Tuesday 10 April 2018

அருணாசலேஸ்வரர்

🕉 ஒம் நம சிவாய 🕉 அருணாசலேஸ்வரரை நினைத்தாலே முக்தி நிச்சயம்


சிவபெருமான் அருள்பாலிக்கும் எத்தனையோ தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்களுக்கு எல்லாம் இல்லாத ஒரு மிக முக்கியமான சிறப்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தலத்துக்கு மட்டுமே உண்டு.

அதாவது அருணாசலேஸ்வரரை நீங்கள் திருவண்ணாமலைக்கு வந்துதான் வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனம் கசிந்து, ஆத்மார்த்தமாக இருந்த இடத்தில் இருந்தே அருணாசலேஸ்வரரை நினைத்தாலே போதும், நிச்சயம் முக்தி கிடைக்கும்.

அதனால்தான் அருணாசலேஸ்வரருக்கு நிகர் அருணாசலேஸ்வரர்தான் என்று அனைத்துத் தரப்பினரும் சொல்கிறார்கள். இந்த சிறப்பை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டுமானால், முதலில் அருணாசலேஸ்வரரின் மகிமையை புரிந்து கொள்ள வேண்டும்.

அயோத்தி, மதுரை, மாயாபுரி, காசி, காஞ்சீபுரம், அவநிதி, துவாரகை ஆகிய 7 தலங்களும் முக்தி தரும் தலங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. இந்த 7 தலங்களை ஒரு தட்டிலும், திருவண்ணாமலையை மற்றொரு தட்டிலும் வைத்தால், திருவண்ணாமலை தலமே உயர்ந்த சிறப்புடையது என்பது தெரிய வரும் என்று அருணாசலபுரத்தில் சைவ எல்லப்ப நாவலர் குறிப்பிட்டுள்ளார்.

சிலருக்கு அருணாசலேஸ்வரரை விட உயர்ந்த தலம் ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகம் ஏற்படுவதுண்டு. அத்தகைய எண்ணம் வரவே கூடாதாம். அப்படி எண்ணம் வந்தால் இதுவரை அவர் செய்த தான, தர்ம புண்ணியம் அனைத்தும் கைவிட்டுப் போய் விடும் என்று அருணாசலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடி, முடி காண முடியாதபடி அக்னிப் பிழம்பாகக் காட்சியளித்த சிவபெருமான், தன்னை குறுக்கிக் கொண்டு மலையாகவும், சுயம்பு லிங்கமாகவும் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இதனால் திருவண்ணாமலை சென்று வழிபட்டால் ஈசனை நேரில் பார்த்து வழிபட்டதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

திருவண்ணமலை தலத்தில் உள்ள லிங்கம் சுயம்பு லிங்கமாகும். ராஜகோபுரம் தாண்டி ஒவ்வொரு பிரகாரமாக சென்ற பிறகு கருவறையில் உள்ள மூலவர் திருச்சுற்று வரும். இந்த பிரகாரம் மற்ற பிரகாரங்களை விட சற்று உயரமாக கட்டப்பட்டுள்ளது.

கொடிக்கம்பம் பகுதியில் இருந்து கருவறை பகுதியைப் பார்த் தால் இது உங்களுக்குத் தெரிய வரும். அங்கு முதல் பிரகாரத் துக்குள் நுழையும் வாசலை வேணு உடையான் கதவு என்றும், கர்ப்பக் கிரகத்துக்குள் நுழையும் வாசலை உத்தமச் சோழன் வாசல் என்றும் சொல்கிறார்கள்.

கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் நின்று அருணாசலேஸ்வரரை பார்த்ததுமே, நமது மனம் நம்மிடம் இருக்காது. அண்ணாமலையாரிடம் ஓடிப் போய் ஒட்டிக் கொள்ளும்.

மற்ற ஆலயங்களில் நாம் பார்க்கும் லிங்க மேனிக்கும், இத்தல லிங்க மேனிக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளது. மற்ற தலங்களில் ஆவுடையாரின் மத்தியில் லிங்கத்தை நிலை நிறுத்தி இருப்பார்கள். ஆனால் திருவண்ணாமலையில் அப்படி அல்ல.

அருணாசலேஸ்வர் அடிமுடி காண முடியாதபடி அற்புதம் செய்தவர் என்பதால் சுயம்பு லிங்கத்தை சுற்றி ஆவுடையாரை அமைத்துள்ளனர். அதாவது ஆவுடையாரின் ஒரு பகுதி பிரம்ம பீட மாகவும், மற்றொரு பகுதி விஷ்ணு பீடமாகவும் உருவாக்கப் பட்டுள்ளது.

