Sunday, 27 August 2017

அகத்திய முனிவர்


அகத்திய முனிவர் எக்காலத்தும் இருப்பவர். எல்லையற்ற ஆற்றல் மிக்கவர். எல்லோராலும் வழிபடத் தக்கவர். தலை சிறந்த சிவ பக்தர். சிவ பார்வதியர்களின் திருக்கல்யாணம் இவருக்காகவே பிரத்தியேகமாகக் காட்டப்பெற்றது. "அகத்தியனை உகப்பானை" என்று தேவாரமும் இவரது பெருமையை அறிவிக்கிறது. தமிழ் இலக்கண நூலாகட்டும், மருத்துவ நூலாகட்டும், நாடி சாஸ்திரமாகட்டும், புராணங்களாகட்டும், தேவாரத் திரட்டாகட்டும், இம் முனிவரோடு தொடர்புடையன ஆகின்றன. வடமொழியிலும் இவர் புகழ் பல நூல்களில் பேசப்படுகிறது. இவர் வழிபட்ட சிவத்தலங்கள் அநேகம். ஆகவே, இறைவனும் அப்பூஜையை உகந்தவராக அகஸ்தீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அவ்விடங்களில் காட்சி அளிக்கிறார். அவற்றில் ஒன்று , வேதாரண்யத்திலிருந்து, கோடிக்கரை செல்லும் வழியிலுள்ள அகத்தியான்பள்ளி என்ற பாடல் பெற்ற ஸ்தலம்.

அகத்தியான்பள்ளி ஈசனை ஞான சம்பந்தர் ஒரு திருப்பதிகத்தால் பாடியுள்ளார். சமண பௌத்த சமயங்கள் ஓங்கியிருந்த காலத்தில் சைவத்தை மீண்டும் ஸ்தாபிக்க அவதரித்தபடியால், சம்பந்தப் பெருமானது பாடல்களில் அச்சமயங்களைக் கண்டிப்பதைக் காணலாம்.அகத்தியான் பள்ளித் திருப் பதிகத்திலும், செந்துவர் ஆடை உடுக்கும் பௌத்தர்களும், வெற்றரையுடன் திரியும் சமணர்களும்பேசும் பேச்சு மெய் அல்ல என்றும் அவை எல்லாம் பொய் மொழி என்பதை,

" செந்துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி
புந்தி இலார்களும் பேசும் பேச்சவை பொய்ம்மொழி .."

என்கிறார்.

இனி, குருநாதர் நமக்கு உபதேசிப்பதைக் காணுங்கள்: எல்லார்க்கும் ஈசனாகவும், பிரானாகவும் திகழும் சிவபெருமான், வேத நாவினன். வேதங்களால் வழி படப் படுபவன். வேத வடிவாகவே இருப்பவன். எனவேதான், அப் பெருமானை, "வேதியா, வேத கீதா.." என்று தேவாரம் வாயார அழைக்கிறது. அனைத்து உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் இப்பரம்பொருள், தானே அந்தணணாகி அருள்பவன். எனவேதான், வேத வாயினராகிய சம்பந்தர், மறையின் பொருளாய் விளங்கும் பரமனை, " அந்தணன் எங்கள் பிரான்.." என்று போற்றுகிறார்.



அகத்தியான் பள்ளியில் வீற்றிருந்து, உலகுக்கு ஓர் ஒண் பொருளாகி,மெய் சோதியாகத் திகழும் எம்பெருமானை ச் சிந்தை செய்யுங்கள். அப்படிச் சிந்தித்தால், உங்களது பாவ வினைகள் எல்லாம் சிதைந்து ஓடி விடும் என்கிறார் திருஞான சம்பந்தர்.

" அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான்பள்ளியைச்
சிந்திமின் நும் வினையானவை சிதைந்து ஓடுமே. "

என்பது அப்பாடலின் ஈற்றடி.

இவ்வாறு, அகத்தியான்பள்ளியைச் சிந்திக்கும்போது, அகத்திய முனிவரையும் தியானிக்க வேண்டும்.பதினெட்டு சித்தர்கள் வரிசையில் அகத்தியருக்குத் தனி இடம் உண்டு. அண்மையில், அகத்திய நாடி வாசிக்கும் ஒரு அன்பரின் வலைப் பதிவைக் கண்ட போது, அம்முனிவரிடம் பக்தி பல மடங்கு அதிகரித்தது.

