Sunday 3 March 2019

ஶ்ரீ_காஞ்சி_காமாக்ஷி_அகவல்

காமாக்ஷி அகவல்
#ஶ்ரீ_காஞ்சி_காமாக்ஷி_அகவல்:

--- விக்னேஷ் வராஹன்

ஆனந்தாமயமான ஸ்ரீபுரத்தில் சிந்தாமணி க்ருஹத்தில் பிந்து த்ரிகோண மத்யத்தில் அமர்ந்து அனைத்து அகிலங்களையும் ஆளும் பரமேஸ்வரி பரம கருணாரூபிணி
ஜகத்ஜனனி அன்னை ஆதிபராசக்தி
ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரசுந்தரி இப்புவியில் ஸ்ரீ காமாக்ஷி தேவியாக நமக்காக இறங்கிவந்து அருள்கிறாள்.

அப்படிப்பட்ட அபார கருணாரூபிணியான அன்னை காமாக்ஷியை போற்றி பெயர் தெரியாத ஒருவர் எழுதியது தான் இந்த அகவல்.

ஒளவையின் விநாயகர் அகவல் போலவே இந்த செய்யுளும் மிகவும் சக்தி வாய்ந்தது.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா இதற்கு ஸ்ரீமுகம் கொடுத்துள்ளார். இதை பாராயணம் செய்வதால் அம்பிகை வேத மந்திர பாராயணத்தை காட்டிலும் பரம ஸந்தோஷம் அடைந்து நமக்கு வேண்டியதை எல்லாம் கொடுத்து அனுக்ரஹம் பண்ணுவதாக கூறுகிறார்.

காமாக்ஷி அகவலுடன் காமாக்ஷி விருத்தம் சேர்த்து படிப்பது விசேஷம் என்று ஸ்ரீ மஹா பெரியவா கூறுவார்.

இதற்கு சான்றாக ஒரு உண்மை ஸம்பவம் ஒன்று உள்ளது.

ஒருமுறை ஒரு ஸுமங்கலி பெண்மணி மஹா பெரியவாளை தரிசனம் செய்ய வந்தார்கள்.

பெண்மணி : பெரியவா நமஸ்காரம். எங்காதுல ஒரே கஷ்ட ஜீவனம். எனக்கு என்ன பண்ணன்னு தெரியலை. அம்பாளை பிரார்த்தனை பண்ணலாம்ன்னு வந்தேன். ஆனால் எனக்கு எந்த ஸ்லோகமும் தெரியாது. நீங்க தான் பெரியவா அனுக்ரஹம் பண்ணனும்.

பெரியவா: அதனால என்ன. உனக்கு தமிழ் நல்லா படிக்க தெரியுமோல்லையோ?

பெண்மணி: எனக்கு தமிழ் படிக்க தெரியும் பெரியவா.

பெரியவா: பின்ன என்ன. நீ தினமும் காமாக்ஷியை பிரார்த்தனை பண்ணி காமாக்ஷி அகவலும் காமாக்ஷி விருத்தமும் பாராயணம் பண்ணு.

அவள் தாய் அல்லவா. பெற்ற பிள்ளை அழுவதை அவள் எப்படி தாங்குவாள்.
எல்லாத்தையும் அவள் பார்த்துப்பாள்.

பெண்மணி: நிச்சயமா பாராயணம் பண்றேன் பெரியவா.

பின்னாட்களில் அப்பெண்மணி மற்றும் அவள் குடும்பத்தார் அம்பிகையின் அருளால் சீரும்சிறப்புமாக வாழ்ந்தார்கள் என்பது பலருக்கு தெரிந்ததே.

காமாக்ஷிக்கு உகந்த மாசி மாதம் முழுவதும் இவ்விரண்டையும் பாராயணம் செய்தல் விசேஷம். குறைந்தபக்ஷம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பாராயணம் செய்தல் நன்று.

ஏனெனில் மாசி - பங்குனியில்
வரும் காரடையான் நோன்பிற்க்கு காமாக்ஷி வ்ரதம் என்றே பெயர்.

காமாக்ஷி அகவல் மற்றும் காமாக்ஷி விருத்தம் செய்யுள்கள்.

