Wednesday, 30 August 2017

வாத்தியாரய்யா இடியாப்ப சித்தர் உபதேசம்

ஒருமுறை நமது குருமங்கள கந்தவர்வா அவர்களிடம், ” பக்தி ஒருவரை கடவுளிடம் கொண்டு சேர்க்கும், இறை சேவை கடவுளைக் காட்டும் என்னும் கோட்பாட்டை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், தியாகம் எப்படி கடவுளைக் காட்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லையே? ” என்று ஒரு அடியார் கேட்டார்.

அதற்கு பதிலாக குருநாதர் கீழ்க்கண்ட அடிமை கண்ட ஆனந்த நிகழ்ச்சியை விவரித்தார்கள். சித்திரை  மாதத்தில் ஓர் நாள்... அக்னி நட்சத்திரம் தகிக்கும் உச்சி வெயில் நேரம்... சிறுவனான நமது குருமங்கள கந்தர்வாவும், சிறுவனின் குருநாதரான கோவணாண்டிப் பெரியவரும்  திருஅண்ணாமலையில் கிரிவலம் போய்க் கொண்டிருந்தனர். வழக்கமாகஅங்கொரு கால் இங்கொரு கால்என வைத்துவிறுவிறுஎன நடக்கும் பெரியவர், அன்றைக்கு என்னவோ ரொம்பவும் மெதுவாகவே நடந்து கொண்டிருந்தார்.

சிறுவனுக்கோ காலைக் கீழே வைக்கவே முடியவில்லை. அவ்வளவு சூடு! வலது, இடது கால்களை மாறி மாறிக் கீழே வைத்து, ஏதோ புதுவித நடனம் ஆடுபவன்போல, அங்குமிங்கும் தாவித் தாவிப் போய்க் கொண்டிருந்தான். சூடு போதாதென்று, அங்கங்கே குத்தும் முட்கள் வேறு. பெரியவரோ சிறுவன் படும் அவஸ்தையெல்லாம் பற்றி கவலையே படாமல், திருஅண்ணாமலையின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே மெல்ல நடந்தார்.

அண்ணாமலை என்னமோபாக்கறதுக்கு சாதாரண கல்லு மலை மாதிரி இருக்கேன்னு தப்புக் கணக்கு போட்டுடாதடா. ஒரு யுகத்துல இது மாணிக்க மலையா இருந்திச்சு. வேற ஒரு யுகத்துல இது ரத்தின மலை. போன யுகத்துல இது தங்க மலையா இருந்துச்சு...”

பெரியவர் பேசுவதையா கவனித்தான் நம் சிறுவன்? அவன் கவனமெல்லாம் காலைச் சுட்டுப் பொசுக்கும் வெயிலின்மேல்தான். ‘ஆமா. நானே இங்க சூட்டுல பொசுங்கிப் போயி, காஞ்ச கருவாடு மாதிரி ஆயிட்டேன். இந்த வாத்யாரு என்னடான்னா, நெலா வெளிச்சத்துல உலாவுறது மாதிரி, அன்ன நடை போட்டுகிட்டு... இதுலதங்க மலை, வெள்ளி மலைன்னு லெக்சரு வேற. யாரு இப்ப இந்தக் கதையெல்லாம் கேக்கற நெலைமைல இருக்கா?’

இதற்குள் இருவரும் கிரிவலப் பாதையில் நடந்து நடந்து வெகு தூரம் வந்து விட்டனர். ஒரு பெரிய வேப்ப மரத்தின் அருகே வந்தவுடன், பெரியவர் அதன் நிழலில் சற்றே நின்றார். சிறுவனும்அப்பாடா!” என பெருமூச்சு விட்டபடி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அங்கிருந்து பார்த்தால் சற்று தூரத்தில் தென்பட்ட மலை அடிவாரத்தில் ஒரே மாதிரியாக சைஸ் பார்த்துப் பொறுக்கிக் கொட்டி வைத்ததுபோல, உருண்டை உருண்டையாக கற்கள் கிடந்தன. சிறுவன் அவற்றையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.

காலப்போக்கில் பலப்பல புதிய கட்டிடங்கள் உருவாகி, சாலை அமைப்புகளும் மாறி விட்டதால், அடையாளமே கண்டுபிடிக்க முடியாதபடி மாறி விட்ட அந்தப் பகுதியில் தற்போது பச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது.

