Wednesday, 30 August 2017

கலிநீசன் பாகம் 2 Kaliyugam part 2

சிவபெருமான் சொன்ன அந்த பதிலுரையால் சற்று அதிர்ச்சியடைந்த நந்திதேவர், சிவபெருமானைப் பார்த்துச் சொல்கிறார். ஈசனே ! நிலைதடுமாற்றம் எங்கோ நடைபெறவில்லை. இங்கே தான் நடைபெறுகிறது. உங்களுடைய நிலை குலைந்த செயல் மூலம் நான் அதை உணருகிறேன்.
ஈசனே ! தாங்கள் இந்த உலகத்தை இருந்த இடத்தில் இருந்துகொண்டே சக்கரம்போல் சுற்றிக்கொண்டிருக்கும் அச்சாணி. அந்த அச்சாணி இடம் மாறினால் அதைச் சார்ந்திருக்கும் சக்கரமாகிய உலகத்திற்கு அழிவு ஏற்பட்டுவிடுமே.
அறிவுக்கே ஆணிவேராகிய உங்களுடைய அறிவில் சலனம் ஏற்பட்டால் சர்வலோகமும் சஞ்சலத்திற்குள்ளாகி விடுமே. தாங்கள் இடம் பெயர்ந்த காரணத்தினால் வஞ்சகமும், சூழ்ச்சியும் வையகத்தைக் கவ்விக்கொள்ளுமே, தந்திரமும், மந்திரமும் தாரணியின் நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிவிடுமே.
இவ்விதமான இடர்ப்பாடுகளால் உலகில் ஒழுக்கக்கேடுகள் உண்டாகி, நெறிமுறைகள் நிலைகுலைந்து போகுமே, அதனால் மழை பெய்யாதே. மனித நேயம் மாய்ந்து போகுமே. பிரம்மநாத சூத்திரத்தின் பேருண்மைகளை உலகுக்கு உணர்த்தும் உன்னதமான வேத நுணுக்கங்களுக்கெல்லாம் மனுக்குலத்தோர் மாற்றுரை கூறி அவற்றை மாசுபடுத்திவிடு
வார்களே என்று சிவபெருமானிடம் எடுத்துக்கூறிய நந்திதேவர், சிவபெருமானை அழைத்துக்கொண்டு கைலையங்கிரிக்குச் சென்றார்.
உடனே சிவபெருமான், ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அங்கே வருவித்ததோடு, உலகில் நிகழும் ஜனன, மரணக் கணக்குகளின் பொறுப்பாளனாகிய சித்திர புத்திரரையும் மிக விரைவாக வரவழைத்து, பூமியைப் பிளறந்து கொண்டு தலைகீழாகப் பிறந்திருப்பவன் யார்? அதற்கான காரணமென்ன? அதனால் ஏற்படும் விளைவு யாது என்ற விவரங்களையெல்லாம் விரிவாக எடுத்துரைக்கும்படி சித்திரபுத்திரர
ிடம் சிவபெருமான் உத்தரவிட்டார்.

உடனே, சித்திரபுத்திரர் சிவபெருமானை வணங்கி நமஸ்கரித்து, ஈசனே, இந்தச் சம்பவங்கள் தற்செயலாக நடைபெறுவதல்ல, இந்தப் பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பதற்காக ஏற்பட்ட விதிமுறைகளை உள்ளடக்கமாகக் கொண்ட சாஸ்திரப்படியே நடைபெற்றுள்ளது. அந்த சாஸ்திரங் கூறுகின்ற செய்தியை ஆதாரமாகக் கொண்டே சொல்லுகிறேன் கேளுங்கள் என்று திறம்படக் கூறினார்.
முதன் முதலாகப் பிறந்த அசுரனாகிய குறோணியின் உடலிலுள்ள ஆறு கூறுகளில், குறோணியோடு சேர்த்து ஆறுபிறவியிலும் கெடுமதியாளனாகப் பிறந்த குறோணியின் ஆறாவது கூறே இப்போது ஏழாம் முறையாகப் பிறந்துள்ளது.
மண்ணும், விண்ணும், நீரும், நெருப்பும் ஒன்றினுள் ஒன்றாகச் சேர்ந்து திரண்ட உடம்பினைக் கொண்ட இவனுக்கு, இந்த உடலே பலமாகும். பஞ்சபூதங்களில் அதிக பலமுடைய காற்றே அவனுக்கு உயிர். இதுவரை அவன் எடுத்துள்ள பிறவிகளிலெல்லாம் இப்போது அவன் எடுத்திருக்கும் பிறவியே மிகமிகக் கொடிய பிறவியாகும்.
அதாவது, அவன் இதற்கு முன்புள்ள யுகங்களில் பிறந்திருந்த போது, அவனை, மகாவிஷ்ணு, நாலுமுழமுள்ள, கந்தனாகவும், நரசிம்மனாகவும், ராமனாகவும், கண்ணனாகவும் அவதாரமெடுத்து அழித்ததை மனதில் வஞ்சமாக வைத்துக் கொண்டு கழிந்த யுகங்களில் மகாவிஷ்ணு அவதாரமெடுத்த உருவ அளவில் தானும் பிறவி எடுத்து மகாவிஷ்ணுவை எதிர்க்க வேண்டுமென்ற அவனுடைய நீண்டநாள் ஆசை இப்போது இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதெல்லாம் ஏகமெங்கும் இரண்டறக் கலந்து இவ்வுலகையெல்லாம் ஆளுகின்ற ஈசனே தாங்கள் அறியாததில்லை என்று சித்திரபுத்திரர் சிவபெருமானிடம் சொன்னார்.