#ஸ்ரீ_காமாக்ஷி_அகவல்

#காப்பு:

ஜகத்திருள் நீக்கும் காஞ்சி க்ஷேத்ரம் தனில்
மகத்துவம் மிகுந்த சக்தி மனோன்மனீ காமாக்ஷி தன்மேல்
அகத்திருள் நீங்கும் வண்ணம் ஓர் அகவற் பாமலை ஓத
முகத்திருள் நீக்கும் யானை முளரி மாமலர்த்தாள் காப்பே

#அகவல்:

ஓம் நமோ பகவதி உத்தமி கவுரி
சாம்பவி மனோன்மனீ சங்கரி பயங்கரி
வெண்தலை மாலை விமலி எண்தோளி
பஞ்சாக்ஷரத்தி பரப்ரம்மசொரூபீ
எஞ்சாகரத்தி இன்பத் தாண்டவீ
ப்ரணவ சொரூபம் பெற்றிடும் வீரி
சரணாம்புயத்தி ஸர்வஸம்ஹாரி
தத்துவப் பொருளாய் தழைத்த நன்மணி
அத்தி முகவனை அளித்த கண்மணி
சிறுவிதி மகவாய் சிறந்த சிவமணி

ஒருதனி முதலாய் ஓங்கும் தவமணி
வரைமகள் எனவே வளர்ந்த நவமணி
பரையென நாமம் பகர்ந்தவர் பவப்பிணி
அகற்றி ஆட்கொள்ளும் அற்புத ஒளியே
சிவ சிவ சிவ சிவ சிவசங்கரியே
நவவடிவாகிய நாராயணியே
ஆதிஅனாதியும் அந்தமும் நீயே
ஜோதி சுடராய் சூழ்ந்தவள் நீயே
தந்தை தாயுமாய் தழைத்தவள் நீயே
இடை பிங்கலையில் இருப்பவள் நீயே

கடை சுழுமுனையில் கலப்பவள் நீயே
முச்சுடராகி முளைத்தவள் நீயே
உச்சுக்கு வெளியில் உலவுபவள் நீயே
மூலத்தில் நின்ற முதல்வியும் நீயே
ஜாலங்கள் புரியும் சமர்த்தியும் நீயே
ஓரெழுத்தான் ஒலிவெளி நீயே
ஈரெழுத்தான் ஈச்வரி நீயே
மூவெழுத்தான முக்கண்ணி நீயே
நாலெழுத்தான நாயகி நீயே
அஞ்செழுத்தான அம்மணி நீயே

பஞ்சக்ருத்தியம் படைத்தவள் நீயே
ஐவராம் கர்த்தர்கு அன்னையும் நீயே
ஐயாறு மூவேழு அக்ஷரீ நீயே
அருவுருவான அற்புதம் நீயே
குருவாய் விளங்கும் கோலமும் நீயே
சின்மயமாக செறிந்தவள் நீயே
தன்மயமாக தனித்தவள் நீயே
வேதாந்தமான விளைவும் நீயே
நாதாந்தமான நவரசம் நீயே
வேற்றுமை இல்லா வித்தகி நீயே

நாற்பத்து முக்கோண நாயகி நீயே
அரனொடு அரியாய் அமர்ந்தவள் நீயே
பரனொடு பரையாய் பதிந்தவள் நீயே
மோன பாத்திர முடிவும் நீயே
ஞான க்ஷேத்திர நவநிதி நீயே
நடுநிலையான நாயகம் நீயே
கொடுவினை மாற்றும் குண்டலி நீயே
சுத்த சிவமாய் ஜொலிப்பவள் நீயே
சத்தி சிவமாய் சார்ந்தவள் நீயே
சுகஸ்வரூபீ சூட்சியும் நீயே

அகண்டபூரணம் ஆனவள் நீயே
வேலனை ஈன்ற விளக்கொளி நீயே
வாலைத் திருமகள் வாணியும் நீயே
கன்னிகையாம் சிவகாமியும் நீயே
அன்னையாம் வடிவம்மையும் நீயே
ஆட்சி நீலாயதாக்ஷியும் நீயே
சூட்சி சிவகமலாக்ஷியும் நீயே
நாரணியாம் மீனாக்ஷியும் நீயே
ஆரணியாம் விசாலாக்ஷியும் நீயே
கன்னிகள் பத்திரகாளியும் நீயே

