Tuesday, 29 August 2017

ஸ்ரீ தர்ம சாஸ்தா - உதயணனை அழித்த உண்மை கதை

இந்தக் கதை வரலாற்றுப் பூர்வமானது; இந்தச் சம்பவம் நடந்தது கி.பி. பதினோராம் நூற்றாண்டில்...
உதயணன் என்ற காட்டுக் கொள்ளைக்காரன் அப்போது மிகவும் கொடூரமானவனாக இருந்தான். சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள மக்களைக் கொன்று குவித்து, கொள்ளையடிப்பதில் கில்லாடியாக இருந்தான். ஒருசமயம் சபரிமலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவனால் முடியாமல் போகவே, அங்கிருந்த ஒரு மாந்திரீகரிடம் இதற்கான காரணத்தைக் கேட்டான். அதற்கு அவர், சபரிமலையில் தர்மசாஸ்தாவின் அவதாரமான மணிகண்டனின் கோயில் இருப்பதாலும், அதன் அபார சக்திதான் அந்தக் கிராமத்தைக் காத்து வருவதாகவும் கூறினார்.
அதனால் வெகுண்டெழுந்த உதயணன், எப்படியாவது அந்தக் கோயிலை நாசப்படுத்தி, கோயிலையும் கொள்ளையடிப்பேன் என்று சபதம் செய்து, அவ்வாறே சபரிமலைக் கோயிலை தீக்கிரையாக்கி நாசப்படுத்தினான். தடுக்க வந்த கோயில் நம்பூதிரியைக் குத்திக் கொலை செய்தான். தனது அப்பா உதயணனால் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்த நம்பூதிரியின் மகன் ஜெயந்தன், மீண்டும் சபரிமலைக் கோயிலை எடுத்துக் கட்டுவேன் என்றும், உதயணனைப் பழிவாங்குவேன் என்றும் சபதம் செய்தான்.
உதயணனே அறியாமல் அவனது கொள்ளைக் கூட்டத்திலேயே போய்ச் சேர்ந்தான் ஜெயந்தன். இதற்கிடையில் உதயணனுக்கு பந்தள ராஜாவின் சகோதரியைத் திருமணம் செய்துகொண்டு, தனக்கு ராஜமரியாதை வரவேண்டும் என்ற ஆசை பிறந்தது. எனவே அவன் ராஜகுமாரியைத் திருட்டுத்தனமாகத் தூக்கிவந்து விட்டான். தன்னுடன் வந்த ஜெயந்தனிடம் ராஜகுமாரியை பத்திரமாகத் தனது இருப்பிடத்தில் கொண்டுபோய் விடுமாறும், தான் மேலும் கொள்ளையடித்துவிட்டு வருவதாகவும் கூறி, உதயணன் சென்று விட்டான்.
இந்நிலையில் ஜெயந்தன் ராஜகுமாரியிடம் தனது சபதத்தைக் கூறினான். ராஜகுமாரியும் தனக்கு உதயணனைத் திருமணம் செய்ய விருப்பமில்லை என்றாள். ஜெயந்தனையே திருமணம் செய்துகொண்டு, சபரிமலைக் கோயிலைப் புதுப்பிக்க தானும் உதவிசெய்யப் போவதாகக் கூறினாள். அவள் விருப்பப்படி ஜெயந்தனையே திருமணம் செய்து கொண்டாள்.
அவர்கள் இருவரும் அருகிலுள்ள குகையில் வாழ்க்கை நடத்தினார்கள். கோயிலைக் கட்ட இறையருள் வேண்டும் என்று எண்ணி, தர்மசாஸ்தாவை நோக்கித் தவம் புரிந்தனர். தர்ம சாஸ்தா அவர்களுக்குப் பிரசன்னமாகி, வேண்டும் வரம் கேட்டார். தங்கள் விருப்பத்தை அவர்கள் கூறினர். ஐயப்பனாக தானே மறுபிறப்பு எடுத்து வருவதாக அவர்களிடம் வாக்களித்தார் சாஸ்தா. அதன்படி ஐயப்பன் அவதரிக்க, இது பற்றி விவரமாகக் கடிதம் எழுதி, அக்குழந்தையை பந்தள ராஜனிடம் அனுப்பி வைத்தார்கள்.
பந்தள ராஜாவும் குழந்தை ஐயப்பனை நல்ல முறையில் வளர்த்து வந்தார். ஓரளவுக்கு வயது வந்தவுடன் தனது தந்தையான ஜெயந்தன் போட்ட சபதத்தை நிறைவேற்ற, தனது படைவீரர்களுடனும் சகாக்களுடனும் கானகத்திற்குக் கிளம்பினார் ஐயப்பன். காட்டிற்குச் செல்லும் வழியில் கண்ணில்பட்ட உதயணனின் ஒவ்வொரு முகாமையும் தாக்கி, கொள்ளையர்களை அழித்தவாறே சபரிமலையை நோக்கிச் சென்றனர் அனைவரும்.
அப்போதுதான் அராபியக் கடல் கொள்ளைக்காரரான வாபர் ஐயப்பனுக்கு அறிமுகமானார். இவர் அலிக்குட்டி அஸீமா தம்பதியினருக்குப் பிறந்தவர். எரிமேலி பகுதியிலுள்ள உதயணனின் முகாமைத் தாக்கி அழித்து, அந்த இடத்திற்குக் காவலாக வாபரை நிறுத்திவிட்டுச் சென்றார் ஐயப்பன்.
இறுதியில் கரிமலைக்கோட்டை என்ற இடத்தில் உக்கிரமான சண்டை நடந்தது. அந்தச் சண்டையில் உதயணனைக் கொன்றார் ஐயப்பன்.
சண்டை உக்கிரமாக நடந்த போது உதயணனின் கூட்டத்திலிருந்த ஒரு கொள்ளையன் தப்பித்து விட்டான். வரும் வழியில் எரிமேலியில் வாபரைப் பார்த்தான். ஐயப்பனின் மேல் இருந்த கோபத்தால் வாபரைக் கொன்று விட்டான்.
பின்னர் பந்தளராஜனும் சபரிமலை வந்து சேர்ந்தார். நல்ல நாள் பார்த்து அனைவரது முன்னிலையிலும் சபரிமலைக் கோயிலைப் புதுப்பித்துக் கட்டும் பணி நடைபெற்றது.
கோயில் கட்டி முடிக்கப்பட்டதும், குடமுழுக்கு மற்றும் ஆராதனைகளை நடத்தினார்கள். இறுதியில் மங்கள தீபாராதனையின் போது, ஐயப்பன், தர்மசாஸ்தாவான தான் அவதாரமெடுத்த நோக்கத்தினை அனைவருக்கும் கூறி, மனி உடலோடு அப்படியே மறைந்துவிட்டார்.
ஐயப்பன் ஜோதி ரூபமாக ஐயனின் விக்கிரஹத்திடம் ஐக்கியமனார். அக்காட்சியைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்தார்கள். ஐயப்பனைப் போற்றி வணங்கினார்கள். சபரிமலைக் கோயிலை மீண்டும் கட்டுவதற்காக தானே மறு அவதாரமெடுத்த ஐயப்பனை நினைந்து போற்றித் துதித்தார்கள்

No comments:

Post a Comment