Saturday 16 October 2021

புவனேஸ்வரி கவசம்

 புவனேஸ்வரி கவசம்! அன்புருவாம் அம்மையை அகத்துள் உணர்ந்திடலாம் மாதாவும் முன்வந்து மஹத்தான வரமருள சொன்னபடி செய்து நீ சுகமடைவாய் மனமே கேள். !


ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம் சக்தி


புவனேஸ்வரி கவசம்

அங்குச பாச மேந்தி அபயமே வரதம் தாங்கும்

பங்கயக் கரத்தள் பீதாம்பரமணி யிடையள் பொற்பூண்

பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள்

பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம் போற்றி

கணபதியே சரணம் கணநாதா ரக்ஷிப்பாய்

கந்தனுக்கு மூத்தோனே கவசத்தைத் தந்திடுவாய்

மாதாவின் கவசத்தை மங்களம் பெருகிடவே

மங்கள கணபதியே மகிழ்ந்தெனக் கருள்வீரே

பஞ்சமுக கணபதியே மனமாசறுத்துத் தேசருளி

வல்லபை கணபதியே வல்வினைகளைப் போக்கி


மஹத்தான உன்னருளை மாரிபோல் பொழிந்திட்டு

பூலோகம் உய்வுபெற புவனேசி கவசமீவாய்

புவனேச்வரித் தாயே புவனமெல்லாம் உய்வுபெற

புண்ணியத்தால் உன்நாமம் போற்றுகிறேன் கேட்டிடம்மா

என் ஹ்ருதயத் துள்ளிருந்து என்னறிவாகியே நீ

சீர்மிக்க மாதாவே சீக்கிரமே வந்திடம்மா

பாக்கியம் பலவேண்டிப் பகர்கின்றேன் கவசத்தை

பாலாம்பிகைத் தாயே பரிவுடனே வந்திடம்மா

படைப்புக்கும் முன்புள்ள பராசக்தித்தாயே கேள்

பாலன் இவனையுமே பார்த்து நீ ரக்ஷிப்பாய்


மூவர்கள் போற்றி ஏத்தும் முதல்வியே புவனேசி

தேவாதி தேவர்களும் தேவியுன்னை வழிபட்டே

சாகாவரம் பெற்று சர்வசக்தி எனப் புகழும்

லலிதாம்பிகைத் தாயே சடுதியில் வந்திடம்மா

மார்க்கண்ட மாமுனிவர் மஹான் துர்வாஸரிஷி

அகஸ்தியரிஷி போன்றோர் அன்னையுன்னை வழிபட்டே

இன்றும் இருந்துகொண்டு இவ்வுலகிற் கருளுவதை

என்னவென்று நானுரைப்பேன் என்தாயே உன் மகிமை

வாராஹி தேவியே வந்திப்பேன் உன் அடியை

பாதம் நகம் விரலைப் பார்வையால் நீ காத்திடம்மா


முழங்கால் இரண்டையுமே மலைமகளே காத்திடம்மா

தொடைகள் இரண்டையுமே துர்க்கை நீ காத்திடம்மா

பின்புறத்தை நாரஸிம்மி பிறழாது காத்திடம்மா

வயிற்றைப் பைரவியே வலியவந்து காத்திடம்மா

மார்பை சிவதூதி மாண்புடனே காத்திடம்மா

வலதிடது தோளை வைஷ்ணவியே காத்திடம்மா

மனோன்மணித்தாயே என் மார்பையுமே ரக்ஷிப்பாய்

மஹாத்ரிபுர சுந்தரி நீ மனத்தையும் காத்திடம்மா

என் ஹ்ருதயத்தில் புவனேசி நீ இருந்து ரக்ஷிப்பாய்

கழுத்தை மாஹேந்திரியும் முகத்தை காத்யாயனியும்


தலையைத் தாக்ஷாயணியும் தலைக்குள் சிவ சக்தித்தாயும்

கண் காது வாய் மூக்கைக் காமாக்ஷியும் காத்திடம்மா

பற்கள் அனைத்தையுமே பத்மாக்ஷி காத்திடம்மா

