பிப்ரவரி
18, 19, 2017 :
ஏற்கனவே திட்டமிட்டபடி நாங்கள் ஏழு பேர்
சேர்ந்து வெள்ளியங்கிரி மலை பயணத்தை கடந்த சனிக்கிழமை காலையில் துவங்கினோம்.
என்னைத்தவிர மற்றவர்கள் சென்னையில் ஒரு மென் பொருள் நிறுவனத்தில் ஒரே குழுவில் பணி
புரிபவர்கள். அதில் சுப்பிரமணியன் என்பவர் பல முறை வெள்ளியங்கிரி மலை
சென்றுள்ளார். அவர் இரு சக்கர வாகனத்தில் டெல்லியிலிருந்து இமய மலை அடிவாரம் வரை
சென்று பின்னர் அங்கே இருந்து இமய மலையில் பல பகுதிகளுக்கு மலை ஏற்றம்
சென்றுள்ளார்.
காலை சிற்றுண்டி வீட்டிலேயே
முடித்துக்கொண்டு எட்டு முப்பது மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வெள்ளியங்கிரி மலை
புறப்படேன். சுமார் நாற்பது மைல் எண்பது நிமிடப்பயணத்திற்கு பின் வெள்ளியங்கிரி
மலை அடிவாரத்தை அடைந்தேன்/ பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து பதினொன்ரை மணி அளவில்
மலை ஏற ஆரம்பித்தோம்.
முதல் மலை மிக உயரமாக இருந்தது. நிறைய
படிக்கட்டுகளுடன் அமைந்து இருந்தது. இரண்டாவது மலை சிறிது குறைவான படிக்கட்டுகள்
இருந்தது. முதல் மலையில் வெள்ளை விநாயகர் கோவில் அமைந்து இருந்தது.
பின்னர் தூரம் செல்ல செல்ல ஈஸா யோகா
மையத்தின் மிகப்பெரிய சிவன் முகம் சிறியதாக தெரிந்தது.
பின்னர் சிறிது தூரத்தில் பாம்பாட்டி
சித்தர் குகை கோவில் இருந்தது. அங்கே நாகர் சிலை பிரதிட்டை செய்யப்பட்டு இருந்தது.
பின்னர் சிறிது தூரம் சமவெளி அமைந்து
இருந்தது. இரண்டாம் மலையில் வழுக்குப்பாறை அமைந்து இருந்தது. அங்கே நான்
மிதியடிகளை கழற்றி கையில் வைத்து கொண்டு வெறுங்காலுடன் நடந்தேன். இந்த பாதைகள்
முழுவதுமாக மழை நீர் செல்லும் பாதை தான். மழைக்காலத்தில் உபயோகிக்க முடியாது.
உயரமான அருவியில் தண்ணீர் கொட்டும் பாதையில் மேலே ஏறினால் எவ்வாறு இருக்கும் ?
அப்படி தான் எங்கள் பயணம் இருந்தது. பின் ஒரு வழியாக ஐந்து மணி அளவில் ஐந்தாவது
மலையை எட்டினோம்.
வழியில் மூன்றாவது மலையில் ஒரே ஒரு கடை
இருந்தது. அங்கே சுக்கு காபி அருந்தினோம். இந்த இடங்களில் நிறைய குரங்குகள்
இருந்தன. நாங்கள் சிறிது முறுக்கு மற்றும் சிப்ஸ் வாங்கி குரங்குகளுக்கு சாப்பிட
கொடுத்தோம்.
பின் சிறிது தூரம் நடந்து சென்றவுடன்
பசிக்க ஆரம்பித்தது. நான் வீட்டில் இருந்து கொண்டு சென்ற சேமியா உப்புமா இருந்தது.
அதனை மூன்று மணி அளவில் பகிர்ந்து உண்டோம். இடை இடையில் குளுகோஸ் சாப்பிட்டேன்.
