Wednesday, 30 August 2017

அகத்திய முனிவர் அருளிச் செய்த அடுக்குநிலை போதம்

யாரை குரு என்று அழைக்கலாம்???

யாரை குருவாக ஏற்றுக்கொள்ளலாம்?? என்று
அகத்திய முனிவர் அருளிச் செய்த
அடுக்குநிலை போதம் என்ற நூலை
பார்ப்போம்.

(1)சொல் பிறந்தவிடமெங்கே முப்பா ழெங்கே!
துவார பாலரெங்கே முதற் பாழெங்கே!
நல்ல சங்கு நதியெங்கே வைகுந்த மெங்கே!
நாரணனும் ஆலிலை மேல் படுத்ததெங்கே!
அல்லல் படும் ஐம்பூத மொடுக்க மெங்கே!
ஆறைந்து யிதழ்ரெண்டு முளைத்த தெங்கே!
சொல்ல வல்லாருண்டானா லவரை நாமும்!
தொழுது குருவெனப் பணிந்து வணங்கலாமே!

(2)உந்தியெனும் நிலையெங்கும் அறுகோண
மெங்கே!
ஓங்கார நிலையெங்கே உற்றவி டமுமெங்கே!
மந்திரமுஞ் சாஸ்திரமும் பிறந்த தெங்கே!
மறை நாலும் விரித்த வயன் தானுமெங்கே!
முந்தி வரும் கணபதியும் பிறந்த தெங்கே!
முக்கோண முனை யெங்கே அடிதா னெங்கே!
இந்தவகைப் பொருளறிந்து சொல்வார் தம்மை!
இறைவனென்றே கருதி யியம் பலாமே!

(3)பற்பதத்தில் பொங்கி வரும் வழிதானெங்கே!
பரிந்து முறை கொண்டு நின்ற அறிவுமெங்கே!
உற்பனமாங் கருநின்று விளைந்த தெங்கே!
யொருபாதம் தூக்கி நின்ற வடையாள மெங்கே!
தற்பரமா யாகிநின்ற நிலைதா னெங்கே!
சர்வ வுயிராய் எடுத்த சிவனு மெங்கே!
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர்
தம்மை
இறைவ னென்றே கருதி யியம்பலாமே!

(4)அடிமுடியும் நடுவான நிலையு மெங்கே!
அறுசுவையும் கொண்டொ ழித்தவிடமு
மெங்கே!
வடிவான வைந்தலை மாணிக்க மெங்கே!
வரையான வூமை யென்னும் எழுத்து
மெங்கே!
இடமாகஆடி நின்ற பாத மெங்கே!
அடைவாயிப் பொருளறிந்து சொல்வார் தம்மை
அடி தொழுது குருவென்று நம்பலாமே!

(5)சற்குருவும் சந்நிதியு மான தெங்கே!
சாகாத காலெங்கே வேகாத் தலையுமெங்கே!
முப் பொருளுமொரு பொருளாய் நின்ற தெங்கே!
முனையெங்கே தலையெங்கே முகமும்
மெங்கே!
நற்கமலமா யிரத்தெட் டிதழு மெங்கே!
நாலு கையொரு பாதமான தெங்கே!
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர்
தம்மை
இறைவ னென்றே கருதி யியம்பலாமே!

(6)நஞ்சணிந்தான் முகந்தா னைந்து மெங்கே!
ஞானக் கண் மற்றக்கண் மூன்று மெங்கே!
அஞ்ச வுயிர்தனைக் கெடுக்கும் யேமனெங்கே!
ஆயிரங் கண்ணி ந்திரனார் தாமுமெங்கே!
பஞ்சறிவால் நின்ற பராசக்தி யெங்கே!
பதினாலு லோகமெனு மதுதா னெங்கே!
வஞ்சமற பொருளறிந்து சொல் வாராகில்
வணங்கி குருபர னென்று வாழ்த்தலாமே!

(7)நகை பிறந்த விடமெங்கே!கோபமெங்கே!
நர மேழா நரகமான தெங்கே!
திகைத்து மறந்திடமெங்கே நினைப்பு மெங்கே!
தீராத குறைவந்து சூழ்ந்த தெங்கே!
பகைத்த விடந்தா னெங்கே!ஒழுக்கமெங்கே!
பகலிரவு யிருந்த இடந்தா னெங்கே!
வகை பொருளை அறிந்துரைக்கும்
பெரியோர்தம்மை
வணங்கி குருபர னென்று வாழ்த்தலாமே!

(8)ஆறுகால் முகமாறு மான தெங்கே!
அறுபத்து நாலுகலை நின்ற தெங்கே!
சீருகால் பன்னிரண்டில் கழிந்த தெங்கே!
செத்திடமுஞ் சாகாதி ருந்திடமு மெங்கே!
பூருவ நீயிருந்துவந்து பிறந்திடந்
தானுமெங்கே!
புந்திதனில் அம்பத்தோர் அச்சரமு மெங்கே!
வேறு பொருளுரையா துள்ளபடியே சொல்வார்
மெல்லடியிலே பணிந்து மெலிய லாமே!

(9)ஆதியிற் சந்திரனும் பிறந்த தெங்கே!
அவரொடுங்கி நிற்குமது விடமு மெங்கே!
சாதிபல ஒன்றாகக் கண்ட தெங்கே!
சத்தி சிவமென்று பிரியாத தெங்கே!
ஓதி உணர்ந்த பூசைமறந்த தெங்கே!
வுச்சிட்ட நிட்டத்தே விடமு மெங்கே!
சோதிபோல் ஞானமொழி பெற்ற பேர்கள்
சொல்லிய தெல்லா முடலில் சொல்லுவாறே!

(10)இருள்பிறந்த விடமெங்கே ஒடுக்கிட
மெங்கே!
இரண்டு திரிசங்கு நின்றவிடமு மெங்கே!
அருள்பிறந்து பாடிநின்ற விடமு மெங்கே!
அறுத்தடைத்த வாசலொன்று கண்ட தெங்கே!
திருபிறந்த விடமெங்கே எழுகிணறு மெங்கே!
திருக் கிணற்றை யிறைக்கின்ற யேத்தமெங்கே!
விருப்ப முடனடுக்கு நிலைப் போதகத்தை
விளம்பினோம் மெய்ஞான அறிவுள் ளோர்க்கே!

இந்தப் பத்து பாட்டுக்கும் பொருள் சொல்லி
விளக்கி உணர்த்தி தெளிய வைப்பவர் உண்மை
குரு ஆவார்.

கு என்றால் அஞ்ஞானம்(இருள்),ரு என்றால்
நீக்குபவர் (ஒளியை உண்டாக்குபவர்).குரு
என்ற சொல்லுக்கு அஞ்ஞான இருளை நீக்கி
ஞான ஒளி உண்டாக்குபவர் என்று பொருள்.

நீங்கள் அழைப்பவர் அதற்குத் தகுதியானவராக
இருக்கிறாரா என்று சோதித்து பின்

அழையுங்கள்...

1 comment:

  1. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. அந்த அறிவைத் தூண்டும் ஆசாரியனே மெய்குரு ஆகும்.அத்தகைய ஆசாரியன குருவாக பணிந்து ஏற்று உய்யலாம். வணக்கம்.சுயம்ஜோதி குரு ஞானசபை.

    ReplyDelete