Monday, 28 August 2017

வலி வளி வழி நெறி:தன்மையும் தனிமையும்

வலி வளி வழி நெறி:-- பகுதி ஒன்பது
***************************************************
தன்மையும் தனிமையும்
இங்கே ஒரு அற்புதமான விளக்கம் கொடுக்கப் பட உள்ளது... ஆம் அது தன்மையும், தனிமையும் பற்றிய விளக்கம்.. மிக சிறப்பானதாக பறைசாற்றப் படும் ஆன்மீகத்தில் இந்த தன்மையும் தனிமையும் என்ற கருத்து எடுத்துக் கொள்ளப் படாமையாலும், உபதேசம் பண்ணாததாலும், ஆன்மீகம் திசை மாறி போய் விடுகிறது... பெரிய பெரிய மகான்கள் என கருதப் படுவோர் கூட தன்மையையும் தனிமையையும் பற்றி கருத்தில் கொள்ளாதது போலவும் அதைப் பற்றி பேசாதது போலவும் தெரிகிறது... இந்த தன்மையையும் தனிமையையும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகிறது... விளக்கம் என்னவோ மிக மிக எளிமைதான்... ஆனால் அது படுத்தும் பாடு இன்னதென்று சொல்லமுடியாத அளவிற்கு, மிக கடினமாக உள்ளது... இந்த நுணுக்கமான விளக்கத்தை ஒவ்வொரு அன்பர்களும் துல்லியமாக அறிந்து புரிந்து கொள்ளவேண்டும்... ஒரு பக்தன் சதா காலமும் இறைவனை வழிபட்டு வருகின்றான்.. அவனுக்கு இறை தரிசனம் திருக் காட்சி கிடைத்தப் பாடு இல்லை.. ஒரு கால கட்டத்தில் சலிப்பின் உச்ச நிலைக்கு செல்லத் தொடங்குகின்றான்... அந்த நிலையில் தான் அவன் மனம் இறக்கத் தொடங்குகின்றது... அந்த சலிப்பு நிலையின் உச்சத்தில் மனம் செயலற்ற நிலையில் உயிர் வேலை செய்யத்தொடங்குகிறது... சலிப்பின் உச்ச நிலையினை தொட்ட, பக்தனுக்கு உயிர் ஓட்டம் என்ற மிகப் பெரிய பரிசு கிடைக்கத் தொடங்குகிறது... மனமோ எட்டும் இடத்திற்கு மட்டுமே செல்லும் சக்தி உடையது... ஆனால் உயிர் ஓட்டமோ மனம் எட்டாத இடத்திற்கு செல்லும் ஆற்றல் உடையது.. மனம் செயல் படாத நிலையில் உயிர் ஓட்டம் செயல் பட தொடங்கிய உடன், அந்த உயிர் தோன்றா நிலையில் மையம் கொள்ளத் தொடங்கி, எட்டாத நிலைகளை எல்லாம் கைவசமாக்க கொள்ள முனைகிறது... இந்த நிலையில் தான் மனதிற்கு எட்டாத இறை காட்சி, அதாவது தரிசனம் எதையும் எட்டும் நிலைக்கு உள் ஆக்கும் உயிர் நிலைக்கு அகப் படுகிறது... இந்த நிலையில் மட்டுமே பக்தனுக்கு இறை தரிசனம் கிடைக்கிறது...
சிறிய சலிப்பை கூட தாங்க முடியாத மனித குலம், அந்த சலிப்பை நீக்க உலகப் பொருள்கள்களை நாடி நாடி வீணாய் போகும் நிலையில், மனம் செயலற்று போகும் வரை சலிப்பின் உச்ச நிலைக்கு செல்ல தகுதியுள்ளவர்கள் கோடியில் ஒருவராகத்தான் இருக்கிறார்கள்... இந்த சலிப்பில் இரண்டு வகை உள்ளது.. ஒன்று சுமத்தப் பட்ட சலிப்பு... இது உதவவே உதவாது... தானே சுமக்கும் சலிப்பு.. இது மட்டுமே கை கொடுக்கும்.. எந்த ஒரு பொருள் குறிக் கோளும் இல்லாமல் செய்யும் பக்தி தான், தானே சுமக்கும் அல்லது ஏற்கும் சலிப்பினை உருவாக்கும்.. இதை மனம் சற்று ஏற்கும் தன்மை உடையதால், இந்த சலிப்பினை பெருக்கி, சலிப்பின் உச்சத்திற்கு செல்லலாம்.. அங்கே மனம் செயலற்று போய் உயிர் ஓட்டம் ஓடத் தொடங்குகின்ற ஒரு உன்னத நிலை உருவாகிறது... இந்த நிலையில் இறை காட்சி தொடங்க