வழியில் இரு இடங்களில் மிக சிறிய அளவில் நீர் வழிந்து ஓடிக்கொண்டு இருந்தது. அதில்
பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டோம்.
ஐந்தாவது மலையில் நடுவில் ஒரு மகானின் ஜீவ
சமாதி அமைந்து இருந்தது.
இறுதியாக ஐந்தாவது மலையில் சுனையில்
மிகக்குளிர்ந்த நீர் நிலையில் குளித்தோம். தொடர்ச்சியாக ஒரு நிமிடத்திற்கு மேல்
நீரில் நிற்க இயலவில்லை. குளிரில் உடல் வலிக்க ஆரம்பித்தது. பின்னர் வெளியேறி
அருகில் இருந்த சிறு கோவிலில் வணங்கி திரு நீறு இட்டு பின்னர் பயணத்தை
தொடர்ந்தோம்.
அங்கே இருந்து ஒரு பத்து நிமிட நடைக்கு
பிறகு ஆறாவது மலை முடிவை அடைந்தோம். ஆறாவது மலை முடிவில், ஒரு பெரிய பாறை
இருந்தது. அங்கே கடை அமைப்பதற்காக ஒரு சமதளம் இருந்தது. நாங்கள் கூடாரம் அமைக்க
தேவையான உபகரணங்களையும் எடுத்து சென்றிருந்தோம். அங்கே மூன்று கூடாரங்கள் அமைத்து
சற்று நேரம் அமர்ந்து ஒய்வு எடுத்தோம். பின்னர் ஆறு மணி அளவில் ஏழாவது மலை பயணத்தை
துவக்கினோம். அதற்க்கு உள்ளாக ஒருவர் கால் வலியால் நடக்க முடியாமல் ஒய்வு
எடுத்துக்கொள்வதாக கூறினார். எனவே நாங்களும் அதையே சாக்காக வைத்து, அனைத்து சாமான்களையும்
கூடாரத்தில் வைத்து, அவரை காவலுக்கு வைத்து ஏழாவது மலை பயணத்தை துவக்கினோம். கீழே
இருந்து பார்ப்பதற்கு மிக எளிதாக இருந்தது. அப்போது சுப்பிரமணியம் கூறினார்,
விரைவாக நடந்தால் ஒரு நாற்பத்தி ஐந்து நிமிடங்களில் மேலே செல்ல முடியும் என்று
கூறினார். நான் அவரை எள்ளி நகையாடி பார்ப்பதற்கு மிக அருகில் உள்ள இந்த இடத்திற்கு
எதற்கு அவ்வளவு நேரம், வெறும் இருபது நிமிடங்களே அதிகம் என்று கூறினேன். அதற்க்கு
அவர் கை கூப்பி சுவாமி சரணம் என்று கூறினார். அதற்க்கு அப்போது அர்த்தம்
புரியவில்லை. எனை பார்த்து சுவாமி சரணம் என்று கூறியவர் மள மள வென ஏறத்துவங்கினார்.
பின்னாலேயே மற்ற ஐவரும் ஏறத்துவங்கினார்கள். நானும் வேகமாக ஏற முற்ப்பட்டேன்.
அனால் ஒரு இருபத்து ஐந்து அடிக்கு பிறகு மிகவும் கடினமாக உணர துவங்கினேன். நான்
பார்ப்பதற்குள் மற்றவர்கள் மிக தொலைவு சென்று இருந்தனர், நானும் இன்னும் ஒருவரும்
சிறிது மெதுவாக ஒய்வு எடுத்து எடுத்து நடந்து சென்றோம். மற்றவர்கள் எங்கள்
பார்வையில் இருந்து முற்றிலும் மறைந்தனர்.
அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது.
