மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி….
மணப்பாறை ஸ்ரீவடிவுடை நாயகி அம்மன்
ஓர் அடர்ந்த வனம். சுற்றிலும் விலங்குகள், பறவைகளின் சஞ்சாரம் நிறைந்திருந்தது. அந்த ரம்மியமான சூழ்நிலையில் பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் துரோணாச்சாரியார் வில்வித்தையைக் கற்பித்துக் கொண்டிருந்தார். ஆச்சாரியாரின் சீடர்களில் தலை சிறந்த மாணவனாக அர்ச்சுனன் திகழ்ந்தான். அவனின் வில்வித்தை கண்டு உலகமே அதிசயித்தது.
மாணவர்கள் அனைவரும் விளையாட்டாக தங்களுக்குத் தெரிந்த வித்தைகளைப் பற்றி பெருமை பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ ஒரு நாய் குரைத்துக் கொண்டே வந்தது. அதைக் கண்ட துரியோதனன் அர்ச்சுனனைக் கிண்டல் செய்யும் பாணியில், அர்ச்சுனா, நீ பெரிய வில்வித்தை நிபுணண் என்று உலகமே உன்னை பாராட்டுகிறது. இந்த நாயிடம் உன்னுடைய திறமையைக் காட்டு பார்க்கலாம், என்று சவால் விட்டான்.
அர்ச்சுனனும் துரியோதனனின் சவாலை ஏற்றுக் கொண்டு நாயின் மேல் ஓர் அம்பை எய்தான். என்ன ஆச்சரியம், அர்ச்சுனன் விட்ட ஓர் அம்பு பத்து அம்புகளாய்ப் பிரிந்து, பெருகி அந்த நாயை வீழ்த்தியது. பாண்டவர்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். அவர்கள் ஆரவாரம் அடங்குவதற்குள் அவர்கள் முன் வேறொரு நாய் ஓடி வந்தது. அதன் உடம்பில் ஆயிரம் ஓட்டைகள் தென்பட்டன. அத்தனை ஓட்டைகளும் அம்பால் துளைக்கப்பட்டது போல் தோன்றியது.
ஆனால், அந்த நாய் எந்த வித வேதனையும் அடையாமல் அவர்கள் எதிரே ஓடிக் கொண்டிருந்தது. அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். அர்ச்சுனன்தான் உலகிலேயே சிறந்த வில்வீரன் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது அவன் விட்ட அம்பைப் போல் நூறு மடங்கு சக்தி உள்ள அம்புகளால் தாக்கப்பட்ட ஒரு நாய் எப்படி உயிருடன் உலவ முடியும் என்ற அதிசயத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
அனைவரும் தங்கள் ஆச்சாரியாரிடம் அப்படிப்பட்ட ஒரு திறமை வாய்ந்த வில்லாளி யாராக இருக்க முடியும் என்று தெரிவிக்கும்படி வேண்டினர். உண்மையில் துரோணாச்சாரியாருக்கே யார் அந்த விசித்திர அம்பை எய்த திறமைசாலி என்று தெரியாது. இருந்தாலும் அவர் தனுர் வேதத்தில் ஒப்பற்ற மேதை அல்லவா? உடனே சோரி அஸ்திரம் என்ற அம்பை நாணேற்றி கிழக்கு திக்கை நோக்கி எய்தார்.
சோரி அஸ்திரம் என்பது எந்த திசையிலிருந்து யார் அம்பை எய்திருந்தாலும் அவர்களின் பெயர், குலம், கோத்திரம், ஆச்சாரியார் போன்ற அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொண்டு வந்து விடும் ஓர் அஸ்திரமாகும்.