அப்படி சித்திரபுத்திரர் சொன்ன செய்தியைக் கேட்ட சிவபெருமான் சித்திரபுத்திரரைப் பார்த்து, சித்திரபுத்திரா, நீ சொன்னபடியான காரணப்படிப் பிறந்திருக்கும் அவனுடைய ஆயுள்காலம் பற்றியும், அவனுடைய பலவலிமை பற்றியும் அவனுடைய பிறப்பு முதல் இறப்புவரையான அனைத்துக் கணக்குகளையும் தெளிவாக ஆய்வு செய்து தனித்தனியாக என்னுடைய கணக்கனகாகிய நீ எனக்குத் தெரிவிக்க வேண்டுமெனச் சிவபெருமான் உத்தரவிட்டார்.

கலியனின் பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்துக் கணக்குகளையும் ஆய்வு செய்து எனக்கு தெரிவியென்று சிவபெருமான் சொன்னதால் சிந்தை மகிழ்ந்த சித்திர புத்திரர், சிவக் கிருபையை சிந்தையில் சுமந்துகொண்டு, தன் மூலமாக வெளிப்பட இருக்கும் அனைத்துக்கும் அந்த ஆதிசிவனின் பொற்பதமே பொறுபதமே பொறுப்பென நினைத்துக் கொண்டு இயல்பான கணக்கினை எடுத்துரைக்கிறார்.
சிவபெருமானே ! தாங்கள் அதிசயப் பிறவி எனக் கருதுகின்ற அந்தக் கலியன், ஆணும் பெண்ணும் அன்பு பொருந்தி, அதனால் ஒருவரை ஒருவர் மருவிப் புணர்ந்து, மாதுவானவள் கர்பமாகிப் பிறக்கவேண்டிய இயல்புகளுக்கு எதிராக, மண்ணைப் பிளந்து கொண்டு தானாக முளைத்த இவனுடைய தத்துவக் கூறுகளெல்லாம் முரட்டுத்தனமாகவ
இருக்கும்.
அவனுடைய புத்தியும் புலன்களும் பொய்த்தன்மையுடையது. உலகத்திற்கே சத்துருவாக முளைத்த அவனுடைய கண்களும், கால்களும், தலையும் நீசத் தன்மையானது. எந்தச் செயலையும் தொலைநோக்குடன் சிந்திக்க இடம் தராத உடலுக்குச் சொந்தக்காரன். அவன் அமர்ந்திருக்கும் உடலுக்கு ஆயுள் காலம் நூறு வருடமேயாகும்.
அவனுடைய உடலில் உள்ள சுக்கிலம் எனப்படும் இந்திரியம் பத்துலட்சம் உயிர் அணுக்களாக அமைந்திருக்கும். அவனுடைய உடல் பதினான்கு பதினான்கு ஆண்டுகளுக்கு ஒரு மாற்றத்தை எய்தும், ஜெனித்தது முதல் முப்பத்தொரு வயதை எட்டியதுமே அவனுடைய தசை நரம்புகளெல்லாம் தளர்ச்சியுடையத் தொடங்கிவிடும்.
இரத்தம், எலும்பு, நரம்பு, தசை, நீர் இவைகளாலான இந்த உடல், மண் பண்டத்திற்கு ஒப்பானது. இறுதியில் எதிற்குமே இது உதவாது. பகட்டான இந்த உடலில் பல ஓட்டைகள் உள்ளன. அந்த ஓட்டடைகளில் ஒன்பது ஓட்டைகளே வாசல்களாக இருக்கும். இத்தகைய இந்த வீட்டை அதாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்துவிட்டால் அதை விறகிற்கு கூடப் பயன்படுத்த முடியாது.