என்கிரிந்தோ வந்த ஒரு பெரிய குருவி சரியாக வெள்ளிங்கிரி கோவில் மேல் இறக்கையை
அடிக்காமல் முன்னுக்கும் செல்லாமல் கீழேயும் செல்லாமல் மேலேயும் செல்லாமல்
அந்தரத்தில் சும்மா அசையாமல் நின்று இருந்தது. நாங்கள் நடக்கும் போது ஏழாவது
மலையில் நன்றாக பலமாக காற்று வீசிக்கொண்டு இருந்தது. அந்த காற்றில் அவ்வாறு
இறக்கையை அடிக்காமல் அந்தரத்தில் நிற்க ஒரு பறவைக்கு மிகக்கடினம். அவ்வாறு என்
நிற்க வேண்டும்? பின்னர் ஒரு நிமிடத்திற்கு அங்கே நின்ற பறவை அசைந்து சென்று ஒரு
இருவது அடி தொலைவில் இன்னுமொரு இடத்தில் சென்று அதே மாதிரி அசையாமல் நின்றது.
பின்னர் ஒரு நிமிடம் நின்ற பிறகு பறந்து சென்று குகை கோவிலை ஒரு முறை சுற்றி
வந்தது. பின்னர் மீண்டும் அதே இடத்திற்கு வந்து அதே போல் அசையாமல் நின்றது.
பின்னர் நகர்ந்து இருவது அடி தூரம் சென்று மீண்டும் அடுத்த இடத்தில் அசையாமல்
நின்றது. பின்னர் கிகி சுற்றி வந்தது. இதே போல் சுமார் ஐந்து முறை செய்தது. அந்த
நேரம் சரியாக சூரியன் மறைந்து பின்னர் சிறிது சூரிய ஒளி மட்டும் சிவப்பாக தெரிந்த
நேரம். அதாவது சூரியன் மறைந்து பின்னர் சந்திரனின் இருள் கவ்வும் முன் இடைப்பட்ட
நேரம். அதாவது சந்தியா வேளை என்று கூறுவார்கள். இது எங்களுக்கு தற்ச்செயலாக தெரியவில்லை.
யாரோ சந்தியா வேளையில் இறை வழிபாடு செய்வதாக எண்ணி வியந்தோம். பின்னர் சரியாக 6:50
மணி அளவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் பெற்றோம்.
முதலில் நுழைவு வாயிலில் விநாயகரை வழிபட
வேண்டும். பின்னர் அம்மன் சிலை பிரதிட்டை செய்யப்பட்டு உள்ளது. அங்கே அம்மனை
வழிபட்ட பின்னர் அதற்க்கு அடுத்த குகையில், அங்கே நான்கு இலிங்கங்கள் இருந்தன. அவை
யாவையுமே ஸ்வயம்பு இலிங்கங்கள் என்று அங்கே இருந்த அழுக்கு உடை அணிந்த தாடியுடன்
கொண்ட பூசாரி ஒருவர் கூறினார். ஒன்று பூமி இலிங்கம், மற்றும் வாயு லிங்கம்,
அக்கினி இலிங்கம், நீர் இலிங்கம் ஆகும். ஐந்தாவது இலிங்கமான ஆகாய இலிங்கம் அந்த
ஏழாவது மாலையே ஆகும் என்று பூசாரி கூறினார். பின்னர் நாங்கள் காணிக்கை செலுத்த
முற்பட்ட போது வாங்க மறுத்து விட்டார். காணிக்கை எது ஆனாலும் உண்டியலில் போடும்படி
கூறினார். உண்டியலில் போடும் காணிக்கை கோ மடத்திற்கு செல்லும் என்று உண்டியலில்
எழுதப்பட்டு இருந்தது. நான் உண்டியலில் நூற்று ஒரு ருபாய் செலுத்தினேன்.