ஏண்டா, கிரிக்கட்டெல்லாம் வெளையாடுவியா நீ?” என்று கேட்டார் பெரியவர்.

என்னாதிடீர்னு வாத்யாரு சம்மந்தா சம்மந்தமில்லாம கிரிக்கட்டைப் பத்திப் பேசறாருஎன வியந்து கொண்டே பதில் சொன்னான் சிறுவன். “! ஸ்கூல்ல பசங்களோட வெளையாடுவனே.”

அப்டீயா? சரி. நீ என்னா பாட்ஸ்மேனா, பௌலரா?”

ரெண்டுந்தான் வாத்யாரே. ஆனா, நானு பந்து போட்டேன்னு வச்சுக்க. ஒரு பய நிக்க முடியாது.”

சிறுவனை மேலும் கீழும் பார்த்தபடி ஏளனமாகச் சிரித்தார் பெரியவர். “ஏண்டா, தம்மாத்தூண்டு இருக்க. உன்னால அவ்ளோ வேகமா பந்து போட முடியுமா? யார் கிட்டடா கத வுடற?”

சிறுவனுக்கு ரோஷம் வந்துவிட்டது. “நம்பலைன்னா ஒரு நாளைக்கு ஸ்கூலுக்கு வந்து பாரேன்.”

அதுக்கு ஏண்டா ஸ்கூலுக்கு வரணும்? எங்க, அதோ கெடக்குதே. அந்தக் கல்லுங்கள்ல ஒண்ண எடுத்து எறிஞ்சு காட்டு. பாக்கலாம் உன்னோட தெறமைய.”

சிறுவன் ஒடிப் போய் அந்தக் கற்களில் தேடி , நல்ல உருண்டையான கல்லாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்தான். கிட்டத்தட்ட ஒரு பந்து போன்ற அமைப்பில் இருந்த அதைக் கையில் எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் பின்னால் நடந்து சென்றான்.

பெரியவரை ஓரக்கண்ணால் பார்த்தவாறே சிறுவன் கல்லைக் கீழே வைத்து விட்டு--, தன் அரை டிராயரை இழுத்து இறுக்கக் கட்டிக் கொண்டான். ‘ஓடுறப்ப அவுந்து வுழுந்துருச்சுன்னா...’ பெரியவர் மரத்தில் சாய்ந்தபடி நின்று கொண்டு, சிறுவனின் செய்கைகளைப் புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.

மீண்டும் கல்லைக் கையில் எடுத்துக் கொண்டு, வேகவேகமாக ஓடி வந்து கையைச் சுழற்றி, தன் முழு பலத்தையும் பயன்படுத்தித் தூக்கி எறிந்தான். அந்தக் கல் கண்ணுக்கெட்டாத தூரத்தில் போய் விழுந்தது!

பெருமை தாங்கவில்லை நம் சிறுவனுக்கு. தலையை நிமிர்த்தியபடி ஸ்டைலாக நடை போட்டுக் கொண்டு பெரியவர் முன்னால் போய் நின்றான். ‘என்னா வாத்யாரே! இப்ப என்னா சொல்ற?’ என்ற கேள்வி, வாயைத் திறந்து கேட்காவிட்டாலும் அவன் கண்களில் தெரிந்தது. “ஏண்டா! அவசரக் குடுக்கை!! நீ எடுத்த அந்தக் கல்ல ஒரு தபா பாக்கணும்னு நெனச்சேன். நான் வாயத் தொறந்து சொல்றதுக்குள்ளாற தூக்கி எறிஞ்சுட்டியே. சரி சரி. சட்டுன்னு ஓடிப் போயி அந்தக் கல்ல எடுத்துட்டு வா.”

வாத்யாரே, அது எங்க போய் வுழுந்துச்சோ, யாருக்குத் தெரியும்? சரி. ஒனக்குக் கல்லுதான வேணும். அதான் அவ்ளோ கல்லுங்க கெடக்குதே. வா. ரெண்டு பேருமே போயி எந்தக் கல்லு வேணுமோ, பாத்து எடுத்துக்கலாம்.”“அதெல்லாமில்லடா. நீ தூக்கி எறிஞ்ச பாரு. அந்தக் கல்லுதான் வேணும். தேடி எடுத்துட்டு வந்துடு. ”

சிறுவனுக்குப் புரிந்து விட்டது. ‘சரி. வாத்யாரு நம்மள டீல்ல வுட்டுட்டாரு. இன்னைக்கு நாம காலி!’ மெல்ல மெல்லத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே, கல் விழுந்த பக்கமாக நடந்தான்.

