Tuesday, 29 August 2017

சுவர்ண பைரவர் மந்திரம் - அகத்தியர் பரி பாஷை

இந்த மந்திரம் அகத்தியரால் தனது "அகத்தியர் பரிபாஷை" என்னும் நூலில் அருளப் பட்டிருக்கிறது. தொழில் முனைவோருக்கும், செய்தொழில் வெற்றிகள் வேண்டுவோருக்கும், பொருள் தேடும் முயற்சியில் சுண்ங்கியிருப்போருக்கும் இந்த மந்திரம் உதவுமென்கிறார் அகத்தியர்.

இந்த மந்திரத்தின் மகிமையை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

தான்பார்க்குந் தொழிற்கெல்லாம் வயிரவனும்வேணும்
        
தன்மையுடன் தொட்டதெல்லாம் பலிக்கும்பாரே
மான்பார்த்த சிவகிருபை யிருந்துதானால்
         
மக்களே செய்தொழிலும் பங்கமாமோ
கோன்பார்த்தக் குருமுடிக்க அருகில்நின்று
        
குணங்குறிகள் தவறாமல் மனதிற்றோணி
வான்பார்த்த கருவெல்லாம் வெளியதாக
         
மக்களே தோணுமடா மகிழ்ந்துபாரே.

செய்யும் தொழில்கள் எல்லாவற்றிற்க்கும் சொர்ணபைரவர் வேண்டுமாமாம். அப்படி அவர் மந்திரம் சித்தித்தால் தொட்டதெல்லாம் பலிக்கும் என்கிறார் அகத்தியர். மேலும் சிவபெருமானின் கருணை இருந்தால் செய்யும் தொழிலில் பங்கமே வராது என்கிறார் அதற்கு வைரவர் துணை என்றென்றும் வேண்டும். செய்தொழிலில் குணம் குறைகள் மனதில் தோன்றி தவறுகள் நேராது காக்க இந்த மந்திரம் உதவுமென்கிறார். அத்துடன் எல்லா உண்மைகளும் வெளிப்படையாகத் தோன்றும் மகிழ்ந்து பார் என்றும் சொல்கிறார்.

இத்தனை சிறப்பு வாய்ந்த மந்திரம் என்ன?, அதை எப்படி பயன் படுத்துவது என்பதை பின்வருமாறு அருளுகிறார்.

பண்ணப்பா சொர்ணவயி ரவன்றன் பூசை
       
பாங்கான மந்திரத்தைச் சொல்லக் கேளு
எண்ணப்பா ஓங்கென்றும் ஸ்ரீங்கென்றுந்தான்
       
என்முன்னே சொர்ணரூபா வாவாவென்றும்
கண்ணப்பா நானெடுத்த கருவெல்லாந்தான்
       
கைவசமாய்ச் செய்துவைக்க வாவாவென்று
சண்ணப்பா நூற்றெட்டு உருவேயானால்
       
தன்வசமாய் போகுமடா தான்பார்ப்பீரே.

"
ஓங் ஸ்ரீங் என் முன்னே சொர்ணரூபா வாவா. நான் எடுத்த கருவெல்லாம் கைவசமாய் செய்து வைக்க வாவா" என்பதுதான் சொர்ண வயிரவரின் மந்திரம். இதனை நூற்றி எட்டு உரு செபித்தால் மந்திரம் சித்தியாகுமாம் என்கிறார்.

மேலும் இந்த மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம்
       
பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம்
நேரடா வெளிக்கருவின் மூலந்தானும்
       
நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார்
காரடா யிக்காண்டந் தன்னிற்றானும்
       
கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன்
ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும்
        
அல்லதா லின்னூலே சொல்லும்பாரே.

சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்... குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து சொல்லும் என்றும் சொல்கிறார்.

எனவே, எல்லாம் வல்ல குருநாதரை மனதில் தியானித்து மிகவும் எளிதான இந்த மந்திரத்தை பயன்படுத்தி, நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளின் ஊடாக நலமும், வளமும் பெற குருவருள் துணை நிற்கட்டும்.

No comments:

Post a Comment