நாக்கை வாக்தேவி நயமுடன் காத்திடம்மா

புருவங்களிரண்டையுமே பூதேவி காத்திடம்மா

புருவங்களின் நடுவில் ஸ்ரீதேவியிருந்து காப்பாய்

கண்ணொளி யாயிருந்து காப்பாய் காமேச்வரித்தாயே

கண்களின் மணிகளையே காலஹந்த்ரி காப்பாய் நீ

கண்ணிமையைக் காத்திடம்மா காத்யாயனித்தாயே

அங்கங்களனைத்தையுமே ஆதிசக்தி காத்திடம்மா


என்னை நீ ரக்ஷிப்பாய் என் தாயே ரக்ஷிப்பாய்

பூரணி பூமியிலும் மேலே பவானித்தாயும்

திக்குகள் தோறுமே திருபுராம்பா காத்தருள்வாய்

மேல்கீழ் குறுக்கெல்லாம் மூகாம்பா ரக்ஷிப்பாய்

காத்திடம்மா காயத்ரீ கண்ணிமைபோல் காத்திடம்மா

வாராஹி கௌமாரி நாரஸிம்மி ரக்ஷிப்பாய்

சண்டிகை சக்தி கௌரி சங்கடங்கள் தீர்த்திடுவாய்

அஷ்டலக்ஷ்மித் தாயே அமர்ந்திடம்மா என்னுடனே

பிரியா திருந்திடம்மா ப்ரத்யக்ஷம் ஆகிடம்மா

புவனேச்வரித்தாயே புவனமெல்லாம் நிறைந்தவளே


புவனேசி என்றாலே புண்ணியம் பெருகிடுமே

புண்ணிய புருஷர்கள் புவனேசித் திருநாமம்

போற்றிடுவர் போற்றியுமே புண்ணியத்தைப் பெருக்கிடுவர்

திருவடியும் பற்றிடுவர் திருநாமம் ஜெபித்திடுவர்

நாமத்தின் மஹிமையினால் நமனையும் வென்றிடுவர்

ஸகல ஸெளபாக்யமும் ஸாயுஜ்ய முக்தியுமே

தந்திடுவாள் புவனேசி தரித்திரத்தை ஓட்டிடுவாள்

சாந்தியின் வடிவுகொண்ட ஸர்வேசி நமஸ்காரம்

சிரத்தை வடிவான ஸ்ரீமாதா நமஸ்காரம்

காந்தியின் வடிவான காமாக்ஷி நமஸ்காரம்


லக்ஷ்மியின் வடிவான லலிதாம்பா நமஸ்காரம்

விருத்தியின் வடிவான வ்ருத்தாம்பா நமஸ்காரம்

ஸ்மிருதியின் வடிவான ஸ்கந்தமாதா நமஸ்காரம்

தயையின் வடிவான தர்மாம்பா நமஸ்காரம்

துஷ்டியின் வடிவான துக்கஹந்த்ரீ நமஸ்காரம்

மாத்ரு வடிவான மஹாதேவி நமஸ்காரம்

மயக்க மகற்றிடுவாய் மாஹேசி நமஸ்காரம்

தேவியே புவனேசி தினமுன்னை நமஸ்கரிப்பேன்

தீராத வியாதிகளைத் தீர்த்து நீ ரக்ஷிப்பாய்

அகந்தையை ஒழித்திடுவாய் அம்மா புவனேசி


பிறவிப்பிணி தீர்ப்பாய் பிரம்மசக்தித்தாயே கேள்

என் துன்பத்தைத் துடைத்திடவே தீப துர்க்கையாய் வந்திடம்மா

துர்காம்பிகைத் தாயே துரிதத்தை விலக்கிடம்மா

அஷ்டமா ஸித்திகளை அடியேனுக் கருளிடம்மா

மாகாளியாய் வந்து மனமாயையை ஒழித்திடம்மா

சாமுண்டீச்வரியே ஸம்சயத்தைப் போக்கிடம்மா

காளிகா தேவியே காத்திடம்மா என்னையும் நீ

வாராஹியாய் வந்து வழியில் காத்தருள்வாய்

இந்திராணித்தாயே இம்மையில் நீ ரக்ஷிப்பாய்

வைஷ்ணவி மாதாவாய் வந்து வரமருள்வாய்


கௌமாரித் தாயே நீ காத்திடம்மா உள்ளிருந்து

ப்ரஹதாம்பிகைத் தாயே பிரமையையும் போக்கிடுவாய்

