Tuesday, 29 August 2017

தமிழின் மேன்மை / மென்மை / தொன்மை / உண்மை / பண்மை

மனுஷன் சுவாசிக்கும்போது ... காற்று உள்ளே போகுது.

காற்று'னு இருக்கற ஒன்னு ... நம் உள்ளுக்குள் வந்ததும் ... நாம் பத்து விதமாக வகைப் படுத்தறோம்!

அதில் ஒன்னு உதானன்.

உதானன்'னா உந்தி, அதாவது நடுவயிறு அல்லது கொப்பூழ்'ல ஆரம்பிக்கற காத்து ...

அந்த நடுவயித்துல ஆரம்பிக்கற காத்தானது ... மேலெழும்பி ...தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய மூனு எடத்துல நெலைச்சி நின்னுட்டு இருக்கறப்போ ...

பல், இதழ், நா, மூக்கு, மேல்வாய் ... ஆகிய உறுப்புகளை ... அழுத்தியோ, அடக்கியோ, இழுத்தோ, உள்ளே தள்ளியோ ...

ஒலியை, ஓசையை எழுப்பறதால கெடைக்கறது ... மொழி !

நம்ம தமிழ் எழுத்து ஒவ்வொன்றும் ... இப்படி உருவாக்கப்பட்டவை.

ஓசையை பிரித்து,

நடைமுறை வாழ்க்கையில் உபயோகிக்கப் படும் ...

பொருட்களையோ, செய்கையையோ ... வைத்துப் பொருத்திப் பார்த்து ...  ஓசைக்கேற்ற வார்த்தைகளாக உருவாக்கப் பட்டவைதான் !

தமிழ் !

உதாரணத்துக்கு ... பழம் என்று சொல்லும்போது ... உடலில் ஒரு கனிவு கிடைக்கும் ... சொல்லில் ஒரு குழைவு இருக்கும் ... புத்தி அதை ஏற்கும்போது இனிமை ஏற்படும்.

எப்போதுமே மென்மைக்கு மவசு ஜாஸ்தி.

நாமதான் நெனைச்சிக்கறோம் ... எதையுமே அழுத்தம் கொடுத்து செஞ்சாத்தான் ... ஒரு காரியம் நடக்கும்'னு.

ஒடனே அதுக்கு ஒரு உதாரணத்தை சொல்லிப்புடுவோம் ...
என்னாதுன்னு?

அழுத பிள்ளைத்தான் பால் குடிக்கும்'னு ...

அழுதா மட்டும் பால் குடிச்சிட முடியுமா ?

வன்முறையை உபயோகப் படுத்துனா மட்டுமே ... ஒரு காரியம் நடந்துடுமா ?

வேற என்ன வேணும்?

மென்மை வேணும்.
 இருக்கறதுலேயே ... மென்மையிலும் மென்மையானது எது?

அன்பு !!!

குழந்தை அழறதே'னு ...  ஒரு மென்மையான அன்பு அம்மாவுக்கு ... உள்ளுக்குள்ளே உருவாகுது ... உடனே பால் சுரக்குது ...

ஆமாம் போ ... கத்துனா கத்திட்டுப் போவட்டும்'னு உட்டுட்டா ... அம்மாவைப் போயி யாரு கேள்வி கேட்க முடியும் ?

யாரும் கேட்க முடியாது.

ஆனாலும்,  "இருடாம்மா ... பசிக்குதா? இதோ அம்மா வந்துட்டேன். பால் குச்சுக்கோமா"னு அன்பு குழைவோட புகட்டறாங்களா? இல்லையா?

அப்புறம் எப்படி சொல்லப் போச்சி ? ... வன்முறையாக, அழுதால்தான் பால் கெடைக்கும்'னு?

அன்பு இருந்தால்தான் ... பால் சுரக்கும் ... மேலும் அன்பு இருந்தால்தான் ... பாலைக் கொடுக்கும், அந்த அம்மாவானது !

வீசி எறிஞ்சா ... யானையையே குத்திக் கிழிக்கற கடப்பாரையானது ... பஞ்சுப் பொதி மேலே செலுத்துனா என்னாகும் ?

தானே தனக்கு பாரமா தெரிஞ்சி ... எதுக்கலிச்சி ... குத்துன திசைக்கு எதிர்திசையில போயி விழுந்துக் கெடக்கும்.

திடமான யானைகிட்ட வேலையப் போட்டுக் காமிக்க முடிஞ்ச கடப்பாரைக்கு ... பஞ்சு பொதிகிட்டே பப்பு வேகாது!

மென்மை ஜெயிக்குந்தானே ?

அதே கடப்பாரையை வைத்து ... பாறையை ஒரு ஓட்டைப் போடப் போனால் ...

பாறை மிக கடினமானதா இருந்தால்,
ஓட்டை போடவே முடியாது ...

அதே சமயம், ரெண்டு கையால இழுத்தாக்க ... பிச்சி எறிஞ்சிட முடியும்னு சொல்லக்கூடிய பலஹீனமான ... வேருக்கு ...

ஓட்டையிட்டு நுழைந்து வேர்பிடிக்க இடம் தரும் அந்தப் பாறை !!!

உண்டா? இல்லையா?

வேரோட மென்மை ... பாறையோட இளகல் ... இரண்டுக்கும் ஊடே இருக்கும் நெகிழும் பண்பு ... இவைகள்தான் ... பாறை அனுமதிக்கறதும் ... வேர் துளைக்கறதும் ...  காரணமா அமையுது !

அன்பு, மென்மை, இளகல், நெகிழ்ச்சி ... இந்த வார்த்தைகளை யெல்லாம் சொல்லறப்போ ... அடிவயிறு குழைந்து ... காற்று உறிஞ்சும் வேகம் மட்டுபட்டு ... சுகானுபவத்தைக் கொடுக்கும் ...

தமிழ் மொழி பேசுதலே தியானம் அன்றி வேறில்லை என்று சொன்னால் ... அது கிஞ்சித்தும் ... மிகையில்லை.

பார்த்துப் பார்த்துக் கோர்த்து இருக்கிறார்கள் ... எழுத்துக்களை ... வார்த்தையாக ...

மேல்பூச்சாக இலக்கணத்தை அளித்து ... வாக்கியமாக வடிவமைத்து ... நம் ஒவ்வொருவருக்கும் மாலையாகத் தொடுத்து அளித்துள்ளார்கள் ... நம் முன்னோர்.

பெருமைப் பட்டுக் கொள்வோம் ... ' உன்னதமான சமுதாயத்தினிடையே ...  நாம் பிறப்பெடுத்து இருக்கிறோம் என்று.

தமிழ் மிக பேசுங்கள் ... அதுவே அனுபூதி !!!

தமிழ் மென்மையானது !

வன்மையால் மென்மையை வெற்றி கொள்ள இயலாது!

"வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்

பட்டுருவும் கோல் பஞ்சில்பாயாது - நெட்டிரும்புப்

பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்

வேருக்கு நெக்கு விடும்"

- ஔவையார்

( செப்படு வித்தை நூலிலிருந்து)

No comments:

Post a Comment