Saturday 5 January 2019

பரம சிவனாருக்கு சில விளக்கங்கள்

பரம சிவனாருக்கு சில விளக்கங்கள்


சிஷியன்: பரமசிவ வர்த்தமானங்களை அடுத்த வியாசத்தி லருள்வேமென்று நேற்றையத்தினம் நிகழ்த்தி யிருக்கிறீர்கள். ஆனால், அந்தப் பரமசிவ மென்பதைப் பஞ்சகர்த்தாக்களி லொன்றென் றுள்க லாமோ?

குரு: அவர்கட்கு மதீதப்பட்டிருக்கின்ற ஸ்வயம் பிரகாச வஸ்தென்னும் பரப் பிரம்மமாய்  விளங்கிக் கொண்டிருப்பதொன்றே பரமசிவமென் றறியக் கடவாய்! அதீதப்பட்ட தெப்படியென்னில் ரூபமா யுள்ள பிரம விஷ்ணு உருத்திர மகேஸ்வர வென்னும் நான்கு கர்த்தாக்கட்கும், அதன்மேல் ரூபாரூபமாயுள்ள சதாசிவ மூர்த்திக்கும் மேலதாய், அரூபமாயிராநின்ற பிந்து நாதம் சத்தி சிவம் என்ற நான்காகவும் விளங்கு மென்பதாம். இவ் வொன்பதையுமே சிவபேத மென் றுரைக்கப்படும்.
         பதமூர்த்திகளாகிய அனந்தேசுரர், ஸ்ரீகண்டர், காலச்செந்தீ யுருத்திரர்,  ஏகாதசவுருத்திரர், துவாதசவுருத்திரர்,  புத்தியஷ்டகர், கூர்மாண்டர், ஆடகர், சதவுருத்திரர், அஷ்ட மூர்த்திகள், நீலலோகிதர், கங்காளகபாலர், அஸ்வா ரோகணர், அஷ்டபைரவர், வீரபத்திரர் முதலியவர்களையும் உருத்திர ருரு வடைந்த 11 கோடி யுருத்திரர்களையும், அவருரு வந்தடைந்தோர்களை யும்,நாமமுடையோர்களையும், அவர் நாமமுடையோர்களையும், அக்கினி தேவனையும், பதத் தலைவர்களாகிய கபாலிகன், அசன், புதன், வஜ்ரதேகன், பிநாகி, கிருதசாதிபன், உருத்திரன், பிங்கலன், சாந்தன், க்ஷயாந்தகன், பெலவான், அதிபெலவான், மஹா பெலவான், பாசரத்தன், சுவேதன், ஜெயபத்ரன், தீர்க்கபாகு, ஜெலாந்தகன், மேக வாகனன், சௌமியகேசன், ஜடாதரன், ரத்னந்திரன், ஸ்ரீதரன், பிரசாதன், பிரகாசன், வித்யாதிபன், ஈசன், சர்வக்ஞன்,பெலிப்பிரியன், சம்பு, விபு, கணாத்தியக்ஷன், கிரியக்ஷன், திரிலோசனன் முதலியவர்களையும், சிவனாற் சிருஷ்டிக்கப்பட்டவர்களையும், உருத்திரனாற் சிருஷ்டிக்கப்பட்டவர்களையும், அவர்கணங்களையும் ஆகுபெயராற் சிவனெனு நாமம் சென்றபடி யுரைப்ப துண்டு. ஆதலால், ஈண்டு குறிக்கப்பட்ட சிவனெனப்படுவாரெல்லாம் அவ் வதீதச்  சிவனல்லவாம். ஸ்ரீகண்ட ரென்பவர் - பிரகிருதியின் கீழுள்ளகிருத்திய மைந்தையும் நடத்தும் அனந்தேசுரர் வாயிலாகத் தம்மை யதிஷ்டித்து நின்று நடத்தப்படுகிற சிவபெருமானுடைய முத்தொழில்களையும் பிரமா விஷ்ணு காலவுருத்திர ரென்பவர்களை யதிஷ்டித்து நின்று நடத்துபவராயும், பிரம விஷ்ணு முதலிய தேவர் முனிவர் அறுபத்துமூவர் முதலாயினோர்கட்கு நிக்கிரக அநுக்ரகங்களைச் செய்யுங் கர்த்தாவாயும், சைவம் புகுந்து சமயதீக்ஷை பெற்றவர் வழிபடும் மூர்த்தியாயுமுள்ள வுருத்திரராவார். மேலே ரூபாரூப மென்றது உருவும் அருவுமில்லாததாகும். எப்படியேல், ஸ்தூலமுள்ள வொருவன் அபமிருத்தியுவைத்தள்ளற்கான காயகற்பங்களை யுண்டு ஸ்தூலத் தைப் பொன்மயமாக்கி அதன்மேற் பிராணா யாம யோகத்தால் இப்பாலிருந்து பார்க்க அப்பாலுங் தோன்றுங் கண்ணாடி போன்ற பிம்ப பிரகாச தேகியாகி அதன்மேன் மந்திர சித்தியாகிய தவத்தால் தேவ அருளால் மேனவின்ற பிரகாச வடிவமும் இலகுவாய்க் கரைந்து மனிதர் கட்புலனுக் கெட்டாச் சூக்கும வடிவ த்தை  அதாவது தெய்வீக வுடம்பைப் பெற்று ஜனனமரணமும் ஊணுறக்க சஞ்சலமுமின்றி யிருக்குந் தன்மை போலாம். ஆனால், அவ்வுடம்பு கைப்பிடிக் சுகப்படத் தக்கதுதான். சதாசிவ சொரூபம் அப்படியகப்படா.