Wednesday, 30 August 2017

திருஅண்ணாமலை புராண ரகசியம்

இப்பூவுலகின் மிகப் பெரிய அதிசயம் திருஅண்ணாமலை ஒன்றுதான். திருஅண்ணாமலை உச்சியில் கல்லால மரத்தின் தூய்மையான நிழலில் எம்பெருமான் தட்சிணா மூர்த்தி வடிவத்தில் மனித உடல் தாங்கி அதாவது எலும்பும், சதையும் உள்ள மனித உருவில் எழுந்தருளி உள்ளார். இன்றும் பல கோடி லோகங்களிலிருந்து ரிஷிகளும், யோகிகளும், தேவதைகளும் தெய்வங்களும் இந்த அற்புத தெய்வீக காட்சியைத் தரிசித்து எல்லையில்லா ஆனந்தம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தியின் திருவடிகளில் சனகாதி முனிவர்கள் அமர்ந்து பெருமானின் மௌன உபதேச அமிர்தத்தை பருகிய வண்ணம் உள்ளனர். இது யுகம் யுகங்களாய் தொடரும் ஆன்மீக அற்புதம். இந்த தெய்வீக சந்நிதானத்தில் தானும் பங்கு கொள்ள எண்ணினாள் அன்னை பராசக்தி. சனகாதி முனிவர்களைப் போல் தானும் எம்பெருமானின் குரு மூர்த்த சொரூபமான தட்சிணா மூர்த்தி கோலத்தை தினமும் தரிசிக்க திருவுள்ளம் கொண்டாள் தேவி.

அதை ஒரு சந்தர்ப்பத்தில் எம்பெருமானிடமும் தெரிவித்தாள் அன்னை. அதைக் கேட்ட எம்பெருமான் புன்னகை பூத்து, ”தேவி, உன்னுடைய விருப்பம் நியாயமானதுதான். அதே சமயம் எனது உடலில் சரி பாதியைப் பெற்றிருந்தாலும் பரம்பொருளின் தட்சிணா மூர்த்தி சொரூபத்தைக் காண வேண்டுமென்றால் அதற்குரித்தான தவத்தை மேற்கொண்டே ஆகவேண்டும். இந்த தெய்வீக நிபந்தனையில் யாருக்கும் விலக்கு கிடையாது.

விருப்பம் என்று வந்து விட்டாலே நீ பூலோகம் செல்ல வேண்டிய தருணம் வந்து விட்டது என்றுதானே பொருள். அனைத்து அபிலாஷைகளையும் பூர்த்தி செய்வதற்குரிய தவத்தை இயற்றவல்ல ஒரே இடம் பூலோக,ம்தான். எனவே நீ அங்கு சென்று திருஅண்ணாமலையின் கல்லால மரத்தின் வேர் சென்று தங்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து தவத்தை மேற்கொள்வாயாக !” என்று திருவாய் மலர்ந்து அருளினார் சுவாமி.

அன்னையும் பேருகையுடன் பூலோகம் வந்தடைந்தாள். பூலோகத்தில் பல திருத்தலங்களைச் சுற்றி வந்தாலும், பல முனிவர்களுடன் கலந்து ஆலோசனை செய்தாலும் திருஅண்ணாமலையின் கல்லால மரத்தின் வேர் நிரவி நின்ற இடத்தைப் பற்றி யாராலும் கூற முடியவில்லை. எந்தக் கேள்விக்கும் விடை அளிக்கக் கூடிய இடம் திருஅண்ணாமலை ஒன்றுதானே? எனவே திருஅண்ணாமலையைத் தொடர்ந்து கிரிவலம் வந்து பிரார்த்தனை செய்தாள் தேவி.