அடுத்த விநாடியே அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொண்டு சோரி அஸ்திரம் துரோணாச்சாரியர் முன் வந்து பணிந்து நின்றது. அனைவரும் ஆவலுடன் அந்த திறமைசாலி யார் என்று எல்லையில்லா ஆர்வத்துடன் பார்த்தனர். அங்கு வந்த நாயின் மேல் அஸ்திரம் எய்தவனின் பெயர் ஏகலைவன் என்பதாகும். அவனுடைய தனுர் வேத ஆசான் துரோணாச்சாரியார் என்ற விவரம் சோரி அஸ்திரம் மூலம் தெரிய வந்தது. துரோணாச்சாரியர் உள்பட அனைவரும் திடுக்கிட்டனர். அது நாள் வரை துரோணாச்சாரியார் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் மட்டும்தான் ஆச்சாரியார் அதாவது ராஜகுமாரர்களுக்கு மட்டும்தான் குரு என்று நினைத்துக் கொண்டிருக்க எங்கிருந்து இந்த புது எதிரி முளைத்தான் என்ற கேள்விக் குறியுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அனைவரையும் விட துரோணாச்சாரியாரின் நிலையோ மிகவும் தர்ம சங்கடமாக ஆகி விட்டது. அவர் உடனே மற்றொரு அஸ்திரத்தை எய்து சோரி அஸ்திரம் குறிப்பிட்ட வில்லாளி அங்கு வந்து சேர வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார். அந்த நிபந்தனையை உடனே ஏற்றுக் கொண்டு அவர்கள் முன் ஏகலைவன் தோன்றினான்.
ஸ்ரீதோணியப்பர் சிவாலயம் சீர்காழி
அனைவரும் ஏகலைவனைக் கண்டு அதிசயித்தனர். அவன் கூறிய செய்தி அவர்களை மேலும் அதிசயத்தில் ஆழ்த்தியது. அதாவது துரோணாச்சாரியாரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு அவன் அனைத்து வில்வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தான் என்பதுதான் அவன் தெரிவித்த செய்தியாகும். அதை யாராலும் நம்ப முடியவில்லை.
அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. வானத்தில் ஓர் ஒளிக் கீற்று தோன்றியது. அந்த ஒளிக் கீற்றைத் தொடர்ந்து அவ்விடத்தில் கால பைரவர் பிரசன்னமானார். அனைவரும் கால பைரவரை மண்டியிட்டு வணங்கினர். அனைவருக்கும் தன்னுடைய ஆசியை வழங்கி விட்டு கால பைரவர் பேசத் தொடங்கினார்.
நீங்கள் இங்கு காணும் ஏகலைவன் தனுர் வேதம் மட்டும் அல்லாது பக்தியிலும் தலை சிறந்தவன். குரு பக்தியிலும் தனுர் சாஸ்திரத்திலும் ஈரேழு உலகத்திலும் அவனுக்கு நிகர் யாருமே கிடையாது. உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காக அவனுடைய தனுர் சாஸ்திர தேர்ச்சியை உங்கள் முன் பரிசோதித்துக் காட்டுகிறேன், என்று கூறி, ஏகலைவா, குரு பக்தியில் சிறந்தோனே, உனக்கு மங்களம் உண்டாகட்டும். இங்குள்ளோர் நம்பும்படியாக அர்ச்சுனன் அஸ்திரத்தால் மாண்டுபோன நாயை உன்னுடைய திறமையால் மீண்டும் உயிர் பெற்று எழச் செய்வாயாக, என்று ஆணை இட்டார்.
கால பைரவரின் ஆணையை சிரமேற்கொண்டு உடனே ஏகலைவன் ஓர் அஸ்திரத்தை இறந்துபோன நாயை நோக்கி எய்தான். அனைவரும் கண் சிமிட்டாமல் அங்கு நிகழ்ந்த அற்புதத்தை அதிசயத்துடன் நோக்கினர். ஏகலைவனின் ஒரே அஸ்திரம் 8000 அஸ்திரங்களாக பிரிந்து எட்டு திக்குகளிலும் பறந்தன. அடுத்த நொடி எட்டு திக்குகளிலிருந்தும் உயிரை மீட்டுத் தரும் மூலிகைகளை அந்த 8000 அஸ்திரங்கள் கொண்டு வந்து இறந்த நாயின் மேல் தூவியதும் இமைப் பொழுதில் நாயின் உடலில் இருந்த பத்து ஓட்டைகளும் மறைந்து விட்டன. இறந்த நாயும் தூக்கம் களைந்ததுபோல் எழுந்து வாலை ஆட்டிக் கொண்டு அங்கிருந்து ஓடி மறைந்து விட்டது.