ராஜா. சுருக்கா எடுத்துட்டு வந்து சேர்ந்துடு. நானு மெதுவா கிரிவலம் போயிகிட்டே இருக்கேன்.” பெரியவரின் குரல் கேட்டதும் நாலுகால் பாய்ச்சலில் ஒடிப்போய் கல்லைத் தேட ஆரம்பித்தான்.

ஜன நடமாட்டம் அதிகமில்லாத அன்றைய காலத்தில் திருஅண்ணாமலையைச் சுற்றி வர, ஒரு ஒற்றையடி மண் பாதையைத்தான் கிரிவலம் செல்பவர்கள் பயன்படுத்தினர். மற்ற இடங்களில் எல்லாம் செடி, கொடி, மரங்கள்தான். --அதிலும் மலை அடிவாரப் பகுதியில் எங்கு பார்த்தாலும் புதர்கள் மண்டி, அடர்ந்த காட்டுப் பகுதியாகத்தான் காட்சி அளித்தது.

அதற்கு நடுவில்தான் சிறுவன் விட்டெறிந்த கல் போய் விழுந்திருந்தது. அருகில் சென்று பார்த்ததும் மலைத்துப் போய் நின்று விட்டான். ‘இவ்ளோ அடர்த்தியா இருக்கற செடிங்களுக்கு நடுவுல கெடக்கற கல்ல எப்டீ தேடி... எப்பக் கண்டுபுடிச்சு...’ சிறுவனுக்கு நம்பிக்கையே இல்லை.

இருந்தாலும் என்ன செய்வது? பெரியவரோ கல்லைத் தேடி எடுத்துவரச் சொல்லி விட்டு முன்னால் போய் விட்டார். சிறுவன் ஒவ்வொரு புதராக விலக்கி விலக்கிப் பார்த்துத் தேட ஆரம்பித்தான்.

குனிந்து குனிந்து தேடியதில் சிறுவனின் முதுகு வலி எடுத்ததுதான் மிச்சம். கல்லோ கிடைத்தபாடில்லை. நேரமோ கடந்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆன பின்னர் ஒரு செடி மறைவில் ஏதோபளபளவென மின்னுவதைச் சிறுவன் கண்டான். என்னஏதென்று பக்கத்தில் போய், செடிகளை விலக்கிப் பார்த்தால் சிறுவன் தூக்கி எறிந்த அதே கல்!

அப்பாடா! ஒரு வழியா கல்லக் கண்டு புடிச்சாச்சுடா சாமி.’ என நிம்மதியாக மூச்சு விட்டபடி அதை எடுத்தான். கையில் எடுத்துப பார்த்தபோது, அந்தக் கல் இன்னும்பளிச்சென இருந்தது. நன்றாக உற்றுப் பார்த்தால், மஞ்சள் நிறத்தில் தகதகவென அந்தக் கல் மின்னியது! முழுத் தங்கம்!!

சிறுவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. ‘என்னடா இது அதிசயம்! சாதாக் கருங்கல்லத்தான நாம தூக்கி எறிஞ்சோம். இங்க வந்து பாத்தா தங்கக் கல்லாக் கெடக்குது. சரி சரி. எடுத்துகிட்டுப் போயி நம்ம வாத்யாருகிட்ட காமிப்போம்.’

யார் கண்ணிலும் படாமல் இருப்பதற்காக, கல்லை எடுத்துத் தன் டிராயரினுள் மறைத்து வைத்துக் கொண்டு, ஒரு கையால் இறுக்கப் பிடித்தபடி சிறுவன் வேகவேகமாக ஓடினான். தங்கக் கல்லைக் கண்டெடுத்த ஆச்சரியத்தில் சிறுவனுக்கு இதுவரை தேடி அலைந்ததில் ஏற்பட்ட களைப்பெல்லாம் பறந்தோடி விட்டது.

பெரியவரைத் தேடியபடியே சிறுவன் கிரிவலப் பாதையில் ஓடினான். ரொம்ப நேரம் ஓடிய பின்னர், தூரத்தில் பெரியவர் நடந்து போய்க் கொண்டிருப்பது அவன் கண்களில் தென்பட்டது. அவரைப் பார்த்த சந்தோஷத்தில் சிறுவனின் ஓட்டம் இன்னும் சூடு பிடித்தது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி தன் முன்னால் வந்து நிற்கும் சிறுவனை வினோதமாகப் பார்த்தார் பெரியவர். “என்னடா கண்ணு. என்னாச்சு ஒனக்கு? ஏதோ காணாததைக் கண்ட மாதிரி இந்த ஓட்டம் ஒடியாற?”

