Thursday, 31 August 2017

அகத்தியர் பெருமானின் திருஅவதார சரிதம்

அகத்தியர் பெருமானின் திருஅவதார சரிதம்

இறைவனின் சிருஷ்டி காலத்தை கணிக்க இயலாது.  கோடி கோடி யுகங்கள் தோன்றித் தோன்றி மறைய கோடிக்கணக்கான அகத்திய சித்தர்களும் தோன்றி, நிறைந்தனர்.  பரம்பொருளான, ஆதிசிவனின் திருகைலாயத்தில் என்றும் வாழும் சிவனின் அம்சமாம் ஆதிமூல ஸ்ரீ அகத்தியர், சரித்திரமே படைத்தவர். அகத்தியப் பெருமான் என்றும் சதாசிவனின் சித்தத்தில் திளைப்பவர், பரம்பொருள் போல நித்யத்வம் உடையவர்.

இறைவனின், உலக சிருஷ்டியில் மீன்கள், பறவைகள், கடல் தாவரங்களின் படைப்பிற்கு அடுத்து வர வேண்டுவன, ஐந்தறிவு படைத்த விலங்கினங்கள்.  அவைகளை படைக்கும் முன் அவைகளுக்கு வேண்டிய உணவைப் படைக்க வேண்டுமல்லவா? அதற்காக தாவரங்களை படைக்க பரமசிவனார் உளம் கனிந்தார்.

அப்போது அங்கே ஒரு அற்புதமான தேவி தோன்றினாள். தன்னை வணங்கி நின்ற தேவியை "ஆஷா சுவாசினி" என்றழைத்த பரமசிவன் "தாவரங்களை பூ உலகில் படைப்பாய்" என ஆணையிட்டார்.  அவளும் பரம்பொருளை பணிந்து, இட்ட பணியை தொடங்கினாள்.

கோடி கோடியாம் விலங்கினங்கட்களுக்கும், ஏன் மனிதர்களுக்கும் கூடத் தாவரங்கள் தானே ஜீவசக்தியை தரும் உணவாகின்றது.  எனவே முதல் தாவரத்தை ஓர் அற்புதமான தெய்வீகப் படைப்பாக்கத் தீர்மானித்தாள் ஆஷாஸுவாசினி தேவி. இறைவன் நினைத்ததும் அது தான்.

அனைத்து லோகங்களிலும், மகரிஷிகள் மற்றும் தேவர்கள், கந்தர்வர்கள் இடையே மலர்ந்த நல்லெண்ணங்களை திரட்டினாள் தேவி. பரிசுத்தத்திற்கு இலக்கணமாகத் திகழும் மகரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள், என்றும் இறைத் தவம் புரியும் இறை அடியார்கள் ஆகியோரின் நல்லெண்ணங்களில் இருந்து ஒரு புனிதமான நல்எண்ணத்தை தேவி வடித்து எடுத்தாள் என்றால் அந்தப் புனிதமான எண்ணத்தின் மகத்துவத்தை என்னென்று சொல்வது?

ஆஷாஸுவாசினி தேவி ஹரியையும் சிவனையும் தொழுது, "ஹரிஹர ரூபர்களே, தங்களுடைய ஒப்பில்லா இறைசக்தியை அடியேன் பகுத்து, வடித்துள்ள இந்த நல்ல எண்ணத்தின் மூலக் கருவாய் அமைத்து, அரியும் , சிவனும் சேர்ந்த "அரிசியாய்" மாற அருள் பாலிப்பீர்களாக" என்று பிரார்த்திக்க, ஹரிஹர ரூபனும் அவ்வாறே அருளினார்.

அன்று முதல் அரியும் சிவனும் சேர்ந்ததே அரிசியாயிற்று.  தேவி, இயற்கை மாற்றங்களில் இருந்து அரிசியை காப்பாற்ற, அடுத்த ஒரு பரிசுத்த எண்ணத்தை கொண்டு உறையாக அமைக்க, உமி மூடிய அரிசியே முதல் தாவரமாக ஆகியது.

தேவியின் அற்புதமான பணி தொடர்கிறது.