அந்த இரு பகுதியையும் ஒன்றாக சேர்த்து ஆவுடையார் அமைத்துள்ளனர். பெரும்பாலும் லிங்க ஆவுடையார் சதுர வடிவில் இருக்கும். ஆனால் திருவண்ணாமலையில் ஆவுடையார் வட்ட வடிவில் இருக்கிறது.

ஆகம விதிப்படி அண்ணாமலையார் லிங்கத்தின் ஒரு பகுதி பிரம்ம பீடமாகவும், மற்றொரு பகுதி விஷ்ணு பீடமாகவும், இன்னொரு பகுதி சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது. எனவே கருவறை அண்ணாமலையானை வழிபட்டாலே பிரம்மா, விஷ்ணு, சக்தி ஆகியோரையும் சேர்த்து வழிபட்ட பலன்கள் கிடைக்கும். இந்த அரிய தத்துவத்தை நினைவில் வைத்துக் கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டால், நிச்சயம் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

மற்ற தலங்களில் லிங்கத்தையும் ஆவுடையாரையும் அஷ்ட பந்தனத்தில் நிலைநிறுத்தி இருப்பார்கள். ஆனால் இங்கு ருத்ரபாகம் சொர்ணபந்தனத்துடன் காணப்படுகிறது.

கருவறைக்குள் சென்று பூஜை செய்யும் எல்லா சிவாச்சார் யார்களும் இந்த சுயம்பு லிங்கத்தைத் தொட்டு விட முடியாது. தீட்சைப் பெற்று பட்டம் மற்றும் இளவரசு பட்டம் எனும் அந்தஸ்து பெற்றவர்கள் மடடுமே இந்த லிங்கத்தை தொட்டு அபிஷேகம் செய்ய முடியும்.

இநத லிங்கமேனி உச்சிப் பகுதியில் சிறு வெட்டுக் காயம் போன்று வடு உள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை. உளியால் செதுக்கப்படாத லிங்கம் என்பதால் அது சொர, சொரப்பாக காணப்படுகிறது. எதிர்த் திசையில் தடவினால் கையை கிழித்து விடும் என்று தொட்டு அபிஷேகம் செய்யும் சிவாச்சார்யார் ஒருவர் தெரிவித்தார்.

சிவாச்சார்யார்களில் “ஸ்தானீகம்” என்று ஒரு பிரிவினர் உள்ளனர். இவர்களது பணியே அண்ணாமலையாரை அலங்காரம் செய்வதுதான். இவர்கள் பூஜை எதுவும் செய்ய மாட்டார்கள்.

அண்ணாமலையாருக்கு தினமும் 6 தடவை அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்வார்கள். காலையில் திருமஞ்சனநீர் எடுத்து வந்து கொடி மரம் முன்புள்ள படியை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வார்கள். பிறகு பள்ளியறை எழுச்சி நடைபெறும்.

ஹோமம் முடிந்து சூரிய, சந்திர, நந்தி துவார பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு காலை 5.30 மணிக்கு முதல் அபிஷேகம் நடைபெறும். திருவண்ணாமலை ஆலயத்துக்குள் 12 கிணறுகள் உள்ளன. அதில் மூலவருக்குரிய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்கள்.

மாவுப்பொடி, மஞ்சள், அபிஷேகப் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு நறுமணப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். சுமார் 1 மணி நேரம் இந்த அபிஷேகம் நடைபெறும்.

பிறகு லிங்கத்துக்கு தங்க கவசம், வெள்ளிக் கவசம் சாத்தி அலங்காரம் செய்வார்கள். ஒருவித சாமந்தி தவிர மற்ற அனைத்து வாசனைப் பூக்களையும் கொண்டு ஈசனை அலங்கரிப் பார்கள்.

இதையடுத்து ஆராதனை நடைபெறும். ரத ஆரத்தி, திரிநேத்திர தீபம், பஞ்ச தட்டு தீபம், பூர்ணகும்பம், கண்ணாடி, குடை, விசிறி, சாமரம் என்று அண்ணா மலையாருக்கு 16 வகை தீபம் மற்றும் பூஜைகள் நடத்துவார்கள்.