கால பைரவர் புன்னகை பூத்தார். ஏகலைவனின் ஈடு இணையற்ற குரு பக்தியால் விளைந்த அற்புதத்தைப் பார்த்தீர்களா? குரு பக்தியின் மகிமையை உணர்த்தவே எம்பெருமான் நீலகண்டன் என்னை பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார். இத்தகைய குரு பக்தியைப் பெறுவதற்கு ஏகலைவன் என்ன தவத்தை மேற்கொண்டான் என்பதை உங்கள் ஆச்சாரியரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், என்று கூறி அங்கிருந்து மறைந்து விட்டார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் ஏகலைவனின் கட்டை விரலை துரோணாச்சாரியார் குரு தட்சணையாகப் பெற்ற வரலாறு நீங்கள் அறிந்ததே. ஆனால், இச்சம்பவம் குறித்த மற்ற அற்புத விஷயங்கள் இருடிகள் மகாபாரதத்தில் மட்டுமே காணப்படுகின்றன.
ஏகலைவனின் கட்டை விரலை குரு தட்சணையாகப் பெற்ற துரோணாச்சாரியார் அதை ஒரு விலை உயர்ந்த பொக்கிஷமாகப் போற்றினார். நம்முடைய விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை எங்கு வைத்துக் காப்போம். இதயத்தில்தானே? அதைத்தான் துரோணாச்சாரியரும் செய்தார்.
ஏகலைவனின் கட்டை விரலை ஒரு தாயத்தில் மறைத்து அந்த தாயத்தை தன்னுடைய கழுத்தில் கட்டிக் கொண்டார். இதன் பின்னால் உள்ள தேவ ரகசியம் எவருக்கும் தெரியாது. அதாவது குரு தட்சணையாகப் பெற்ற பொருள் குருவின் உயிரைக் காக்கும். இந்த தெய்வீக ரகசியத்தை உணர்ந்தவர் ஒரே ஒரு உத்தமர்தான். ஆம், இந்த உயிர் காக்கும் தாயத்தைப் பற்றி அறிந்தவர் கிருஷ்ண பரமாத்மா ஒருவர்தான்.
குருக்ஷேத்திர யுத்தத்தில் துரோணாச்சாரியார் கௌரவர்கள் பக்கம் சேர்ந்து போரிட்டார் அல்லவா? தர்மத்தைக் காக்க வேண்டும் என்றால் துரோணாச்சாரியாரை மாய்க்க வேண்டும். ஆனால், அவரோ குரு தட்சணை என்ற தர்ம கவசத்தை தன்னுடைய கழுத்தில் சதா சர்வ காலமும் அணிந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரை யாராலும் வெல்ல முடியாது.
ஆனால், தர்மத்தை நிலை நாட்ட ஒருவர் முயன்றால் தர்மம் அவரை எப்படியும் காப்பாற்றும் என்ற வேத வாக்கின்படி கிருஷ்ணருக்கு தர்ம தேவதையே துரோணாச்சாரியாரை வீழ்த்தும் உபாயத்தை அவர் காதில் சொன்னது. அதன்படி ஒரு வயோதிகர் வேடத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா துரோணரிடம் சென்றார்.