கோவிலில் நுழைவு வாயிலில் விநாயகர் சிலை
உள்ளது. அங்கே அவருக்கு வாகனமாக ஒரு மூஞ்சூறு மற்றும் ஒரு நந்தி உள்ளது. குகை
கோவிலில் நான்கு இலிங்ககளுக்கும் ஒரே வாகனமாக ஒரு நந்தி அமைந்து உள்ளது. குகையை
சுற்றிலும் நூற்றுகணக்கான திரிசூலங்களால்
வேலி அமைக்கப்பட்டு இருந்தது. தரிசனம் முடிய முடிய இரயில் கவ்வ துவங்கியது. ஒரு 25
அடி செல்வதற்குள் இருள் கவ்வியது. பின்னர் டார்ச் உதவியுடன் சிறிய வெளிச்சத்தில்
கிழே மெதுவாக ஒருவர் பின் ஒருவராக சென்றோம். எனக்கு இருள் என்றாலே மிகவும் பயம்.
எனவே விரைவாக நடக்கத்துவங்கினேன். என்ன ஆச்சர்யம், இறங்குவது மிக எளிதாக இருந்தது.
பயம் வந்தால் அகத்தியரை த்யானித்து துணைக்கு வருமாறு அழைத்துக்கொண்டே சென்றேன்,
பலர் இறங்கி கொண்டும் ஏறிக்கொண்டு இருந்தார்கள். நான் அனைவரையும் முந்திக்கொண்டு
விரைவாக இறங்கினேன், அனைவருக்கும் சற்று முன்னதாகவே முதல் ஆளாக கூடாரம் வந்து
அடைந்தேன்.
பின்னர் அனைவரும் வந்தவுடன் சுமார் ஏழு
ஐம்பது மணி அளவில் உணவு அருந்த எண்ணினோம். நாங்கள் கொண்டு வந்த ஆப்பிள் ஆரஞ்சு
பழங்கள் மற்றும் பிரட் ஜாம் போன்றவற்றை பகிர்ந்து கொண்டோம். அப்போது எங்களைத்தவிர
வேறு யாரும் மலையில் இருக்கவில்லை. கும்மிருட்டில் அருகில் இருந்த மரத்தின்
அருகில் சட சட வென சத்தம் கேட்டது. அனைவரையும் பயம் தொற்றி கொண்டது. யானையாக
இருக்குமோ, செந்நாயாக இருக்குமோ என்று அச்சம் மேலிட்டது. எல்லோரும் ஒரு நிமிடம்
அமைதியானோம். சத்தம் விட்டு விட்டு கேட்டு கொண்டு இருந்தது. பயந்த சூழ்நிலையில்
உணவை திரும்ப வைத்து விட்டு கூடாரத்தை மூடி அமைதியாக உட்கார்ந்தோம். ஒருவர்
கூறினார், திரும்ப கீழே இறங்கி விடலாம் என்று. இன்னும் ஒருவர் கூறினார் நெருப்பை
பற்ற வைத்து விலங்கை விரட்டி அடிக்கலாம் என்று. பின்னர் நெருப்பை பற்ற வைத்தால்
அது சரியாக எரியவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு தைரியத்தை வரவழைத்து கொண்டு நான்
கூடாரத்தை விட்டு வெளியே வந்து டார்ச் அடித்து சத்தம் வந்த திசையில் நடந்தேன்.