ஆனால் அண்ணா மலையாருக்கு படைக்கப்படும் நைவேத்தியம் மட்டும் நேரத்துக்கு நேரம் மாறுபடும். காலை-வெண் பொங்கல், காலசந்தி பூஜை- புளி சாதம், சர்க்கரைப் பொங்கல், உச்சிக்காலம்- வடை பாயாசத்துடன் குழி தாம்பளத்தில் அன்னம். சாயரட்சை-புளி சாதம், வடை, சுண்டல், இரண்டாம் சாமம்-புளி சாதம், அர்த்தஜாமம்- மிளகு சீரக சாதம், (செரிமானத்துக்காக மிளகு சேர்க்கிறார்கள்), பள்ளியறை-பால், அடை, அப்பம்.

அணணாமலையாருக்கு நைவேத்தியம் படைக்கப்படுவதை பக்தர்கள் யாரும் பார்க்கக் கூடாது என்பது ஐதீகமாகும். அதுபோல மூலவரை படம் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1965-ம் ஆண்டு புகைப்பட கலைஞர் ஒருவர் தடையை மீறி மூலவரைப் படம் பிடித்தார். மறுநாள் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

ஆனால் ரமணர் ஆசிரமத்தில் அண்ணாமலையார் கருவறை படம் ஒன்று உள்ளது. அந்த படம் எப்போது, யாரால் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

அண்ணாமலையார் முன்பு ஆணவம், அகந்தையுடன் தலைக்கனத்துடன் நடந்து கொண்டால் அவ்வளவுதான், அண்ணாமலையார் தமது திருவிளையாடலைக் காட்டி விடுவார். ஆணவத்தோடு நடந்து கொள்பவர்கள் அட்ரஸ் இல்லாமல் போய் விடுவார்கள்.

நிறைய பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்கள், இத்தலத்துக்குள் வந்து முடிசூடி கொண்டாலும், அண்ணாமலையார் சன்னதியில் பதவி ஏற்பு விழாவை நடத்துவதில்லை. விநாயகர் சன்னதி முன்பு நின்றுதான் முடி சூட்டிக் கொள்வார்கள்.

அவ்வளவு ஏன்... அண்ணாமலையார் சன்னதியில் அமர்ந்து திருமணம் கூட செய்து கொள்ள மாட்டார்கள். இன்றும் இது நடைமுறையில் உள்ளது.

திருமணம் உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளும் உண்ணாமுலை அம்மன் சன்னதியில்தான் நடைபெறும். அந்த காலத்தில் அண்ணாமலையார் முன்பு நின்று பஞ்சாங்கம் படிப்பதை வழக்கத் தில் வைத்திருந்தனர். அதுபோல ஒவ்வொரு சுவாமிக்கும் பூஜை நடக்கும்போது அதிர்வேட்டு போடுவார்கள். இத்தகைய பழக்கம் எல்லாம் இப்போது கடைபிடிக்கப்படவில்லை.

ஆனால் சில பழக்கங்கள் உறுதியாக கடை பிடிக்கப்படுகின்றன. அதில் ஒன்று பள்ளியறைக்கு அம்மன் செல்வது. மற்ற சிவ தலங்களில் அம்மனைத் தேடிதான் ஈசன் செல்வார். ஆனால் இங்கு ஈசனைத் தேடி உண்ணாமுலை அம்மன், “வைபோக நாயகி” என்ற பெயரில் செல்கிறாள்.

சுவாமி திருமேனி ரூபமாக பள்ளியறைக்கு செல்ல மாட்டார். மகாமேரு சக்கர வடிவத்தில்தான் செல்வார். காலையில் அந்த மகாமேடு பள்ளியறையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கருவறை வெளிமேடையில் வைக்கப்படும்.

மற்ற தலங்களில் ஈசனுக்கு வலது பக்கத்தில் அம்பாள் வீற்றிருப்பாள். ஆனால் திருவண்ணாமலையில் மட்டும் இடது புறத்தில் அம்பாள் உள்ளார். தவம் இருந்து ஈசனின் உடலில் இடது பாகத்தை சரி பாதியாக பெற்றதால் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் அண்ணாமலையாருக்கு இடது பக்கத்தில் உள்ளது.  நண்பரின் பதிவு. சிவஅன்பர்களே நாம் செய்யும் செயலில் சிவம் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள். வாழ்க மெய்அன்பர்கள் வளர்க அண்ணாமலையார் புகழ். அன்பே சிவம். சிவாயநம அருணாச்சலம்

 நமசிவாய வாழ்க