” சுவாமி, என்னுடைய ஒரே பெண்ணிற்கு திருமணம் இன்னும் ஆகவில்லை. இப்போதுதான் ஏதோ ஓரு வரன் அமைந்திருக்கிறான். ஆனால், மாங்கல்யம் வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. நீங்கள்தான் பெருங் கருணை கூர்ந்து ஏதாவது உதவி செய்ய வேண்டும். உங்களால் அது முடியாது என்று சொல்லிவிட்டால் நான் உயிரை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று சொல்லி விட்டு துரோணாசாரியாரின் கழுத்தில் தொங்கிய தாயத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
துரோணாச்சாரியார் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார். கடுமையான யுத்தம் நடக்கும் போர்க் களத்தில் தங்கத்தை எங்கே போவது? ஆனால், இந்த வயோதிகரின் யாசகத்தையும் நிராகரிக்க முடியாது. வேறு வழியின்றி மிகவும் மன வேதனையுடன் தன் கழுத்தில் இருந்த தாயத்தை கழற்றி அந்த வயோதிகரின் இரு கரங்களிலும் அளித்து. ‘ஐயா, பெரியவரே, இது மிகவும் மதிப்பு வாய்ந்த, விலை உயர்ந்த தங்க தாயத்து. இதை அப்படியே உங்கள் மகளுக்கு மாங்யல்யமாக அளித்து திருமணத்தை நடத்தி விடுங்கள், என்று கூறி மானசீகமாக அந்த தம்பதிகளையும் போர் முனையில் இருந்தே ஆசீர்வாதம் செய்தார்.
வந்த வேலை முடிந்த திருப்தியில் கிருஷ்ண பரமாத்மா துரோணாச்சாரியாருக்கு பணிந்து வணக்கம் செலுத்தி விட்டு அவரிடம் உத்தரவு பெற்றுத் திரும்பினார். துரோணாச்சாரியரிடமிருந்து பெற்றது ஒப்பற்ற மாணிக்கம் அல்லவா? குருவை விட உயர்ந்த பொருள் உலகில் ஏது? குரு பக்திக்கு இணையானது எங்கும், எவ்விடத்திலும் இல்லையே. பரமானந்தத்துடன் ஏகலைவனின் கட்டை விரலை தன்னுடைய புல்லாங்குழலில் பதித்து வைத்து விட்டார் கிருஷ்ண பரமாத்மா !! குரு பக்திக்கு உரிய மரியாதையை இதன் மூலம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அர்ப்பணித்து உலகத்தவர் அனைவருக்கும் குருவைப் போற்றும் ஒரு உத்தம சீடனின் நிலையையும் உணர்த்தினார்.
ஒரு பூரண அவதாரத்தின் மதுரமான அதரங்களில் தவழும் உத்தமமான, மிக உயர்ந்த தெய்வீக நிலையை அடையும் அளவிற்கு ஏகலைவன் செய்த தவம்தான் என்ன என்பதை அறிய உங்கள் மனம் துடிக்கிறது அல்லவா?
பிறர் கர்ப்பத்தைத் தாங்கும்
தாயுமான சுக சித்தர்
இதற்கு விடை தருபவர் துரோணாச்சாரியார்தான். கால பைரவரின் உத்தரவுப்படி துரோணாச்சாரியார் பாண்டவர்கள் கௌரவர்களின் முன்னிலையில் சவிதா அஸ்திரம் என்ற ஒரு அஸ்திரத்தை வானை நோக்கி எய்தார். சவிதா அஸ்திரம் என்பது ஒரு ஜீவனின் முந்தைய ஜன்ம நிகழ்ச்சிகளை கிரகித்துத் தரும் சக்தியை உடையது.
ஏகலைவன் முற்பிறவியில் என்ன தவத்தை இயற்றி இந்த ஒப்பற்ற குரு பக்தியைப் பெற்றான் என்ற தேவ விளக்கத்தை சவிதா அஸ்திரம் ஏந்தியிருந்தது.