துன்பம் துயரத்தைத் துடைத்துக் காப்பாற்றிடவே

காமக் குரோதத்தைக் கலக்கி விரட்டிடவே

சத்துருவாம் பகைவனையும் சம்சய அரக்கனையும்

துஷ்டர்களை விரட்டிடவே வனதுர்கா வந்திடம்மா

பத்துத் திக்கிலுமே பத்ரகாளி காத்திடம்மா

மாதா பாலாம்பிகையே மாயையைப் போக்கிடம்மா

சும்ப நிசும்பனைப் போல் அகந்தையை அழித்திடம்மா

ஸிம்ம வாஹனத்தில் ஜய துர்க்கே வந்திடம்மா


ஜகத் ஜனனி ஜகன்மாதா ஜய புவனேசித்தாயே

மமதையில் மயங்காமல் மாதங்கி காத்திடுவாய்

அனைத்தையும் கொடுக்கும் அன்னபூர்ணேச்வரியே

குறையற்ற கல்வியைக் கொடுத்திடுவாய் கலைவாணி

மஹிஷாசுரனையும் மற்றுமுள்ள தூம்ரனையும்

சண்டனையும் முண்டனையும் ரத்தபீஜாசுரனையும்

அகம்பாவ அசுரர்களை அழித்தவம்மே ஸ்கந்தமாதா

சாமுண்டீஸ்வரியே சந்தோஷமெனக்கருள

சக்தியாய் வந்திடம்மா புவனாம்பிகைத் தாயே

சத்துசித்தின் வடிவான சித்தேச்வரித் தாயே


ஜயந்தி மங்களா காளி ஜயஜய போற்றி போற்றி

பத்ரகாளி கபாலினியே பராபரே போற்றி போற்றி

பூரண புராதனியே புவனேசி போற்றி போற்றி

அகிலாண்டேச்வரியே அன்னையே போற்றி போற்றி

ஆதிபராசக்தியான ஆசோபனா போற்றி

கள்ளம் கபடம் நீக்கும் காமாக்ஷியே போற்றி

கருணைக் கடலான வம்மே காத்யாயனியே போற்றி

ஆயிரம் நாமமுள்ள ஆதி புவனேசி போற்றி

சாந்தி சுகம் தருவாய் ஷண்முகன் தாயே போற்றி

ஹயக்ரீவர் போற்றி ஏத்தும் ஆதிலலிதா போற்றி


சிரத்தா பக்திதரும் சிவகாமி போற்றி போற்றி

கலிதோஷம் அகற்றுவிப்பாய் கல்யாணி போற்றி போற்றி

ஏகாக்ஷரம் தருவாய் வேதவேத்யா போற்றி போற்றி

ஈசனுள் குடியிருக்கும் புவனேசி போற்றி போற்றி

லக்ஷ்மி வாணி போற்றும் லலிதாம்பா போற்றி போற்றி

ஹ்ரீங்கார ரூபமான புவனமாதா போற்றி போற்றி

ஹரிப்ரம்மேந்திரர்கள் அகத்துள்ளோய் போற்றி போற்றி

ஸர்வேசி ஸாக்ஷிரூபே ஸர்வக்ஞே போற்றி போற்றி

ககாரார்த்தா கபாலினி காலஹந்த்ரி போற்றி போற்றி

ஹம்சமந்த்ர மயமான ஹம்ஸவதி போற்றி போற்றி


லகாராக்ய லதாபூஜ்யா ராஜேச்வரி போற்றி போற்றி

ஹ்ரீம் மத்யா ஓங்காரி ஜகன்மாதா போற்றி போற்றி

ஸநகாதி முநித்தேயே ஸச்சிதானந்தே போற்றி போற்றி

கல்யாணீ காதிவித்யே கமலாக்ஷி போற்றி போற்றி

லகாரிணீ லப்தரூபே லப்தசக்தே போற்றி போற்றி

ஹ்ரீங்கார மூர்த்தித் தாயே புவனேசி போற்றி போற்றி

பஞ்ச தசாக்ஷரித்தாயே பவநாசினி போற்றி போற்றி

ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ சீருடனே வந்திடம்மா

ஸிம்ஹாஸனேச்வரியே சீக்கிரமே வந்திடம்மா

சிதக்னிகுண்ட ஸம்பூதா சித்ரூபி வந்திடம்மா


ஸர்வாபரண பூஷிதையே ஸர்வேசி வந்திடம்மா