அப்போது நித்திய கிரிவலத்தை மேற்கொண்டு வரும் ஸ்ரீலோபாமாதாவும் ஸ்ரீஅகத்திய பெருமானும் அன்னையைக் கண்டு, தரிசனம் செய்து தொழுதனர். பராசக்தியும் ஸ்ரீஅகத்தியரை வணங்கி தான் கிரிவலம் வரும் காரணத்தைக் கூறி அவரிடம் கல்லால மரத்தின் வேர் நிரவியுள்ள திருத்தலத்தைப் பற்றி வினவினாள்.

ஸ்ரீஅகத்தியர் மிகவும் பணிவுடன், ”தாயே, தாங்கள்தான் ஜகன்மாதா, ஜகத் ரட்சகி, திரிபுவனேஸ்வரி. தோன்றியவைக்கும் இனித் தோன்றப் போகும் அனைத்து லோகங்களுக்கும் தாங்கள்தான் ஆதிபராசக்தியான அன்னை. தங்களுக்குத் தெரியாத ஒரு தேவ ரகசியம் கிடையாது. இருப்பினும் பூலோக நியதியை அனுசரித்து எந்த தேவ ரகசியத்தையும் திருக்கயிலாய பொதிய முனிப் பரம்பரை வழித் தோன்றல்கள் மூலம் பெறுவதே சிறப்பு என்ற எம்பெருமானின் விதியை மீறக் கூடாது என்பதால் தாங்கள் கேட்கும் இரகசியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.”

தாங்கள் எம்பெருமானின் தட்சிணா மூர்த்திக் கோலத்தைத்தானே தரிசனம் செய்ய விழைகிறீர்கள். அப்படியானால் நீங்கள் தவம் இயற்றிய வேண்டிய தலம் இங்கிருந்து வடக்கு திசையில்தானே அமைந்து இருக்கும். எனவே, தாங்கள் நேர் தெற்கு திசையில், பொன்னி நதிக்கு தெற்கே ஆலமரங்கள் செழித்திருக்கும் அற்புத திருத்தலத்தில் எம்பெருமானுக்கு ஆலயம் அமைத்து வழிபட்டால் உங்கள் எண்ணத்தை எம்பெருமான் நிறைவேற்றி வைப்பார்,” என்று அன்னைக்கு வழி கூறி அனுப்பினார்.

அன்னையும் ஸ்ரீலோபாமாதாவையும் ஸ்ரீஅகத்தியரையும் வாழ்த்தி அவர்களிடமிருந்து விடைபெற்று தென் திசை நோக்கி தன்னுடைய பாத யாத்திரையைத் தொடங்கினாள்.

கங்கைக்கும் மூத்தவளான பொன்னி நதியைத் தொழுது வணங்கி தீர்த்த பூஜைகள் இயற்றி மீண்டும் தென் திசையாக தன் யாத்திரையைத் தொடர்ந்தாள். பொன்னி நதி என்பது ஸ்ரீஅகத்திய முனிவரின் தவப் பயனால் உருவானது அல்லவா? எனவே அன்னை பராசக்தி காவிரியில் நீராடியபின் வானத்தில் ஸ்ரீஅகத்திய நட்சத்திரத்தைக் கண்டு வணங்கினாள். அப்போது முதல் ஸ்ரீஅகத்திய நட்சத்திரமே அன்னைக்கு வழிகாட்ட அன்னையும் அதைத் தொடர்ந்து சென்று ஆலமரங்கள் செழித்து ஓங்கி நின்ற அற்புத திருத்தலம் ஒன்றைக் கண்டாள்.

அத்திருத்தலம்தான் தற்போது திருஆலத்தூர், மலையடிப்பட்டி என்று அழைக்கப்படுகிறது.

எம்பெருமானை தியானித்து அன்னை தன்னுடைய சூலாயுதத்தைப் பூமியில் பதிக்கவே பராசக்தியின் சூலம் பூமியில் பட்ட இடத்திலிருந்து ஓர் அற்புத நீருற்று வெளிப்பட்டது. அந்த தீர்த்தக் கரையில் அமர்ந்து தேவி பூஜைகளை இயற்றத் தொடங்கினாள்.

