Tuesday, 29 August 2017

நீர் தத்துவம் - ஆசமனம் என்னும் எளிய வழிபாடு

நீர்த் #‎தத்துவம்
----------------------
காற்றை அடுத்து நாம் நீர் மூலம் நிறைய எண்ணத் தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதனால்தான் இறை மார்கத்தில் முன்னேற நினைப்பவர்கள் அவசியம் காய்ச்சி ஆற வைத்த நீரை மட்டுமே பருக வேண்டும் என்று பெரியோர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தற்காலத்தில் பெரும்பாலான ஜீவ நதிகள், ஆறுகள், குளங்கள், கோயில் தீர்த்தங்கள் மக்களின் அசிரத்தையாலும், சுயநலப் போக்காலும் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. கலியுக நியதியால் அத்தகைய அவகோலத்தைத் தடுப்பது சாதாரண மக்களால் இயலாத காரியம். ஆனால், எல்லாத் திருக்கோயில்களிலும், திருத்தலங்களிலும் நிலத்தடி நீரோட்டம் செம்மையாக உள்ளது என்பது மனதிற்கு உவப்பூட்டும் ஒரு செய்தியாகும்.

எனவே நீர்த் தத்துவத்தை சுத்திகரிக்க நிலத்தடி நீர்ப் பூஜைகளே கலியுகத்திற்கு ஏற்றவையாகும். இத்தகைய பூஜைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதால் நமது உடலில் உள்ள ஆயிரக் கணக்கான நீர்த் தாரைகள் தூய்மை அடைந்து நமக்கு ஆன்மீக முன்னேற்றத்தை அள்ளி வழங்கும்.

இறை நியதியாக தற்காலத்தில் பாத யாத்திரைகள் பெருகி வருவது வரவேற்கத் தக்க ஆன்மீக மறுமலர்ச்சியாகும். முடிந்த போதெல்லாம் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பாடல் பெற்ற தலங்களுக்கும், மங்கள சாசனம் பெற்ற திருத்தலங்களுக்கும் பாத யாத்திரையாகவே சென்று வழிபட்டு வருவதால் நிலத்தடி தீர்த்த்ங்கள் செம்மை பெறும். சப்த ரிஷிகள் எழுந்தருளியுள்ள தலங்களை வழிபடுவதும், சப்தரிஷிகளுக்கு இறைவன் அருள் புரிந்த தலங்களில் பூஜைகளை நிறைவேற்றுவதும், சப்தமி திதிகளில் பழரசங்கள், பானகம், நீர் மோர் தானங்களை அளிப்பதும் சமுதாயத்தில் நீர்க் குற்றங்கள் நீங்கி மக்கள் நோயற்ற வாழ்வைப் பெற வழிவகுக்கும்.

சப்தமி வழிபாடுகளும், சப்த ஸ்தான வழிபாடுகளும் சமுதாயத்தை அச்சுறுத்தும் தொற்று நோய்களையும், நீரிழிவு நோய்களையும் தீர்க்க வழிகோலும்.

அனைத்து விதமான நீர்க் குற்றங்களையும் நீக்கி உள்ளும் புறமும் தூய்மையாக இருக்க உதவுவதே ஆசமனம் என்னும் எளிய வழிபாடாகும். சாதி, மத, இன, குல பேதமின்ற ஆண்கள், பெண்கள் அனைவரும் இயற்றக் கூடிய, இயற்ற வேண்டிய உன்னத வழிபாடே ஆசமனம் என்பதாகும். ஆசமனம் என்றால் என்ன? அலைபாயும் மனத்தை அடக்கி இறைவன்பால் செலுத்த பஞ்ச பூத தத்துவங்களை சமன்படுத்தும் வழிபாடு என்பதே ஆசமனம் ஆகும். ஆசமன வழிபாடு மிக மிக எளிதானது.

ஒரு சுத்தமான தாமிரம், வெள்ளி அல்லது பித்தளை பாத்திரத்தில் தூய்மையான நீரை நிரப்பி அதிலிருந்து சில துளிகளை வலது உள்ளங்கையில் தெளித்து ஏதாவது ஒரு இறை நாமத்தைக் கூறி அருந்துவதே ஆசமனம் இயற்றும் முறையாகும்.

பொதுவாக, அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்று மும்முறை பெருமாள் திருநாமத்தைக் கூறி மூன்று முறை நீரை அருந்தி ஆசமனம் செய்வது வழக்கம்.

மலஜலம் கழிக்கும் முன்னும் பின்னும், இறை வழிபாடுகளுக்கு முன்னும் பின்னும், உணவு அருந்துவதற்கு முன்னும் பின்னும் இத்தகைய ஆசமன வழிபாட்டை நிறைவேற்றுவது சிறப்பாகும். சிறப்பாக நீர்க் குற்றங்களை நீக்கும் தன்மையை உடையது ஆசமனம் என்றாலும், பொதுவாக அனைத்து விதமான பூத தோஷங்களையும் நீக்கும் சிறப்பைப் பெற்றதே ஆசமனமாகும்.