ஓடி வந்த அசதியில் சிறுவனுக்குச் சரிவர பேச்சே வரவில்லை. மூச்சு வாங்கியதில் வார்த்தைகள் தடுமாறின. “ஹஹ... ஆமா... வாத்யாரே... ஹஹஹ...அந்தக் கல்லு...தங்கக் கல்லு...ஹஹஹ.”

இவ்வாறு ஏதேதோ உளறியபடியே சிறுவன் தன் டிராயருக்குள் மறைத்து, இறுக்கப் பிடித்திருந்த அந்தக் கல்லை எடுத்துப் பெரியவர் முன்னால் நீட்டினான். சிறுவனின் விரிந்த கைகளில்பளபளவென அந்தத் தங்கக் கல் மின்னியது.

என்னடா, தங்கம் மாதிரி இருக்குது. எங்கேந்துடா தூக்கியாந்த?” பெரியவர் அந்தக் கல்லைத் தொடாமலே எட்ட நின்று பார்த்தார்.

வாத்யாரே. நீதானதூக்கிப் போட்ட கல்ல எடுத்துட்டு வாடான்னு சொன்ன. இம்மா நேரம் படாத பாடுபட்டுத் தேடி எடுத்தாந்தா, இப்ப இதுமாதிரிக் கேக்கறியே? ஏன் எப்பப் பாத்தாலும் மாத்தி மாத்திப் பேசியே பேஜார் பண்ற?”

இப்போது பெரியவர் சிறுவனின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தார். “ஏண்டா. திருஅண்ணாமலை முன்னாடி தங்க மலையா, மரகத மலையா, மாணிக்க மலையா இருந்துச்சுன்னு சொன்னப்ப என்னா நெனச்ச? ‘வழக்கம்போல இந்தக் கெழவன் என்னமோ புருடா வுடறான்னுதான. அதுக்காகத்தான் ஒரு கல்லத் தூக்கிப் போட வச்சு, உன்னையே அத எடுத்துகிட்டு வரச் சொன்னேன்.” சிறுவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

பெரியவர் மேலும் தொடர்ந்தார். “இதாண்டா கலியுகத்தோட கோலம். கடவுளே முன்னாடி வந்து நின்னுநாந்தாண்டா நீ கும்புடற சாமின்னு சொன்னாக்கூட மனுஷன் நம்ப மாட்டான். ‘எவனாச்சும் காசு புடுங்கறதுக்காக வேஷம் போட்டுகிட்டு வந்து நிக்கறானோன்னுதான் சந்தேகப்படுவான். அதுனாலத்தாண்டா இந்தக் காலத்துல யாரு கண்ணுக்கும் சாமி தெரியறதில்ல.”

இந்தக் கல்லப் பாத்தியாடா. ஒரிஜினல் அபராஜிதத் தங்கம். அதாவது 24 காரட்டுங்கறாங்களே, அதையெல்லாம்விட சுத்தமான தங்கம். ஒரு யுகத்துல திருஅண்ணாமலையாரு முழுசுமே இப்டீத்தான் காட்சி கொடுத்தாரு. அந்த காலத்து ஜனங்களும் தங்க மலையத்தான் தெய்வமா நெனச்சு கிரிவலம் வந்து கும்புட்டாங்க.”

இன்னைக்கெல்லாம் அதுமாதிரி தங்க மலையா இருந்தாருன்னா, இந்த காலத்துப் பசங்கசாமியாச்சேன்னு சும்மா வுட்டு வைப்பானுங்களா? அதான் கோயில் சிலைங்க, நெலம், உண்டியல் காசு... எதையுமே சிவன் சொத்துன்னு பாக்காம வேட்டு வுடறானுங்களே. அதுனாலத்தான் அண்ணாமலையாரு கல்லு மலையாவே காட்சி தர்றாரு.” சரி சரி. வா. மீதி கிரிவலத்த முடிக்கலாம்.” எனப் பெரியவர் கிளம்பினார். சிறுவன் கையில் தங்கக் கல்லை வைத்துக் கொண்டு முழித்தான். “வாத்யாரே. என்னோட டிராயரு பாக்கெட்டுதான் ஓட்டையாச்சே. நீ வாங்கி பத்திரமா வச்சுக்கயேன்."