அப்போது எம்பெருமான் அசரீரியாக, ”ஒரு மண்டலம் தொடர்ந்து பூஜை இயற்றினால உன்னுடைய எண்ணம் நிறைவேறும்,” என்று உரைத்தார். ஒரு மண்டலம் என்று எம்பெருமான் உரைத்தது சக்தி லோக கணக்கில். நம்முடைய பூலோக கணக்கிற்கு அது 108 யுகங்கள் அளவைக் கொண்டது. இவ்வளவு நீண்ட காலம் பூஜை நிறைவேற்றும் போது அதில் ஏதாவது தடங்கல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு காவல் வேண்டும் அல்லவா? எனவே, தன்னுடைய அருமை மைந்தனான பிள்ளையாரை அழைத்து அந்த தீர்த்தக் கரையிலேயே இருந்து காவல் காக்கும்படியும் சிவபூஜை இடையூரின்றி நிறைவேற்ற உதவிபுரியும்படியும் கணபதியிடம் கூறி விட்டு தன்னுடைய பூஜையைத் தொடர்ந்தாள் தேவி.

கிட்டத்தட்ட பூஜை நிறைவேறும் தருணத்தில் சிவபெருமான் ஒன்றும் அறியாதவர்போல ஒரு விறகு வெட்டியின் ரூபத்தில் தேவியின் பூஜை நடக்கும் இடத்திற்கு செல்ல முயன்றார் அதைக் கண்ட பிள்ளையார் அவரைத் தடுக்க முயன்று அது முடியாமல் போகவே தன்னுடைய மழு ஆயுதத்தால் சிவபெருமானைத் தாக்க இருவருக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. இறுதியில் சிவபெருமான் வீரபத்திரர் மூலம் கணபதியின் தலையைக் கொய்ய வேண்டிய நிலை உருவானது.”

அதன் பின் பார்வதி தேவியின் பிரார்த்தனையால் ஒரு யானையின் தலையைப் பிள்ளையாருக்குப் பொருத்திய இறை லீலை நீங்கள் அறிந்ததே.

இத்தகைய அற்புத இறை லீலைகள் நிறைவேறிய இடமே மலையடிப்பட்டி திருத்தலமாகும். அன்னை பராசக்தி ஏற்படுத்திய தீர்த்தம் தற்போது சக்தி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இது மிகவும் புராதனமான சிவ லீலை. அப்போது முருகப் பெருமானின் திருஅவதாரம் நிகழவில்லை. ஆனாலும், முருக சக்தி என்பது ஆதி அந்தம் இன்றி எப்போதும் பிரபஞ்சத்தில் உள்ள இறை சக்திதானே.

தற்போது மலையடிப்பட்டிபெருமாள் ஆலயத்தின் முன் வாசலில் கொலுவீற்றிருக்கும் வலஞ்சுழி கணபதியே முருகப் பெருமானின் சக்தியையும் தன்னுள் கொண்டு கந்த கணபதியாய், கந்த வாரணராய் பக்தர்களுக்கு அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார். பொதுவாக, திருக்கோயில்களில் வலது புறத்தில் கணபதியும் இடது வாயில் புறத்தில் முருகப் பெருமானும் எழுந்தருளி இருப்பார்கள்.

இத்தலத்தில் முருகப் பெருமானுக்கு முன் தோன்றிய அவதார கோலத்தில் கணபதி மூர்த்தி எழுந்தருளி இருப்பதால் அவரே முருகப் பெருமானின் கந்த சக்தியையும் தன்னுள் கொண்டு கந்த வாரணர் என்னும் திருநாமத்துடன் முருகப் பெருமானுக்கு உரிய இடது வாயிலில் எழுந்தருளி அருளாட்சி செய்கிறார். முருக சக்தியையும் கணபதி சக்தியையும் ஒருங்கே வழங்கும் ஒப்பற்ற கருணா மூர்த்தி இவரே.

