்டத்தம்மை என்ற திருநாமத்தோடு காட்சியளிக்கிறாள். பெயர்தான் பத்ரகாளி.


ஆனால், பார்ப்பதற்கோ பேரன்புமிக்க தாய்போல பரிவோடு இருக்கிறாள். வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை குறையாது கொடுக்கும் கொடை வள்ளலாக விளங்குகிறாள். பக்தர்கள் எப்போதும் இங்கு குவிந்தபடி உள்ளனர். பெருங்கோயிலையும் நின்று தரிசித்து கொடிமரத்தின் கீழ் விழுந்து பரவும்போது இலந்தையின் வாசமும், அமுதத்தின் சாரலும் உள்ளத்தில் இடைவிடாது வீசுவதை இதமாக உணரலாம். இத்தலம் திருவாரூர்- நாகப்பட்டினம் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

Sri Kediliappar Temple https://maps.app.goo.gl/2zJHjNvJFj2DYb7j8

No comments:

Post a Comment