எதுக்குடா?” என அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் பெரியவர். “என்னா வாத்யாரே எதுக்குன்னு கேக்கற? நாமதான் அடிக்கடி அன்னதானம் பண்றமில்ல. காசுக்காக அங்கயும் இங்கயும் அலையாம, அப்பப்ப இதக் கொஞ்சம்கொஞ்சமா வித்து அன்னதானம் பண்லாமே.”

போடா முட்டாள். சாட்சாத் சிவபெருமானே திருஅண்ணாமலையாக் காட்சி தர்றாருன்னு இப்பதான சொன்னேன். அதுக்கு என்னா அர்த்தம்? இங்க கெடக்கற கல்லு, மண்ணு எல்லாமே சிவன் சொத்துடா. அதுலேந்து எதையுமே எடுத்துட்டுப் போற உரிமை யாருக்குமே கெடையாது. நல்லா ஞாபகம் வச்சுக்க.”

அப்ப இத என்னதான் செய்றது?” சிறுவன் குழம்பி விட்டான். “பேசாமத் தூக்கி எறிஞ்சுட்டு வா. போயிகிட்டே இருக்கலாம்.” எனச் சொல்லி விட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் பெரியவர் நடக்க ஆரம்பித்து விட்டார்.

கையில் பளபளவென மின்னும் அந்தத் தங்கக் கல்லைத் தூக்கி எறிய சிறுவனுக்கு மனமே வரவில்லை. ‘என்னா வாத்யாரு புரியாமப் பேசறாரு? இந்தத் தங்கக் கல்லு நம்ம கைல இருந்தா அவசர ஆத்திரத்துக்கு உபயோகப்படுமில்ல.’

இருந்தாலும் சிறுவனுக்குப் பெரியவரின் வார்த்தைகளை மீறுவதற்கு பயமாக இருந்தது. காரணம், அவர் கொடுக்கும் தண்டனைகள்! சற்று நேரம் யோசித்தபடி நின்ற சிறுவன்சொன்னதச் செய்யாட்டீ, பெண்டக் கழட்டிருவாரேஎன நினைத்துக் கொண்டே அரைகுறை மனதோடு அந்தக் கல்லைத் தூக்கி எறிந்தான்.

அதுவும் எப்படி? ஏற்கனவே எறிந்ததுபோல இல்லை! சுற்றுமுற்றும் பார்த்தபடி, பக்கத்திலேயே இருந்த ஒரு மரமாகப் பார்த்து, மெதுவாக அதன் வேர்ப்பகுதியில் இருந்த அடர்ந்த புதருக்குள் எறிந்தான். ஒரு முறை சுற்றி வந்து அந்த மரத்தை நன்றாக அடையாளம் பார்த்து வைத்துக் கொண்டான். எதற்கு?

பின்னாடி தேவைப்பட்டுச்சுன்னா? யாரு இந்த அத்துவானக் காட்டுக்குள்ளாற வந்து கண்டுபுடிக்கப் போறாங்க? வாத்யாரு அன்னதானம் பண்றப்ப, இங்க வந்து எடுத்துக்கலாமில்ல.’

அதற்குள் பெரியவர் வெகுதூரம் நடந்து போய் விட்டார். சிறுவன் வேகவேகமாக ஒடிப் போய் அவரைப் பிடித்தான். எதுவுமே நடக்காததுபோல அவருடன் சேர்ந்து மௌனமாக நடக்க ஆரம்பித்தான். பெரியவரும் அவனுடன் ஒரு வார்த்தைகூட பேசவே இல்லை. ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலேயே நடந்தார்.

கிட்டத்தட்ட இரண்டு மைல் போனதும், சிறுவனைப் பார்த்துச் சொன்னார். “நீ சொன்னத நல்லா யோசிச்சுப் பாத்தேண்டா. நம்ம கைல அந்தத் தங்கக் கல்லு இருந்தா, இன்னம் நெறையா அன்னதானம் பண்லாமே.”

சிறுவன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டான். “ஆமா வாத்யாரே. அதுக்குத்தான் அப்பவே சொன்னேன். கேட்டியா? நான் சொல்றத, என்னைக்கு நீ காதுல போட்டுகிட்ட?” 

