Wednesday, 30 August 2017

த்யானம்

ஒரு நண்பர் கேட்டார்

"த்யானத்தில் ஒரே குழப்பமாக இருக்கிறது. த்யானமும் அதில் சம நிலையும் சித்திக்க வேண்டும்" என்று

அகத்தியர் சொன்னார் "மனிதர் சக்திகளை அடக்குவதுதான் த்யானம். மனதை ஒரு முகப்படுத்துவது த்யானம். ஒவ்வொருநாளும் விடியல் பொழுதில் படுக்கையில் அமர்ந்து கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு, இறைவனை நோக்கி, மனதை கட்டுப்படுத்த முயர்ச்சிப்பதுதான் த்யானம். அந்த த்யானத்திலே குழப்பம் என்றால், இன்றும் சாதாரண மனிதனாகத்தான் இருக்கிறாய் என்று அர்த்தம். ஆக த்யானம் என்பது சட்டென்று வந்து விடக்கூடிய ஒன்றல்ல. படிப்படியாகத்தான் வரும்.


ஒருநாளில், காலை, வைகறை பொழுதினிலே, ஐந்து நிமிடம், வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு, அல்லது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு த்யானம் செய்து பார். முதலில் ஏகப்பட்ட குழப்பம் வரும். மறுநாள் அந்த ஐந்து நிமிடத்தை பத்து நிமிடமாக மாற்று. திரும்பவும் த்யானம் செய். கொஞ்சம் குறையும். அடுத்தநாள் பத்து நிமிடத்தை 15 நிமிடமாக மாற்று. நிமிடத்தை கணக்குப் போட்டு த்யானத்தை முடித்து விடாதே! த்யானத்தை கடிகார முள்ளுக்கு அப்பாற்பட்டு வை. எப்போது கடிகார முள்ளை பார்க்கிறாயோ, அப்போதே நீ த்யானத்துக்கு அப்பார்ப்பட்டவன் என்று அர்த்தம். நான் சொல்ல வந்தது, ஒவ்வொரு நாளும் த்யானத்தை 1 நிமிடம், 2 நிமிடம் என்று கூட்டிக் கொண்டு வந்தாலே போதும். த்யானம் என்பது அமைதியாக, மனதை அடக்கிக்கொள்ள சித்திக்கும். இதற்காக எத்தனையோ வழி முறைகள் இருக்கிறது. பெரியோர்கள் பலர் அதை சொல்லியிருக்கிறார்கள். ஞானிகள் பலர் பல்வேறு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். இத்தனையும் செய்து த்யானம் கைவல்யமாகவில்லை என்றால், நீ இன்னமும் சாதாரண மன நிலையில் இருக்கிறாய் என்று அர்த்தம்அதை எல்லாம் தாண்டி நிற்பது தானடா த்யானம். ஆகவே, நாளை முதலாவது, மனதை கட்டுப் படுத்திக்கொள், பல்லை கடித்துக் கொண்டு. உலகியல் வாழ்க்கையை சற்று ஒதுக்கிவிட்டு, உனக்கும் சூரிய வெளிச்சத்துக்கும் இடையில் எந்த விஷயமும் வராமல், ஒரு ஐந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு, மனதை கட்டுப்படுத்தி, உன் எதிரில் ஒளி நெளிய வேண்டும். அதை கண்டு, மனதில் இறைவனை த்யானித்து, அடக்கிக்கொண்டு த்யானம் பண்ணிப்பார். த்யானம் வரும். உறுதி உண்டடா!"

நம்மில் பலருக்கும் பல நிலைகளில் இறை அனுபவம், இறை தரிசனம் என்பவை கிடைத்திருக்கும். அகத்திய பெருமான் கூற்றுப்படி நாம் இது வரை வாழ்ந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு நொடியில் இறையுடன் கலந்து இருந்திருக்கிறோம், ஆனால் நாம் அனுபவித்தது இறைவனை, அது தான் இறைவன் நிலை என்று உணருவதில்லை என்கிறார்எப்படி?

