Wednesday, 30 August 2017

அப்பர் தேவாரம் விடம்தீர்த்த பதிகம்

அப்பர் தேவாரம்

விடம்தீர்த்த பதிகம்

குறிப்பு: அப்பூதியடிகளின் மகன் நாகம் தீண்டி இறந்த போது அவனை உயிர்பிக்கும் பொருட்டு எண் அலங்காரத்துடன் அப்பர் சுவாமிகள் பாடிய பதிகம் இது.

ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணலங்காரம் இருப்பதால் பதிகத்தை வெட்டி போடுதல் பொருந்தாது என்று முழுமையும் தருகிறேன்🙏🏻

பாடல்


ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே

இரண்டு கொலாம் இமையோர் தொழு பாதம்
இரண்டு கொலாம் இலங்கும் குழை பெண் ஆண்
இரண்டு கொலாம் உருவம் சிறு மான் மழு
இரண்டு கொலாம் அவர் எய்தின தாமே.

மூன்று கொலாம் அவர் கண் நுதல் ஆவன
மூன்று கொலாம் சூலத்தின் மொய்யிலை
மூன்று கொலாம் கணை கையது வில் நாண்
மூன்று கொலாம் புரம் எய்தன தாமே.

நாலு கொலாம் அவர் தம் முகமாவன
நாலு கொலாம் சனனம் முதல் தோற்றமும்
நாலு கொலாம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு கொலாம் மறை பாடின தாமே.

அஞ்சு கொலாம் அவர் ஆடரவின் படம்
அஞ்சு கொலாம் அவர் வெல் புலன் ஆவன
அஞ்சு கொலாம் அவர் காயப்பட்டான் கணை

ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன
ஆறு கொலாம் அவர்தம் மகனார் முகம்
ஆறு கொலாம் அவர் தார் மிசை வண்டின் கால்
ஆறு கொலாம் சுவை ஆக்கின தாமே.

ஏழு கொலாம் அவர் ஊழி படைத்தன
ஏழு கொலாம் அவர் கண்ட இருங்கடல்
ஏழு கொலாம் ஆளும் உலகங்கள்
ஏழு கொலாம் இசை ஆக்கின தாமே.

எட்டு கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்
எட்டு கொலாம் அவர் சூடும் இன மலர்
எட்டு கொலாம் தோள் இணையாவன
எட்டு கொலாம் திசை ஆக்கின தாமே.

ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன
ஒன்பது போல் அவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போல் அவர் கோலக் குழற்சடை
ஒன்பது போல் அவர் பாரிடம் தானே.

பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்
பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன
பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை
பத்து கொலாம் அடியார் செய்கை தானே


பொருள்

சிவபிரானது உள்ளம் அவர் இருக்கும் ஒப்பற்ற கயிலை மலை போன்று மிகவும் உயர்வானது. சிவபிரானின் கருணையால் ஒப்பற்ற நிலைக்கு உயர்ந்த சந்திரனை தனது சென்னியில் சூடியவர் சிவபெருமான். தனது கையில் வெண் தலையை ஒப்பற்ற பலிப் பாத்திரமாக ஏந்தியுள்ளவர் சிவபிரான். அவரது வாகனமாகிய இடபமும் ஒப்பற்றது.

இமையோர் தொழும் சிவபிரானின் பாதங்கள் இரண்டு. அவரது காதினில் அணிந்திருக்கும் ஆபரணம் தோடு, குழை என்று இரண்டு வகையானது. அவரது உருவம் பெண் ஆண் என்று இரண்டு தன்மையையும் கொண்டது. அவர் திருக்கைகளில் ஏந்தியிருக்கும் பொருள்கள் இரண்டு, மான் மற்றும் மழு ஆகும்.

அவரது நெற்றிக்கண்ணையும் சேர்த்து சிவபிரானின் கண்கள் மூன்று. அவர் ஏந்தியிருக்கும் சூலம் மூன்று இலைகளைக் கொண்டது. அவர் கையில் திகழும் வில், மூன்று வேறு வேறு பொருட்களை (வில்லாக இருக்கும் மேருமலை, நாணாகத் திகழ்வது வாசுகி பாம்பு, அம்பாக இருப்பது திருமால் என்று மூன்று பொருட்களை) தனது அங்கங்களாக உடையது. அந்த வில்லில் உள்ள அம்பு எய்யப்பட்டது மூன்று புரங்களை நோக்கி.  