கரெக்டுடா. என்னா பண்றது? அப்பப்ப ஒன்னோட மூளையும் நல்லாத்தான் வேலை செய்யுது.” பெரியவர் சிரித்தார். “சரி. சடார்னு ஓடிப்போயி அந்தக் கல்லத் திரும்பவும் எடுத்தாந்துடு.”

சிறுவனுக்கு இந்த தடவை எந்தப் பிரச்னையும் இல்லை. வேகவேகமாக ஓடினான். இடையில் எங்குமே நிற்காமல் ஓடிப்போய், தான் அடையாளம் வைத்திருந்த மரத்துக்கு அருகே போய் நின்றான். யாரும் கவனிக்கிறார்களா என சுற்றுமுற்றும் பார்த்தான். கண்ணுக்கு எட்டிய வரையில் ஜன நடமாட்டமே தென்படவில்லை. மாலை நேரம் முடிந்து லேசாக இருட்டவும் ஆரம்பித்து விட்டது. குனிந்து மெதுவாக அந்தப் புதருக்குள் கையை விட்டுப் பார்த்தான். கையில் கல் தென்பட்டதும், ‘அப்பாடாஎன நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி சடாரென அதை எடுத்துத் தன் டிராயர் பாக்கட்டுக்குள் வைத்து மறைத்துக் கொண்டான்.

எதுவுமே நடக்காததுபோல மெல்ல எழுந்து நடந்த சிறுவன் சற்று தூரம் வந்ததும் ஓட ஆரம்பித்தான். பெரியவர் பக்கத்தில் வந்ததும்தான் தன் வேகத்தைக் குறைத்தான். “என்னடா கண்ணு. கல்லு பத்ரமா இருந்திச்சா? யாரும் கௌப்பிட்டுப் போயிடலயே?”

சிறுவனுக்குப் பெருமை தாளவில்லை. “அதெல்லாம் அவ்ளோ ஈஸியா யாரும் கண்டுபுடிச்சு எடுக்க முடியாது. வாத்யாரே. செடிகொடிங்க நெறையா இருக்கற எடமாப் பாத்துதான கல்லத் தூக்கிப் போட்டேன்.”

அது சரி. நீ மட்டும் எப்டீ ஒடனே எடுத்தாந்த?”

சிறுவன் இன்னமும் குஷியாகி விட்டான். “கரெக்டா எங்க போட்டமின்னு பாத்து வச்சுகிட்டனுல்ல. ஒரு மரத்த அடையாளம் வச்சுத்தான் தூக்கியே போட்டேன். பின்னாடி என்னைக்காச்சும் நிச்சயம் தேவைப்படும்னு எனக்குத் தெரியாதா?” “படே கில்லாடிடா நீ. சரி சரி. வெளில எடுத்துராத. யாரு கண்ணுலயும் படாம பத்ரமா வச்சுக்க!” எனச் சொல்லிவிட்டுப் பெரியவர் கிரிவலத்தைத் தொடர, சிறுவனும் தன் டிராயர் பாக்கட்டை இறுக்கப் பிடித்தவாறே அவர் பின்னால் நடந்தான்.

நடந்து நடந்து இருவரும் ஒரு மண்டபம் அருகே வந்ததும் பெரியவர் சற்றே நின்றார். “ராஜா. அந்தத் தங்கக் கல்ல எடு. வித்தா எவ்ளோ தேறும்னு ஒரு கணக்கு பாக்கலாம்.” என்றபடி எதிரே இருந்த ஒரு மேட்டில் அமர்ந்தார்.

இதற்குத்தானே சிறுவன் இவ்வளவு நேரம் காத்திருந்தான்? ஏதோ பெரிய ரகசியத்தை வெளியிடுபவன்போல டிராயர் பாக்கட்டுக்குள் கையை விட்டு, மெதுவாக எடுத்தான். கைவிரல்களை இறுக்க மூடியவாறே பெரியவர் முன்னால் நீட்டி, பின்னர் மெல்ல விரல்களை விரித்துக் காட்டினான்.

அட, ஒரு அரை கிலோ தேறும் போல இருக்கே.” என்றபடி குனிந்து பார்த்த பெரியவர் சிரித்தார். “என்னடா. எதையோ கருங்கல்லத் தூக்கிகிட்டு வந்து நிக்கற?”

சிறுவனுக்கு ஒரே அதிர்ச்சி! “என்ன வாத்யாரே சொல்ற?” கையில் இருந்த கல்லைக் குனிந்து பார்த்தான். அது பார்ப்பதற்கு சாதாரணக் கல்லைப் போலத்தான் இருந்தது.