வரைபடத்தின் மூலம் பொம்மைகளைச் செய்து அவற்றைக் கொண்டு விசித்திரமாகக் கதைகளை நகர்த்தி பாவைக் கூத்து நடத்துகிறார்களே, அந்தப் பாவைக்கூத்து பொம்மைகள் கூட சிதைந்து போனபின் வேறு எதற்கேனும் பயன்படும். ஆனால், இந்த நீசனின் உடலோ அதில் இருக்கும் உயிர் பிரிந்ததும் எதற்கும் உதவாது.
அந்த உடல் சிதைந்துவிட்டாலோ, முதிர்ச்சியடைந்து விட்டாலோ, நோய்வாய்ப்பட்டு பழுதடைந்துவிட்டாலோ, அந்த உடலில் தங்கியிருக்கும் உயிர்ப் பறவை அந்த உடலென்னும் கட்டையைப் போட்டுவிட்டு அதிலிருந்து பிரிந்து போய்விடும். இந்த நீசன், ஒரு குருவிக் கூட்டிற்கு ஒப்பான உடலை வைத்துக் கொண்டுதான் பற்பல விசாரணைகளைச் செய்வான்.
ஒரு குருவிக்கூடு போன்ற உடலையும், அந்தக் கூட்டிலே வாழும் குருவியைப் போன்ற உயிரையும் உடைய இந்த நீசன் செய்யப்போகும் நீசத்தனமான காரியங்களை, படைத்த பரமனாகிய உங்களால் கூட தாங்கிக்கொண்டிருக்க முடியாது.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எண்ணற்ற ஜாலங்களைச் செய்து விடுவான். இதுவே அவனுடைய இயல்புகளாக அமைந்திருக்கும். இத்தகைய நீசன் இப்போது இங்கே உருவெடுத்திருப்பதினால் அவனிடம் எள்ளளவு நன்றி உணர்வைக் கூட நாம் எதிர்பார்க்க இயலாது என்ற விவரங்களை எல்லாம் ஈசனிடம் சித்திரபுத்திரர் எடுத்துக் கூறினார்.
உடனே சிவபெருமான், இத்தகு நீசக்குணமுடைய அந்தக் கொடியவனை இங்கே அழைத்து வர யாரை அனுப்புவது என்று ஆலோசித்து, வீரத்தன்மையுள்ள காலன், எமன், தூதன் ஆகிய மூவரையும், துஷ்டத்தன்மையுடைய பூதக் கணங்களான கிங்கிலியர்களையும், துர்க்காதேவியையும், புத்திக் கூர்மையற்ற பசாசுகளையும் மற்றும் மூன்று வகையான புதிய பேய்க் கணங்களையும் அனுப்பி அவனை அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார்.

துர்க்குணத்தையுடைய இவர்கள் யாவரும் மிக வேகமாகச் சென்று, தலைகீழாக முளைத்து நிற்கும் அந்த நீசனின் அருகில் நின்று, உன்னை சிவபெருமான் அழைக்கிறார் உடனே எழுந்திருந்து எங்களுடன் வா என்று அழைத்தார்கள்.
இந்த அழைப்பொலியைக் கேட்டதும் அந்த நீசன் நெளிந்தான். புரண்டான். உருண்டான். ஆனால், அவனுடைய தலை மண்ணை விட்டு வெளியே வரமாட்டாமல் மண்ணோடு கலந்து மாமிசம் போல் திமிறியது. அதனால் விண்வெளிகள்கூட இயல்புக்கு மாறாகக் காட்சியளித்தது. கயிலையங்கிரியும் அத்துடன் கூடிய அகில் உலகமுங்கூட சற்று அதிர்ச்சியடைந்தது. நிலைமை இவ்வாறானதும் அழைத்து வரச் சென்றவர்களும் நிலைகுலைந்தனர்.
எனவே, அழைத்து வரச் சென்றவர்களில் சிலர் சிவபெருமானின் இருப்பிடத்தை நாடி ஓடினார்கள். சிவபெருமானைப் பார்த்து, ஈஸ்வரா, நாங்கள் அழைத்துவரச் சென்றோமே, அந்த நீசனுடைய உடல்தான் வெளியே வந்திருக்கிறது. அவனுடைய தலை வெளியே வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறான
. அவன் திமுறுவதால் அதைப் பூமாதேவியால் பொறுக்கமுடியாமல் கலக்கம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. ஆகவே, அந்த நீசனை இங்கே அழைத்து வருவது முடியாத காரியம் என்றனர்.