உதாரணமாக, சர்க்கரை இனிக்கும் என்று பிறர் சொன்னால், நாம் ஆம் என்போம். ஏன்? நம்முள் எப்படிப்பட்டது இனிப்பு என்றும், சர்க்கரை என்று சொல்லக்கூடிய அந்த வஸ்துவின் சுவை எப்படி இருக்கும் என்றும் ஒரு முன் பதிவு (அனுபவம் எனலாம்) இருக்கிறது.

ஆனால், இறைவன் என்பவன் எல்லாவற்றையும் கடந்து நிற்பவன், அவன் நம் உணர்வுகளுக்குள் எப்படி இருப்பான் என்று, நமக்கு ஒரு முன் அனுபவத்தை, இப்படித்தான் இருக்கும் என்ற நிலையை ஒரு போதும் பதித்ததில்லை. ஆனால் அகத்திய பெருமானோ நீங்கள் அனைவரும் இறைவனை, அந்த நிலையை ஒரு முறையேனும் உணர்ந்திருக்கிறீர்கள் என்கிறார்.

ஒரு மனிதனுக்கு இரண்டு தேகங்கள் உண்டு. ஒன்று ஸ்தூல உடம்பு - நம் பௌதீக உடம்பு, இரண்டு - சூக்ஷும உடம்பு.

ஸ்தூல உடம்பில் உணர்வுகளால் தூண்டப்பட்டு நிற்கும் நிலையில், அது சூக்ஷும உடம்பில் பதிவு செய்யப்படும். சூக்ஷும உடல் முடிகிறவரை அந்த நிலையை எட்டப்பார்க்கும் அல்லது பதிவு செய்து கொள்ளும்.

ஒரு மனிதன் கோயிலிலோ, சமாதியிலோ, த்யானத்திலோ இறைவனை, பெரியவர்களை நினைத்து, ஆழ் நிலையில் சென்று ஆனந்தப்பட்டு அதிலும் ஒரு உயர் நிலையில் செல்லும் போது "உடல் உருகி, உள் உருகி, பேரானந்தத்தில் பௌதீக உடலின் உணர்வழிந்து, எங்கு இருக்கிறோம் என்று பிரித்தறியாத நிலையில், அவனது சூக்ஷும சரீரம் அந்த நேரத்தில் அவன் த்யானிக்கும் அந்த இறை, மகான் போன்றவர்களின் ஆத்ம நிலையுடன் ஒன்றி பிணைந்து நிற்கும். அந்த நிமிடம் அது உணருகிற நிலை தான் இறைவன். ஏனென்றால், இறை சக்தியுடன் பிணைந்து நிற்கும் நிலையில் அவன் ஆத்மா, இறையாக மாறிவிடுகிறது. இது ஒரு வினாடியில் நடந்து விடுகிற நிகழ்ச்சியாயினும், என்ன நடந்தது என்பதை அந்த ஒருவனால் பௌதீக உடலால், அறிவால் வேறு படுத்தி பார்க்க முடியவில்லை. சித்தர்களாகிய எங்களுக்கே ஒருவன் எத்தனை முறை இறை அனுபூதியில் ஒன்றி இருந்திருக்கிறான், எத்தனை தூரம் அந்த ஆத்மா சுத்தம் அடைந்துள்ளது என்பதை பகுத்தறிய முடியும்.

ஒவ்வொரு முறையும் த்யானத்தில் ஆத்மாவும், உடலும் சுத்தம் அடைகிற பொழுது பெரியவர்கள் தொடர்பு மிக எளிதாகும். இதனால் தான் த்யான வழியில் செல்வதை, நீண்ட த்யானத்தை சித்தர்கள் அறிவுறுத்துகிறார்கள் என்பது புரிகிறது.

அப்படி ஒரு நிலையை இனி அடையும் போது இனியேனும் ஒரு மன தெளிவுடன் இருப்போம்,

No comments:

Post a Comment