நாமதான் அவசரத்துல வேற ஏதாச்சும் கல்ல எடுத்துட்டு வந்துட்டமோ?’ சிறுவன் குழப்பத்தோடு அந்தக் கல்லை நன்றாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கொஞ்சம்கூட பளபளப்பையே காணவில்லை.

வாத்யாரே. எதுக்கும் நானு ஒரு தடவ போயி நல்லாப் பாத்து எடுத்துட்டு வந்துர்றேன்.” எனச் சிறுவன் கிளம்பினான். புறப்பட்ட சிறுவனைப் பெரியவரின் பலத்த சிரிப்பு தடுத்து நிறுத்தியது.

ஆம்! கோவணாண்டிப் பெரியவர் சிறுவனைப் பார்த்துக் கையை நீட்டியபடி, வயிறு குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்தார். “ஏண்டா. கைக்குக் கெடச்ச தங்கக் கல்ல எங்கயோ கோட்டை விட்டுட்டு வந்து நிக்கிறியே? உன்ன மாதிரி மடையனப் பாத்ததே இல்லடா.”

சிறுவன் குழப்பத்தோடு பதில் சொன்னான். “ என்னா நடந்துச்சுன்னே புரியல வாத்யாரே. கரெக்டா வச்ச எடத்துலேந்துதான் எடுத்தாந்தேன். எப்டீ மாறிப் போச்சுன்னே தெரியல.”

அது வேற ஒண்ணுமில்லடா. உன்னோட நம்பிக்கை மாறிப் போச்சுல்ல. அதுனால கல்லும் மாறிப் போச்சு.” பெரியவரின் சிரிப்பு இன்னும் அதிகரித்தது.

நம்பிக்கையா? அதுக்கும் கல்லுக்கும் என்னா சம்பந்தம்?”

ஆமா ராஜா. ‘இது தங்க மலைடான்னு சொன்னப்ப நீ நம்பாமவெறும் கல்லுதானன்னு நெனச்ச. அண்ணாமலையாரு தன்னைத் தங்கமாக் காட்டுனாரு. நீதங்கம்னு நெனச்சு எடுத்தாந்தப்ப அதையே சாதாரணக் கல்லாக் காட்டுறாரு. அவ்ளோதான்... இத வச்சே உன்னோட குரு நம்பிக்கை என்னான்னு புரிஞ்சுக்க.

வாத்யாரே...” எனச் சிறுவன் இழுத்தான். அவனைப் பேச விடாமல் பெரியவர் மேலும் தொடர்ந்தார். “என்னைக்கு வாழ்க்கைல ஒருத்தர வழிகாட்டின்னு ஏத்துக்கிட்டியோ, அதுக்கப்பறம்- அவரு சொல்றத முழுசா நம்பணும். செய்யணும். அதுதாண்டா தெய்வீகத்துல கடைத்தேற ஒரே வழி. அத வுட்டுட்டு இது மாதிரி அரைகுறையா அலைஞ்சா... என்னாத்த செய்றது?”

நல்லவழி காட்ட ஒருத்தரு ரத்தமும், சதையுமா உடம்பெடுத்து கூடவே இருக்கறப்பவே இப்டீ இருந்தீன்னா... உனக்கெல்லாம் எப்டீடா கடவுள் காட்சி தருவாரு?”

சிறுவனுக்கு ஆவல் பிறந்து விட்டது. “வாத்யாரே. கடவுளப் பாக்கறதுன்னா என்னா? அது எப்டீ இருக்கும்?”

கடவுள் காட்சிங்கறது யாராலயுமே வார்த்தையால சொல்ல முடியாத ஒரு அனுபவம்டா. அனுபவிச்சவங்களாலத்தான் அத முழுசா உணர முடியும். எவ்ளோதான் சொன்னாலும் புரியாதுடா.”

கொஞ்சம் புரியற மாதிரித்தான் சொல்லேன்.” சிறுவன் கெஞ்சினான். “கோடிக்கணக்கான ஜீவனுங்கள்ல சாமியப் பாக்கறதுக்காக வாசல் வரைக்கும் போற தகுதி பத்து பேருக்குத்தான் கெடைக்குது. அந்தப் பத்து பேர்லயும் வாசலத் தாண்டி உள்ள போறவனுங்க அஞ்சே அஞ்சு பேருதான். அந்த அஞ்சு பேர்லயும் அதுக்கப்பறம் உள்ள போறவனுங்க ரெண்டு பேருதான். அந்த ரெண்டுலயும் ஒருத்தருதான் கருவறைக்குள்ளாற போறாரு.”