ஸ்ரீதோணியப்பர் அருளாட்சி செலுத்தும் சீர்காழி திருத்தலத்தில் பல்லாண்டுகள் முற்பிறவியில் சேவை செய்து வந்தவரே ஏகலைவன் ஆவார். அத்திருத்தல மூங்கில் விருட்சத்திற்கு தினமும் திருக்குளத்திலிருந்து நீர் கொண்டு வந்து வார்த்து பக்தியுடன் வார்த்து அற்புத சேவை ஆற்றி வந்தார் ஏகலைவன். அச்சமயம் இந்திர வர்மன் என்ற சோழ மன்னன் அரசாட்சி செய்து வந்தான்.
மன்னனின் பல்லக்கு பழுதடைந்து விட்டதால் புதிய பல்லக்கு செய்வதற்காக மன்னனின் காவலாளிகள் நல்ல மூங்கிலைப் பெற நாட்டின் பல பாகங்களிலும் தேடிச் சென்றனர். ஆனால், எதிர்பார்த்த சிறந்த மூங்கில்கள் எங்கும் கிட்டவில்லை. இறுதியில் சீர்காழி திருத்தலத்தை அடைந்தபோது அங்கிருந்த தலவிருட்ச மூங்கில்கள் அவர்கள் எதிர்பார்த்ததை விட நல்ல குணாதிசயத்தைப் பெற்றிருந்தன.
மன்னன் சிறந்த சிவ பக்தன் என்பதால் அவனுக்குத் தெரிந்தால் அம்மரத்தை வெட்ட அனுமதிக்க மாட்டான். எனவே இந்த சிறந்த மூங்கில்களை எப்படியாவது வெட்டிக் கொண்டு சென்று மன்னனின் பாராட்டைப் பெற வேண்டும் என்ற குறுகிய நோக்கம் கொண்ட சில காவலாளிகள் அந்த மூங்கில்களை வெட்டத் துணிந்தனர்.
அச்சமயம் வழக்கம போல் திருத்தல விருட்ச சேவைக்காக அங்கு வந்த ஏகலைவன் காவலாளிகளின் அடாத செயலைத் தடுத்த நிறுத்த முற்பட்டார். எவ்வளவோ அறிவுரைகள் கூறியும், பணிவான பிரார்த்தனைகளாலும் அவர்கள் மனதை மாற்ற முடியாத நிலையில் அம்மூங்கில்களை கட்டிப் பிடித்துக் கொண்டு பஞ்சாட்சரத்தை வாயினால் ஓதிக் கொண்டே இருந்தார்.
காவலாளிகள் ஏகலைவனை அங்கிருந்து அகற்ற முயன்றனர். அது முடியாமல் போகவே இறுதியில் ஒரு காவலாளி தன்னுடைய வாளால் ஏகலைவனின் தலையை வெட்டி வீழ்த்தி விட்டான். ஏகலைவனின் தலை வீழ்ந்த மறு கணம் அங்கு ஒரு மின்னல் தோன்றியது, பேரிடி முழங்கியது, காவலாளிகள் பயந்து அலறிக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடி விட்டனர். ஆனால், இதில் அதிசயம் என்னவென்றால் ஏகலைவனின் தலை வெட்டுண்டு தரையில் கிடந்தாலும் அவனுடைய இரு கைகளும் மூங்கில் விருட்சங்களை இறுக்கிப் பிடித்த வண்ணமே இருந்தன.
அங்கு கூடிய மக்கள் அனைவரும் ஏகலைவனின் வானளாவிய பக்தியைக் கண்டு வியந்தனர். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
மன்னன் விரைந்து வந்து ஏகலைவனின் இறுதிக் காரியங்களை நிறைவேற்றினான். வேணு என்றால் மூங்கில். வேணுவைக் காத்த ஏகலைவன் வேணுகோபாலன் திருஅதரங்களின் நிரந்தர வாசம் கொண்டார்.
வளைந்த மூங்கில் பல்லக்காகும், நிமிர்ந்த மூங்கில் பாடையாகும் என்ற மூதுரைக்கு ஏற்ப ஏகலைவனின் பணிவு பக்தியைத் தந்தது. பக்தி என்றும் அழியா ஞானத்தைத் தந்தது.
No comments:
Post a Comment