சிவபெருமான் பிள்ளையார் மூர்த்தியின் தலையைக் கொய்த லீலையில் ஆயிரமாயிரம் இரகசியங்கள் உண்டு. அதில் தற்போதைய யுகத்திற்கு ஏற்ற தேவ ரகசியம் என்ன? அன்னை எம்பெருமானின் தட்சிணா மூர்த்தி கோலத்தைக் காண விழைந்தாள் அல்லவா? தட்சிணா மூர்த்தியின் திருப்பாதத்தில் உறையும் சனகாதி முனிவர்கள் தினமும் எம்பெருமானின் தரிசனத்தைப் பெற்று மகிழும்போது அன்னை பராசக்தியால் இக்காட்சியை அவ்வளவு எளிதில் பெற முடியவில்லை அல்லவா?

சனகாதி முனிவர்கள் தான் என்ற உடல் உணர்வை மறந்து எம்பெருமானிடம் அடைக்கலம் கொண்டதால் அவர்களால் எளிதில் எம்பெருமானின் தட்சிணா மூர்த்திக் கோலத்தைக் காண முடிகிறது. ஆனால், அன்னை பராசக்தியோ சிவபெருமான் பிள்ளையாரின் தலையைக் கொய்ததும் தன்னுடைய மைந்தனுக்காக அழுது புலம்பினாள் அல்லவா? எனவே, தான் என்னும் உடல் உணர்வு உள்ளவரை எம்பெருமானின் கல்லால காட்சியைக் காண இயலாது என்பதை உணர்த்தவே இறைவன் இததகைய லீலையை நிகழ்த்தினான்.

தன் தவறை உணர்ந்த அன்னை பார்வதி தேவி, மீண்டும் தன்னுடைய தவத்தைத் தொடர்ந்தாள். பிள்ளையார் மூர்த்தியும் யானையின் தலையைப் பெற்று ஞானக் களஞ்சியமாக விளங்கியதால் எந்நிலையில் தேவ மூர்த்திகள் வந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் சிவ சக்தியைத் தன்னுடைய தந்தையிடமிருந்தே பெற்று ஞானத்தின் சிகரமாக விளங்கினார்.

அன்னையின் தவம் கனிந்தது. தவ முடிவில் சக்தி தீர்த்தத்திலிருந்து தீர்த்தத்தை எடுத்து வந்து சிவலிங்கத் திருமேனியின்மேல் அன்னை அபிஷேகம் செய்தாள். வரலாறு காணாத ஒப்பற்ற இத்தவத்தால் மகிழ்ந்து ஈசன் தன்னுடைய திருக்காட்சியை அன்னைக்கு வழங்கி பராசக்தியை சிவ அருஉருவ ரூபமான ஆவுடை வடிவத்தில் ஏற்றுக் கொண்டார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். சிவ லோகமும் சக்தி லோகமும் திருவிழாக் கோலம் பூண்டது. தன்னுடைய அற்புத தவத்தால் அன்னை பராசக்தி திருஆலத்தூர் சிவனின் வலப் பாகத்தில் ஆவுடை வடிவத்தில் அமர்ந்து தினமும் எம்பெருமானின் தட்சிணா மூர்த்தி கோலத்தை தரிசனம் செய்து ஆனந்த வெள்ளத்தில் இன்றும் என்றும் மூழ்கித் திளைக்கிறாள்.


இவ்வாறு யாரெல்லாம் திருஅருணாசல ஈசனை தட்சிணா மூர்த்தி ரூபத்தில் தரிசனம் செய்யும் தகுதியைப் பெறுகிறார்களோ அவர்கள் அனைவரும் திருஆலத்தூர் ஈசனின் ஆவுடை வழியாக இன்றும் எம்பெருமானின் மானிட திவ்ய ரூபத்தை திருஅண்ணாமலை கல்லால மரத்தின் கீழ் பொலியும் அவரது கோலத்தை தரிசிக்கும் பேறு பெறுகிறார்கள் என்பது உண்மையே.

No comments:

Post a Comment