மத்தவங்க ஏன் உள்ளாற போவல. வாத்யாரே?”

அவங்களுக்கு அதுவரைக்கும் போகத்தாண்டா தகுதியே. போதாதா? அந்த நெலம வர்றதுக்கே என்னா பாடுபடணும்?”

சரி வாத்யாரே. கடைசியா ஒருத்தரு உள்ளாற போனாரே. அவரு என்னா ஆனாரு? அவராச்சும் கடவுளப் பாத்தாரா?” சிறுவன் கேள்விக்கு மேல் கேள்விகளாக அடுக்கினான்.

யாருக்குடா தெரியும்? உள்ளாறப் போன ஆளுதான் வெளியவே வரலயே. ஆண்டவனுக்குத்தான் தெரியும். அதுனாலத்தான்சாமி அறிவாரடி. அதை சாமி அறிவாரடின்னு பாடி வச்சாங்க பெரியவங்க.”

ஒண்ணுமே புரியலயே. வாத்யாரே. எனக்குப் புரியற மாதிரி ஏதாச்சும் சொல்லேன்.” சிறுவன் கெஞ்சினான்.

சரிடா. கேட்டுக்க. நாம சுத்தி வர்றமே. இந்த அண்ணாமலையாரு அடிமுடி காண முடியாத ஜோதிப் பிழம்பா ... அப்றம் தங்க மலையா, மரகத மலையா எல்லாம் காட்சி தந்தவரு. என்னைக்கு அதெல்லாம் தானாவே ஒனக்குத் தெரியுதோ, அன்னைக்குக் கடவுளப் பாக்கற தகுதி வந்துடுச்சுன்னு புரிஞ்சுக்க. ஏன், கடவுளப் பாத்ததா தாவே வச்சுக்கலாம்.”

வாத்யாரே, எப்ப எனக்கு அந்த நெலம வரும்?”

அதுவா? என்னைக்குக் கல்லு, மண்ணு, தங்கம், வைரம், நல்லது, கெட்டது எல்லாத்தையும் ஒண்ணாப் பாக்கற மன நிலை வருதோ, அன்னைக்குத் தானாவே வரும்.” என்ற பெரியவர் சற்று நிறுத்தி, சிறுவனை உற்றுப் பார்த்தார்.

ஏண்டா, இம்மா துண்டு தங்கத்தப் பாத்ததுமே, மனசு எப்டீ எப்டீயெல்லாமோ மாறுதே. நாமல்லாம் என்னைக்குடா கடவுளப் பாக்கப் போறோம்?” பெரியவரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினான் சிறுவன்.

சரி சரி. கைல இருக்கறத தூக்கிப் போட்டுட்டு வா. ஆரம்பிச்ச கிரிவலத்தையாவது முடிப்போம்.”

தனக்கு என்று எதையும் தேடாமல் இருக்கும் நிலையே ஞானத்தின் முதல் நிலையாகும். இந்த மனோ நிலையைப் பெற்றவர்களே கல்லையும் வைரத்தையும், தங்கத்தையும் தகரத்தையும் ஒன்றாய்க் காணும் நிலையை அடைவார்கள். எனவே தியாகம்தான் அனைத்திற்கும் அடிப்படை. தியாகத்தின் இன்பப் பேரூற்றாக இறைவன் இருப்பதால்தான் இறையை, இறைமையை, இறைவனை தியாகராஜன் என்று பாடிப் பரவி புகழ் மாலை சூட்டுறோம்


இவ்வாறு ஞானத்தில் ஆரம்ப நிலையை அடைந்தவர்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தவே சற்குருமார்கள் அத்தகைய அடியார்களைத் தங்கள்பால் ஈர்த்து அவர்களுக்கு உத்தம இறைநிலைகளை எல்லாம் உணர்த்துகிறார்கள். அப்போது அவர்கள் கடவுள் உண்டு என்பதை உறுதியுடன் கூறி அவ்வாறு கடவுளைத் தரிசிப்பதற்காக மூர்த்தி, தீர்த்தம், தல மகிமைகளை எடுத்துரைக்கிறார்கள்.

No comments:

Post a Comment