Tuesday, 29 August 2017

வாசி யோக குருநாதர்

குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.

மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம் :

சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள். அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள். என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது. அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.

எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள். அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம். கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.

இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நற்கருணையுடன் சொன்னதை பின்பற்றி ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!.

No comments:

Post a Comment