சிவாயெனப் பெயர்கொண்ட சிந்தாமணி வந்திடம்மா

மங்களத்தைச் செய்திடம்மா மாதா புவனேஸ்வரியே

ப்ரும்ம விஷ்ணு ருத்ரன் ஈசானன் நால்வருடன்

ஸதாசிவனையுமே பீடமாக்கிக் கொண்ட சிவே

ஐவரான மஞ்சத்தில் அமர்ந்து ஜோதியானவளே

கதம்பவனவாஸினியே காமகோடி வரமருள்வாய்

சாக்தப் பிரணவத்தை சடுதியில் தந்திட்டு

கல்மஷங்களைப் போக்கிக் கலிதோஷ மகற்றிடுவாய்

நகக்கண் வழியாக நாரணனைச் சிருஷ்டித்தோய்


ஹரிஹர ப்ரம்மாக்கள் அனன்யமாய்த் தொழுதேத்தும்

தேவர்களும் முக்தர்களும் தினமும் தொழுதேத்தும்

ஸித்தர்களும் பக்தர்களும் ஜன்மமெல்லாம் தொழுதேத்தும்

புவனேஸ்வரித்தாயே போதுமம்மா இப்பிறவி

மறுபிறவி இனிவேண்டாம் மாதா புவனேஸ்வரியே

பிறவிப்பயன் தந்த புவனேஸித் தாயே கேள்

பற்றினேன் திருவடியைப் பற்றறுப்பாய் புவனேசி

புவனேசி உன்நாமம் பிணியறுக்கும் திருநாமம்

என்றுணர்ந்தேன் உன்னருளால் என்தாயே புவனேசி

மூலமந்த்ராத்மிகையே முக்தியும் தந்திடம்மா


பக்தனுக்கு வசமாகும் பார்வதியே வந்திடம்மா

பயத்தைப் போக்கிவிடும் பரதெய்வமே வருவாய்

நிர்மலா நித்யா நிராகுலா வந்திடுவாய்

மோகநாசினித்தாயே மோகத்தைப் போக்கடிப்பாய்

பாபநாசினி தாயே பாபத்தைப் போக்கிடுவாய்

கோபத்தைப் போக்கடிக்கும் க்ரோத சமனித்தாயே

லோபித்தன மகற்றும் லோபநாசினியே கேள்

சந்தேகம் அகற்றுவிக்கும் ஸம்சயக்னீ கேட்டிடம்மா

பாபநாசினி மாயே பந்தத்தைப் போக்கிடம்மா

பேதபுத்தியை அகற்றும் பேதநாசினியே கேள்


மரணபய மகற்றிடுவாய் ம்ருத்யுமதனித் தாயே

சுகத்தைத் தந்தருள்வாய் சுகப்ரதா சுகமருள்வாய்

துராசாரத்தை யோட்டும் துராசாரசமனீ கேள்

ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வ மந்த்ரஸ்வரூபிணியே

மாஹேச்வரீ மஹாதேவி மஹாலக்ஷ்மீ சுந்தரியே

மஹாரூபே மஹாபூஜ்யே மஹாபாதக நாசினியே

பானுமண்டல மத்யஸ்தே பைரவி பகமாலினியே

பத்மாஸனே பகவதி பத்மநாப சகோதரியே

புருஷார்த்த ப்ரதே பூர்ணே போகினி புவவேஸ்வரியே

தத்வாஸனே தத்வமயீ தத்துவத்தை உணர்த்திடுவாய்


குமாரகணநாதாம்பா அஹங்காரம் அகற்றிடுவாய்

ராஜ ராஜேச்வரித் தாயே ராஜ்யலக்ஷ்மீ வரமருள்வாய்

ஸச்சிதாநந்தரூபிணியே ஸதாநந்தம் தந்திடுவாய்

ஸ்ரீசக்ர ராஜநிலயே ஸ்ரீமத் த்ரிபுர சுந்தரியே

ஸ்ரீலலிதாம்பிகைத் தாயே சீக்கிரமே வரமருள்வாய்

வரமருள்வாய் வரமருள்வாய் வந்திப்பேன் புவனேசி

புவனேசி திருவடியைப் புண்ணியத்தால் பற்றிவிட்டேன்

சிக்கெனப் பற்றிவிட்டேன் புவனேசி உன்னடியை

பற்றெல்லாம் அறுத்திடுவாய் பராசக்தி புவனேசி

பிறந்து பிறந்திளைத்தேன் பிறவாவரமருள்வாய்

No comments:

Post a Comment