Tuesday 17 April 2018

கழுகுமலை மிளகாய்பழ சித்தர்

🍀கழுகுமலை மிளகாய்பழ சித்தர் ஜீவசமாதி🍀

நம் நாட்டில் சித்தர்கள் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள். சிலர் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து மறைந்தும் போகிறார்கள். சிலர்  காலம் காலமாய் பேசப்படுகிறார்கள். சிலர் நிறைய அற்புதங்களை ,   சித்து விளையாட்டுகளை செய்து காட்டுவார்கள். சிலர் அற்புதமான மருத்துவம் அறிந்தவர்களாய் இருப்பார்கள். சித்தர்கள் திருமூலர் போல்  கூடு விட்டுப் பாயும் கலை அறிந்தவர்களாக இருப்பார்கள். திருமூலருக்குத் திருவாவடுதுறையில் ஜீவசமாதி உள்ளது.  வருடம் ஒரு பாடலாய் மூவாயிரம் வருடம் வாழ்ந்து மூவாயிரம் பாடல் அடங்கிய திருமந்திரம் தந்தார் நமக்கு.

நமக்கு தெரிந்த சித்தர்கள் 18 . எங்கள் ஊரில்  பெரிய கோவிலில்(மயூரநாதர்) குதம்பைச் சித்தர் ஜீவசமாதியில் இருக்கிறார்.

நான் இங்கு சொல்லப்போகும் சித்தர் கழுகுமலையில் வாழ்ந்து சித்தியடைந்த மிளகாய்ப்பழசித்தர் பற்றி.

கிரிவலப்பாதையில் உள்ள அந்த சித்தரின் சமாதிக்கு சென்ற பங்குனி  உத்திரநாள் அன்று  (13/4/2014) போய் இருந்தோம்.

250 வருடத்திற்கு முன்பு அவர் ஜீவசமாதி அடைந்தார் என்கிறார்கள். புரட்டாசி அமாவாசை அன்று அவரது குருபூஜை கொண்டாடப்படுகிறது என்றார்கள்.
அவர் மேல் பக்தி உள்ளவர்களின்  கண்களுக்கு இன்னும் தெரிகிறார் என்றார்கள்.

கழுகாசல மூர்த்தி கோவில் யானை  , சித்தர் கோவிலின் வாசலின் அருகில் வரும் போது முட்டி போட்டு  வணங்கிவிட்டுத்தான் செல்லுமாம். அவர் மேல் நம்பிக்கை வைத்து  வேண்டுதல்களை வைத்து வணங்கிச் செல்பவர்கள் வேண்டுதல் நிறைவேறிய உடன் வந்து தன்னால் முடிந்த காணிக்கைகளை செய்வார்களாம்.

நோய் உற்ற போது மிளகாயொன்றை  எடுத்து சித்தரை மனதில் நினைத்துக் கொண்டு விபூதியை பூசிக் கொண்டு மிளகாயை தண்ணீரில் போட்டு விட்டு பின் மறுநாள்  சித்தரை மனதில் நினைத்து நோய் குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு குடித்தால் நோய் குண்மாகும் என்று சொல்கிறார்.
-இவை எல்லாம் கோவிலைப்பார்த்துக் கொள்ளும் அம்மா சொன்னவை.

சித்தருக்குப் பூஜை செய்கிறார்கள்

விளக்கின் ஒளி வெள்ளத்தில் சித்தர்

தலைமுறை தலைமுறையாக இவர்கள் குடும்பம் தான் கோவிலைப் பார்த்துக் கொள்கிறார்களாம் ,  அம்மா சித்தரைப்பற்றி சொல்கிறார்கள்.

கோவிலைப்பற்றி விபரங்களை சொல்லும் தாயும் மகனும்

உள் வாசலில் வாகனங்களை வைக்காதீர்கள் என்று கொட்டை எழுத்தில் எழுதினாலும் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.(பூசாரியின் வாகனம் போலிருக்கிறது)

ஜீவசமாதியின் முகப்பு வாசல்

பூவரசம் பூ

வானைத் தொடும் வேப்பமரம், பூவரசு மரம்- சமாதி அருகில்

வேப்பமர நிழலில் கல் மண்டபம்  - இன்றும் இந்த மண்டபத்தில் சித்தர் வந்து அமர்வதையும் அதன் பக்கத்தில் நடந்து போவதையும் பார்த்ததாய் கோவிலைப்பார்த்துக் கொள்ளும் அம்மா சொல்கிறார்கள்.

மிளகாய்ப் பழ சித்தர் கழுகுமலைப்பகுதியில் வாழ்ந்து இருக்கிறார் . அவருடைய உணவு மிளகாய்ப் பழங்கள் மட்டும் தானாம். தினம் காடுகளில் மலைகளில் சுற்றி வருவாராம் மிளகாய்ப் பழம் சாப்பிட்டு விட்டு தவத்தில் அமர்ந்து இருப்பாராம்.

சிறுவயதில் வீட்டில் மிளகாய்ப் பழம் சாப்பிடுவாராம். சித்தரின் பெற்றோர்கள் ஏன் இப்படி சாப்பிடுகிறாய் என்று கேட்டவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாராம். அது முதல், மலைதான் அவரின் வீடாய் மாறி விட்டது.
சித்தர் சமாதியைப் பார்த்துக் கொள்ளும் வயதான பெண்மணி கூறிய செய்திகள் இவை. அவரும் அவர்மகனும் நமக்கு செய்திகள் சொன்னார்கள்.  விபூதி, மிளகாய் பிரசாதமாய் கொடுக்கப்பட்டது.

கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் வாங்கி கொடுங்கள் என்றார்கள் . நாங்கள் எண்ணெய் வாங்க கடைக்கு போக வேண்டுமே அதனால் அவர்களிடம் பணம் கொடுத்து விட்டோம்.

உங்கள் வேண்டுதல்களை சொல்லிச் செல்லுங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி வைப்பார் மிளகாய்ப்பழ சித்தர். அடுத்தமுறை வரும் போது உங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு மகிழ்ச்சியாக வந்து வணங்கி செல்லுங்கள் என்றார்கள். எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?    என்று கேட்டுக் கொண்டார்கள். எல்லோர் நலனுக்கும் சித்தரிடம் சொல்லி  பூஜை செய்தார்கள்.
நாங்களும் எல்லோரும் நலமாக இருக்க வேண்டி வந்தோம்