Wednesday, 30 August 2017

அகத்தியரை போற்றும் ஒரு கவிதை

அன்னைத்தமிழை ஈன்றெடுத்த
அகத்தியனே போற்றிபோற்றி ...
அம்மையப்பன் அருள்பெற்ற
ஆதிமுனியே போற்றிபோற்றி ...

குழந்தைமுருகனை குருவாய்எண்ணும்
கும்பமுனியே போற்றிபோற்றி ...
கும்பத்தில் கருவான
குள்ளமுனியே போற்றிபோற்றி ...

அண்டமெல்லாம் தமிழ்பரப்பிய
வண்டமிழே போற்றிபோற்றி ...
எழுத்திலக்கணம் தந்தருளிய
இறைவனே போற்றிபோற்றி ...

பதினெட்டு சித்தர்களின்
மூத்தவனே போற்றிபோற்றி ...
சித்தநூல்கள் பலஅருளிய
முதல்மருந்துவா போற்றிபோற்றி ...

நீர்கொடுத்த செந்தமிழை
நான்பரப்ப வழிசெய்வாய் ...
நான்போகும் வழிதன்னை
நீயேநின்று தளம்செய்வாய் ...

காலத்தால் அழியாத
கவிதைகளை எனக்கருள்வாய் ...
கன்னித்தமிழை அலங்கரிக்க - என்
கற்பனைக்கு உயிர்தருவாய் ...

உம்மைத்தவிர எனக்குதவ
உலகில்யாரும் இல்லையப்பா ...
உம்மைத்தவிர எவரிடமும்
உதவிகேட்க தோணலப்பா ...

உயிர்முதலும் மெய்முடிவும்
உம்பெயரில் நான்கண்டேன் ...
எம்முடைய உயிர்மெய்யாய்
உம்மைத்தானே நான்கொண்டேன் ...

என்றும் எழுத்தாணி முனையில்

கவிஞர் செந்தமிழ்தாசன்

No comments:

Post a Comment