மன்னும் துர்கை மாரியும் நீயே
எந்திர வித்தைகள் எல்லாம் நீயே
மந்திர ஸ்வரூப மௌலியும் நீயே
மாய குண்டலி மனோன்மனீ நீயே
ஆயிரம் நாமம் ஆனவள் நீயே
ஆனந்த வடிவாய் அமைந்தவள் நீயே
மனவாக்கடங்கா மகமாயி நீயே
ஸர்வ ஸம்ஹார சக்தியும் நீயே
ஸர்வானுக்ரஹ ஸமர்த்தியும் நீயே
எண்ணும் மனதில் இருப்பவள் நீயே

மண்ணுயிர்க்குயிராய் மருவிய தாயே
அகிலாண்டவல்லி அம்பிகையாளே
மஹிமே சேர் கச்சி மாநகராளே
கனகம் பொழி திருக்காமக்கோட்டத்தி
மனங்கவர் காயத்ரி மாமண்டபத்தி
ஓங்கார கோணத்தில் ஒளிர் பத்மாஸனத்தி
நீங்காத நீல நிறத்தி சதுர்புஜத்தி
காணரும் பிலாகாச பீடத்தி கன்னி
சேனுயர் துவஜ சிகர கோபுரத்தி
தகவுறு தர்ம ஸந்தான ஸ்தம்பத்தி

திகழறத்தி பஞ்ச தீர்த்த பூதத்தி
வெற்றி ஸ்தம்பம் விளங்குமாலயத்தி
பற்றற்றவர் பணி பொற்பதத்தி
தலம் புகழ் சங்கராசாரியர் என்னும்
வலம் புரிந்தேத்தி வன்மையோ இன்னும்
ஒருபுடை மருவ உளம் மகிழ் நீலி
திருமகள் கலைமகள் தினம் தொழும் சூலி
காமக்கண்ணி கவுரி கமலாக்ஷி
தாமதமின்றி தந்தருள் காக்ஷி
ஆதரவின்ற அம்மணி உன்றன்

பாதக் கமலம் பணிந்தனன் என்றன்
வேதனை தீர்த்து இவ்வேளை வந்தாதரி
மாதரி வீரி மயான ருத்ரி
சகலரும் போற்றி சந்தோஷமுற்று
சகல சித்தியும் சக்தியும் பெற்று
பக்குவமாக நின் பதமலர் போற்றிட
சக்ரேச்வரியே ஸந்ததம் காப்பாய்
போற்றி போற்றி பொன்னடி போற்றி
ஏத்தி ஏத்தி இறையடி தொழுவாம்
காத்தருள்வாயே காமாக்ஷித் தாயே
காத்தருள்வாயே காமாக்ஷித் தாயே

#ஸ்ரீ_காமாக்ஷி_விருத்தம்

மங்களஞ்சேர் காஞ்சிநகர் மன்னுகாமாட்சி மிசை
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே -- திங்கட்
புயமருவும் பணியனியும் பரமனுளந்தனின் மகிழும்
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.

#விருத்தம்:

சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியாய் நின்ற உமையே,
சுக்ர வாரத்திலுனை கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்,
சிந்தைதனிலுன் பாதந் தன்னையே தொழுபவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்,
ஜெகமெலா முன் மாய்கை புகழவென்னா லாமோ
சிறியனால் முடிந்திடாது.
சொந்தவுன் மைந்தனா யெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடன் உன்னதம்மா,
சிவ சிவ மஹேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன் மணியுநீ
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 1 ]

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்,
பச்சை வைடூரியம் மிச்சையா இழைத்திட்ட
பாதச் சிலம்பினொலியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும்,
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும்,
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையிற் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்
அத்திவரதன் தங்கை சக்தி சிவரூபத்தை
யடியனாற் சொல்ல திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 2 ]

கெதியாக வுந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்,கொடுமையா
யென்மீதில் வறுமையாய் வைத்து நீ
குழப்பமா யிருப்பதேனோ,

சதிகாரியென்று நானறியாம லுந்தனைச்
சதமாக நம்பி னேனே,
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதக னக் கில்லையோ?
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுங் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே,
மாயனிட தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுநா னாசையால் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள் வாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 3 ]

பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்தும் வளர்ந்துநான்
பேரான ஸ்தலமு மறியேன்,
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
போற்றிக் கொண்டாடி யறியேன்
வாமியென் றுன்னைச் சிவகாமி யென்றே சொல்லி
வாயினாற் பாடியறியேன்.
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
வணங்கியொரு நாளுமறியேன்,
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு
சாஷ்டாங்க தெண்டனிட்டறியேன்,
ஆமிந்த பூமியிலடியனைப் போல் மூடன்
ஆச்சிநீ கண்ட துண்டோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 4 ]