மல ஜலம் கழிப்பதற்கு ஆசமனம் தேவையா என்ற சந்தேகம் சிலருக்கும் எழலாம். உண்மையில் மல ஜலம் கழித்தல் என்பது ஆன்மீக சாதனையின் மிக முக்கியமான ஓர் அங்கமாகும்.

எல்லா இறை வழிபாடுகளுக்கும் உள்ளது போல மல ஜலம் கழிப்பதற்கும் குறித்த நேரம், திசை, கிரமம், ஆசனம், நாடி, மந்திரம் போன்ற எல்லா அங்கங்களும் உண்டு. அக்காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் இந்த அனைத்து அங்கங்களையும் முறையாக நிறைவேற்றியதன் மூலமே அற்புதமான உடல், மன, உள்ள ஆரோக்கியத்தைப் பெற்றிருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஒவ்வொரு பூஜையை ஆரம்பிக்கும் முன்னும் (உதய ஆசமனம்), பூஜையை நிறைவேற்றிய பின்னும் (மங்கள ஆசமனம்) ஆசமனம் நிறைவேற்றுவதால் பெறும் பலன்கள் ஏராளம். உதாரணமாக, நீங்கள் இறை வழிபாட்டிற்குப் பயன்படுத்தும் மலர்கள் எங்கிருந்தோ திருடப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த மலர்களால் இறைவனை அர்ச்சிக்கும்போது அந்த மலர்களில் படிந்துள்ள தவறான எண்ணம் உங்கள் பூஜையில் படியும் வாய்ப்புண்டு.

நீங்கள் அந்த மலர்களை பணம் கொடுத்துதான் பெற்றீர்கள் என்பது உண்மையே ஆயினும் எந்தப் பொருளுக்கும் உரிய சரியான விலையை யாராலும் நிர்ணயிக்க முடியாது என்ற காரணத்தால் அந்த மலர்களின் உண்மையான சொந்தக்காரருக்கு அந்த மலர்களுக்கு வரும் பலனில் நிச்சயம் பங்குண்டு.

மேலும், அந்தப் பூஜையில் கிட்டும் பலனில் ஒரு பங்கு அந்த மலர்களைத் திருடியவருக்கும் சென்றடைவதால் ஒரு திருடனுக்கு பூஜா பலனை அளித்த தோஷமும் உங்களை வந்து சேரும்.

எனவே இத்தகைய எதிர்பாராத துன்பங்களைக் களையும் நன்மார்கமே ஆசமனம் என்னும் எளிய பூஜையாகும்.

நமது மணிக்கட்டில் கங்கண ரேகைகள் எனப்படும் ரேகைகள் உண்டு. இந்த கங்கண ரேகைகள் மனிதனுடைய செயல்களுக்கு உறுதிப்பாட்டை வழங்கும் தன்மை உடையவை. ”நீ ஏன் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறாய்?” என்று நடைமுறைப் பழக்கத்தில் கூட கேட்பது உண்டு அல்லவா?

கங்கண ரேகைகளில் மொத்தம் 3000 கங்கண தேவதைகள் உறைகின்றன. நமது மூதாதையர்களுக்கு உணவாக தர்ப்பண தீர்த்தத்தை அளிப்பது போல இந்த கங்கண தேவதைகளுக்கு நாம் அளிக்கும் அர்க்ய தீர்த்தமே ஆசமன தீர்த்தம் எனப்படும் ஆசமணீயம் ஆகும். ஆசமணீயத்தைப் பெற்ற கங்கண தேவதைகள் நற்காரியங்களில் உறுதிப்பாட்டை வழங்குவதுடன் நாம் கையாளும் பொருட்களில் உள்ள பூத தோஷங்களையும், காரியங்களில் ஏற்படும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும்.

உதய ஆசமனத்தை கிழக்கு திக்கை நோக்கி சுதீக்ஷண மகரிஷியை தியானித்தும், மங்கள ஆசமனத்தை வடக்கு திக்கை நோக்கி சுத்தோதக மகரிஷியை தியானித்தும் நிறைவேற்றுவது சிறப்பு.

முடிந்த மட்டும் பெண்களும் ஆண்களும் காளி ஆசனத்தில் அமர்ந்து ஆசமனத்தை நிறைவேற்றுவதே சிறப்பாகும். தொடர்ந்து ஆசமன பூஜையை நிறைவேற்றுபவர்களை இதய நோய்களும், நீரிழிவு, தோல் நோய்கள் போன்றவைகளும் நெருங்காது.

No comments:

Post a Comment