அகத்தியான் பள்ளி ஈசனது அருள் பெற்றவர் ஆதலால், தன்னைத் தஞ்சம் என அடைந்தவர்களை இன்றும் அகத்திய முனிவர் காப்பாற்றி வருகிறார் என்பதை நாடி மூலம் தெரிவித்திருந்த அந்த அன்பருக்கும் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பலரும் அறியச் செய்த அன்பருக்கும் நமது நன்றி உரியது.

அகத்திய நாடி பார்க்கும் அன்பரைத் தேடி வந்த ஒருவர், கால்கள் இரண்டும் சுவாதீனம் அற்றவர். தனவந்தர். நாடியைப் பார்த்தால் அதிர்ச்சி காத்திருந்தது. தனது தாயைக் காலால் உதைத்ததற்கான தண்டனையை இப்பிறவியிலேயே அவர் அனுபவிக்கிறார் என்கிறார் அகத்தியர். ஒரு சிறுவனை சிலையைத் திருடிவர மறுத்ததற்காக அவனது வயிற்றில் உதைத்துத் துன்புறுத்தினார் அந்தச் செல்வந்தர். அச்சிறுவனது பெற்றோர்கள் பைத்தியம் பிடித்தவர்களாகத் திரிந்தனர்.தனது செயலுக்குப் பிராயச்சித்தம் தேடிய அப்பணக்காரரை அகத்திய நாடி என்ன சொல்லியது தெரியுமா? "அச்சிறுவன் கடுமையான காய்ச்சலுடன் காளையார் கோவிலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவனையும்,அவனது பெற்றோரையும் உடனே சென்று காப்பாற்று; இல்லையேல் உனது கைகளும் சுவாதீனம் இழந்து விடும் " என்று எச்சரித்தது.

அகத்தியர் சொல்லியதுபோல் செய்து இருபது நாட்களுக்கு மேலாகியும், கால்கள் குணமாகாதது கண்டு, அந்த செல்வந்தர், மனம் நொந்துபோய், மீண்டும் நாடியைப் பார்க்க வேண்டியது தான் என்று நாற்காலியை விட்டு எழுந்தார். என்ன ஆச்சர்யம்! யார் துணையும் இன்றி, நடக்கவும் ஆரம்பித்தார். முனிவரின் கருணையை எண்ணி எண்ணிக் கண்ணீர் விட்டார். இப்போது , தானாகவே வெளியிலும் நடக்கிறார். அகத்தியருக்கு ஆலயம் கட்டும் பணியிலும் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இப்படி விவரிக்கிறது அந்த வலைப்பதிவு.

அகத்திய முனிவர் மேரு மலையை அடக்கியவர் மட்டும் அல்ல. மேருவைப்போல் வரும் நமது பாவ வினைகளையும் சிவனருளால் நீக்கி அருளுபவர்.


இருவரையும் ஒருசேரத் துதிக்க நாமும் அகத்தியான்பள்ளிக்குச் செல்லலாம்

ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம்

அகத்தியர் இறைச்சித்தன்
சித்தர்கள் பீடம்
அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கும் இடம்
கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம்.
கைபேசி : 73738 38104, 95850 18295, 73738 35583

இணையதள வரைபட முகவரி
https://www.google.co.in/maps/place/11%C2%B016'03.0%22N+77%C2%B002'19.1%22E/@11.2593361,77.0383308,14z/data=!4m14!1m7!3m6!1s0x3ba8e53c391a7a2f:0xcc90c25cbc48be5!2z4K6q4K-K4K6Z4K-N4K6V4K6y4K-C4K6w4K-NLCDgrqTgrq7grr_grrTgr43grqjgrr7grp_gr4EgNjQxNjk3!3b1!8m2!3d11.2568639!4d77.0406147!3m5!1s0x0:0xa13082299b858af8!7e2!8m2!3d11.2675005!4d77.0386273?hl=ta



No comments:

Post a Comment