ஆரம்பிக்கின்றது... அப்பர் கைலாயத்தில் இந்த நிலையில் தான், முடியாமையின் உச்சத்தில், சலிப்பின் உச்சத்தில், மனம் செயலற்று போக, உயிர் ஓட்டம் பெருகத் தொடங்கி, அதில் அவருக்கு இறை தரிசனம் அகப் பட்டது... இதில் என்ன ஒரு மிக பெரிய வித்தியாசம் என்றால், சத்திய நிலையில் அகப் படும் இறை தரிசனமும், பொய்யான மன நிலையில் வெளிப்படும் இறை தரிசனமும் வேவ்வேறு துருவங்களில் உள்ளது.. உயிர் ஓட்டத்தில், உண்மை அல்லது சத்திய நிலையில் அகப்படும் இறை தரிசனம், உண்மையானதாகும்... உண்மையில் செயல் படக் கூடியதாகும்.. அதனால் தான் கைலாயத்தில் அப்பர் கண்ட இறை தரிசனம் உண்மையிலேயே கைவசமாகி அவரின் சொந்த ஊரிலேயே இறை தரிசனம் கைகூடியது.. அப்பருக்கு வாய்த்தது உயிர் வழி வந்த உண்மை இறை தரிசனம்... ஆனால் மன நிலையில் வெளிப்படும் பொய்யான இறை தரிசனத்தை கண்டு ஆனால் கைகூடாமல், கண்டதாக, பறை சாற்றிக் கொள்ளும் பொய்யான பக்தர்களின் பொய் மொழிகள் தான் இன்று ஆன்மீகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது... அது வேறு விசயம்...
சலிப்பின் உச்சத்தில் உருவாகும் உயிர் ஓட்டம் ஏற்படுத்தும் மையம் தான், தனது மையமான *தன்மை* என்பது... இங்கே விதி சுவாசம் முற்றுப் பெற்று பதி சுவாசம் ஓட தொடங்கும்.. ஏற்கனவே சொன்னது போல, பதி சுவாசத்தில் இறைவனே தேடி வருவான்.. கைலாயத்தில் அப்பரை தேடி இறைவன் வந்தது போல... முடியாமை என்ற சலிப்பின் உச்சத்தில் அவருக்கு பதி சுவாசம் ஓடத் தொடங்கியதால் தான், இறைவன் அவரை நோக்கி வந்தார்...
சரி இந்த *தனிமை* என்பது என்ன ? தோன்றா நிலை தன் நிலை என்னும் ஒரு உன்னத நிலையினை விட்டு விலகி, பிரபஞ்ச ஆற்றலின் பாதையை விட்டு நகர்ந்து, ஆணவ போக்கால் தனக்கென்று ஒரு தனி நிலை இருப்பதாக கற்பனை செய்து கொள்ளும் அனைவரும், தனிமை நிலையில் இருப்பவர்களே... மனதை மையப் படுத்தி தனித்திருக்கும் நிலை தான் தனிமை.. வல்லளார் சொன்ன தனித்திரு என்பது தன்மையில் தனித்து இருத்தலாகும்.. வாசி யோக பயிற்சியிலே பதி சுவாசம் கைகூடும் போது அண்ட ஆற்றல் நம்மை தேடி வந்து கைவசமாகும் என்பது திண்ணம்.. அந்த திண்ணம் பெற்ற திண்ணியர் நிலைக்கு சென்றால், எண்ணியர் எண்ணியாங்கு எய்துவர் என்ற நிலைக்கு செல்லலாம்... வலி என்பது ஒரு உயிரோட்டமாகும்.. இது வரவேற்கப் படவேண்டிய ஒன்று.. ஆனால் வலியை வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளி, உயிர் ஓட்டத்திற்கு பல மாற்று வழிகளை காண முயன்று, முடிவில் தோற்றுப் போய் வீணாகி போகின்றனர்... வலி வளி வழி நெறியில் முதலில் வலியை ஏற்றுக் கொள்ளும் பக்குவ நிலையில், பதி சுவாசத்தை நோக்கி நம் பயணத்தை விரைவு படுத்துகிறோம்... உன்னிப்பாக ஒவ்வொரு பயிற்சி முறையும் அதில் பொதிந்துள்ள கருத்துகளையும் சித்தத்தில் வைத்து மறக்காமல் இருந்தால் மட்டுமே, மனம் என்றும் உடன்பட்ட நிலையில் சரணாகதி அடைந்த நிலையில், உயிர் ஓட்ட நிலைக்கு விரைந்து செல்ல இயலும்..... சேரும் இடம் அறிந்து சேர்ந்து சீர் பெறுவோமாக.
Marma yogi.....

No comments:

Post a Comment