ஹரிஹரனின் தெய்வீக அம்சத்தால் புனித எண்ணத்துடன் உருப்பெற்ற நெல் (அரிசி) மணியைப் பன்மடங்காக்கி ஏனைய நிலத்தாவரங்களையும் சிருஷ்டிக்க வேண்டுமே! எனவே, தேவி "யார் ஒருவர் சிரசு முதல் பாதம் வரை புனிதமான நல் எண்ணங்களை உடையவரோ, அவர் இந்த நெல் மணியை தன் கையில் தாங்கி பிரார்த்தித்தால் இந்த நெல் மணி விருத்தியாகும். அத்தகையவர் முன் வாருங்கள்" என்றாள்.

இந்த அழைப்பின் உட்பொருளை உணர்ந்த பலர் மௌனமாயினர்.  இறைவனின் லீலை அன்றோ! தகுதி பெற்றிருந்தும், யாரும் முன் வராததால், தேவி யோசித்தாள்.

உடனே சிவனை வணங்கி, "சிரசு முதல் பாதம் வரை புனிதமே பூத்துக் குலுங்கும் என் மகன் அகத்தியனை அழைக்கிறேன்! அவனால் இந்த நற்காரியம் செவ்வனவே முடியும்" என்றாள். எம்பெருமானும் அனுமதியளிக்க,

அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பவித்து
எழுந்து நின்ற எண்ணிலா ஈசர்க்கும் பட்டம் சூட்டி
எண்ணத்தில் கலந்து எண்ணத்தை சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய் தேர்ந்தெடுத்த
என் மகனே அகத்தியா! வா!

என்று தேவி அழைக்க, விண்ணுக்கும், மண்ணுக்கும் விரிந்த மாபெரும் விஸ்வரூபியாய் ஸ்ரீ அகஸ்தியர், தேஜோமயமாய், ஒளிப்பிழம்பாய், கோடி கோடியாம் ஆயிரம் ஆதவர்களின் அருட்ப்ரகாசத்துடன் அங்கே எழுந்தருளினார்.

ஸ்ரீ அகத்தியப் பெருமானின் அருட் கரத்தில் அவர் அன்னை ஆஷா ஸுவாசினி தேவி அற்புத நெல் மணியை வைத்திட, அது சங்கர நாராயண மணியாய் ஒளி வீசியது. ஸ்ரீ அகத்தியரின் திருக்கரத்தில் தவழ்ந்த நெல் மணி, இமைக்கும் நேரத்தில் பல்கிப் பெருகி, கோடி கோடி நெல் மணிகளாய், விண்ணிற்கும், மண்ணிற்கும் இடையே பல கோடி இமயமலைகளை நிகர்த்தார் போல் குவிந்தது.

பரம்பொருளான சதாசிவன் நகைத்தான். "பார்த்தீர்களா இந்த அற்புதத்தை. இந்த அகத்தியன் என்னிடமிருந்து உதித்தவனே! அவன் என் பூர்ணாம்ச அவதார மூர்த்தியே! என் பாகத்திலிருந்து பிரிந்த சித்தர்குல நாயகனாய், நான் உங்களுக்கு அளிக்கும் பரிசு, இந்த அகத்தியன். நானே அவன்" என்று அருளினார்.

நெல் மணிகளை மலைகள் என குவித்த ஸ்ரீ அகத்தியரின் திருக்கரங்கள், கோடிக்கணக்கான தாவரங்களின் வித்துக்களையும் உற்பவிக்க, உலகத்தில் முதல் தாவர சஞ்சாரம் அங்கே தொடங்கலாயிற்று. எனவே உலகின் அனைத்து தாவரங்களுக்கும் அம்மை, அப்பன் ஸ்ரீ அகத்தியரே. மூலிகை தாவரங்களின் மூலக்கரு ஸ்ரீ அகத்தியரே! எனவே தான் இன்றைக்கும் எந்த மூலிகையும் அகத்தியரை கண்டால், நமஸ்கரித்து தன் இனம், பெயர், பொருள், பயன் சொல்லி தலை வணங்கும்.

எனவே, "ஓம் அகத்தீசாய நமகா"  என்று வணங்கி எந்த தாவரத்தையும் பயன்படுத்திடில் அதன் பூரண சக்தியை நாம் பெறலாம். இது சுபிட்சத்தை அளிக்கும்.

No comments:

Post a Comment