இன்றைய உலகில் இரு சக்கர வாகனங்களும், சிலருக்கு நான்கு சக்கர வாகனங்களும் இன்றியமையாத வசதிகள் ஆகிவிட்டன. இந்நிலையில் வாகனங்களை திருஷ்டிக் கண்களிலிருந்து பாதுகாத்துக் கொண்டால்தான் மனிதனுடைய அன்றாட அலுவல்களைப் பிரச்னைகள் இல்லாமல் கவனித்துக் கொள்ள முடியும். சில எளிய வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் வாகனங்களின் மேல் திருஷ்டி தோஷங்கள் படியாமல் அவை நமது உற்ற நண்பர்களாக மாற வழி தேடிக் கொள்ளலாம்.
வாகனங்களை எப்போதும் கிழக்கு நோக்கி நிறுத்தும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முதன் முதலில் வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கும் போது சிறிது தூரமாவது கிழக்கு நோக்கி ஓட்டிச் சென்று விட்டு பிறகு நாம் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி வண்டியை ஓட்டுவது நலம்.
எக்காரணம் கொண்டும் பழைய வாகனத்தை வாங்க வேண்டாம். நமது சக்திக்கு ஏற்ற புது வாகனத்தை வாங்கிக் கொள்வதால் தேவையில்லாத பலவித பிரச்னைகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
திருக்கோயில்களுக்குச் சென்று அங்கு பெறும் சுவாமி பிரசாத மாலைகளை பலரும் வாகனத்தின் முன்னால் கட்டி விட்டு விடுகிறார்கள். இது தவறான பழக்கம் என்பதை நினைவில் கொள்ளவும். இதனால் இறைவனின் பிரசாதமான மலர்கள் தெருவில் விழுந்து மக்கள், விலங்குகளின் பாதங்களில் மிதிபடும் சூழ்நிலை உருவாகும். இதனால் ஏற்படும் தோஷங்கள் வாகனத்தையும் அதன் உரிமையாளரையும் பாதிக்கும். இறைப் பிரசாதமாக பெற்ற மலர் மாலைகளை காரின் உட்புறத்தில் வைத்து அம்மலர்கள் உதிர்ந்த பின் அவைகளைக் கவனமாகச் சேகரித்து ஓடும் நதிகளில், கடலில் விட்டு விடுதலே முறையான வழிபாடாகும்.
அது போல திருஷ்டிக்காக வாகனங்களின் கீழ் எலுமிச்சை பழங்களை வைத்து நசுக்காமல் அவற்றை கார்களின் உள்ளே வைத்திருந்து காய்ந்த பின் மலர்களுடன் சேர்த்து நீர் நிலைகளில் சேர்த்து விட வேண்டும். இதைக் குறித்த புராண சம்பவம் ஒன்று உண்டு. குந்தியின் மைந்தனான கர்ணன் முற்பிறவி ஒன்றில் நிம்புபூஷணன் என்ற காரணப் பெயருடன் மகத நாட்டின் இளவரசனாக விளங்கினான். கிருஷ்ண பகவான் தன்னுடைய தலையில் மயிற் பீலியைச் சூடி இருப்பது போல நிம்பு பூஷணன் தான் வளர்த்திருந்த தீட்சையில் (குடுமியில்) எப்போதும் இறை பிரசாதமாகப் பெற்ற ஒரு எலுமிச்சை கனியை சூட்டியிருப்பான். ஒரு முறை நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது அவன் தலையிலிருந்த எலுமிச்சைக் கனி வீழே விழுந்து தரையில் உருண்டோடியது. அதை அவன் குனிந்து எடுப்பதற்குள் அவ்வழியே வந்த எருமை மாடு ஒன்று அதைத் தன் கால் குளம்பால் நசுக்கி விட்டது. அதனால் ஏற்பட்ட சாபம் காரணமாகவே மகாபாரத யுத்த களத்தில் கர்ணனின் ரதம் பூமியில் அழுந்தி அவன் உயிர் விட நேர்ந்தது என்பதை உணர்ந்து இனியேனும் எலுமிச்சை கனி பிரசாதத்தை சரியான முறையில் பயன்படுத்தும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.
வாரம் ஒரு முறையாவது சிறப்பாக செவ்வாய்க் கிழமை அன்று கட்டாயம் வாகனங்களை சுத்தமான நீரால் சுத்தம் செய்து விபூதி குங்குமத்தால் அலங்கரித்து, வாகனங்களை வலம் வந்து சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து நமஸ்காரம் செய்து வழிபடுவதால் எத்தகைய ஆபத்துகளிலிருந்தும் அவை நம்மைக் காப்பாற்றும் என்பதை மறந்து விடாதீர்கள். வாகனங்களை அலம்பும்போது டயர்களை நீர் விட்டு சுத்தம் செய்யத் தவறாதீர்கள். வாகனச் சக்கரங்கள் எச்சில், மலம் போன்ற பல அசுத்தங்களின் மேல் உருண்டோடுவதால் டயர்களால் செய்யப்பட்ட பாதணிகளை அணிவதும், பழைய டயர் பைகளில் உடைத்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதும் தேவையில்லாத பல கர்ம வினைப்படிவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளவும். இதனால் விளையும் தோஷங்கள் ஏராளம்.
No comments:
Post a Comment