என்னுடன் இன்னொரு நண்பரும் வந்தார், மெதுவாக இருவரும் டார்ச் அடித்து முன்னேறி
சென்று பார்த்தால் ஒரு பெருச்சாளி குப்பையை உருட்டிக்கொண்டு இருந்தது. நாங்கள்
சிரித்துக்கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஒரு வழியாக பயம் ஒழிந்து பழங்களையும்
பிரட்டையும் உண்ணத்துவங்கினோம். ஒன்பது மணி அளவில் நிறைய பக்தர்கள் கூட்டம்
வரத்துவங்கியது. நாங்கள் ஒன்பது மணி அளவில் கூடாரத்தில் படுத்து உறங்கினோம். மற்ற
பக்தர்கள் அனைவரும் கூடாரத்தின் வெளியே குளிரில் நடுங்கியபடி படுத்து கொண்டும்
சென்று கொண்டும் இருந்தனர். பலர், சிறிது நேரம் ஒய்வு எடுத்து பின்னர் ஏழாவது மலை
சென்று பின்னர் இறங்கவும் துவங்கினர். நாங்கள் காலை சூரிய உதயத்தின் போது திரும்ப
மேல செல்லலாம் என்று திட்டமிட்டோம். அப்போது சிலர் ஒரு சிறுத்தை நீர் அருந்த
சுனைக்கு வந்ததாகவும், அதனைப்பார்த்து பயந்து ஓடி வந்ததாகவும் பேசி கொண்டு
இருந்தனர். இதில் நன்றாக புரிவது என்னவென்றால் தனியாக சென்றால் விலங்குகள் நம்மை
நோக்கி வருவதற்கு அஞ்சுவதில்லை. மேலும் இருட்டில் விலங்குகள் சுதந்திரமாக
திரிகின்றன. மேலும் நீர் நிலைகளில், கண்டிப்பாக நீர் அருந்த விலங்குகள் எந்த
நேரமும் வரக்கூடும்.
மேலே வானத்தில் பல நூற்றுக்கணக்கான
நட்சத்திரங்கள் காட்சி தந்தன. அவ்வளவு நட்சத்திரங்களை ஒன்று சேர நான் என் வீட்டிலோ
அல்லது வேறு எங்கேயுமோ பார்த்ததே இல்லை. ஒரு முறை சதுரகிரி சென்று இருந்த போது
அதிகாலை மூன்று மணி அளவில் மலை அடிவாரம் சென்று அடைந்தேன். அப்போது வனத்தின்
நுழைவு வாயில் கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் துண்டை கிழே விரித்து வானத்தை
பார்த்து மல்லாந்து படுத்தேன். அப்போது வானத்தில் அது போன்றதொரு
நட்சத்திரக்கூட்டத்தை பார்த்தேன். அதன் பின் இப்போது தான் அந்த காட்சி கிடைத்தது.
ஏற்கனவே நாங்கள் திட்டமிட்டபடி காலை 6:10
மணி அளவில் தூங்கி எழுந்து மேலே ஏறத்துவங்கினோம். அதில் நேற்று ஏறிய எங்கள் குழுவை
சேர்ந்த இரு நண்பர்கள் மீநடும் ஏற விரும்பவில்லை என்று கூடரத்திலேயே தங்கினர்.
நல்லதாக போயிற்று, அவர்கள் காவலுக்கு இருக்கட்டும் என்று நாங்களும் மலை
ஏறத்துவங்கினோம். மெதுவாக ஏறி காலை ஆறு நாற்பது மணி அளவில் முக்கால் மலை ஏறி
விட்டோம். அப்போது மேல தாளங்கள் கோவிலில் முழங்கும் சத்தம் கேட்டது. அப்போது
சரியாக சூரியன் உதிக்கும் காட்சி காண கிடைத்தது. மிக ரம்மியமான காலை பொழுதில் அந்த
ரம்மியமான காட்சி ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. சூரியன் உதிக்கும் நேரத்தில்
கோவிலில் சிறப்பு பூஜை செய்தது புரிந்தது. பின்னர் மீண்டும் மேலே எறத்துவங்கியபோது
தூரத்தில் ஒரு பள்ளத்தாக்கில் மான்கள் துள்ளி குதித்து ஓடுவதை கண்டோம்.
பின்னர் மலை ஏறி சுவாமி தரிசனம் கண்டோம்.
பின்னர் கூகிள் வரைபடத்தில் நான் இன்னுமொரு கோவிலை கண்ட ஞாபகம் வந்தது. நண்பரிடம்
கேட்டேன். அவரும் அந்த இடம் இஷா பாயிண்ட் என்று அழைக்கப்படுகிறது. மிக ரம்மியமான
மலைப்பகுதி என்று கூறினார். பின்னர் ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவு நடந்து மலையின்
பள்ளத்தாக்கிற்கு வந்தோம். அங்கே மிகவும் குளிராக இருந்தது. மலையின் நிழல் சரியாக கூம்பு
முக்கோண வடிவத்தில் நிலா பகுதியில் விழுந்து இருந்ததை கவனித்தோம். மலை முகட்டில் அந்தரத்தில்
ஒரு பாறை தொங்கிக்கொண்டு இருந்தது. அந்த இடத்திற்கு மிகவும் கவனமாக சென்றோம். அந்த
ரம்மியமான சூழலை ரசித்து பின்னர் இரண்டு மூன்று இடங்களில் தியானத்தில் அமர்ந்தோம்.
சும்மார் 2000 அடி உயரத்தில், மலை முகட்டில், குளிர் காற்றில், அதி காலை வேலையில்
அமர்ந்து செய்த தியானம் புதுமையான உணர்வை அளித்தது. பின்னர் திரும்ப கோவில் அருகே
வந்த போது மீண்டும் மேல தாளங்கள் முழங்கும் சப்தம் கேட்டது. அப்போது கோவிலில் ஒரு
கோவணம் அணிந்த ஒரு சித்தர் தூய தமிழில் கடவுளை துதித்து அவருக்கு அன்னம்
படைத்தார். பின்னர் தூய தமிழில் பல வகையான பிரார்த்தனைகளை பாடினார். பின்னர்
அற்ப்புதமாக சாம்பராணியை ஒரு பெரிய சட்டியுள் போட்டு சும்மார் கால் கிலோ அளவுள்ள
கற்பூரத்தையும் போட்டு தீப ஆராதனை காட்டினார். நான் அத்தனை கூட்டதிற்கு
மத்தியிலும் வெள்ளிங்கிரி ஆண்டவரின் முன் முதல் ஆளாக அமர்ந்தேன். யாரும் என்னை
தடுக்கவில்லை. நன்றாக வழிபட்டு பின்னர் மூன்றாவது முறையாக பிரசாதத்தை
பெற்றுக்கொண்டேன். பின்னர் நிதானமாக கீழே இறங்கத்துவங்கினோம். மெதுவாக இறங்கி
வந்து கூடாரத்தை அவிழ்த்து காலை உணவாக மீண்டும் பழங்கள் மற்றும் பிரட் உண்டு
பயணத்தை 9:30 மணி அளவில் துவக்கினோம், அரை மணி நேரம் சுனையின் அருகே ஒய்வு
எடுத்தோம். மீதமிருந்த உணவு மற்றும் பழங்களை வருபவர்களுக்கு வழங்கினோம். சுனில்
நீர் நிரப்பிக்கொண்டு இறங்க துவங்கினோம். அப்போது ஒரு சாம்பல் நிற கழுகு, நான்
நடந்திருந்த இடத்திற்கு மேலே வட்டமடித்து பறந்தது. ஒரு இடத்தில் தரிசனம் முடித்து
புறப்படும் போது கழுகு வந்து வழி அனுப்பி வைப்பது இது முதல் முறை அல்ல.
பாபநாசத்தில் இவ்வாறு கழுகு வந்து கிளம்ம்பும் போது வட்டமடித்து வழியனுப்பி
உள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்தில் இரண்டு மலைகளை
கடந்தோம். பின்னர் இறக்கத்தில் ஒவ்வொரு அடியும் மிக கடினமாக இருந்தது. மொத்த
உடலும் சோர்வடைந்தது. மிகக்கடினமான முர்ச்சிக்கு பிறகு உணர்வற்ற நிலையில் முதல்
மலையை எட்டினோம். பின்னர் ஒவ்வொரு அடியம் எடுத்து வைக்க மிகுந்த சிரமமாக இருந்தது.
சும்மார் இரண்டரை மணி அளவில் கீழே இறங்கினோம்.
படங்கள் இணைக்கப்பட்டு உள்ளன
நன்றி
தி. இரா. சந்தானம்
No comments:
Post a Comment