உடனே சிவபெருமான், இதற்கு இனி என்ன செய்வதென யோசித்தார். அந்த ஆழ்ந்த யோசனையில் அரியதோர் உபாயம் தென்பட்டது. அதன்படி விஸ்வகர்மாவை அங்கே வரவழைத்து அவன் மூலமாக இரு கவ்வை ஆயுதம் ஒன்றைச் செய்ய வைத்து, அந்த ஆயுதத்தின் துணையோடு அவனைப் பூமிக்குள்ளிலிருந்து வெளியே கோரி வையுங்கள் என்று அந்த இருகவை ஆயுதத்தையும் நந்தீஸ்வரன் கையிலே கொடுத்தார்.
சிவபெருமானிடம் ஆயுதத்தையும் ஆலோசனையையும் பெற்ற நந்தீஸ்வரர் மிகவேகமாகச் சென்று தலைகீழாக நின்ற அந்த நீசனை அந்த கவ்வையால் கோரி எடுத்து வெளியே வைத்தார்.
கலிநீசனின் தலை மண்ணைவிட்டு வெளியே வந்ததும் அவன் வெளிப்பட்ட பாதாளம் போன்ற கீறல் மின்னல் வேகத்தில் தானாகப்பொருந்திக் கொண்டது. இரு கவளியாகிய கவை ஆயுதத்தால் கோரி எடுக்கப் பெற்ற அந்தக் கலிநீசனை, இன்னொரு ஆயுதமான கரண்டியால் இழுத்துக்கொண்டு வந்து, சிவபெருமானின் முன்னிலையில் நிறுத்தினார்கள்.
அந்தக் கலிநீசனைக் கண்ட சிவபெருமான், மிகவும் ஆச்சிரியத்தோடு அவனைப் பார்த்து உனக்கு என்னென்ன வேண்டுமென்று தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் என்னிடம் கேள் தருகிறேன் என்றார்.
அதனால் அகமகிழ்ந்த நீசனோ, நல்லபாம்பின் விஷத்தை உண்டதுமல்லாமல், மிகக் கிழிந்த ஆடையை அணிந்து கொண்டு அங்கமெல்லாம் சாம்பலைப் பூசியபடி யானையின் தோலிலே அமர்ந்திருக்கும் நீ நான் கேட்பதையெல்லாம் தரப்போகிறாயா? என்று சிவபெருமானை மிக ஏளனமாகப் பார்த்துப் பரிகசித்தான்.
இதைக் கவனித்த வானவர்களோ, நிலை குலைந்தவர்களாகி, நீசனைப் பார்த்து, பொல்லாதவனே, சிவபெருமானின் வல்லமைகளை அறியாமல் வாய்க்கு வந்தபடி உளறாதே. அவர் இந்த உலகத்தைப் படைத்தவர். தாம் படைத்தவைகளுக்குள்ளும் அவற்றைக் கடந்தும் இருப்பவர். இந்த உலகில் அவர் இல்லாத இடமே இல்லை. எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். என்றென்றும் இறவாதிருப்பவர்.
பச்சி பறவை முதல் உலகிலுள்ள எண்பத்து நான்கு லட்சம் விதமான உயிரினங்களுக்கெ
ல்லாம் அவ்வப்போது தேவையான உணவை கொடுத்து வாழ்வளிப்பவர்.

மகாவிஷ்ணு, பிரம்மதேவன், மற்றும் நான்கு வேதங்களாலும் தேவர்களாலும் கண்டுகொள்ளமுடியாதவர். எல்லாவற்றையும் படைக்கும் இறைவனே இவர்தான் என்று வானவர்களெல்லாம் அந்தக் கலிநீசனுக்குச் சிவபெருமானின் பெருமையைப் புகட்டினார்கள்.

No comments:

Post a Comment