எம்பெருமானுடைய திருமுகங்கள் நான்கு. அவரால் படைக்கப்பட்ட படைப்பு - நிலம், கருப்பை, முட்டை, வியர்வை, இவற்றிலிருந்து தோன்றும் நால்வகையது. அவர் வாகனமாகிய காளையின் பாதங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. அவர் பாடிய வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என்ற நான்கு

சிவபிரான் தன் திருமேனியில் ஆபரணமாக அணிந்திருக்கும் நாகத்தின் படங்கள் ஐந்து. சிவபிரான் வென்ற புலன்கள், மெய், வாய், கண் மூக்கு செவி என்று ஐந்தாவன. சிவபிரானால் காயப்பட்ட மன்மதன் பயன்படுத்தும் பூங்கணைகள், தாமரை, அசோகு, மா, முல்லை மற்றும் கருங்குவளை ஆகிய ஐந்து பூக்கள். சிவபிரான் விரும்பி நீராடுவது, பசுக்களிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம் மற்றும் கோமியம் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சகவியம் ஆகும்.

சிவபிரான் படைத்த வேதத்தின் அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகிய ஆறு. அவரது மகனார் முருகனின் முகங்கள் ஆறு. அவர் சூடியிருக்கும் மாலையைச் சூழும் வண்டுகளின் கால்கள் ஆறு. அவரால் ஏற்படுத்தப்பட்ட சுவைகள், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என்னும் ஆறு வகையில் அடங்குவன.

ஒவ்வொரு ஊழிக் காலத்தின் தொடக்கத்திலும் இறைவன் படைக்கும் உயிரினங்கள் ஏழு வகைப் பட்டன. அவர் படைத்தவை ஏழு கடல்கள், அவர் ஆட்சி செய்வன ஏழு உலகங்கள். அவர் தோற்றுவித்த இசை ஏழு வடிவங்கள் உடையவை.

சிவபிரானின் அழிவில்லாத குணங்கள் எட்டு. அவர் விரும்பி சூடும் மலர்கள் எட்டு. ஒன்றுக்கொன்று இணையாக காணப்படும் அவரது தோள்கள் எட்டு. அவர் ஆக்கிய திசைகள் எட்டு.

இவ்வுடம்பில் அவர் வகுத்த துவாரங்கள் ஒன்பது. அவர் மார்பில் அணிந்த பூணூலின் இழைகள் ஒன்பது. அவருடைய அழகிய சுருண்ட சடை ஒன்பதாக வகுக்கப்பட்டது. அவர் படைத்த நிலவுலகம் ஒன்பது கண்டங்களை உடையது

அவர் அணிந்த ஐந்தலைப் பாம்பின் கண்களும் உயிரைப் போக்கும் பற்களும் பத்து. அவரால் கோபிக்கப்பட்ட இராவணனுடைய தலைகளும் பத்து. அவர் அழுத்தியதால் நொறுங்கிய அவன் பற்களும் பத்து. அப்பெருமானுடைய அடியார்களுடைய தசகாரியம் என்னும் செயல்களும் பத்து




இறந்த மகனை உயிர்கொள்ள செய்யவேண்டுமே என்ற கவலையுடன் அப்பர் சுவாமிகள் பாடியிருப்பார் அதே உணர்வை பாடலில் கொடுத்து மனதை கரைக்கிறார் ஓதுவார் நிச்சயம் கேளுங்கள்🙏🏻

அப்பர் சுவாமிகள் ஏன் இந்த பதிகத்தை எண்ணலங்காரத்துடன் பாடினார் என்கிற கேள்வி எழிலாம்


சித்த மருத்துவத்தில் பாம்பு கடியின் விஷ அளவை எத்தனையாவது வேகம் என்பதை வைத்து கணிப்பார்கள் அதாவது


பாம்பு கடித்த இடத்தில் இருந்து புறப்பட்ட விஷ இரத்தம் உடல் முழுவதும் ஓடி மீண்டும் கடிவாயை அடைந்தால் அது முதல் வேகம் எனப்படும்


இவ்வாறு ஏழு வேகங்கள் கடந்தால் உயிர்போவது உறுதி

உயிர் போனது எண் அடிப்பயைில் என்பதால் போன உயிரையும் எண் அடிப்படையில் அப்பரடிகள் ஈசன் அருளால் மீட்டிருக்கிறார்


இந்த முதல் வேகத்ளால்  பாதிக்கப்படுவது ஜீரண மண்டலம்  ஆகும்.

 இரண்டாம் வேகத்தால் பாதிக்கப்படுவது இரத்த மண்டலம்

 மூன்றாம் ஓட்டத்தால் பாதிக்கப்படுவது சுக்கிலம் எனப்படும் நாளமில்லாச் சுரப்பி மண்டலம்

 நான்காம் ஓட்டத்தால் பாதிக்கப்படுவது நரம்பு மண்டலம்

 ஐந்தாம் ஓட்டத்தால் பாதிக்கப்படுவது தசை மண்டலம்

 ஆறாம் ஓட்டத்தில் எலும்பு மண்டலமும்
 ஏழாம் ஓட்டத்தில் தோல் மண்டலமும் பாதிக்கப்படும்.

No comments:

Post a Comment