Thursday 31 August 2017

முருகன் புகழ்


வெட்டும் கடா மிசைத்தோன்றி வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கட்டும் பொழுது விடு விக்கவேண்டும் கர அசலங்கள்
எட்டும் குலகிரி எட்டும் விட்டு ஓட எட்டாத வெளி
மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே.

பாடல் விளக்கம் :
வெட்டுகின்ற எருமைக் கடாவின் மீது வருகின்ற வெம்மையாகிய இயமன் வீசுகின்ற பாசக் கயிற்றினால் அடியேனைக் கட்டிப் பிடிக்கும்போது தேவரீர் தோன்றி விடுவித்து காப்பாற்றியருளவேண்டும். கைகளையுடைய மலைபோன்ற திக்கு யானைகள் எட்டும் குலமலைகள் எட்டும் தத்தம் இடம் விட்டு விலகும் படி கண்களுக்கு எட்டாத ஆகாய வெளி வரைக்கும் மறையும் படி விரிக்கின்ற தோகையையுடைய மயிலை வாகனமாக உடையவரே!

படிக்கின்றிலை பழநித் திருநாமம் படிப்பார் தாள்
முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே?.

பாடல் விளக்கம் :
'' நெஞ்சமே, பழநியில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானின் திருநாமங்களை ஓதுகின்றாயில்லை. பழநி ஆண்டவரது திருநாமங்களை ஓதுகின்ற அடியார்களின் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்கின்றாயில்லை. பரம்பொருளாகிய திருமுருகப்பெருமானை "முருகா" என்று அழைக்கின்றாயில்லை. யாசிப்பவர்கள் பசியால் மெலிவடையாமல் இருக்கும் பொருட்டு அவர்களுக்குப் உணவு வழங்கி அதனால் நீ வறியவனாகிவிடவில்லை. பேரின்பம் மிகுதியாக வரும் பொருட்டு விம்மி விம்மி அழுது ஆடுகின்றாயில்லை. இனி நமக்கு அடைக்கலம் தரும் பற்றுக்கோடு எங்கு உள்ளது?

கூர் கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றம் கொண்டாடுவிர்காள்!
போர் கொண்ட காலன் உமைக் கொண்டுபோம் அன்று பூண்பனவும்
தார் கொண்ட மாதரும் மாளிகையும் பணச் சாளிகையும்
ஆர்கொண்டு போவர் ஐயோ கெடுவீர் நும்அறிவுஇன்மையே.

பாடல் விளக்கம் :

கூர்மையான வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமானைப் போற்றாமல் உங்கள் மனை மாட்சி, நிதி, அணிகலன் ஆகியவற்றின் மிகுதியைப் பற்றிப் பெருமை பாராட்டிக் கொண்டாடும் மனிதர்களே! போர்த் தொழிலையே மேற்கொண்டுள்ள இயமனுடைய மந்திரியாகிய காலன் என்பவன் உங்களைக் கொண்டுபோகின்ற அந்த நாளில் நீங்கள் அணிந்து கொள்கின்ற ஆபரணங்களையும், பூமாலையை அணிந்துள்ள பெண்களையும், மாளிகை போன்ற வீட்டையும் பணப் பையையும் யார் எடுத்துக்கொண்டு போவார்கள்? ஐயோ, உங்களின் மூடத்தனத்தாலேயே நீங்கள் வீணே கெட்டுப் போகின்றீர்களே!

No comments:

Post a Comment