பெற்றதா யென்றுன்னை மெத்தவும் நம்பிநான்
பிரியமா யிருந்தே னம்மா
பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன்
புருஷனை மறந்தே னம்மா,
பக்தனாயிருந்து உன் சித்தமும் இரங்காமல்
பாராமுகம் பார்த்திருந்தால்
பாலன் யானெப்படி விசனமில் லாமலே
பாங்குட னிருப்பதம்மா,
இத்தனை மோசங்க ளாகாது ஆகாது
இது தர்மமல் லவம்மா,
எந்தனை ரக்ஷிக்க சிந்தனை களில்லையோ
யிது நீதி யல்ல வம்மா
அத்தி முகனாசையா லிப்புத்திரனை மறந்தாயோ
அதை யெனக்கருள் புரிகுவாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 5 ]

மாயவன் தங்கை நீ மரகத வல்லிநீ
மணிமந்திர காரிநீயே
மாயசொ ரூபிநீ மகேஸ்வரியு மானநீ
மலையரை யன்மக ளானநீ
தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ
தயாநிதி விசாலாட்சிநீ,
தாரணியில் பெயர் பெற்ற பெரிய நாயகியும்நீ
சரவணனை யீன்ற வளும்நீ
பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில்
பேறுபெற வளர்ந்த வளும்நீ,
பிரணவசொரூபிநீ பிரசன்ன வல்லிநீ
பிரியவுண் ணாமுலையுநீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 6 ]

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ,
பேய்பிள்ளை யானாலும் தான் பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
கதறி நானழுத குரலில்,
கடுகதனிலெட்டிலொரு கூறுவதி லாகிலுன்
காதி னில் நுழைந்த தில்லையோ,
இல்லாத வன் மங்களென் மீதிலேனம்மா
இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது
இதுதரும மல்ல வம்மா,
எல்லாரு முன்னையே சொல்லியே யேசுவார்
அது நீதியல்ல வம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 7 ]

முன்னையோர் சென்மாந்திர மேனென்ன பாவங்கள்
இம் மூடன் செய்தா னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டி
மோசங்கள் பண்ணினேனோ,
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா,
ஏழைநான் செய்தபிழை தாய்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா.
சின்னங்களாகாது ஜெயமில்லையோ தாயே
சிறுநாண மாகுதம்மா,
சிந்தனைக ளென்மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக வுன்
அடியேன் முன்வந்து நிற்பாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 8 ]

எந்தனைப் போலவே செனன மெடுத்தோர்கள்
இன்பமாய் வாழ்ந் திருக்க,
யான் செய்த பாவமோ யித்தனை வறுமையினுள்
உன்னடியேன் தவிப்பதம்மா,
உன்னையே துணையென் றுறுதியாய் நம்பினேன்
உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறுதுணை யினியாரை யுங்காணேன்
உலகந்தனி லெந்தனுக்கு
பிள்ளை யென்றெண்ணி நீ சொல்லாம லென்வறுமை
போக்கடித் தென்னைரட்சி,
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
பிரியமாய்க் காத்திடம்மா,
அன்னையே யின்னமுன்ன டியேனை ரட்சிக்க
அட்டி செய்யா தேயம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 9 ]

பாரதனிலுள்ளவும் பக்கியத்தோடென்னைப்
பாங்குட னிரட்சிக்கவும்
பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
பாலருக் கருள் புரியவும்,
சீர்பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலிய னணு காமலும்,
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,
பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமற்
பிரியமாய்க் காத்திடம்மா,
பிரியமாயுன்மீதில் சிறுயனான் சொன்னகவி
பிழைகளைப் பொறுத்து ரட்சி,
ஆறதனில் மணல் குவித் தரியபூசை செய்தவென்
னம்மையேகாம்பரி நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 10 ]

எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா,
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனி ஜெனன் மெடுத் திடாமல்,
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பி னேனே,
முன்பின்னுந் தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக் காதே யம்மா,
வெற்றி பெற வுன்மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்,
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனா ரேசப் போறார்.
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத்தீரு மம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே.