மேலும், நான் பறந்து செல்வதற்கான பாக்கிய நுட்பம், பரமனாகிய தங்களை அழைப்பதற்கான அளவை நுட்பம், இவற்றை மறறைப்பதற்குகந்
த கால நுட்பம், மகாவிஷ்ணுவை வருவிப்பதற்கான கால நுட்பம், மாய நித்தைகளை மனம்போல் செய்யும் பாக்கியம், லோக மாதாவாகிய சக்தியை வரவழைக்கும் கால நுட்பம், எப்போதும் இளமையாக இருப்பதற்கான பாக்கியம், காளியை அழைத்துக் கட்டளையிட்டு வேலைவாங்கும் கால நுட்பம், பேயக் கணங்களையெல்லாம் அழைத்துக் கொண்டு வருகின்ற நற்கால நுட்பம், தேவர் முதலான வானவர்களை எல்லாம் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அழைத்து வருகின்ற கால நுட்பம், மும்மூர்த்திகளையும் என்னிடம் விரைவாக அழைக்கின்ற காலநுட்பம், எனக்கு இடறு செய்ய நினைப்போரை வெல்லுவதற்கான விவேகமான வித்தைகள் முதல், ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் அறிவதற்கான அளவையும் எனக்கு கவனமாகத் தந்தருளும்.
என்னிடம் எல்லாரும் ஏமாற்றமடையும் விதத்திலும் நானுரைக்கும் போளுரையால் பிறரைப் பேதலிக்க வைக்கும் வித்தைகளும், என்னுடைய உருட்டுப் புரட்டுகளால் ஏனையோர் அச்சப்படும் அளவில் எனக்கு மதப்பான தன்மையும் வேண்டும்.
வாள், வெடி போன்ற ஆயுதங்களை உருவாக்கும் வல்லமையும் அவற்றை அடுத்தார் அறியாதவண்ணம் பதுக்கி வைத்து உலக இயக்கத்திற்கு உற்ற நேரத்தில் ஊறு விளைவிக்கும் தந்திரமும் எனக்குத் தர வேண்டும்.
யானைகளை என்னுடைய கட்டுக்குள் அடக்கிவைத்து அவற்றை வேலை வாங்குகின்ற தந்திரமும், மிகக்கொடிய மிருகங்களையும், விஷம்கொண்ட சீவசந்துக்களையும் அடக்கியாளும் தந்திர வித்தைகளும், அரண் போன்ற காவலையும் அயர வைத்துப் புகுகின்ற கடினமான வித்தைகளும், தேவைப்படும்போதெல்லாம் பயன்படத்தக்க, நவரத்தினம், நவதானியம் போன்ற வஸ்துக்களும் தந்து இந்தப் பெண்ணோடு சிற்றின்ப சுகம் அனைத்தும் பெற்று லௌகீகமாக வாழ்வதற்கான வரங்களும் வேண்டும்.
அத்துடன் என்னுடைய விந்துவழிக் குலங்கள் பெருமளவில் உருவாகவும், அவர்களெல்லாம் உற்றார் உறவினர்களோடு பெருவாழ்வு வாழவும், எனக்காக நீங்கள் உருவாக்கித் தந்த இந்த மங்கையை எந்தத் தருணத்திலும் மறவாத அளவில் என்னுடைய சிந்தனைகள் யாவும் இந்தப் பெண்ணாளிடம் இருப்பதே அல்லாமல் இன்னொரு சிந்தனை எனக்கு ஏற்பட்டுவிடாத வரத்தையும் தந்தருள வேண்டும் என்று கலிநீசன் சிவபெருமானிடம் கேட்டான்.
சிவபெருமானிடம் கலிநீசன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுப்பதற்கு சிவபெருமான் சித்தமானார். ஆனால், அந்த வரங்களை அவனுக்கு எவ்வண்ணமாகக் கொடுப்பது என்று சற்று யோசித்தார். அந்த யோசனையில், உமையவளிடம் அது பற்றி வினவினால் விடை கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தார்.
உடனே, தன் அருகில் அமர்ந்திருக்கும் உமையவளைப் பார்த்து, முப்பத்து இரண்டு அறங்களுக்கும் மூலக்காரணமாக விளங்குகின்ற நிறைவான பெண்ணே ! என்னுடைய சகல சம்பத்துக்களுக்கும் காரணமாகியவளே ! உன்னுடைய குயில் போன்ற குரலால் எனக்கோர் உபாயத்தை உடனே சொல்லு என்று தன் உரையாடலைத் தொடங்கினார்.
இப்போது இந்த வினோதமான நீசன், இயல்புகளுக்கு மாறுபாடான எண்ணற்ற வரங்களை என்னிடம் கேட்டு விட்டானே, அவன் கேட்ட அந்த வரங்களை என்ன விதமாக நாம் இவனுக்குக் கொடுக்கலாம் என்பதை எனக்கு எடுத்துச் சொல் பெண்மயிலே என்று உமையவளிடம் சிவபெருமான் இதமாகக் கேட்டார்.
அதைக் கேட்ட உமையவளோ, ஆதி முதல்வனாகிய அந்தச் சிவபெருமானின் பாதார விந்தங்களைப் பணிந்து சொல்லுகிறாள், சுவாமி, இந்த நீசன் சாஷ்திரங்களும், வித்தைகளும், தந்திரங்களும் வேண்டுமெனக் கேட்டதினால், அவற்றை அவனுக்குக் கற்பிக்கும் ஆற்றலுடைய சூட்ச்சுமமான ரகசியச் சித்தன் ஒருவனை உடனே உருவாக்குங்கள் என்றாள்.
உமையவளின் அவ்வுரையால் உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் முற்றும் அறிந்ததோர் சித்தாதியைத் தன் மனதிற்குள்ளேயே உருவாக்கினார். அந்தச் சித்தாதியோ ஈசனின் அகத்திலிருந்து வெளிப்பட்டார். ஆகவே அகத்தீசன் என்று பெயற் பெற்றார்.
உலகோர் பார்வையில் ஒரு சித்தனைப் போல் காட்சியளிக்கும் அந்த அகத்தீசன், சகலகலா வல்லவனாக, சாஸ்திரங்கள் அறிந்தவனாக, சூத்திரச் சித்தாதியாக, மூலக்கருவை முற்றும் உணர்ந்தவராகத் தோன்றினார்.
அகத்தீசரின் தோற்றத்தைக் கண்டு அங்கிருந்தோர் அனைவருமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார்கள். ஈசனின் எண்ணத்தால் தோன்றிய இந்த அகத்தீசர் எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டாரோ அதற்கு உகந்தவர்தான் என்று பாராட்டி தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
அப்போது சிவபெருமான், அகத்தீசரரைப் பார்த்து, நல்ல பல கலை ஞானங்களோடு தோன்றிய சாஸ்திரதாரியாகிய நீ உன்னிடம் என்னென்ன சாஸ்திரங்கள் எது எதுக்கு உள்ளனவோ அவற்றையெல்லாம் இதோ நிற்கின்ற நீசனுக்குக் கற்பித்துக்கொடு என்றார்.
அதைக் கேட்ட அகத்தீசர், நீசனை அழைத்துச் சென்று, ஆதியில் உதித்த வேதம் முதல் மைபோட்டுப் பார்க்கும் மாரண வித்தைகளையும், உலகோர் வியக்கத்தக்க அற்புதமான விஞ்ஞான அறிவையும், மந்திரம் முதலானவற்றைச் செய்வதற்கான அச்சர அனுஸ்டானங்களையும் கற்பித்துவிட்டு, நீ சிவபெருமானிடம் கேட்ட எல்லா வரங்களையும் பெறுவதற்கும் செய்வதற்குமான அத்தனை வித்தைகளையும் உனக்குக் கற்பித்துவிட்டேன் என்று அகத்தீச மாமுனிவர் நீசனிடம் கூறினார்.
சிவபெருமானின் கட்டளைப்படியாக, அனைத்து வித்தைகளையும் அகத்தீசர் மூலமாகக் கற்றுக்கொண்ட நீசன் அவற்றையெல்லாம் கையிலே பெற்றுக் கொண்டவனாக அங்கிருந்து புறப்பட்டான். அப்போது அகத்தீசர் சிவபெருமானைப் பார்த்து சொல்லுகிறார். சுவாமி, உருத்திராட்சத்தையும் அறுகம் புல்லையும் அணிகலனாகக் கொண்டுள்ளோனே, ஆதியும் அந்தமுமாகிய தங்களையும் கூட தன் வயமாக்குவதற்கான வித்தைகளையும், அவனுக்கு மரணமே வரமுடியாத வித்தைகளையும், அவன் மூலமாக ஆக்கப்படுபவை யாவுமே நிசமானது என்றும் நிலையானது என்றும் நினைக்கத் தக்க வித்தைகளையெல்லாம் நீசனுக்குக் கற்றுக் கொடுத்துவிட்டோம்.
காளை வாகனத்திற்கு அதிபதியாகிய சிவபெருமானே, இனி இந்தக் கலிநீசனின் மீது ஒரு வேளை உங்களுக்குக் கோபம் வந்து, அவனைக் கொல்லவேண்டும் என்று நிலைத்தால் கூட அவனை வெல்லுவதற்கு எவ்வகை உபாயமும் இல்லையே, இந்த நீசன் உலகத்தில் இருந்து ஆளுகின்ற காலம் வரை அநியாயம் செய்வதே அல்லாமல், நியாயத்தைப் பற்றி நினைத்துக் கூட பாரக்கமாட்டானே.
அவன் செய்வதெல்லாம் படுபாதகச் செயல்களாகத் தான் இருக்குமே தவிர, நற்செயல்களில் சற்றுகூட நாட்டம் வைக்கமாட்டானே. அதோடு கூடி மகாவிஸ்ரீ்ணுவின் சக்கராயுதத்தையும், அவருடைய திருமுடியையும் கொண்டு போகிறானே. இவை இரண்டும் இந்த நீசனிடத்திலே இருக்குமானால் எவர் ஒருவராலும் இந்தப் பாதகனை அழித்துவிட முடியாதே என்று அகத்தீசமாமுனிவர் சிவபெருமானிடம் சொல்லிக்கொண்டே இருந்தார்.
அப்போது ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணு சாதாரண யாசகனைப் போல் தலைவிரி கோலமாக, கிழிந்த ஆடைகளைப் பூண்டு கொண்டு, கையில் திருவோடு கூட இல்லாத நிலையில், நீசனின் எதிரே சென்று, அவனிடம் பேச்சுக் கொடுத்து அவனிடமிருந்து சில வார்த்தைகளை வரவழைத்தார்.
அப்பனே, நீ சிவபெருமானிடம் செப்பவொண்ணா வரங்களை யாசித்துப் பெற்று வந்து கொண்டிருக்கிறாய் என்பதை அடியேன் அறிவேன். அந்த வரங்கிளல் சிறிதளவு, பிச்சைக்காரனாகிய எனக்கு தந்துவிட்டுப் போ. நீ தராமல் போனால் நான் உனக்குச் சாபமிடுவேன் என்று அந்த நீசனிடம் பயம் காட்டினார்.
அப்போது அந்த நீசன் ஆண்டிவடிவிலே நின்று கொண்டிருக்கும் அந்த அனாதி ரட்சகனான மகாவிஷ்ணுவைப் பார்த்துச் சொல்கிறான். இரப்பனோடு சண்டை போடுவதற்காகவாடா இத்தனை வரங்களை ஈசனிடம் வாங்கிக் கொண்டு வருகிறேன். இப்போது என்னிடம் சண்டையிடுவதற்கு மகாவிஷ்ணுவே வந்தாலும் அவனை உண்டு இல்லை என்றாக்கி விடுவேன். பேயனே உன்னிடம் எனக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது போடா என்று, தன் முன்னிலையில் நிற்பது மாயன் என்றறியாமல் இளப்பமாக எண்ணி வசை பாடினான்.
அதைக் கேட்ட மகாவிஷ்ணு நீசனைப் பார்த்துச் சொல்லுகிறார். பிச்சைக்காரனான எனக்குப் பலமில்லை என்று நினைத்துக் கொண்டுதானே இப்போது அச்சமே இல்லாமல் ஆணவத்தோடு பேசுகிறாய்? பரதேசியாகிய என் பலத்தையும் மகாபாதகனாகிய உன் பலத்தையும் சண்டையிட்டுப் பார்த்தால் தானே புரியும். பார்ப்போமா என்றார்.
மகாவிஷ்ணு இப்படிச் சொன்னதுமே, கோவர்தன கிரியைக் குடையாகப் பிடித்த அந்த கோபாலனைப் பார்த்து நீசன் சொல்லுகிறான். அடே பரதேசி உன்னிடம் காலாட் படையுமில்லை, கையிலொரு ஆயுதமும் இல்லை, யானைப் படையுமில்லை, தடிகூட கையில் இல்லை. என் கையிருப்பது போன்று ஒரு சக்கரமாவது உன்னிடத்தில் இருக்கிறதா? அதுகூட இல்லை. இப்படி பரட்டைத் தலையோடு உடுக்க உடையின்றி ஒரு வயிற்றுக் கஞ்சிக்கு ஊர் ஊராக அலைந்து திரியும் உன்னோடு நான் சண்டையிட்டால், எனக்கு ஆண்மை இல்லை என்று அழகிய ஆரணங்குகளெல்லாம் என்னைக் கேவலமாக எண்ணி ஏசுவார்கள்.
என்னை இளப்பமாகப் பேசாதே இரப்பனே இங்கிருந்து ஓடிவிடு. சிவன், பிரம்மா, விஷ்ணுவாகிய மூவர் முதல் முப்பத்து மூன்று கோடி தேவர்களையெல்லாம் என் அடிமைகளாக்கி அவர்களை வேலை வாங்குவதற்கான சிவமூலம் பெற்றுள்ள நான், எதற்குமே உதவாத உன்னோடு சண்டையிட்டால், மிகக் கேவலமான பெண்கள் கூட என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். எனவே, உடனே இங்கிருந்து நீ ஓடிப் போய்விடு என்றான்.
No comments:
Post a Comment